கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 17,741 
 
 

மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும் போது.

” ஹே… சொல்லுமா.. ”
” ……………… ”
” இல்ல இல்லடா.. கொஞ்சம் ஒரு சின்ன வேலையா இருந்தேன். அதான்.. அத கையோடு முடிச்சுட்டு உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன்”
” ……………… ”
” அதுவும் முக்கியம் தான் மா.. இப்போ என்ன செய்யணும் நான் ?”
” ………………. ”
” அவ்வளவு தானே.. இதோ இப்பவே கிளம்பிட்டேன். எத்தனை மணிக்கு ஷோ ? ”
” ………………. ”
” சரி சரி எண்ணி அஞ்சே நிமிஷத்தில் அங்க இருப்பேன் நான்”
” ……………… ”
” ஓ.கே. டா பை “.

ஃபோனை வைத்துவிட்டு பிரிண்டரில் இருந்து அந்த பேப்பரை எடுத்து கிழித்துக் கொண்டிருந்த போது மீண்டும் ஸ்ருதியிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. ” ஃபோர் மோர் மினிட்ஸ்… வெயிட்ங் ஃபார் யூ” என்று. அதைப்படித்துவிட்டு சிரித்துக் கொண்டே தலையை ஆட்டிவிட்டு, போட்டதை போட்டபடி விட்டுவிட்டு ஸ்ருதியைப் பார்க்க ஆயத்தமானான்.

விஷ்ணு- கூகிளிலோ அல்லது மைக்ரோ சாஃப்ட்டிலோ மாதம் ஐந்திலக்கம் சம்பளம் பெறுவதற்கான அத்தனை தகுதிகளுமுடையவன். ஆனால் முறையற்ற வளர்ப்பில் திசைத்தவறிப் போனவர்கள் லிஸ்டில் அவன் சேர்ந்து கொண்டது இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளின் துர்அதிர்ஷ்டமே. எந்த இலக்கின்றி திரிந்தவனுக்கு ஒரு ஜி.பி.எஸ் போல வந்தவள் தான் ஸ்ருதி. அவனது வாழ்க்கையை ஸ்ருதிக்கு முன், ஸ்ருதிக்குப் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். அவள் வரவுக்குப் பின்னர் வந்தது தான் “பிரவுசிங் செண்டர்’, “ஃபேஸர்” மற்றும் “ஆடம்பர வாழ்விற்கான ஆசை” எல்லாம்.

ஒருமுறை ஆளுநருக்கு ஒரு மிரட்டல் மெயில் இவனது பிரவுசிங் செண்டரிலிருந்து வந்தது. அது தொடர்பான விசாரணையின் போது அறிமுகமானவர்தான் எஸ்.பி. கோகுல். விசாரணையின் போது, இவன் அளித்த ஒத்துழைப்பும், நடந்து கொண்ட விதமும், மெயில் வந்த நேரத்தை வைத்து அப்போது அங்கு வந்த நபர்கள் யாரென்று வெறும் 15 நிமிடத்தில் கண்டுபிடித்து, துப்பு துலங்க உதவிய இவனது திறமையும் அடுத்தடுத்த சைபர் கிரைம் குற்றங்களில் அவனது உதவியை நாட வைத்தது. இவனும், கிட்டத்தட்ட ஒரு போலீஸ் இன்ஃபார்மராகவே மாறிப் போனான்.

* * *

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் நான்காவதாக தேர்வு பெற்று, தனக்கு கிடைத்த ஐ.ஏ.எஸ் பதவியை மறுத்தலித்து, ஐ.பி.எஸ். பேட்ஜை அணிந்து கொண்ட போது கோகுலுக்கு வயது 24. டிரைனிங் முடிந்து தனது 27 வது வயதில் ஒரு மாவட்டத்தின் சட்ட ஒழுங்கையே தனது தோள்களில் தூக்கிச் சுமந்தவன். செதுக்கி வைத்த தேக்குத் தேகமும், அனல் பறக்கும் விழிகளும், கொஞ்சமாக முறுக்கி விட்ட மீசையும், அவனது அப்பாவிடமிருந்து அவனுக்கு வந்த பொக்கிஷங்கள். கோகுலின் அப்பா, ரிடையர்டு போலீஸ் ஐ.ஜி. பத்மனாபன். டிபார்ட்மண்டில் அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு “சிங்கம்”. அவரது நடையும், விழியும், செயலும் அப்பெயர் வரக் காரணமாயிற்று. ஆனால் பணி ஓய்வுக்குப் பின்பு, ஒரு சர்க்கஸ் சிங்கமாகவே மாறிவிட்டார் பத்மனாபன். தனது மாடியறை, ஹிந்து பேப்பர், கொஞ்சம் புத்தகங்கள், 4 வேளை காபி அதுவே போதுமாயிருந்தது அவர் உயிர்வாழ்வதற்கு.

விஷ்ணுவிடமிருந்து வரும் தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தான் கோகுல். இவனது செல்பேசி அழைப்பிற்கும் விஷ்ணுவிடமிருந்து பதில் இல்லை. (ஸ்ருதி அருகிலிருக்கும் போது கடவுளே கண்முன் வந்தாலும் விஷ்ணுவிற்குத் தெரியாது, கோகுல் மட்டும் எம்மாத்திரம்). இரவு முழுவதும் ஏதாவது கம்யூட்டரில் நோண்டிக் கொண்டிருந்துவிட்டு, பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருப்பான். காரியம் அவசரமாதலால் தாமே சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து, மப்டியில், ஏட்டு பெருமாளின் பல்சர் பைக்கை வாங்கிக் கொண்டு விஷ்ணுவின் வீட்டுக்குக் கிளம்பினான் கோகுல்.

வீடு வெளியில் பூட்டியிருந்தது. கதவுக்கு அருகிலிருந்த ஜன்னலை கொஞ்சமாக விலக்கி எட்டும் தூரத்தில் இருந்த வாஷ் பேசினைப் பார்த்தான். அங்கு வீட்டின் சாவி வைக்கப்பட்டிருந்தது.

ஒருமுறை இப்படி இவனுக்காக கோகுல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த போது, விஷ்ணு தன் வீட்டின் சாவி ரகசியத்தையும், எப்போது வேண்டுமானாலும் தாரளமாக அதை எடுத்துக் கொண்டு திறந்து உள்ளே வரலாம் என்றும் கூறியிருந்தான்.

கோகுல் உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த ஒரு மேசையில், ஒரு பிரிண்ட் அவுட் பேப்பரில் இரு வாசகங்கள் அடிக்கப்பட்டு இரண்டும் ஒரு இரும்பு ஸ்கேலின் உதவியால் பாதியாக கிழிக்கப் பட்ட நிலையிலிருந்தன.

அதில் ஒன்று கோகுலக்கு வர வேண்டியது. “மிஸ்டர். கோகுல் – இதுதான் குறியீடு. கவனம்- விஷ்ணு”.

மற்றொன்று யாருக்கோ. ” எஸ்.பி. கோகுலுக்கு நான் தவறான தகவலைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்- விஷ்ணு”.

கோகுல் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, விஷ்ணுவிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு நிமிடம் யோசித்தவன் ஃபோனை எடுத்தான்.

“ம்.. சொல்லு விஷ்ணு.. பரவாயில்ல..”

” ………….. ”

” சரி சரி.. இன்னைக்கு நைட்டு அனுப்பிடுவேயில்ல.. அது போதும்.”

” ………….. ”

” பரவாயில்ல..பரவாயில்லப்பா.. ஓ.கே.. பை”

ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலுமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, உண்மையான குறியீடு அங்கு கிடைக்குமா என்று பார்த்தான். விஷ்ணுவின் கம்யூட்டர் அருகிலேயே இருந்த போதும் அதை ஆன் செய்து உள்ளே செல்வதென்பது அவ்வளவு சுலபமில்லை என்பது கோகுலுக்கு நன்றாகத் தெரியும். மேலும் நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. ஆக மொத்தத்தில், தகவல் உண்மை. அதுவும் ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பது ஏற்கனவே உளவுத்துறை கொடுத்த தகவல். ஒரு சாதாரண ஓட்டலாக இருப்பின், தங்கியிருப்பவர்களை வெளியேற்றி சோதனை செய்துவிடலாம். ஆனால் வெளிநாட்டு தூதர்களும், பெரிய தொழில் அதிபர்களும், பல நாட்டு விளையாட்டு வீரர்களும் தங்கியிருக்குமிடம். அதனால் அங்கு நடத்தப்படும் சின்ன ஒரு சோதனை கூட இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பாதிக்கச் செய்யும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பிரச்சனை ஏற்படலாம். நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்படலாம். சென்செக்ஸ் சரியலாம். இப்படி பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். கோகுலுக்கு கண்முன் மும்பை தாஜ் ஓட்டல் சம்பவம் நிழலாடியது. அவனது போலீஸ் மூளை சரசரவென்று செயலாற்றத் தொடங்கியது.

அங்கிருந்த எதையும் கலைக்காமல் வந்த சுவடு தெரியாமல் வெளியேறினான்

* * *

கோகுலுக்கான பாராட்டு விழாவிற்கு பின்பு அவன் “சீக்ரெட் ரிவியல்” செசன் எடுக்க நேர்ந்தது. அதில் இந்த “ஆப்பரேஷன்-லக்ஷரி”ஐ வெற்றிகரமாக நடத்தியவிதத்தையும், துப்புதுலக்கிய முறையையும், அங்குள்ள சீனியர் ஆஃபிசர்களுக்கும், டிரைனிகளுக்கும் கோகுல் விளக்கினான். இது அடுத்தடுத்த ஆப்பரேஷன்களில் தவறுகள் ஏற்படாமல் திருத்திக் கொள்ளவும், துப்பு துலக்கவும் உதவும்.

” நமக்கு வந்த குறியீடு இதுதான். SW H2 6F. இதன்படி சவுத் வெஸ்ட் ஹோட்டல், ஃப்ளோர் நம்பர் சிக்ஸ், ஹால் நம்பர் 2. இதுதான் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிற இடமாக தகவல் வந்தது. ஆனா.. இது ஒரு தவறான தகவல். ”

தான் விஷ்ணுவின் வீட்டுக்குப் போனதையும் அங்கு கண்டதையும் விளக்கிவிட்டு தொடர்ந்தான்.

” ஒரு போலீஸ்காரன் மட்டும் எப்பவும், யாரையும் முழுசா நம்பிடக்கூடாது. இது எனக்கே ஒரு பாடம். இப்போ விஷ்ணு, போலீஸ் கஷ்டடியில இருக்கான்.”

” அது ஒரு தப்பான இன்பர்மேஷன்னு தெரிஞ்சும் ஏன் அங்கயும் ஒரு போலீஸ் க்ரூப்பை அனுப்புனீங்க மிஸ்டர். கோகுல்?”

” நான் அங்க ஆள் அனுப்பாமயிருந்தாலோ… அல்லது அதுக்கு முன்னாடி விஷ்ணுவ அரெஸ்ட் பண்ணியிருந்தாலோ, தீவிரவாதிங்க அலர்ட் ஆகியிருப்பாங்க. அதான். அவர்களைப் பொருத்தவரையில் போலீஸ் தவறாகவே வழி நடத்தப்பட்டிருக்கு. ”

” ஆனா அவுங்க பதுங்கியிருக்க இடம் ராயல் பேலஸ்தான்ங்றத எப்படிக் கண்டுபிடிச்சீங்க ? ”

” விஷ்ணு தவறான தகவல் கொடுக்கிறான்னு தெரிஞ்சதுமே அவனோட கால் ஹிஸ்ட்ரிய ட்ரேஸ் பண்ணிணோம் அப்போது, அவனுக்கு ஒருதடவை, ஒரே ஒரு தடவை, இந்த ராயல் பேலஸ்ல இருந்து கால் வந்தத கண்டுபிடிச்சோம். அங்கயும் ஃப்ளோர் நம்பர் சிக்ஸ்ல, இரண்டு ஹால் இருந்தது நம்ம சந்தேகத்த உறுதிபடுத்த உதவுச்சு. பாவம் ஹோட்டல் பேரை குறியீட்டில் மாத்திச் சொன்னவன் ஃப்ளோரையும், ஹாலையும் மாத்தி சொல்லியிருக்கலாம். அதுமட்டுமில்லாம அவனை திசை திருப்பி, அவனைப் போலவே மற்றொரு ஹேக்கரை வச்சு அவன் சிஸ்டத்தை ஹேக் பண்ணதுல உண்மையான குறியீடு கிடைச்சது. அது – RP H2 6F”

” எக்சலண்ட் கோகுல்… ஒன்ஸ் அகைன் யு ப்ரூவுட் யுவர்செல்வ்ஸ்” – இது டி.ஐ.ஜி முருகவேல்.

ஒரு ஃப்ர்ம் கைகுலுக்கலுடன் பாராட்டுக்களை ஒரு குறு புன்னகையால் கையாண்டான் கோகுல்.

அவனுடைய செயலுக்கு இப்போது நடந்து உண்மையில் மிகச் சிறிய பாராட்டு. எப்போதுமே மீடியாக்களில் வெடித்த குண்டுகள் முதல் பக்கத்தையும், வெடிக்காத குண்டுகள் நடுப்பக்க ஓரத்தையும் ஆக்கிரமிப்பது புதிதல்ல. இத்தகைய பாராட்டுகளுக்காக வேலை செய்தவனல்ல கோகுல்.

கோகுலின் செல்பேசி தொடர்ந்து அதிர்ந்தவாறு இருந்தது. முக்கியமான மீட்டிங் ஆதலால் எடுக்காமல் விட்டாலும் அதன் தொடர் அழைப்பை அலட்சியம் செய்ய முடியவில்லை கோகுலால்.

செல் ஃபோனை எடுத்து சற்று கீழே குனிந்து, தாழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான். அழைப்பு வீட்டிலிருந்து வந்தது.

” சொல்லுங்க அம்மா”

” சாயந்தரம் வாக்கிங் போன உங்க அப்பா இன்னும் வீட்டுக்கு வரலடா கோகுல். போனும் அடிச்சுகிட்டே இருக்கு. எடுக்க மாட்டிக்கிறாரு. எனக்கென்னவோ பயமாயிருக்கு. கொஞ்சம் நீ இங்க வர முடியுமா? ”

” சரி வரேன் மா. பயப்படாதீங்க. நான் கிளம்பி வரேன். ஹேமா பக்கத்துல தான இருக்கா”.

மணி இரவு 10 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. பொதுவாக 5:30 மணிக்கு வாக்கிங் செல்லும் அப்பா 7 மணிக்கெல்லாம் கரெக்டாக வந்துவிடுவார். சாதரண நாளில் இப்படி ஒரு அழைப்பு வந்திருந்தால் அவ்வளவு பொருட்படுத்தியிருக்கமாட்டான் கோகுல். அப்பா ‘சிங்கம்’ என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் சரியாக இந்த ஆப்பரேஷன்-லக்ஷரி நடந்து முடிந்த இரண்டாவது நாள். அதுதான் அவனைச் சலனப்படுத்தியது.

* * *

கோகுல், முருகவேலிடம் மட்டும் முதலில் விஷயத்தை சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். போகும் வழியில் அப்பா வாக்கிங் போகும் ‘பார்க்’கை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கு சந்தேகப்படும்படி யாருமில்லை என்பதை உறுதிப் படுத்திய போதுதான் அவனுக்குத் தெரியவந்தது அன்றைக்கு அப்பா வாக்கிங் செல்லவே வரவில்லை என்பது.

அங்கிருந்து கிளம்பிய அம்பாசிடர், வீட்டை அடையும் பத்து நிமிடத்திற்குள் பல ஆயிரம் எண்ணங்கள் தலையில் ஓடியது கோகுலுக்கு. கோகுல் சிறந்த தைரியசாலி தான். ஆனால், அப்பாவுக்கு ஏதேனும் ஒன்று என்று நினைக்கும்போதே அவனுக்கு மனது பாரமானது. ஏதேதோ நினைவுகள் வந்து போயின். கோகுல், ஒரே பையன் ஆதலால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தவர் அவர். கோகுலின் எந்த ஒரு முடிவுக்கும் அவர் ‘நோ’ சொன்னதில்லை. அவன் படித்த படிப்பு, பின்பு சேர்ந்த போலீஸ் வேலை, காதலித்த ஹேமா என எதையும் மறுத்ததில்லை அவர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவர் சிங்கமாக இருக்கலாம். ஆனால் அவனைப் பொருத்தவரையில் அவர் ஒரு பசு.

இது போன்ற இக்கட்டான தருணங்களில் மட்டுமே நினைவுக்கு வரும் கடவுள்களையெல்லாம் வேண்டிக் கொண்டான்.

பார்ட்டி நடந்த இடத்திலிருந்து இவன் வீட்டுக்கு வரும் போது மணி 11:30யைத் தொட்டிருந்தது. அவன் வந்து சேருமுன் அம்மா ஒரு 10 முறையாவது அழைத்திருந்திருப்பாள். ஹேமா அம்மாவுக்கு அருகிலிருப்பதே இவனுக்கிருக்கும் ஒரே தைரியம்.

அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு உடனடியாகத் தகவல் அனுப்பினான். காணமல் போயிருப்பது சாதரண ஆளில்லை. போலிஸ் டிபார்ட்மண்டின் முன்னாள் ஐ.ஜி. எனவே விசாரணை கோகுல் சொல்லியவாறு காதும் காதும் வைத்தவாறு நடந்தது.

வீட்டிற்கு வந்ததும், அம்மாவை அணைத்து ஆறுதல் படுத்திவிட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும், நாலாபக்கமும் போலீஸ் தேடுவதற்கு முடுக்கிவிடப் பட்டதையும் கூறித் தேற்றினான்.

மொபைல் போனை ஒருவேளை அவரது அறையிலேயே எங்காவது வைத்திருக்கலாம் என்றெண்ணி அவரது அறைக்குச் சென்றான். காற்றுவரும் ஜன்னலுக்கு அருகில் மேசை நிறைய புத்தகங்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. ‘தி.ஜானகிராமன்’ – அப்பாவிற்குப் பிடித்த எழுத்தாளர். அங்கே மேலேயிருந்த அவர் எழுதிய “உதயசூரியன்” புத்தகத்தை எடுத்து மெதுவாய்த் தடவிக் கொடுத்தான்.

அதில் புக்மார்க்காக சுருட்டி வைக்கப்பட்டிருந்த காகிதம் கீழே விழுந்தது. அதை குனிந்து எடுத்துவிட்டு, ஏதோ உள்ளுணர்வு சொல்ல அதை விரித்துப் பார்த்தான்.

” எஸ்.பி. கோகுலுக்கு நான் தவறான தகவலைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்- விஷ்ணு”.

– அக்டோபர் 03, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *