இன்னொரு தடவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,640 
 
 

இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். காலிப் பாக்கெட் சாலையில் விழுந்தது. லைட்டரைத் தேடினான். எந்தப் போக்கெட்டில்? கோட்டுப் போக்கெட்? சிலுவார் போக்கெட்? தட்டித் தட்டித் தேடினான். சிலுவாரின் பின்புறம்? கோட்டுக்குள் கைவிட்டு சட்டைப் பையைத் துழாவினான். இல்லை.

“டேம்மிட்” சபித்தான். சிகிரெட் உதட்டிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது.

நடக்கலாமா? முடியுமா? எந்தத் திசையில்? முன்னும் பின்னும் பார்த்தான். இரண்டு பக்கமும் சாலை நீண்டிருந்தது. இரண்டு பக்கமும் மங்கலான தெரு விளக்குகள் இருந்தன. எதிர்ப்புறத்தில் ஒரு பூங்கா இருந்தது. உயர்ந்த மரங்களுக்கிடையில் இருள் அடர்ந்திருந்தது. இப்போது விளக்கை நோக்கிப் போவதை விட இருட்டை நோக்கிப் போவதுதான் விருப்பமாக இருந்தது.

அந்த வீடமைப்புப் பகுதியின் கடைவீடுகள் தொகுதியில் நவீன அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு கட்டடத்தின் முன்னால் அவன் நின்றிருந்தான். அப்போதுதான் வெளியே தூக்கி எறியப் பட்டிருந்தான். விழுந்து எழுந்ததனால்தான் பிருஷ்டத்திலிருந்து மண் தட்ட வேண்டியிருந்தது.

எதிர்ப்புற பூங்காவை நோக்கி நடந்தான். சாலை அசைந்தது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஆடி உடலை சமன் செய்து நடந்தான். சாலை நீண்டு கொண்டே போவது போல… கடக்க நேரமாயிற்று. அடுத்த பக்கம் வந்து கொஞ்ச நேரம் நின்றான். அப்போதுதான் வந்த வடூயில் எங்கோ சிகரெட் வாயிலிருந்து விழுந்து விட்டது தெரிந்தது.

“டேம்மிட்!” போய்த் தேடலாமா? எங்கே விழுந்தது? இருட்டில் தெரியவில்லை. கண்களில் நீரூறிக் கலங்கியிருந்ததில் எதையும் குவிந்து பார்க்க முடியவில்லை. இனித் திரும்பப் போய் தேடமுடியாது. வலுவில்லை. போனால் போகட்டும் இனித் தேவையில்லை. எத்தனையோ போய் விட்டது! யாராரோ பிடுங்கிக் கொண்டார்கள்! இதுவும் போகட்டும்.

வாய் மதுவுக்கு ஊறியது. அவர்கள் தன்னைத் தூக்கியெறிந்த போது அந்த போத்தலையாவது கையோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். அருமையான விஸ்கி. ஏதோ ஒரு விமான நிலையத்தில் டியூட்டி ·பிரீயில் கிரெடிட் கார்ட் கொடுத்து வாங்கியது. எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டான்கள். என் விஸ்கியையும், என் பணத்தையும், என் கம்பெனியையும், என் வாழ்க்கையையும்….

இப்போது எங்கே போக வேண்டும்? ஆமாம், எதிரே பூங்காவுக்குள். ஏன் போக வேண்டும்? மறந்து விட்டது. ஆ, ஆமாம்! இருளுக்குள் போக வேண்டும். அங்கே போய்…? யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அழ வேண்டும். அழுது முடிந்த பின் செத்துப் போக வடூ பார்க்க வேண்டும்.

பூங்காவைச் சுற்றி வேலி போட்டிருந்தார்கள். வேலியோரமாக அதன் வாசலைத் தேடி நடந்தான். நுழைந்தான். பூங்காவில் சிறுபிள்ளைகள் விளையாட ஊஞ்சல்கள் இருந்தன. ஏறி இறங்க ஏணிகள், சருக்குப் பலகைகள் இருந்தன. பெஞ்சுகள் இருந்தன. ஆங்காங்கே விளக்குகள் இருந்தன. அந்த வெளிச்சம் பிடிக்கவில்லை.

தூரத்து மூலையை நோக்கி நடந்தான். அங்கே சிமிந்தியால் உயரமான சுவர் போட்டு வைத்திருந்தார்கள். சுவருக்கு அந்தப் பக்கம் மூன்று பெரிய குப்பைத் தோம்புகள் இருந்தன. அன்றைய குப்பைகள் நிரம்பி வழிந்தன. கடூக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்குள் புழுக்கள் புகுந்த அழுகும் நாற்றம் இருந்தது.

இது நல்ல இடம். நானும் குப்பை. அழுகிய நாற்றம் வீசும் பொருள். சரியான இடம். இங்கே இருள் இருக்கிறது. நான் ஒளிந்து கொள்ளலாம்.

சிமிந்தியில் சரிந்து சாய்ந்தான். கால்கள் மடக்காமல் நீண்டிருந்தன. கோட்டு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. தலை சாய்ந்து கொண்டது. மயக்கம். ஒரு கையால் சிமிண்டுத் தரையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு சாய்ந்தான்.

கொஞ்ச நேரம் அப்படியே தூங்கினான். வாயிலிருந்து வடூந்த எச்சிலாலும் அவன் குறட்டைச் சத்தத்திலும் தானே விழித்துக் கொண்டான். சிகிரெட் இல்லை. விஸ்கி இல்லை. வாய் காய்ந்திருந்தது. பணம் இல்லை. வாழ்க்கை இல்லை. சாக வேண்டும். என்ன வழி?

“யாரு?” என்ற குரல் கேட்டது. இருளில் ஒரு நிழல். “யாரு?”

“நாந்தான்!” என்றான் பாஸ்கரன்.

“அடப் பாருடா! இந்த எடத்துக்கும் பங்குக்கு வந்திட்டானுங்க!” என்றது குரல்.

“இது உன் இடமா?”

“ஆமா! இங்க வேற யாரும் வரமாட்டங்கள! நீ எப்படி வந்த?”

“நீ யாரு?”

“நீ யாரு?”

யோசித்தான். போதையில் புத்திசாலித் தனமாக வேறு பெயர்கள் மறைத்துச் சொல்ல முடியவில்லை. “நான் பாஸ்கரன். மேனேஜிங் டைரக்டர் பாஸ்கரன் என்ட் துரை இன்டஸ்ட்ரீஸ்”

“கிளேட் டு மீட் யு” என்றது குரல்.

“உக்காரு. நின்னா நிமிந்து பாக்க முடியில…!” என்றான் பாஸ்கரன்.

நிழல் உட்கார்ந்தது. தாடையில் கொஞ்சமாகத் தாடி படர்ந்த நடுத்தர மனிதனாக இருந்தான். கையில் காகிதத்தில் சுற்றி ஒரு பொட்டலம் வைத்திருந்தான்.

“இது என்னா, கையில?” பாஸ்கரன் கேட்டான்.

“ஏதோ நிம்மதியா ஒக்காந்து குடிக்கலான்னு வாங்கிட்டு வந்தேன். எப்போதும் இங்கதான் வர்ரது. நீ… நீங்க எப்படி வந்திங்க? ஏன் வந்திங்க?”

“குடு. நாக்கு வறண்டு போய் கிடக்கு!”

“ஐயோ. உங்கள பாத்தா பெரிய ஆளா தெரியுது. இது உங்களுக்கு ஒத்துக்காது. சாராயம். இது என்னப் போல சின்னவங்க குடிக்கிறது!”

“நீ சின்னவனா? இங்கிலீஷ் பேசிறிய!”

“·போர்ம் திரீ வரைக்கும் படிச்சங்க. ·பெயில்’லா. அப்புறம் ஊட்டவுட்டு ஒடியாந்திட்டேன் பாத்துக்குங்க! சீனன்கிட்ட கான்டிராக்ட்ல வேல செய்றேன். பத்து நாளைக்கு வேல இருக்கும் பத்து நாளைக்கு இருக்காது. வேலைக்கு ஒரு நாளைக்கு முப்பது வெள்ளி குடுப்பான் சீனன். இன்னக்கி முழுக்க மிஷின் வச்சி சிமிந்தி ஒடச்சேன். கையெல்லாம் விண்விண்னுன்னு தெறிக்குது. உங்களப் போலியா? ஏதோ டைரக்டர்ங்கிறிங்க. கோட்டு சூட்டு போட்டிருக்கிங்க?”

“அதெல்லாம் முடிஞ்சது. இப்ப இல்ல. குடு போத்தல!”

“காசு குடுத்து வாங்கிட்டு வந்திருக்கனே! உங்ககிட்ட காசு இருக்கா?”

பாக்கெட்டுக்குள் கைவிட்டான். பர்சைக் காணவில்லை. கார் சாவி அகப்பட்டது. கார் சாவியை நீட்டினான். “இந்தா கார் சாவி. கார நீ எடுத்துக்க! போத்தல குடு!” என்றான்.

அவன் கை நீட்டிக் கார் சாவியை வாங்கிக் கொண்டான். பரிசோதித்தான். “என்ன காரு?” என்று கேட்டான்.

“வோல்வோ. அதோ கடைக்கு முன்னால நிப்பாட்டி வச்சிருக்கேன். விடியறதுக்கு முன்னால போய் எடுத்துக்கோ”

“எடுத்திட்டு?”

“வச்சுக்க. வித்திரு. பார்ட் பார்ட்டா கழட்டி வித்திரு. சீனன் வாங்கிக்குவான்”

“உங்களுக்கு!”

“எனக்குத் தேவைப் படாது. இன்னைக்கு நான் செத்திரப் போறேன்”

அவன் சாவியைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான். “ரொம்ப மனக் கஷ்டம் போல இருக்கு உங்களுக்கு. ரொம்ப குடிச்சிருக்கிங்க!”

“போதாது. போத்தல குடு!”

அவன் உட்கார்ந்து காகிதத்தைப் பிரித்து ஒரு பெரிய போத்தலை எடுத்தான். திறந்து பாஸ்கரனிடம் நீட்டினான். பாஸ்கரன் போத்தலைத் தூக்கி வாயில் ஊற்றினான். முகத்தைச் சுளித்து விழுங்கினான். “ஐய்” என்று கத்தினான்.

“டேம்மிட்! என்னடா இது?”

“சாராயங்க. புலிச்சாப். மொதல்ல அப்படித்தான் எரியும். அப்புறம் சரியாயிடும்!”

அவனும் போத்தலை வாங்கி ஊத்திக் கொண்டான்.

“சிகிரெட் வச்சிருக்கியா?”

“சீச்சீ! அந்தக் கெட்ட பளக்கமெல்லாம் கெடையாதுங்க!”

கொஞ்ச நேரம் பாஸ்கரனை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“நீங்க எப்படி இங்க வந்திங்க?”

“என்ன எல்லாரும் ஏய்ச்சிட்டாங்கப்பா. கம்பெனி மீட்டிங் நடந்தது. என்ன நீக்கிட்டானுங்க. நான் போட்ட முதல் என்னடா ஆச்சின்னு கேள்வி கேட்டதுக்குத் தூக்கி வெளிய எறிஞ்சிட்டானுங்க!”

“அப்பிடியா?”

“பத்து வருஷத்துக்கு முந்தி சின்னதா பத்தாயிரம் மொதல் போட்டு கம்பெனி ஆரம்பிச்சோம். நானும் சண்முகமும். கஷ்டப்பட்டு ஒழச்சோம். இப்ப ரெண்டு மில்லியன் டர்ன் ஓவர்”

“அப்படின்னா?”

“ரெண்டு மில்லியன் பணம் பொரளுது. என்ஜினியரிங் புரடக்ட்ஸ். கம்பெனி வளர்ந்தவொண்ண ஒருத்தன் வந்தான். தொரைன்னு. பிளடி பாஸ்டர்ட். கோடிக்கணக்கா பணம் பொரட்ட வடூயிருக்குன்னான். கவர்மென்ட் கான்ட்ரேக்ட் வாக்கிக் குடுக்கிறேன், எனக்கு டத்தோவைத் தெரியும்னான். பூமிபுத்ரா பார்ட்னர் வச்சிக்குவோம்னான். அவன் பேச்ச நம்பி மொதல் இல்லாமலேயே அவனைச் சேர்த்தோம். அப்புறம் சண்முகம் சொன்னான் “இந்தத் தொர நல்லவன் இல்ல பாஸ்கரன். ரொம்ப சூழ்ச்சிக்காரன். அவன விட்டுடு”ன்னு. ஆனா தொர பணத்தாச காட்டி என்னை அவன் பக்கம் திருப்பிட்டான். கம்பெனில நஷ்டம்னு கணக்குத் தயாரிச்சி சண்முகத்த கழட்டி விட்டுட்டோம். அப்புறம்தான் பாஸ்கரன் என்ட் தொரைன்னு கம்பெனி பேர மாத்தினோம். இப்ப என்னையே ஓட்டாண்டி ஆக்கிட்டான்பா”

கொஞ்சம் குடித்தான். பரிமாறிக் கொண்டார்கள்.

“சண்முகத்துக்கு நான் பண்ணின துரோகத்துக்கு தண்டன கெடச்சுப் போச்சு! பேங்கில கடன் வாங்கச் சொன்னான். வாங்கி கம்பெனில போட்டேன். அதில என்ன மாட்டிட்டு அவன் தப்பிச்சிட்டான். கம்பெனி அவனோடதாப் போச்சி. கடன் என்னோடதாப் போச்சி!”

“எவ்வளவு கடன்?”

“ஒரு மில்லியன்”

“அவ்வளவா? நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ரூமா மூரா வாங்க முப்பதாயிரம் கேட்டேன். பேங்கில! முடியாதுன்னுட்டாங்க! ஒனக்கு நிரந்தரமான வேலையில்ல, அதினால குடுக்க முடியாதின்னுட்டாங்க!”

“எல்லாம் பாஸ்டர்ட்ஸ்!”

“ஆமாங்க, பாஸ்டர்ட்ஸ்!”

“எல்லாம் மோசடிக்காரனுங்க!”

“ஆமா, கெட்ட நாமர்தாப் பசங்க!”

ஆசுவாசப் படுத்திக் கொள்ள இன்னும் கொஞ்சம் குடித்தார்கள்.

“இது நல்லா இருக்கு! எங்க வாங்கின?”

“இதோ இந்தக் கடைங்க ஓரத்தில மூலையில போனா ஒரு சீனன் வங்சா கடை இருக்கு. அவன் விக்கிறான். நீங்க அங்க போனதில்லையா?”

பாஸ்கரன் அவனை மேலும் கீழும் பார்த்தான். “ஒம் பேரென்ன?” என்று கேட்டான்.

“நாகராஜ்!”

“நாகராஜ். ஏன் இந்த நாத்தம் புடிச்ச எடத்த ஒன் எடங்கிற?”

“சுத்தமான எடமாப் பாத்துப் போனா நிம்மதியா படுக்க முடியாது. குடிக்க உடமாட்டாங்க. “பீக்கிலா கிளிங், மாபோ” அப்படின்னு விரட்டுவாங்கலா”

“வீட்டுக்குப் போவக் கூடாதா, நாகராஜ்!”

“என்னா வீடு! இன்னொருத்தர் வீட்டில ரூம் புடிச்சி இருக்கோம். லேட்டா போனா ஊட்டுக்காரன் தொறக்க மாட்டான்!”

“பொண்டாட்டி தொறக்க மாட்டாளா?”

“அவ இல்ல!”

“செத்துப் போய்ட்டாளா?”

“இல்ல! அவ தகப்பங்காரன் அவ மனசக் கலச்சி அவன் ஊட்டுக்குக் கூட்டிப் போயிட்டான்!”

“ஏன்?”

“எல்லாம் இதான்! ரொம்பக் குடிக்கிறனாம். குடிக்காம எப்படிங்க? வேல எத்தன கஷ்டம்? எவ்வளவு ஒடம்பு வலி! புரியிதா இந்தப் பொம்பிளைக்கு?”

“புரியாது நாகராஜ். பொம்பிளங்கள நம்பாதே! என் பொண்டாட்டி இன்னொரு ஊடு வாங்கிக் குடுங்கிறா. கார மாத்துங்கிறா. மெர்சடிஸ் வேணுமாம்! ஒவ்வொரு மாசமும் பார்ட்டி குடுக்கணுங்கிறா. அவளாலியே பேங்கில கடன் வாங்கி நான் கெட்டேன். இப்ப கம்பெனியும் போச்சி. வீட்டுக்குப் போனா என்ன நாய் மாதிரி நடத்துவா நாகராஜ். பொம்பிளங்க ரொம்ப மோசம் நாகராஜ். பேராசைப் பேய்ங்க. புருஷன உயிரோட பிச்சிப் பிச்சித் திங்கிற பிசாசுங்க! என்ன சொல்ற?”

“ஆமாங்க!” என்றான் நாகராஜ். “ஆனா என் பொண்டாட்டி அப்பிடி இல்லங்க. அவ நல்லவ. அவ குடும்பந்தான் அவ மனசக் கலைக்கிறாங்க. அவ அப்பன், அம்மா, அண்ணன் எல்லாரும் மனசக் கலைச்சிட்டாங்க. என்னமோ மருந்து வச்சிட்டாங்க! பிரிச்சிட்டாங்க”

“போய் கூப்பிட்டியா?”

“கூப்பிட்டேன்! ஒரு நாளு நானும் குப்புசாமியும் நல்லா தண்ணி போட்டுட்டு அவ அப்பன் ஊட்டுக்கே போய்ட்டோம். வெளிய நின்னு சத்தம் போட்டேன் பாருங்க! “வாடி வெளியே”ன்னன்! கதவ இறுக்கிப் பூட்டிக்கிட்டாங்க. “உன் புள்ள எனக்குப் பொறந்த புள்ளைன்னா இப்பவே எங்கிட்ட குட்றி”ன்னன்”

“புள்ள வேற இருக்கா!”

“ஒரு பொண்ணுங்க! பத்து வயசாச்சி”

“குப்புசாமி யாரு?”

“என் கூட்டாளி. சிமிந்தி வேல செய்வான்!”

“அப்புறம்!”

“எல்லாம் வென வச்சிட்டாங்க! அவ கதவ தொறக்கவே இல்ல! அவன் அண்ணங்காரன்க வந்து அடிச்சானுங்க! அப்புறம் வந்திட்டோம்!”

“பொம்பிளங்கள நம்பக் கூடாது நாகராஜ்!”

“ஆமாங்க!”

“ஒன் பொண்டாட்டி இனி வருவான்னு நெனைக்கிறியா? திருந்துவான்னு நெனைக்கிறியா? வரமாட்டா நாகராஜ்! ஒன் பொண்ணயும் குடுக்க மாட்டா!”

சிறிது நேரம் குடித்தார்கள். நாகராஜ் தன் போக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுத்துக் கையில் நெருடிப் பார்த்தான்.

“என்ன வெல இருக்கும் உங்க காடி?”

“ஒன்ற லட்சம் வெள்ளி. அதுமேல கடன் ஒரு லட்சம் வெள்ளி!”

“ஐயோ!” என்றான் நாகராஜ். பாஸ்கரன் அழுதான். குடித்தான். அழுதான்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. லேசு லேசாக மேகங்கள் கொண்ட வானம். இடைவெளியில் சில நட்சத்திரங்கள். பிளந்த தேங்காய் மட்டை போல மேகங்களுக்கிடையில் ஓரம் பிரிந்த நிலாக் கீற்று. நேரமும் வானமும் நிலாக்கீற்றும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

“நாகராஜ். இந்த ஒலகத்தில இருந்து பிரயோஜனம் இல்ல! இனி யாரும் என்ன மதிக்க மாட்டாங்க!”

“என்னயுந்தாங்க, மதிக்கிறதில்ல! புள்ள கூட மதிக்கிறதில்ல!”

“காறித் துப்புவாங்க நாகராஜ்!”

“இப்பவே துப்புறாங்க!”

“அப்ப ஏன் உயிரோட இருக்கணும்?”

“பிரயோஜனம் இல்ல!”

“நாகராஜ், எங்கூட வா! செத்துப் போகலாம்!”

“சரிங்க!”

“எப்படி?”

நாகராஜ் யோசித்தான். “உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“தெரியாது!”

“தோ அந்த பங்களாவுக்குப் பின்னால ஒரு நீச்சக்குளம் இருக்குங்க! அதில போயி உளுந்திடலாம்!”

“வா!”

நாகராஜ் கை கொடுத்து எழுப்பி விட்டான். இருவரும் தடுமாறி நடந்தார்கள்.

“வீட்டுக்குள்ள எப்படி நொளையிறது நாகராஜ்?”

“வேலியில ஒரு ஓட்டயிருக்கு. நொளஞ்சிடலாம்!”

“ஒனக்கு எப்படித் தெரியும்?”

“நானும் குப்புசாமியும் போட்டு வச்சோம்!”

“ஏன்?”

நாகராஜ் பேசாமல் இருந்தான்.

“வீட்டில ஆளுங்க இல்ல?”

“ரொம்ப நாளா ஆள் இல்ல! சும்மாதான் கெடக்குது!”

“கார்டு!”

“அவன் முன்னால உக்காந்து தூங்கிக்கிட்டிருப்பான்! நாம பின்னால போலாம்!”

தடுமாறித் தடுமாறி வேலியோரம் வந்து வேலியை விலக்கி பங்களாவின் பின்னால் வந்தார்கள். புல்லும் பூண்டும் வளர்ந்து கிடந்தது. பணக்காரர்களால் பேராசையுடன் ஆடம்பரமாகக் கட்டப்பட்டு உபயோகிக்க ஆளில்லாமல் கவனிக்கப் படாமல் கைவிடப்பட்ட செல்வத்தின் பாழடைந்த சின்னம். சோம்பேறிக் காவல்காரனின் அரைகுறை கண்காணிப்பில்….

நீச்சல் குளத்தின் அசையாத நீரின் உள்ளே சின்னஞ்சிறு நிலாக் கீற்று கலங்கித் தெரிந்தது. மேற்பரப்பில் ஏதோ பூச்சிகள் ஊர்ந்தன.

“இப்ப என்னா மணி நாகராஜ்?”

அவன் கையில் கடிகாரம் இல்லை. “என்னா ஒரு மூணு நாலு மணி இருக்கும்!”

“நாகராஜ். நீ உறுதியாத்தானே இருக்க!”

“ஆமாங்க!”

அநேகமாக முடிந்து போன சாராய போத்தலிலிருந்து ஒரு மிணறு குடித்தான் பாஸ்கரன். “நம்ப கடைசிக் குடி!” மீதியை நாகராஜுக்குக் கொடுத்தான். நாகராஜ் கவிழ்த்துக் குடித்துவிட்டு போத்தலை நீச்சல் குளத்துக்குள் எறிந்தான்.

“நன்றி நாகராஜ். என் கடைசி காலத்தில நீ வந்து சேர்ந்த! உயிர்த்தோழனா இல்லாவிட்டாலும் சாவுத் தோழனா வந்த!”

“ஆமாங்க!”

“நாகராஜ். காசு வேணாம். கார் வேணாம். கம்பெனி வேணாம். பார்ட்னர்ஷிப் வேணாம். கடன் வேணாம். ஆசை வேணாம். முக்கியமா இந்தப் பொண்டாட்டி சனியன் வேணாம்! வா நாகராஜ் குதிக்கலாம்!”

“நீங்க மொதல்ல குதிங்க!”

பாஸ்கரன் குதித்தான். நிலாக்கீற்று ஆயிரம் துண்டுகளாய்ச் சிதறிற்று. நீர்ப் பூச்சிகள் பீதியுடன் எல்லா மூலைக்கும் ஓடின. கைகளை அடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அலைந்தான். அவன் கோட்டு தண்ணீருக்கு மேல் புஸ் என்று வந்தது. மூச்சுத் திமிறினான். மேலே வந்தான். மூச்சடங்க மீண்டும் முழுகினான்.

நாகராஜ் யோசித்தவாறு நின்றான். அப்புறம் குளத்தைப் பார்த்துப் பேசினான். “எல்லாம் அவ குடும்பம் வச்ச வெனையினாலதாங்க. குடிக்காம போயி நல்ல விதமா கூப்பிட்டா திரும்பி வந்திருவான்னுதான் நெனைக்கிறேன். இன்னொரு தடவ கூப்பிட்டுப் பாத்திட்டு அவ வரலின்னா அப்புறம் பாக்கலாம்!”

திரும்பினான். நின்றான். பாக்கெட்டில் இருந்த கார் சாவியை எடுத்து குளத்துக்குள் வீசினான். வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியே வந்தான். கொஞ்சம் தள்ளாடித் தள்ளாடி, ஆனால் திரும்பிப் பார்க்காமல் நடந்தான் நாகராஜ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *