அந்த பல்லி என்னையே பார்க்கிறது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 43,571 
 
 

“இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல… எனக்கும் கூட பல்லினாபயம்தான் ”

இப்படிக் சொன்ன சைக்காலஜிஸ்ட் பரிமளாவிற்கு, இருபத்தி சொச்சம் வயதிருக்கும். காலை நேர வெயில் ஜன்னல்வழி ஊடுருவி அவளை வெண்ணிற காட்டன் சேலையில் தேவதை போல் ஜொலிக்க வைத்திருந்தது..

எதிரில் உட்கார்ந்திருந்த முகில், எதிலும் கவனமற்று தன் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் பரிதவிப்பது அவன்கண்களில் தெரிந்தது…

” அதில்ல மேடம், எனக்கு என் வீட்டுல இருக்கற ஒரே ஒரு பல்லிய பார்த்தா மட்டும்தான் பயம்… மத்தபடி எந்தபல்லியும் பார்த்து நா பயப்படறதில்ல”

பரிமளா புருவங்களை சுருக்கி

“அது ஏன்?”

“தெரியல மேடம்”.

“வேற எதுக்கெல்லாம் பயப்படுவீங்க..?”

“எதுக்குமே பயந்தது இல்ல மேடம்.. சின்ன வயசுல அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவேன்.. அப்புறம் அவரும் எனக்கு 8வயசு ஆகறப்போ எதோ நோய் வந்து இறந்துட்டார்… அம்மா நான் பொறந்ததும் இறந்துட்டாங்க… வளர்ந்ததெல்லாம்பாட்டிகிட்ட தான்… இவ்ளோ நாள் கழிச்சு இந்த பல்லி தான் பயமுறுத்துது”

“சரி அப்படி என்ன பயம் அந்த பல்லிகிட்ட…??”

“அந்த பல்லி நா வீட்டுக்கு எப்போ வருவேன்னு காத்திட்டிருக்கும் மேடம்.. நான் உள்ள நுழைஞ்சதும் ஓடி வந்திரும்”

“ஓடி வந்து?”

“எதுவும் செய்யாது, ஆனா எங்க போனாலும் என் முன்னாடி வந்து என்னையே முறைச்சு பார்க்கும்”

“சார்.. நீங்க உங்க வொய்ஃப சொல்லலல்ல”

“மேடம், எனக்கு இன்னும் மேரெஜ் ஆகவேல்ல…”சலிப்புடன் சொன்னான்.

“ஒகே ஒகே…. சோ அந்த பல்லி வேறென்ன பண்ணுது?”

“வேற எதும் பண்றதில்ல… ஆனா எனக்கு எதிர்ல வந்து என்னையே பார்க்கறது ஒரு மாதிரி பயமா இருக்கு மேடம்”

“இதுல பயப்பட ஒண்ணுமில்ல… சாதாரணமா நடக்கற விஷயத்த, நீங்க ரொம்ப யோசிச்சு பயப்படறீங்க முகில்”

” கண்டிப்பா இல்ல மேடம்… வீட்டுக்குள்ள நா எங்க போனாலும் கரெக்டா ஆஜெர் ஆயிடுது”

“ஆனா அது தான் உங்கள எதுவும் பண்றதில்லையே..!”

“அய்யோ உங்களுக்கு புரியல மேடம்… உங்கள ஒரு கண் எப்பவும் பார்த்துட்டே இருந்தா எப்படி இருக்கும்? என்னாலநிம்மதியா சாப்பிட முடியல தட்டுல குதிச்சிருமோன்னு பயமா இருக்கு… மொகத்து மேல வந்து விழுந்துருமோன்னுதூங்க முடியல… ஒப்பனா சொன்னா நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல மேடம்”

பரிமளாவிற்கு அவனைப்பார்க்கவே சங்கூஜமாகவும், பாவமாகவும் இருந்தது…

“முகில் இவ்ளோ பயப்படற நீங்க அந்த பல்லிய பிடிச்சு வெளில போட்டிருக்கலாம்… இல்லன்னா அடிச்சு தூக்கிபோட்டிருக்கலாம்… உங்களுக்கு பயமா இருந்தா, உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூப்பிட்டு பண்ணலாம்ல”

“அதிலேயும் ஒரு பிரச்சினை மேடம், நானே நிறைய தடவ அத அடிக்க ட்ரை

பண்ணிருக்கேன்… ஆனா அந்த டைம்ல மட்டும் அது காணாம போய்டுது மேடம். ”

சரிதான் தலைக்கேறிவிட்டது என்பது போல் பார்த்த பரிமளா நிதானமாகப் பேசத் துவங்கினாள்..

” இங்க பாருங்க முகில்… நீங்க நினைக்கற எதுவும் உண்மையில்லை…. பல்லி நீங்க போற இடத்துக்கெல்லாம் ஒடிவரக்காரணம், நீங்க வீட்டுக்குள்ள வந்தாலும், எந்த ரூம் போனாலும், முதல்ல லைட் போடுவீங்க இல்லையா? லைட்போட்டாவே சின்ன சின்ன பூச்சிங்க நிறையப் பறக்கும்… அதுங்கள பிடிச்சு சாப்பிட தான் பல்லி நீங்க போறஇடத்துக்கெல்லாம் வருது…”

முகில் குறுக்கிட்டு ” ஆனா நான் பகல்ல லைட் போடாதப்போ கூட வருதே.. ”

பரிமளா அவனை உற்று பார்த்தாள்..

————-

எதுவும் வேலைக்கு ஆகவில்லை.. முகில் என்னவெல்லாமோ செய்தான்.. யார் யாரிடமோ ஆலோசனை கேட்டான்..ஒருவர் சொன்னார் மயிலறகு வைத்தால் பல்லி வராது என்று… தேடிப்பிடித்து வாங்கி கொண்டுவந்து வைத்தான்…சொன்னது போலவே அதன் பின் அந்த பல்லி வரவே இல்லை…

சரியாக வருடம் கழிந்தது… முகில் மணம் முடித்து தன் புது மனைவியுடன் வீட்டினுள் நுழைந்தான்… அவன்அவளிடம் முதலில் சொன்னது எக்காரணம் கொண்டும் அந்த மயிலிறகை எடுக்கவோ அப்புறப்படுத்தவோ கூடாதுஎன்றுதான்…

அவளும் சரி என்று தலையசைத்தாள்…

அடுத்த நாள் காலை…

முகில் கண்விழித்தபோது சுவற்றில் மயிலறகைப் பார்த்தான்… காணவில்லை

‘அய்யோ, அந்த பல்லி வந்து விடுமே’

மிரண்ட கண்களோடு சுவற்றைச் சுற்றிலும் பார்த்தான்..

எங்கும் பல்லி தென்படவில்லை…

சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி திரும்பியவன் ஒரு நொடி மூச்சற்றுப்போனான்…..

அவன் பக்கத்தில் அவனை விட பெரிய பல்லி ஒன்று அவன் மனைவி படுத்திருந்த இடத்தில் இருந்தது ..!!!!!!…. அதன்நாக்கு அடிக்கடி வெளிவந்து எக்கணத்திலும் அவனை சுழற்றி விழுங்கத் தயாராக இருந்தது!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *