பெயர் இல்லாத தெரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 9,709 
 
 

(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 15 | 16 – 20 | 21 – 25

16

ஷூவிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைக் கண்டதும் உடனே அந்த இடத்துக்குப் போய். படத்தில் குறிப்பிப்டிருப்பது என்ன என்பதைக் கண்டுபிடிக்கத் துடித்தான் பெரியதம்பி.

அவன் அந்த ஷூக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அவை அவனுடைய ஷூகள்தாம். ஷூக்களில் ஒன்றில் அந்தப் படத்தை எப்போது அவன் மறைத்து வைத்தான், எதற்காக வைத்தான் என்று அவனுக்கு நினைவில் வரவே இல்லை. எல்லாவற்றிற்கும் விடை அந்தப் படத்தில் அடங்கியிருப்பதைப்போல் அவன் மனத்தில் பட்டது. ஆகையால் எல்லா உண்மைகளையும் அறிய அந்தப் படத்தையே நம்பியிருந்தான். வழியில் எங்கேயாவது அந்தப் படம் காணாமல் போய்விட்டாலோ, தற்செயலாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டாலோ அடையாளம் தெரியாமல் கிழிந்து போனாலோ என்ன செய்வது என்று விழிப்புடன் அந்தப் படத்தை அப்படியே மனத்தில் படம் பிடித்துக் கொண்டான். அந்தப் படத்தில் உள்ளவைகளைப் பல தடவைகள் தரையில் விரல்களால், கற்பனைக் கோடுகளால் வரைந்து பார்த்தான் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்காமல், வேறொரு காகிதத்தில் அப்படியே வரைய முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், அந்தப் படத்தை மடித்து மீண்டும் ஷூவில் பழையபடியே ஒளித்து வைத்தான்.

பெரியதம்பிக்கு இப்போது ஓரளவுக்கு அமைதியும் நம்பிக்கையும் பிறந்தது. ஆகையால் அவன் அமைதியுடன் தூங்கினான். விடிவதற்கு முன்பே, கிழவி வந்து அவன் தங்கியிருந்த அந்த அறையின் கதவைத் தட்டுவதற்கு முன்பே தப்பிப் போக எண்ணி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்று முடிவுகொண்டு அவன் தூங்கினான்.

விடியற்காலை நான்கு மணிக்கு அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். நான்கு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டுமே என்ற நினைப்புத்தான் அவனைத் தட்டி எழுப்பியது. கையில் கடிகாரமே கட்டாத காமராஜ், இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பார். வேலை மிகுதியாக இருக்கும்போது இரண்டு மூன்று நாட்கள்கூடத் தூங்காமல் இருப்பாராம். பிறகு மிகுந்த களைப்பு அடைந்ததும், ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுத் தூங்கப் போய்விடுவாராம்.

மற்றவர்களிடம் ஒரு மணி நோம் என்றால். மிகச்சரியாக ஒரு மணி நேரம் பொறுத்து அவரே விழித்துக்கொண்டு, எழுந்து விடுவாராம்! ஒரு நிமிஷம்கூட இப்படி அப்படிப் போகாதாம்! பெரியதம்பிக்கு காமராஜரின் நினைவு வந்தது. அவன் தன்னைக் காமராஜருடன் ஒப்பிட்டுக் கொண்டு சிரித்தான்.

அவன் எழுந்து உட்கார்ந்துகொண்டு உற்றுக் கவனித்தான். வெளியே தொலைவில் ஒரு சில லாரிகள் ஓடும் ஓசை கேட்டது. அவன் ஷூக்களை அணிந்துகொண்டு மெல்ல வெளியே வந்தான். கிழவி இன்னும் விழித்துக் கொள்ள வில்லை. அவள் பெரியதம்பி திருடன் அல்லன், சொல்லிக் கொள்ளாமல் அவன் போய்விடமாட்டான். அப்படியே போனாலும் எதையும் தூக்கிச் சென்று விடமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பெரியதம்பி மெல்ல வெளியே வந்தான்.கதவைத் திறந்து கொண்டு ஓசையின்றி நழுவினான். தோப்பைக் கடந்து சாலையை நெருங்கினான் அவன்.

சாலையில் அந்த நேரத்தில் லாரிகளைத் தவிர வேறு வண்டிகளின் நடமாட்டம் இல்லை. அவன் சாலையின் ஓர் ஓரமாக நின்று, தொலைவில் வந்த லாரியைப் பார்த்தான். பளிச்சென்று இரு விளக்குகளும் வெளிச்சத்தை அள்ளி வீசின. ஆனாலும் ஒரு கையால் முகத்தை மறைத்துக் கொண்டு மற்றொரு கையால் லாரியை நிறுத்தும்படி பெரியதம்பி சாடை காட்டினான்.

லாரி அவனைக் கடந்து சென்று பிறகு நின்றது. பெரிய தம்பி ஓடினான்.

“எங்கே போக வேண்டும்?” என்றான் லாரி டிரைவர்.

“லாரி எங்கே போகிறதோ. அங்கே” என்றான் பெரியதம்பி.

“பெங்களூருக்குப் போகிறது” என்றான் லாரி டிரைவர்

“மிகவும் நல்லதாகப் போய்விட்டது!” என்று சொல்லி ஏறிக்கொண்டான் பெரியதம்பி.


17

லாரி விரைந்து பறந்தது. பெங்களூரில் லாரி கடைத் தெரு ஒன்றில் சற்று நின்றது. மக்கள் கூட்டம் மிகுந்த அந்தக் கடைத்தெருவில் பெரியதம்பி இறங்கியதும், எந்தப் போலீஸ் கான்ஸ்டபிளாவது அவனைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்துகொண்டு கைது செய்துவிடுவானோ என்று அஞ்சியபடி கூட்டத்தில் நடந்தான். போலீஸ் படையைச் சேர்ந்த எவரையாவது பார்க்கும்போதெல்லாம் தலையைக் கூட்டத்தில் மறைத்துக் கொண்டு வேறு பக்கமாக நழுவினான்.

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வருமுன் பெரியதம்பி, தன் உழைப்பில் பணம் திரட்டிப் பெரும் பணக்காரனாக வேண்டும் என்று எண்ணினான். இப்போது அவன் பணக்காரனாக விரும்பவில்லை. எப்படியாவதுதான் குற்றமற்றவன், தனக்கும் புலிக்குட்டியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டுத் தப்பினால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு! அவன் சிக்கியிருந்த இந்த வழக்குக்கு விடை பெங்களூரில்தான் இருப்பதாக அவன் மனம் எண்ணியது.

பெரியதம்பி, பெங்களூர் புகைவண்டி நிலையத்திற்குச் சென்றான். அவனிடம் இருந்த படத்தில் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்குத் திக்கில் செல்லும் தெருவில் நடந்தான் அரைக் கல் தொலைவு நடந்ததும், இடப்பக்கம் திரும்பி மீண்டும் அரைக்கல் தொலைவு நடந்தான். அந்தப் பக்கம் தெரு ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. பெங்களூரில் பொதுவாகவே தெருக்கள் ஏற்றமும் இறக்கமும் உடையனவாக இருக்கும். அவன் சென்ற தெரு ஏதோ மலையில் அமைந்திருந்ததைப் போல் இருந்தது.

அவன் அடைந்த இடத்திலிருந்து சற்று அகன்ற தெரு ஒன்று தெற்கு வடக்காகச் சென்றது. அந்த அகண்ட தெருவிலிருந்து நான்கு தெருக்கள் வரிசையாகத் தெரிந்தன. கிளைகளைப்போல் பிரிந்து சென்ற அந்த நான்கு தெருக்களும் ஒரு பர்லாங்கு இடைவெளிக்குள் அமைந்திருந்தன. அவன் ஒவ்வொரு தெருவாகப் பார்த்துக்கொண்டே சென்றான்.ஒவ்வொரு தெருவுக்கும் ஏதோகன்னடப்பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு தெருவுக்கு மட்டும் சாலையின் தொடக்கத்தில் பெயர் இல்லை. பெயர்ப் பலகையே இல்லை!

பெரியதம்பி தெருவின் இருபக்கங்களிலும் பார்த்தபடி நின்றான். இரண்டு பக்கங்களிலும் பெயர்ப் பலகையைக் காணவில்லை! பெயர் இல்லாத அந்தத்தெருவை கண்டதும் சரியான இடத்துக்குத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று முடிவு செய்தபடி நடந்தான்.

வழியில் சற்று வயதான மனிதர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்து பெரியதம்பி கேட்டான்.

“ஐயா, இந்தத் தெருவுக்குப் பெயர் என்ன?”

“பெயர் இல்லாத தெரு இது!” என்றார் பெரியவர்.

“பெயர் இல்லாத தெருவா? இப்படிக்கூட ஒரு தெரு இருக்குமா! பெயர்ப் பலகையைக் காணவில்லை. அது விழுந்து விட்டிருக்கும் என்றல்லவா எண்ணினேன்! மற்றத் தெருக்களுக்குப் பெயர் இருக்கும்போது இந்தத் தெருவுக்கு மட்டும் ஏன் பெயர் இல்லை?” என்று கேட்டான் பெரியு தம்பி.

பெரியவர் சொன்னார்: “இந்தத் தெருவுக்குப் பெயர் வைக்காதது ஒரு பெரிய கதை. அதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். இரண்டு பெரும் பணக்காரர்கள் இந்தத் தெருவில் இருந்தார்கள். அவர்களில் யார் பெயரை இந்தத் தெருவுக்கு வைப்பது என்ற பிரசினை வந்ததும் இருவரும் தத்தம் பெயரைத்தான் தெருவுக்கு வைக்க வேண்டும் என்று போட்டியிட்டார்கள். இறுதியில் எவர் பெயரையும் வைக்க முடியாதபடி கலகம் முற்றிவிட்டது. இந்தச் சண்டையில் இறுதிவரையில் இந்தத் தெருவுக்கு பெயர் வைக்க வில்லை. இந்தத் தெருவில் உள்ளவர்கள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து விட்டதனால் ஏற்பட்ட அமளி இது! இன்றுவரையில் இது பெயர் இல்லாத தெருவாகவே இருந்து வருகிறது?”

“மிக்கநன்றி நான் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் பெரியதம்பி. விரைந்து பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்ததால், பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்க அவன் விரும்பவில்லை.

தெருவின் கோடிக்கு வந்ததும் ஒரு பழைய வீட்டைப் பார்த்தான். அந்த வீடு பூட்டிக் கிடந்தது; மாடியில் இருந்த சன்னல்களில்ஒன்றிரண்டுதிறக்கப்பட்டிருந்தன. மாடியிலும் ஒருவரும் இல்லை என்பதற்கு அடையாளமாக அமைதி மிக நிலவி நின்றது. அந்த அமைதி சற்று அச்சத்தையும் தந்தது!

பெரியதம்பி அந்த வீட்டின்படிக்கட்டில் உட்கார்ந்தான். ஒருவரும் பார்க்காதபோது வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்த அடர்ந்த தோட்டத்துக்குள் பாய்ந்தான். பிறகு புறக்கடைப் பக்கம் சென்று பார்த்தான். பகலில் அந்த வீட்டிற்குள் நுழைந்தால், தெருவில் போகும் எவராவது பார்த்து விடுவார்களோ என்ற ஐயமும் அச்சமும் ஏற்பட்டன. அந்த வீட்டிற்குள் புகுந்து பார்க்க இரவு வரையில் பொறுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் புறக்கதவை எப்படியாவது திறந்துகொண்டு உள்ளேபோக வேண்டும்.

அவன் சிறிது நேரம் சிந்தித்தான். இருட்டும் வரையில் காத்திருந்தால், வீட்டிற்குள் தேடிப் பார்க்க மின்பொறி விளக்கு அவனிடம் இல்லை. ஆகையால் எப்படியாவது பகலிலேயே உள்ளே நுழைந்து பார்த்துவிட முடிவு எடுத்தான்.

புறக்கடைக்கதவு உள்ளே தாழிடப் பட்டிருந்தது. கடப்பாறையோ, இரும்புக் கருவியோ இருந்தால் மிக எளிதில் கதவைத் திறந்துவிடலாம் என்று தோட்டத்தில் பார்த்தான். தோட்டத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டின் பின் பக்கம் கார்களை நிறுத்த மிகப் பெரிய காரேஜ் ஒன்று இருந்தது. அந்தக் காரேஜின் கதவு பூட்டப்படவில்லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அந்தக் காரேஜில் பெரிய பழைய கார் ஒன்று நின்றிருந்தது. பயன் அற்ற பழைய கார் அது. எவரோ அந்தக் காரை வந்த விலைக்கு விற்க மனமில்லாமல் அப்படியே போட்டு விட்டார்கள். அது துருப்பிடித்துப் போயிருந்தது.

பெரியதம்பி, அந்தக் காரின் பின்புறம் உள்ள பெட்டியில் கருவிகள் ஏதாவது இருக்கின்றனவா என்று பார்க்க, மூடியைத் திறந்தான். உள்ளே ஒரு பெரிய பெட்டி இருந்தது பெட்டியை அவன் எடுத்துப் பார்த்தான். அது மிகவும் பளுவாக இருந்தது. பூட்டிக்கிடந்த அந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கும் என்று அதைத் திறக்க முயன்றான். அதைத் திறக்க முடியவில்லை. அவன் அந்தப் பெட்டியைச் சற்று வெளிச்சத்தில் கொண்டுவந்து பார்த்தான். அந்தப் பெட்டியின் மீது –

‘பெரியதம்பி’ என்று எழுதியிருந்தது.

இதைக் கண்டதும் அவன் மனம் துள்ளியது! அவன் பெயர் எழுதி இருந்த இந்தப் பெட்டிக்குள்தான் இதுவரையில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் அடங்கியிருப்பதாக அவன் எண்ணினான். ஆகையால் அந்தப்
பெட்டியுடன் அவன் உடனே அந்த இடத்திலிருந்து புறப்பட முடிவு கட்டினான்.

அவன் பெட்டியின் மீது எழுதி இருந்த பெரியதம்பி என்னும் பெயரை, நகங்களாலும், கற்களாலும் கீறிக் கலைத்துவிட்டான். பிறகு அதைத் தூக்கிக்கொண்டு தோட்டத்தை அடைந்தான். தெருவில் மெல்ல எட்டிப் பார்த்துவிட்டு எவரும் அவனைப் பார்க்காதபோது பெட்டியுடன் நடந்தான்!

பெட்டியுடன் நடப்பது அவனுக்குச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. பெட்டியில் ஏதாவது காசு பணம் இருக்கும் என்றாலும், வாடகைக் காரில் போகலாம் என்று எண்ணினான். ஆனால், பெட்டியின் பளுவைப் பார்த்தால் அதன் உள்ளே செங்கற்கள் இருக்கும் போல் இருந்தது!

ஒரு வழியாக அவன் ஓர் ஓட்டலுக்குச் சென்றான். ஓட்டலில் வாடகைக்கு ஓர் அறையை எடுத்துக்கொண்டு, தன் பெயரைத் தங்கத்துரை என்று கையெழுத்துப் போட்டான். அவன் அறைக்குச் சென்றதும் கதவைத் தாழிட்டுவிட்டுப் பெட்டியின் பூட்டை உடைத்தான்.

பெட்டியைத் திறப்பதற்குள், ஒவ்வொரு விநாடியும் அவனுக்கு ஆவல் மிகுந்தது. பெட்டியை ஒரு வழியாகத் திறந்ததும், வியப்பினால் அப்படியே அவன் தொண்டை அடைத்துவிடும் போலிருந்தது! பெட்டியின் உள்ளே-

கற்றை கற்றையாகப் பண நோட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்தன! பண நோட்டுக்களைத் தவிர வேறு எதுவும் அதில் இல்லை!


18

பெட்டியிலிருந்த பணத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான் பெரியதம்பி. அவனுக்கு இப்போது இரண்டு உண்மைகள் புலப்பட்டன. வஞ்சிக்கொடி அவனிடம் பணம் கேட்டாளே அவள் கேட்டதில் உண்மையிருந்தது என்பது புலப்பட்டது அவனுக்கு. மற்றொன்று, இரண்டாவது தடவை விபத்து நடந்திருக்கிறது. அந்த விபத்தில்தான் புகழ்பெற்ற கன்னட நடிகை சாந்தி இறந்து விட்டாள் என்பதும் புலப்பட்டது அவனுக்கு. ஆனால் அந்தப் பணம் எப்படி அந்தப் பெயர் இல்லாத தெருவில் ஒளித்து வைக்கப்பட்டது என்பதுவோ பெரியதம்பி எதற்காகப் பெங்களூரிலிருந்து மைசூருக்குச் சாந்தியுடன் காரில் சென்று கொண்டிருந்தான் என்பதுவோ ஒரு சிறிதும் அவனுக்கு விளங்கவில்லை! அவன் எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும்கூட ஒரு சிறிதும் அவனுக்கு அவன் நினைவில் அது வரவே இல்லை!

மார்ச் மாதம் 5ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் நாள்வரையில் என்ன நடந்தது என்ற உண்மை தெரிந்தால் தான் எல்லாக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விடை கிடைக்கும் என்று உணர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் தன் நினைவிற்குள் கொண்டுவரப் பெரும் பாடுபட்டான் பெரியதம்பி, அந்த ஒரு மாத காலத்தில் நடந்தது எதுவுமே நிழலைப்போல அல்லது கனவைப் போலக்கூட அவன் நினைவில் அவனுக்கு வரவில்லை! ஆகையால் அவன் திகைத்தான்! திணறினான்! விழித்தான்! செயலற்றான்!

பெட்டிக்குள் வேறு ஏதாவது தடயங்கள் கிடைக்கின்றனவா என்று பார்க்கப் பெட்டியிலிருந்த பணம் முழுவதை யும் கொட்டிப் பார்த்தான். அதில் பணத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவள் பணத்தை மீண்டும் பெட்டியில் அடுக்கி எடுத்து வைத்தான்.

இப்போது பெரியதம்பிக்கு ஒரு பிரசினை வந்தது. அவன் அப்படியே பெட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தனக்குத் தெரிந்ததை அப்படியே போலீஸாரிடம் சொன்னால் போலீஸார் அவனை நம்புவார்களா? நம்ப மாட்டார்கள் என்றே தோன்றியது அவனுக்கு! மருத்துவ விடுதியிலிருந்து புறப்பட்ட அவன் தப்பி வாழமுடியாது என்று மனம் மாறி இப்படி ஒரு கதையுடன் வந்திருப்பதாக அவர்கள் எண்ணி அவனைக் கைதிக் கூண்டில் ஏற்றி, கடுமையான சிறைத்தண்டனையை வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணினான்!

வஞ்சிக்கொடி உண்மையை அவனிடம் பேசினால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உணர அவனுக்கு வாய்ப்பு ஏற்படும் என்று நம்பினான் பெரியதம்பி. ஆனால் அவளைக் காண்பது ஆபத்து, அப்படியே கண்டாலும் அவள் உண்மையைப் பேசமாட்டாள் என்று ஊகம் செய்து கொண்டு சிறிது நேரம் சீரிய சிந்தனையில் ஈடுபட்டான். பிறகு ஒரு முடிவுப்படி செய்ய – இறங்க அன்றே அவன் திட்டம் போட்டான்!

பணப்பெட்டியிலிருந்து அவனுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்குப் போதுமான பணத்தை எடுத்துக் கொண்டான்.

பெட்டியை மூடி வைத்துவிட்டு வெளியே சென்றான். கடைத் தெருவுக்குச் சென்று மிகச் சிறந்த உடைகளை வாங்கிக் கொண்டான். ஓட்டலுக்குத் திரும்பி வந்ததும், மிகச் சிறந்த உடைகளை மாற்றிக்கொண்டான். மறுநாள் வரையில் அந்த ஓட்டலில் அதே உருவத்துடன் தங்கியிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டு அன்று இரவே அதைக் காலி செய்துவிட்டுப் புறப்பட்டான்.

வாடகைக் காரைப் புகைவண்டி நிலையத்துக்கு விடும்படி சொன்னான். புகைவண்டி நிலையத்தில் பணப் பெட்டியை மட்டும் கொண்டுபோய்,அதை அங்கே பாதுகாப்பாக வைத்துவிட்டு, அதற்கு ஒரு சீட்டுப் பெற்றுக்கொண்டான். பாங்கைவிடப் பாதுகாப்பான இடம் புகைவண்டி நிலையம்தான். பாங்குக்குப் போனால் இவ்வளவு பணம் ஏது என்று கேட்பார்களே என்று எண்ணியபடி திரும்பினான்.

வாடகைக் கார் அவனுக்காகக் காத்திருந்தது. அதில் அவன் துணிகளை வைத்திருந்த புதிய சிறியபெட்டி மட்டும் இருந்தது. காரோட்டியிடம் அவன் சொன்னான்: “எங்கள் ஊரில் போடப்போகும் ஒரு நாடகத்தில் மேக்கப்போட ஒரு நிபுணர் வேண்டும். உனக்குத் தெரிந்த மேக்கப் நிபுணர் எவராவது இருந்தால் அவரிடம் என்னை அழைத்துப்போ”

காரோட்டி ‘ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டு காரைக் கண்டபடி விட்டான். இறுதியில் ஒரு பழைய் வீட்டின் முன் கார் நின்றது. அந்த வீட்டின் வெளியே ஒரு பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது இருளிலே பெயர்ப் பலகையில் எழுதியிருந்த பெயர் தெரியவில்லை.

“இந்த ஊயில் சிறந்த மேக்கப் நிபுணர் இவர்தான் இறந்துபோன புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் சாந்திக்குக் கூட இவர்தான் மேக்கப் போடுவது வழக்கம்!” என்றான் காரோட்டி.

இதைக்கேட்டதும் பெரியதம்பியின் உடல் சிலிர்த்தது! அவன் உடல் முழுவதும் அச்சத்தால் வேர்த்தது! உள்ளே போவதா வேண்டாமா என்ற ஐயம் வந்தது அவனுக்கு! மேக்கப் நிபுணருக்கு அவனைப்பற்றித் தெரிய நீதி இல்லை என்று உணர்ந்துகொண்டு சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டான். அதற்குள் காரோட்டி இறங்கி காரின் பின் கதவைத் திறந்தான். உடனே பெரியதம்பி கீழே இறங்கி “நீ இங்கேயே இரு. உடனே நான் வந்து விடுகிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

மேக்கப் நிபுணர் சற்று வயதான மனிதர். அவர் பெரியதம்பியைக் கண்டதும் கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தார்.

பெரியதம்பி அவர் முன்னால் சென்று நின்றுகொண்டு, “எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றான்.

“என்ன செய்ய வேண்டும்?” என்றார் மேக்கப் நிபுணர்.

“நான் ஓர் நாடகத்தில் நடிக்கிறேன். அந்த நாடகத்தில் எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களே நடிக்கிறார்கள் மேக்கப்பை அவரவர்களே போட்டுக்கொள்ள வேண்டும். எனக்கு நீங்கள் பொருத்தமான மீசை ஒன்றை வைத்துவிட வேண்டும்!” என்றான் பெரியதம்பி.

மேக்கப் நிபுணர் அவனைச் சிறிது நேரம் ஏற இறங்கப் பார்த்தார்.

“நீ என்ன பாத்திரமாக நடிக்கப் போகிறாய்? கதாநாயகனாகவா வில்லனாகவா?” என்று கேட்டார் மேக்கப் நிபுணர்.

அவன் சிறிது திணறினான். எப்படிப்பட்ட மீசை வேண்டும் என்பதைப் பற்றி அவன் முடிவு செய்யவில்லை. அதனால் இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.

அதற்குள் மேக்கப் நிபுணர் கேட்டார். “என்ன விழிக்கிறாய்? என்ன பாத்திரம் என்று கூடவா முடிவு செய்யவில்லை? நீ எந்தப் பாத்திரமாக நடிக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா? பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள்தாம் எந்தப் பாத்திரத்தில் நடிக்கிறோம் என்பது தெரியாமலே நடிக்கிறார்கள் இந்தக் காலத்தில்! நீயுமா அப்படி?”

“அப்படி ஒன்றும் இல்லை. நான் சரியான பதிலைச் சொல்லுவதற்குள் நீங்கள் விரைவு கொண்டுவிட்டீர்கள்!” என்றான் பெரியதம்பி பிறகு அவன் சொன்னான்: “நான் நடிக்கும் கதையில் நான்தான் நாயகன், நல்லவனாக நான் வருகிறேன். ஆனால் நல்லவனாக வரும் நான்தான் உண்மையில் கொடியவன்! நான் வில்லன் என்பது எவருக்கும் தெரியாது. இப்படி ஒரு பாத்திரம்!”

பெரியதம்பியின் இந்தப் பதில் மேக்கப் நிபுணருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் சிரித்தபடியே சொன்னார்: “பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே, அப்படி ஒரு பாத்திரம் போல் இருக்கிறது!”

“ஆமாம்” என்றான் பெரியதம்பி.

“மீசைக்கு மட்டும் இருபத்தைந்து ரூபா ஆகும்” என்றார் மேக்கப் நிபுணர்.

”பணத்தைப் பற்றித் துன்பம் இல்லை” என்றான் பெரியதம்பி.

சிறிது நேரத்தில் அவர் ஓர் அறையில் எதையோ தேடி விட்டு இறுதியில் ஒரு போலி மீசையுடன் வந்தார். அதை அவன் முகத்தில் பொருத்திவிட்டு கண்ணாடியில் அவனைப் பார்க்கும்படி சொன்னார்.

மேக்கப் அறையில் எல்லாப் பக்கங்களிலும் நிலைக் கண்ணாடிகள் தாம் இருந்தன. அவைகளில் அவன் உருவத்தை அவன் பார்த்தபோது அவனே மிக அயர்ந்து விட்டான்.

சற்றுப் பட்டையாக இருந்த அந்த மீசையை அவன் வைத்துக்கொண்டதும், அவன் ஓர் இராணுவ அதிகாரியைப் போல் காணப்பட்டான். அதை அவன் எடுத்துத் தன் கால் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, “நன்றி” என்று கூறிவிட்டுப் பணத்தையும் கொடுத்துவிட்டு நடந்தான்.

வாட்கைக் காரில் மீண்டும் அவன் ஏறி உட்கார்ந்து மிகச் சிறந்த ஓட்டல் ஒன்றுக்குப் போகும்படி சொன்னான்.


19

வண்ண விளக்குகளுடன் வானவில்லைப்போல் பல வகை வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த அந்த ஓட்டலுக்கு வானவில் ஓட்டல் என்று பெயர் வைத்ததில் வியப்பு இல்லை என்று எண்ணியது அவன் மனம். ஓட்டலுக்கு வெளியிலேயே காரை நிறுத்தும்படி சொல்லி விட்டுப் பெட்டியுடன் இறங்கினான். வாடகைக் காரை அனுப்பிவிட்டு, பொய் மீசையை இருளில் எவருக்கும் தெரியாமல் எடுத்து ஒட்ட வைத்துக்கொண்டு விரைவுடன் நடந்தான்.

வானவில் ஓட்டலில் பெரும் பணக்காரர்களும், ஆரவாரத்துடன் தங்க விரும்பிய சினிமாக்காரர்களும் தாம் பெரும் பாலும் தங்கியிருந்தார்கள். பெரிய்தம்பி மீண்டும் ஒருமுறை தன் பெயரை மாற்றிக் கொடுத்தான். மலரவன் என்று தன் பெயரைப் பதிவு செய்துவிட்டு, எவரும் அடிக்கடி வர முடியாத நான்காவது மாடியில் ஓர் அறையை எடுத்துக் கொண்டு அந்த அறையில் தங்கினான்.

அன்று இரவு முழுவதும் அவனுக்கு ஓய்வு தேவைப் பட்டது. அவன் சற்று அமைதியுடன் தூங்கினான்.

விடிந்ததும் எழுந்து மீசையை மிகக் கவனமாகச் சரிப் படுத்திக் கொண்டு, மணியடித்து ஓட்டல் பையனை வர வழைத்து ஒரு கோப்பை காப்பியும், தினசரிப் பத்திரிகைகளும் வேண்டும் என்றான்.

ஓட்டல் பையன் ஒரு சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். அவன் காப்பியைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, பல காலைத் தினசரிப் பத்திரிகைகளை வைத்து விட்டுப் போனான்.

பெரியதம்பி ஒவ்வொரு பத்திரிகையாகப் பார்த்தான். எல்லாப் பத்திரிகைகளையும் பார்த்து முடித்தான். எல்லாப் பத்திரிகைகளிலும் அவன் புகைப்படமும். அவன் போலீஸாரால் தேடப்பட்டுவரும் செய்தியும், புலிக்குட்டி வல்லவன் ஆகிய இரு குத்துச்சண்டை வீரர்களையும் கொன்றதுடன் நில்லாமல், பெரும் பணத்துக்காகச் சாந்தி என்னும் புகழ்பெற்ற சினிமா நடிகையைக் கொலை செய்துவிட்டுப் பிறகு மருத்துவ விடுதியிலிருந்து தப்பிவிட்டதாகவும் செய்திகளும் புகைப்படமும் வந்திருந்தன. செய்தியில் அவன் பெயர் பெரியதம்பி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது!

வஞ்சிக்கொடி வஞ்சம் தீர்த்துக்கொண்டாள் என்று முடிவு செய்த அவன் போலீஸார் அவனை மாற்று உருவத்தில் கண்டுபிடிக்கும் முன்னதாக உண்மைகளைக் கண்டுபிடிக்கச் செயலில் இறங்கினான்.

அவன் காப்பியைப் பருகிவிட்டு, ஓட்டலிலிருந்த பையனை அழைத்து வெளியூருக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்று வேண்டும் என்று சொல்லி அனுப்பினான்.

சிறிது நேரத்தில் கார் வந்தது. அவன் புறப்பட்டான். அவன் போகவேண்டிய இடத்தை முடிவு செய்திருந்தான். அந்த இடம் –


20

காரை ஓட்டிச் சென்றவனிடம் பெரியதம்பிசொன்னான்: “சென்னைக்குப் போகும் சாலையில் போ. நான் நிறுத்தச் சொல்லும் இடத்தில் நிறுத்து.”

காரோட்டி விரைந்து காரைச் செலுத்தினான். அவன் அவ்வளவு விரைவாகப் போவது பெரியதம்பிக்குப் பிடிக்க வில்லை. மீண்டும் ஒரு விபத்தில் சிக்குவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“இதோ பார். சற்று மெல்லப்போ. தலை மூழ்கிப் போகிற செயல் ஒன்றும் இல்லை” என்றான் அவன்.

உண்மையில் அவனுக்குத் தலை மூழ்கிப்போகும் செயல் இருந்தது.

பெரியதம்பி சொன்னது கார் ஓட்டிக்குப் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது, போக வேண்டிய இடத்துக்கு விரைவாகப் போனால் வெகுமதி சற்று மிகுதியாகக் கிடைக்கும் என்பது அவன் எண்ணம். அதை மறைக்கக் காரோட்டி சொன்னான்: “பதினைந்து ஆண்டுகளாக நான் காரோட்டி வருகிறேன். இதுவரையில் ஒரு சிறிய விபத்துக் கூட நடந்ததில்லை நீங்கள் சிறிதும் அஞ்சாதீர்கள்!”

பெரியதம்பிக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. அவன் மருத்துவ விடுதியில் நினைவு பெற்றதிலிருந்து, காரில் ஏறி உட்காருவது என்றாலே சற்று அச்சமாகவும் நடுக்கமாகவும் இருந்தது. வேறு வழியில்லாமல் அவன் லாரியிலும் காரிலும் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. அவன் சொன்னான்: “பதினைந்து ஆண்டுகளாக நீ ஓட்டிய காரி விபத்துக்குள்ளாகவில்லை என்கிறாய். உன் வாய்ப்பு அப்படி. என் வாய்ப்பு எப்படித் தெரியுமா? நான் காரில் ஏறிய அன்றே கார் விபத்துக்குள்ளாகிவிட்டது! ஆகையால் மெல்லப்போ! உனக்கு வேண்டிய அளவுக்கு வெகுமதி தருகிறேன்!”

பெரியதம்பி சொன்னதைக் கேட்டுக் காரோட்டி சிரித்து விட்டான். பொதுவாக வயதானவர்கள்தாம் கார் விரைந்து சென்றால் அஞ்சுவார்கள். இளைஞர்கள் அஞ்சுவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். பெரியதம்பியின் செயல் இதற்கு நேர்மாறாக இருந்தது. அவன் காரைச் சற்று மெல்லவே செலுத்தினான்.

பெங்களூரைவிட்டு விலகிக் கார் சென்னைக்குச் செல்லும் சாலையில் சென்றது. விபத்து நடந்த இடம் எதுவாக இருக்கும் என்று அவன் சிந்தனை செய்தபடி இருபக்கங்களிலும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பழக்கப்பட்ட வழியோ மரங்களோ, சாலை ஓரமாக இருந்த மரங்களோ, அடையாளங்களோ அவன் கண்களுக்குப் படவில்லை.

கார் போய்க்கொண்டே இருந்தது. விபத்து நடந்த இடத்தை நாம் மறந்துவிட்டோமோ என்ற ஐயம் வந்து விட்டது அவனுக்கு!

சற்றுத் தொலைவிலே சாலை வளைந்து திரும்பியது. பெண்களின் கொண்டை ஊசி எப்படி வளைந்திருக்குமோ அப்படி வளைந்து திரும்பியது சாலை. அந்தத் திருப்பத்தை கடந்ததும், வலப்பக்கம் தெரிந்த ஒரு மலையைப் பார்த்தான் பெரியதம்பி. மலையைக் கண்டதும் விபத்து நடந்த இடம் அதன் பக்கத்தில்தான் என்பது அவனுக்கு நினைவில் வந்துவிட்டது! விபத்து நடந்த அன்று, மலையில் இருந்த காய்ந்துபோன செடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது அவன் நினைவுக்கு வந்தது.

சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் விபத்து நடந்த இடம் மிகத் தெளிவாகவே அவன் நினைவுக்கு வந்துவிட்டது.

காரோட்டி வியப்புடன் காரை ஓர் ஓரமாக நிறுத்தினான். பெரியதம்பி காரிலிருந்து இறங்கியதும் காரோட்டி வியப்புடன் பார்த்தான்.

“இங்கேயே இரு. நான் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, விபத்து நடந்த இடத்திலிருந்து பார்த்தான். எல்லாத் திக்குகளிலும் பார்த்தான். எல்லாம் கனவைப் போல நினைவில் வந்தன. விபத்து நடந்த இடத்திதிலிருந்து ஒரு பர்லாங்குத் தொலைவில் மலையின் ஓரமாக ஓர் ஏரி இருந்தது. ஏரியின் கரையில் வரிசையாக பனை மரங்கள் வளர்ந்திருந்தன. பெரியதம்பி ஏரியின் கரையை நோக்கி நடந்தான்.

எரிக்கரைக்குச் செல்ல, பெயருக்கு ஒரு பாதை இருந்தது. அந்தப் பாதையில் கட்டை வண்டிகள் தாம் போகலாம். அப்படியிருந்தது அந்தப் பாதை. அதன்வழியே பெரியதம்பி நடந்தான்.

அமைதியான அந்த இடத்தில் பனைமரங்கள் காற்றில் தங்கள் தலையை ஆட்டியபோது, உலர்ந்த ஓலைகள் எழுப்பிய ஒலி கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்தது. விபத்து நடந்த அன்றிரவு விபத்துக்குப்பின் இதே ஓசை அவனுக்கு அன்று கேட்டது அவன் நினைவுக்கு வந்தது.

ஒருவழியாக ஏரிக்கரையை அடைந்தான். அவன் ஏரிக்கரையின் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தான். ஏரிக்கரைக்கும் மலைக்கும் நடுவில் கடலைப்போல் தேங்கியிருந்த ஏரி நீர் அழகாக இருந்தது. ஏரி அலைகளின் ஓசை பனை ஓலைகளின் ஓசையுடன் இழைந்தது. இந்த இரு ஓசைகளும் இழைவதைக் கண்டதும், மிகச் சரியான இடத் துக்குத்தான் நாம் வந்திருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

ஏரிக்கரையின் மறுபக்கம் மதகுக்கு அப்பால், ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசையும் அவனுக்கு இப்போது நினைவில் வந்தது. குடிசையை நோக்கி நடந்தான் பெரியதம்பி.

குடிசையின் கதவு திறந்திருந்தது. பெரியதம்பி எட்டிப் பார்த்தான். உள்ளே கயிற்றுக் கட்டிலின்மீது ஒரு கிழவன் உட்கார்ந்துகொண்டு, சுருட்டு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

பெரியதம்பியைக் கண்டதும் கிழவன் “யாரது?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து வெளியே வந்தான்.

“உன்னிடம் சிறிது பேசவேண்டும். பெங்களூரிலிருந்து நான் வருகிறேன்” என்றான் பெரியதம்பி.

கிழவன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். அவன் ஐயக் கண்களுடன் பெரியதம்பியைப் பார்த்தான்.

“நீ இந்தக் குடிசையில்தானே எப்போதும் இருக்கிறாய்?” என்றான் பெரியதம்பி. அவனுக்கு இந்தக் குடிசையைக் கண்டது நினைவில் வந்தது. ஆனால் கிழவனைக் கண்டது அவன் நினைவில் வரவில்லை.

“ஆமாம். ஏரியின் மதகுக்கு நான் காவலாக இருக்கிறேன்” என்றான் கிழவன்.

“ஒரு மாதத்திற்குமுன்பு, அதோ அந்தப் பெரிய சாலையில் ஒரு கார் விபத்து நடந்ததே, அதைப்பற்றி உனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்” என்றான் பெரியதம்பி.

இதைக் கேட்டதும் கிழவனின் முகம் மாறியது.

அவன் சுருட்டின் புகையை விரைவாக இழுத்துவிட்டு விட்டு “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

பெரியதம்பி அவன் முகமாற்றத்தைக் கண்டதும், எதற்காகவோ அவன் அஞ்சுகிறான் என்பதை உணர்ந்து கொண்டு, “நன்றாக நினைவு படுத்திப் பார்! உன் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் நடந்த விபத்தைப்பற்றி நீ மறந்திருக்கமுடியாது. எனக்கு அந்த விபத்தைப் பற்றிய சில உண்மைகள் தெரியவேண்டும்” என்றான்.

கிழவன் பேசவில்லை.

பெரியதம்பி ஐந்து பத்து ரூபா நோட்டுக்களை எடுத்து மடித்து அவனிடம் நீட்டினான். கிழவன் தயக்கத்துடன் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டான். அப்போது அவன் கைகள் நடுங்கின!

“அஞ்சாதே! நீ சொல்லும் உண்மைகளை நான் எவரிடமும் சொல்லிவிட மாட்டேன்” என்றான் பெரியதம்பி.

“நீங்கள் உண்மையில் யார்? போலீஸ் இலாகாவிலிருந்து நீங்கள் வரவில்லையே?” என்றான் கிழவன்.

“நான் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவனல்லன். அந்தச்சாலையில் விபத்து நடந்ததே, அந்த விபத்தில் என் தம்பி இறந்துவிட்டான். அவன் பெயர் பெரியதம்பி. விபத்துக்குப்பின் என்ன நடந்தது என்பதை அறியவே நான் வந்திருக்கிறேன்” என்றான் பெரியதம்பி.

கிழவன் இதைக் கேட்டதும் பெரியதம்பியை உற்றுப் பார்த்தான். அவன் முகம் அவனுக்குப் பழக்கப்பட்டதைப்போல் இருந்தது. உண்மையிலேயே பெரியதம்பியின் அண்ணனாகத்தான் இவன் இருக்கவேண்டும் என்று அவன் நம்பியதைப்போல் இருந்தது.

கிழவன் சொன்னான். “அன்று இரவு நடந்தது ஒரு கனவைப்போல் எனக்கு இருக்கிறது. உண்மையில் அது கனவா, நடந்ததா என்று என்னால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. சாலையில் ஏதோ ஓசை கேட்டது. அப்போது நான் மதகைத் திறந்து தண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன். பிறகு நான் குடிசைக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன். ஈற்றுநேரம் கழித்து எவரோ நடந்து வரும் ஓசை கேட்டது. வெளியே எட்டிப்பார்த்தபோது, ஓர் இளைஞனும் ஒரு பெண்ணும் வந்தார்கள். அந்த இளைஞன் அரை மயக்கத்துடன் இருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வந்த அந்தப் பெண் மெல்ல அவனைக் கட்டிலில் கிடத்தினாள்.”

“பிறகு?” என்றான் பெரியதம்பி.

“அந்த இளைஞன் மயக்கமாகக் கிடந்தான். முகத்தில் தண்ணீரைத் தெளித்துப் பார்த்தோம். அவன் கண்களைத் திறக்கவே இல்லை. என்ன நடந்தது என்று கேட்டேன். சாலையில் கார் விபத்து ஒன்று நடந்ததாகவும் அதில் அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் அடிபட்டதாகவும் அந்தப் பெண் சொன்னாள். சிறிது நேரம் கழித்து அவனுக்கு மெல்ல நினைவு வந்தது. அவனை அழைத்துக் கொண்டு அவள் சாலைக்குச் சென்று ஏதாவது ஒரு காரில் போய்விடுவதாகச் சொன்னாள். நான் தடுக்கவில்லை. அவர்கள் இருவரும் சிறிது தொலைவு சென்றதும், இந்தப் பக்கமாக ஒரு கார் வரும் ஓசை கேட்டது. இங்கே நின்றபடியே பார்த்தேன். வந்த கார் அவர்களுக்குப் பக்கத்தில் நின்றது. அதில் அவர்கள் ஏறிக்கொண்டதும், கார் அப்படியே திரும்பிப் போய்விட்டது.”

“அது என்ன கார் என்பது தெரியுமா?” என்று கேட்டான் பெரியதம்பி.

“காரைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? ஏதோ ஒரு கார் அவ்வளவுதான்” என்றான் கிழவன்.

“நீ சாலைக்குப் போய்ப் பார்க்கவில்லையா?”

“நீண்ட நேரம் கழித்து, அங்கே வரிசையாகப் பல வண்டிகள் நிற்பதைக் கண்டு; போய்ப் பார்த்தேன். சாலைக்குப் பக்கத்தில் ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. கார் கவிழ்ந்துவிட்டதைப் பற்றியோ. அதில் ஒரு மனிதன் இறந்து கிடப்பதைப் பற்றியோ, அந்தப் பெண் சொல்லவே இல்லை. எனக்கு அச்சமாகப் போய்விட்டது! போலீஸார் என்னை அச்சுறுத்துவார்களோ என்று அஞ்சி நான் அதைப் பற்றி யாரிடமும் பேசவில்லை. அந்தப் பெண்ணும் இந்த இளைஞனும் என்ன ஆனார்கள் என்பது மர்மமாக இருக்கிறது” என்றான் கிழவன்.

கிழவன் எல்லா உண்மைகளையும் சொன்னானா இல்லையா என்பதைப் பற்றிப் பெரியதம்பிக்கு ஐயம் வந்தது.

“வேறு ஒன்றுமே உனக்குத் தெரியாதா?” என்றான் பெரியதம்பி.

“தெரியாது. தெரிந்தால் சொல்லுவதற்கு என்ன?” என்றான் கிழவன்.

இனிமேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட பெரியதம்பி பெருமூச்சு விட்டபடி அவனை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகத் திரும்பினான்.

“சார், விபத்தில் இறந்து போனவர் உங்கள் தம்பியா” என்றான் கிழவன்.

“இல்லை” என்று சொல்லிவிட்டுச் சாலையை நோக்கி நடந்தான் பெரியதம்பி.

அந்தக் குடிசையிலிருந்து புறப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க எவ்வளவு முயன்றும் அவனுக்கு நினைவு வரவே இல்லை. விபத்து நடந்த இடத்தில் ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார்க்க முடிவு செய்தான். கார் கவிழ்ந்த இடத்தில் சென்று தேடிப் பார்த்தான். அங்கே விபத்து நடந்தது என்பதற்குச் சான்றாக எதுவும் இல்லை. மேலும் அங்கே ஏதாவது விழுந்திருந்தால் போலீஸார் கண்களுக்கு அது படாமலா போயிருக்கும்!

எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை.

அலுப்புடன் அவன் கார் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். காரில் ஏறி உட்கரர்ந்ததும் அவனுக்கு மற்றொரு புது எண்ணம் பிறந்தது. காரோட்டியிடம் அவன் மீண்டும் பெங்களூருக்கே காரைச் செலுத்தும்படி சொன்னான்!

– தொடரும்

– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *