கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 1,214 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் ஒன்று

மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சிரித்தார்கள். கிரிபண்டனுக்கும் முழுக்க முழுக்க நம்பிக்கையில்லை. பரீட்சார்த்தமான ஒரு முயற்சிக்குத்தான் அவன் ஆதரவு. 

பிங்காமி சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய் கிறது. 

அமரதாசவுடன் அந்த மூவரும் கிரிபண்டனின் வீட்டு முன்ற லில் இருந்துதான் அளவளாவினார்கள். 

“இங்க பாருங்க…. கடந்த முப்பது வருஷமா நாங்க முயற் சித்து கைவிட்ட விஷயத்தை நீங்க இப்ப கிளறுறீங்கள். இந்த வயசில நீங்க படிப்பை கவனிங்க…. இல்லாட்டிப் போனா ஒங்க ஒங்கட வேலகள பார்த்துக்கிட்டு சும்மா கிடங்க…. முப்பது வருஷங்களா எங்களால ஏலாம போனத நீங்க சாதிச்சி முடிக்கப் போறீங்களா….?” 

பிங்காமி தன் புரையோடிப் போன கருத்தைச் சொன்னான்.

“இருக்கலாம், நாங்க இல்ல எண்டு சொல்லலியே, நீங்க முப்பது வருஷங்கள் எடுத்தீங்க…. நாங்க இளம் ஆக்கள் தாம்…. எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்த தாங்க…. ஒரு வருஷம் போதும்… முடியாம போனா வீசிப்போட்டு சும்மாகிடக்கிறது தானே… எங்கட திட்டங்கள, அணுகுமுறைகள நடைமுறைப் படுத்திப் பார்க்க உங்கட ‘சகயோகய’ ஒத்துழைப்பு மட்டும் இருந்தாகரியம்.. போதும்” என்றான் ஹலீம்தீன். 

கிரிபண்டனின் மகன் அமரதாசவும் அதைத்தான் எடுத்துரைத் தான் வேறு விதமாக, 

கிரிபண்டனின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது. “பிங்காமி…. எதுக்கும் இளம் ஆக்கள், ‘ஜயவேவா’ எண்டு அனுப்பிப் பாப்பம். 

வெற்றியோ தோல்வியோ…. செய்துபாக்கட்டுமே…” என்றான் கிரிபண்டா. 

“…நீங்க கிராமத்து தலைவர் ‘கமரால’ விரும்பினா ஒத்துழைப்போம்.’ என்று பிங்காமி கூறியது முழு சிங்கள கிராமமே அங்கீகரித்தது போலத்தான். கிரிபண்டனின் மகிழ்ச்சி எல்லையை மீறியது. 

“எதுக்கும் நாங்க ‘சாகச்சாவ’ கலந்துரையாடி சொல்லியனுப் புவம். நீங்களும் உங்கட தலைவர்களுடன் ஆலோசனை செய்து சரியெண்டு பட்டாக்கா…. நாங்கள் உங்களுடன் உங்கட நிர் வாகக் குழு ஆக்களுடன் ஒரு உரையாடலுக்கு அழைப்போம். எல்லாத்துக்கும் முந்தி, நாங்க அந்த ‘குளக்காட்டுப் பிரதேசத் துக்கு வேட்டைக்குப் போகவேணும். அந்த மண்ணைத் தோண்டி பரிசோதிச்சிப் பாக்கனும்… அப்படி வேட்டைக்கு போனாகரியம் பிரச்சினை வருமா? என்றதையும் தெரிஞ்சிகிட்டு வாங்க…” 

அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்து வழிநெடுக நடந் தார்கள். அப்போது ஆங்காங்கே குடிசை வீடுகளிலிருந்து, கல்வீட்டு ஜன்னல்கள், கதவு நிலைகளிலிருந்து, கிடுகுவேலி களிலிருந்து தென்னை மர நிழல்களிலிருந்தெல்லாம் ஒருவகை ஏளனப் பார்வையுடன்தான் புதினம் பார்த்தார்கள். 

“மரக்கலயா என்னும் முஸ்லிம் கிராமத்து எளந்தாரிமார் களுக்கு இங்க என்ன வேல….? 

“எல்லாத்துக்கும் இந்த கிரிபண்டனும் அவன் மகன் அமர தாசவும் கொடுக்கிற இடம்தான்….”

அந்த ஏளனப் பார்வை மிக அருவருப்பாகவும், அநாகரிக மாகவும் இருந்தது. 

“வரவேற்பு பயங்கரமாக இருக்கிறதே….” என்றான் யாசீன்.

“உனக்குப் பயமா…? அதோ தெரிகிறது மெயின் ரோட்…. பத்து நிமிடங்களில் நடந்து விடலாம்” என்றான் ஹலீம்தீன். 

“சிங்கள கிராமத்து எல்லையைக் கடந்து ரோட்டுக்கு வந் துட்டா பஸ்தரிப்பில் நிக்கலாம்….” என்றான் சேகு. 

அவர்களுக்கு அந்த அசாத்தியத்துணிச்சல் எப்படி வந்தது….?

அன்று அந்த ஏளனப்பார்வைகளுக்கும், நையாண்டிகளுக் கும் மத்தியில் தம்மை விடுவித்துக் கொண்ட நண்பர்கள், தமது ஊரவர்தமக்கு அளித்த சாதகமான கருத்துக்களுக்கு மானசிகமாக நன்றியை சுமந்த வண்ணம், மீண்டும் சிங்கள கிராமத்திற்கு தமது சைக்கிள்களில் போய்க் கொண்டிருந்தார்கள். 

அறுவடைக்காலம் தொடங்கியிருந்தது. எங்கும் வெள் ளாமை வெட்டும் சூடுமிதிப்புகளும்…. 

கிராம மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் நாட்கள். சிறுவர் சிறுமியர் ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே இராப் பகலாய் ஒரே குஷி. ஆரவாரம். 

இந்தமுறை பருவ மழை வெறும் காற்றோடு காற்றாக கார்மேகம் காட்டி ஏமாற்றிச் சென்று விடாமல்…. நின்று நீடித்து கமக்காரர்களுக்கு முகம் பார்த்து விட்டது. 

பக்குவமாக வயல் உழுது, விதை நெல் தூவி ஓரிலை ஈரிலை விரிந்த நாள் தொடக்கம் நாற்றுநட்டு நீர்ப்பாய்ச்சி மாதங்களாய் கண்ணின் மணிபோல் காத்து, பறவைகள் மிருகங்களின் ஆக்கிர மிப்புக்கு தப்பி, காவல் காத்து நின்றதன் பயன். 

இந்த அறுவடைக்காலம். 

காலை, மதியம், இரவு மூவேளையும் உழவர் வீட்டில் சோறு பொங்கும் காலம். 

ஒவ்வொரு முறையும் இப்படித்தான். தனித்து அல்லது கூட்டுசேர்ந்து அடர்ந்த காடுகளின் பகுதிகளை வெட்டிக் குவித் துத் தீமூட்டி, அழித்து நெல்மணிக் கதிர்களை உற்பத்தி செய்யும் பசுமையான வயல் காட்சிகளாய் மாற்றிவிடுவர் விவசாயிகள். 

வயல்களோடு ஒட்டிய நிலங்களையும் காடுகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட பகுதிகளையும் ‘சேனை கொத்தி’ இறுங்கு, குரக்கன், மரவள்ளி, கெளபி, மிளகாய் என்று காலத்திற்கேற்ற பயிர்களைப் பரப்பி மண்ணை பொன்கொழிக்கச் செய்து விடுவர். 

வெள்ளாமைக்குப் பிறகு வயற் பரப்புகள் எல்லாம் வெறிச் சோடிப் போய், அடுத்த பருவ மழை பொழியும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இடையிடையே புல் பூண்டுகள் பற்றை களாய் வளர்ந்தாலும், உழைத்து உரமேறிய கரங்களின் வெட்டுக் கத்தி வீச்சுகளுக்குப் பலியாகி; வெளிசாக்கப்பட்டு’ மீண்டும் காடுகளாய் மண்டிவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு விடும். 

காலத்திற்குக் காலம் இவ்வெழிற் காட்சிகளை உருவாக்கத் தானோ, வயலைச் சார்ந்த விவசாயப் போராளிகள், யானைகள், கரடிகள், பன்றிகள் போன்ற வனவிலங்குகளையும் விஷ ஜந்துக் களையும் எதிர்கொண்டு தத்தமது உயிர்களையே பணயம் வைக்கின்றனர். 

னிமையான அவ்வெழிற் காட்சிகளுக்குப் பின்னால் தான் எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் நிரம்பிய போராட்டம் காடு களால் புதைக்கப்பட்டுக் கிடக்கின்றன. 

“….ம் மீனவனுக்கு கடலில் ஆபத்து…. விவசாயிகளுக்கு காட்டில் ஆபத்து” காடுகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு வந்த யாசீன் முணுமுணுத்தான். 

“என்ன யாசீன் புதுமொழியோ….?” 

“இல்ல மச்சான்…. விந்தைகளைப் புரியும் விவசாய விஞ் ஞானிகள் தாமும் வாழ்ந்து மற்றோரையும், வாழவைக்கும் கைங்கரியம் அலாதிதான். ஆனா எவ்வளவு ஆபத்து, வறுமைப்பட்ட வாழ்க்கை, அதுசரி…. நான் கேட்கத்தான் ஈந்த…… இந்த விவசாயம் எப்ப மச்சான் நம்மட தலையெழுத்து ஆனது?’ 

திடீரென்று யாசின் ஹலீம்தீனிடம் இப்படி ஒரு தூண்டிலைப் போட்டு இழுத்து விடுவான் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

காடுகளில் தனது கண்ணோட்டத்தைச் செலுத்தி வந்த அவன் வெறுமனே வெறுப்பில் விரக்தி மேலீட்டால் அப்படிக் கேட் டானோ அல்லது உண்மையை அறிய வேண்டிய ஆவலின் உந்துதலால் கேட்டானோ?” 

ஹலீம்தீனின் சரித்திர மூளை சுற்றிச் சுழன்றது. “யாசின் நீ சும்மா முஸ்பாத்திக்கு கேக்கிறியா…? இல்லாட்டி…?” 

“மறுஹா … இவர் பெரிய நடப்பு. சும்மா கேக்கிறதும் முஸ்பாத்திக்குக் கேக்கிறதும். நம்மட பரம்பரைத் தொழில் விவசாயந்தானா எண்டுதான் அறிய வேணும்…” 

“சரி… சரி… யாசீன் உன்ட கேள்விக்கு ஒரு பெரிய சரித்திரமே கிடக்கு மச்சான். அதப்பற்றி போய்க் கொண்டே சொல்றனே…”

“ஏன்… இப்ப சிந்தன ‘அங்க’ சுத்திக்கொண்டு இருக்கோ…?” எல்லோரும் உரக்கச் சிரித்தனர். 

ஹலீம்தீனும், யாசீனும் ஏனைய நண்பர்களும் தத்தமது சைக் கிள்களை உழக்கிக் கொண்டு, போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கஹட்டகஸ்திகிலியா மகாவித்தியாலயத்தில் ஏ.எல் – ஓ.எல்.கற்கும் மாணவர்கள். இளம் வாரிசுகள். ஒரு கிராமத்தின் புதுக்கதிர்கள். 

சைக்கிள்களை பற்றைகளிலும், மரங்களிலும் சாய்த்துவிட்டு, ஒரு பெரிய முதிரை மர நிழலில் அமர்ந்தனர்…. பொறுப்புணர். வோடு அக்கிராமத்தை வழி நடத்திச் செல்லும் அவர்களிடம், தமது முன் சந்ததியினரிடம் இல்லாத ஒரு சக்தி கொடையாக வந்துவிட்டது. அதுதான் ‘கல்வி’. 

ஹலீம்தீன் வரலாற்று மாணவன், யாசீன் தமிழ்மொழி, நவீன இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவன். இப்படி, விஞ்ஞா னம், வர்த்தகம், விவசாயம் என்று பல் துறைகளிலும் அவர்கள் இலட்சியத்துடன் ஈடுபட்டிருக்கிறார்கள். 

யாசீனின் அந்த முக்கியமான வினா அனைவரையுமே உலு ப்பி விட்டிருந்தது. 

“விவசாயம் எப்படி எங்கட தலையெழுத்தானது….? சற்று நேரம் மௌனியாகவிருந்து தமது மறுமொழியை ஆயத்தப்படுத்திய ஹலீம்தீன் மிக்க பொறுப்புணர்வோடு ஆரம்பித்தான். 

“யாசீன்…. இப்ப நாங்க 1980களில் வாழ்றோம்… இப்பதான் நான்நினைக்கிறன் கிட்டத்தட்ட நூற்றுப்பத்து வருஷங்களுக்குப் பிறகு… ஒரு விவசாயி மகன் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான்… இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறான். 

“விவசாயப் பரம்பரைய விவசாயிகளாகத்தான் இருக்க விட னும், ‘கல்வி’ என்னும் ஆயுதத்தைக் கொடுத்துவிட்டால் இவங்க நமக்கே குறிவைப்பாங்க… ? என்று யோசித்து திட்டம் போட்ட வர்களின் ‘வாயில மண்…’ போட்ட பிறகு தான் இப்படியான கேள்விகள் உருவாகின்றன….”

“சரி சரி சுத்திவளைச்சது போதும்” 

“யாசீன் உன்ட கேள்விய சுத்தி வளைச்சித்தான் பாக்க வேணும்… யாசீன் எங்கட அனுராதபுர பிரதேசத்த சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்ததற்குப் பிறகு, எமது தேசத்த ஆங்கி லேயர் ஆண்ட காலம் உனக்குத் தெரியுந்தானே…..” 

“ஞாபகமில்ல…. கி.பி. ஆயிரத்து எண்ணூறுகள்…..என்று நினைக்கிறன்…” 

“ஓமோம்… சரியாக சொல்லப்போனால் கி.பி. 1870ம் ஆண் டில சில குளங்கள் திருத்தி அமைக்க முற்பட்டார்கள் அல்லவா..” 

“எந்தக் குளங்கள்…?” 

“திஸ்ஸவெல குளம், கலாவெவ, நாச்சியாதுவ குளம்…. இப்படியான குளங்கள குறிப்பிடலாம். இதனால என்ன நடந்த தெண்டா, திஸ்ஸவெவகம, பொன்னாரங்குளம், ஆமனவெவ, நாச்சியாதுவ, கலாவெவ முதலான இடங்களில நிலையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் தாம் குடியிருந்த நிரந்தர மான இடங்களிலிருந்து நீக்கப்பட்டனர்… என்பது உங்களுக்கு தெரீமா?” 

”யாசின்ட கேள்விக்கும் இதுகளுக்கும் என்னடாப்பாதொட ர்பு…?” – இப்படிக் குறுக்கிட்டான் சேகு. 

“அவசரப்படாத… சேகு, அவன் சுத்தி வளைச்சி சொல்லட் டுக்குமே. ஹலீம் குணம் ஒனக்கு தெரீந்தானே” என்றான் அன்சார் குத்தலாக. 

ஹலீம் தீன் புன்முறுவலுடன் தொடர்ந்தான்: 

“கி.பி.1882ம் 1884ம், 1886ம் ஆண்டுகால கட்டங்களில, திஸ்ஸவெவகம கிராமத்திலிருந்து வெளியேறிய எங்கட அப் துல் மஜீத், இஸ்மாயில் லெப்பை, அபுசாலி லெப்பை மதா ரப்பா போன்றவங்க, “மறுஹ…. இது எங்களுக்கு சரிப்பட்டு வராது” என்ற ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் உடமளுவ, இசுறுமுனி, திசாவெவ, கீழக்கரை முதலான இடங்களில் குடி கள் அமைத்து எல்லாத்துக்கும் பொதுவான ஓரிடத்தில் பள்ளி வாசலையும் கட்டிக் கொண்டாக….” 

“இப்ப அந்தப் பள்ளி வாசல் இருக்கா….? 

பள்ளி வாசல்களின் வரலாறுகளை ஆய்வதில் விருப்பமுள்ள சவால் கேட்டான். 

“சவால் நீங்க விரும்பினா, ஒரு நாளக்கி, இண்டைக்கும் அழிந்து போன நிலையில இருக்கிற அந்தப் பள்ளியின் அத்தி வாரங்களை பாத்துவிட்டு வரலாம்….” 

“கட்டாயம் பாக்கத்தான் வேணும், இப்ப வாழ்ற நாங்க, நூறு வருடங்களுக்கு முந்தி வாழ்ந்த மூத்த பரம்பரை ஆக்கள் கட்டிய பள்ளிவாசலை கட்டாயம் பாக்க ஓணும்… போலிருக்கு…” 

சவாலின் உணர்ச்சி வசப்பட்ட கருத்தை அனைவரும் ஏற்றா லும், ஹலீம்தீன் யாசீனின் முகத்தைப் பார்த்தான். 

“ஒவ்வொரு சிங்கள மன்னர்கள் காலத்திலும் முஸ்லிம்களின் தொடர்பு உறுதி பெற்று வந்துள்ளது, என்பதற்கு முஸ்லிம்கள் அமைத்த குடியிருப்புகளே சான்று. பழைய திசாவெவகம இன் றும் திசாவெவ குளம் என்று வழங்கப்படுகிறது. இங்கேயும் அழி ந்த நிலையில் ஒருபள்ளிவாசலைக் காணலாம். இரண்டு பழைய கற்தூண்களில் மு.அ.என்ற தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. 

முஸ்லிம் குடியிருப்பில் பிரபலமான ‘முத்துவிதான அசனார் என்பவரையே இவ்வெழுத்துக்கள் குறிக்கும். மன்னராட்சியில் இவர் விதானை பதவி வகித்தவர்…” என்று கூறிய ஹலீம்தீன், இடைநிறுத்தி யாசீனின் முகத்தை உற்று நோக்கினான். 

“ஹலீம்தீன்….நான் ஒன்டு சொல்றன், இந்த வருஷம் சோதின எழுதப் போற நீ… இப்படிசுத்திவளைச்சிக் கொண்டு… நீட்டிக் கொண்டிருந்தா… நிச்சயமா புள்ளிகள் கிடைக்காது, சொல்லிப் போட்டன்…. ஆன்சர் டு த பொயின்ட்….” 

“தேங் யூ மை டியர்…. ஆனா இது சோதின இல்ல… எங்கட வாழ்க்கை வரலாறு… மூத்த பரம்பரை எப்படி விவசாயத்த பரம்பரைத் தொழிலாக மேற் கொண்டாங்க என்பதற்கு ஒரு பின்னணி கிடக்குதே… அதை சுருக்கமாகவாவது சொல்லாம என்னால அரை குறையா பதில் சொல்ல ஏலாது மச்சான்… இனி கிராமங்களை அமைத்து பள்ளி வாசலையும் கட்டினவங்க பதினைஞ்சு பதினாறு வருடங்கள் மட்டுந்தான் அவ்விடங்களில் வாழ முடிஞ்சிது, மீண்டும் பாதுகாப்பான இடங்களைத்தேடி வேட்டையாட வேண்டியிருந்தது. 

“ஏன் அப்படி? என்ன நடந்தது ?– எல்லாருமே அங்கலாய்த் தார்கள். 

“1902ம் ஆண்டில இங்கிலிஷ்காரன்க வடக்கிற்குப் புகை வண்டிப் பாதை சமைக்க திட்டம் போட்டாங்க. அதுக்கு எங்கட முன்னோர் ஒத்துழைச்சாங்க….ஒரு ஒப்பந்த அடிப்படையில் மரச்சட்டங்கள் சப்ளை, கேள்வி வழங்கல்கள், எல்லாத்தையும் முஸ்லிம்களே பொறுப்பெடுத்திருந்தாங்க…… 

ஆனா… திட்டம் போட்டபடிக்கு ரயில் பாதைகளை போடத் தொடங்கின நேரத்தில இங்கிலிஷ்காரரினதும், மற்றவர்களி னதும் ஊடுருவல் அனுராதபுரத்தில தொடங்கியது. இதை விரும்பாத முஸ்லிம் மக்கள் ‘இவகட கலாச்சாரம், பழக்க வழக்கங்களிலிருந்து நாம விடுபட்டு, எங்கட கலாச்சாரத்த காப்பாத்தனும்…” என்று முடிவெடுத்து விட்டனர். 

“அப்ப அவங்கட வேட்டை மீண்டும் புதிய திசைக்குத் திரும்பியது…” என்று சொல்ல வாரீங்க…. சரியா….?” என்றான் இதுவரைக்கும் மௌனமாக ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த கமர், “ஓமோம்…. ஆனா மறைவான புதிய இடங்களைத்தான் தேடினாங்க” 

“எப்ப எந்த ஆண்டு மட்டில?” 

1906ம் ஆண்டு… இப்பிரதேசத்த விட்டுட்டு அளுத்கம, கம்பிரிகஸ்வெவ, கோவில்பந்டாவ, கொட்டியாவ, கிவுளுகட போன்ற கிராமங்களை பென்னாம் பெரிய காடுகளின் மத்தியில மறைவாக உண்டாக்கி, வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்….” 

“அப்ப ஆங்கிலேயரின் கலாச்சாரம் எங்கட தனித்துவமான கலாச்சாரத்துக்கு ஒத்து வரல்ல என்டா ஒதுங்கிக் கொண்டாங்க?” என்று வினவினான் சவால், மேலும் தெளிவு பெறும் நோக்கில், 

“ஓ… ஒதுங்கினா மட்டும் காணா…. மறைந்து பாதுகாப்பாக வாழ முடியும் என்று நம்பி இடம் பெயர்ந்திருக்கலாம்…. ஆனால் இந்தக் காலகட்டத்திலதான் உணவுப்பிரச்சினை தலை தூக்கியது. யாசீனின் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்வதா யிருந்தா…. இந்த உணவுப் பிரச்சினையத் தீர்க்கத்தான் எமது முன்னோர் சேனைப் பயிர் செய்கைய மேற்கொண்டாங்க. அது படிப்படியாக, யாசீன் சொன்னது போல, விவசாயம் எங்கட தலையெழுத்தானது…. அத்தோட நான் மேலே குறிப்பிட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஊர்ப் பிரதேசங்களைத்தான் ‘எட் டூர்ப் பிரதேசம்’ ‘அட்டகம்பளாத்த’ என்று கூறுவார்கள்” என்று முத்தாய்ப்பு வைத்தான் ஹலீம்தீன். 

ஹலீம்தீனின் இந்த நீண்ட விளக்கத்தால் யாசீனின் முகத்தில் பூரண திருப்தி நிலவியது. ஏனைய நண்பர்களும் புளகாங்கித மடைந்து போனார்கள். 

“அப்ப மொதல்ல சேனைப் பயிர்செய்கை, பொறகுநிலப்பரப்புகள் குளங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் பருவ மழையை நம்பி விவசாயம் செய்திருக்க வேண்டும். 

ஹலீம்தீனும் அன்சாரும் அதனை வழிமொழிவது போல தலையசைத்தனர். 

முதிரைமர நிழலிருந்து எழுந்து மீண்டும் அவர்கள் சைக்கிள் சவாரியைத் தொடங்கினர். ஐந்து கிலோ மீற்றர் தொலைவி லுள்ள ஒரு சிங்கள கிராமத்தை நோக்கியே அந்தப் பயணம், ஓர் இலட்சிய நோக்கை நடைமுறையில் நிலைநாட்டுவதற்கென போய்க் கொண்டிருக்கிறார்கள். 

“அப்பாடா இனி எங்கலால ஏலாது…” என்று மூத்தவர்கள் ஒதுங்கிக் கொண்ட பின், கிராமத்தை நிர்வகிக்கும் பாரிய பொறு ப்பு இந்த இளைய பரம்பரையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

சமது விதான, அபூதாலிப் ஆகியோர் திருமணமானவர்கள், ஹலீம்தீன் தொடக்கம் ஏனையவர்கள் எல்லாரும் கல்விப் பொதுத்தராதர ஓ.எல், ஏ.எல். மாணவர்கள். இருபதுக்கு உட் பட்டவர்கள். ஆயினும் கிராம முன்னேற்றம் கருதி மிக்க சுறு சுறுப்புடனும் நிதானத்துடனும் இயங்க வல்லவர்கள்.ஹலீம் தீன் நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் கிராமத்து விவகாரங்கள் எல்லாம் நிர்வாக அலுவலகம் அமை த்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

எனினும் ஹலீம்தீன், யாசீன், அன்சார் ஆகிய மூவரும் ஏ.எல். இறுதியாண்டில் ஊன்றி உழுது கொண்டிருக்கிறார்கள். 

ஏறிக் கொண்டிருந்த வெய்யிலை அவர்கள் பொருட்படுத்த வில்லை. போகிற வழியில் தெம்பிலி கிடைக்குமா என்று கண்களை மேயவிட்டார்கள். 

“சிங்கள கிராமத்திற்குள் புகுந்து விட்டோம்” என்று சமது விதானை உறுதிப்படுத்தி விட்டான். எதிர்பார்த்தது போல் நந்தசேனவின் ‘ஒற்றை’ கடையில் தொங்கிய தெம்பிலி குலை தீர்ந்தது. கிராமங்களின் எல்லைகளையும், காடுகளின் எல்லைக் கோடுகளையும், மண்ணை உள்ளங்கையில் குவித்து, இது விவசாயத்திற்கு ஏற்ற பூமியா என்று தேர்ந்தெடுப்பதில், அனு பவ வாயிலாக மட்டுமன்றி, இயற்கையாகவே அசாத்தியத் திறமையுடையவன் சமது விதானை, விதானை பதவி இப்பொ ழுது இல்லாவிட்டாலும் பெயரில் நிலைத்து விட்டிருந்தது. 

‘இந்த மண்ணுக்கு எந்த வகை விதைநெல்லைப் போட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும்?’ என்று ஆலோசனை பெற்றுக் கொள்வதில் சிங்கள கிராமத்து நண்பர்கள் சமது விதானையை நட்புடன் தரிசிப்பதில் தவறமாட்டார்கள். 

அதுபோல எந்தப் பெரிய அடர்த்தியான காடுகளில் போய் வேட்டையாடி சிக்கிக் கொண்டாலும் திசையறி கருவி எதுவு மின்றி திசையறிந்து மீண்டும் கிராமங்களுக்குத் திரும்பி வர சமர்த்து அபூதாலிப் தான். 

தந்தை அப்துல்காதர் லெப்பையின் பாம்புக்கடி வைத்திய த்தை ஆர்வமுடன் கற்று ஆய்வது முபாரக்கின் பொழுதுபோக்கு, ஆயினும் யாருக்கும் வைத்தியம் செய்ய இன்னும் அப்துல்காதர் லெப்பை முறைப்படி ‘வாக்கு’ கொடுக்கவில்லை. முதலில் அவன் ‘கல்வியை’ முடிக்க வேண்டும். அதுதான் அவரது அபிலாசை. 

ஹலீம்தீன் தனக்கு பக்கபலமாக இருந்து கருமமாற்றுவதற்கு பல்வேறு கோணங்களிலிருந்தும் திறமையானவர்களை வடித் தெடுத்திருக்கிறான். 

“நந்தசேன முதலாளி, கிரிபண்டா உன்னஹெ கெதர இன்ன வாத…?சமது விதானை பேச்சுக் கொடுத்தான். 

‘ஒவ்வொவ்…. லேஸ்திவெலா பலாகென இன்னவா…..” தெம்பிலி அருந்தி சற்றுநேரம் இளைப்பாறிய அவர்கள் மீண்டும் உழக்கினார்கள். 

கிரிபண்டா ஆயத்தமாகி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நந்தசேன வாயிலாக அறிய முடிந்ததால், அவர்களது வருகை சிங்கள கிராமம் முழுவதும் பகிரங்கப்படுத்தப்பட் டுள்ளது என்பதை ஊகிக்க முடிந்தது ஹலீம்தீன் குழுவினருக்கு. 

“1960ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவங்கட ரத்தத்தில் தான் மெல்லிதாக ஒரு துவேஷத்தன்மை கலந்திருக்கு… ” யாசீன் சைக் கிளை உழக்கிக் கொண்டே ஒரு புதிய கருத்தை முன்வைத்தான். 

“அதெப்படி நீ அவ்வளவு உறுதியாக சொல்ற?” என்று தொடங்கி பெரிய விவாதத்துக்கு உள்ளாகி பிரச்சினைகளைக் கிளப்பப் பார்த்தது. 

“இப்ப போய்க் கொண்டிருக்கிற நாங்கள் எல்லாரும் 1975ல் பிறந்தவர்களாய்த்தான் இருக்க வேணும் எங்களிடம் துவேஷம் இருக்கா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான் சேகு. 

“நாங்கள் படித்தவர்கள் தெளிந்தவர்கள் எல்லாத்துக்கும் மேலாக நாங்கள் சமாதானத்தை விரும்புறவர்கள்…” என்றான் அன்சார். 

“ஆ… அப்படியெண்டா சரி” என்று சேகு அடங்கிப் போனான். பிரச்சினையைக் கிளப்பிய யாசீன் மௌனமாகக் 

கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருந்தான்

ஹலீம்தீனைப் பொறுத்தவரையில் உள்ளூர மகிழ்ச்சி. 

கிரிபண்டாவை சந்திக்க முன்பே முஸ்லிம் இளைஞர்களா கிய எங்களிடம் துவேஷம், இனக்குரோதம்… போன்றவை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாயிற்று. ‘பலாய் ஒண்டும் வராது’ 

அவனைப் பொறுத்தவரையில் நிதானமான சிந்தனையும், போக்கும் முன்மாதிரியாக விளங்கின. இல்லாவிட்டால் எதற் கெடுத்தாலும் கம்பும் கத்தியும் வாளும்…. அந்த யுகம் அருகிக் கொண்டு வருகிறது. 

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் ஒரு வரலாற்று மாணவ னாக இருந்தான். கிராமங்களின் இதிகாசங்களை ஆய்பவனாக வும் இருந்தான். ஒரு தலைமைத்துவத்திற்கு போதுமான அம் சங்கள் அனைத்தும் ஹலீம்தீனிடம் அமைந்திருந்தன. 

அவன் சாதாரணமாக உரையாடும் போதும் கூட ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் அவனது பேச்சில் பொதிந்து கிடக்கும். அவனுக்கு ஒன்று துப்புரவாகப் பிடிக்காது. அதுதான் வரலாற்றுப் புரட்டல்கள். 

எல்லாரும் கிரிபண்டாவின் வளவை அடைந்தபோது கிரிபண்டாவின் மூத்த மகன் அமரதாசவும், மகள் பியசீலியும் ‘கடப்பலை’த் திறந்து விட்டு அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். 

அத்தியாயம் இரண்டு 

சிங்கள கிராமத்தின் மூத்த தலைமுறையின் தலைவர் கிரி பண்டாவின் புதிய கல்வீடு சகல வசதிகளையும் உள்வாங்கிக் கொண்டு விசாலமாகக் காட்சியளித்தது. வீட்டிற்கு முன்னால் அரைத்திண்ணை வைத்து கட்டப்பட்ட திறந்த வெளி முன் விறாந்தையில் புதிய பன் பாய்கள் விரிக்கப்பட்டுள்ளன. மத்தி யில் பளிச்சென்று மின்னிக் கொண்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட பித்தளைத் தட்டில், சம்பிரதாய முறைப்படி வெற்றிலை பாக் கும், பிறிதோர் தட்டில் தேவையேற்பட்டால் பரிமாற சிகரட் பக்கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நடுவில் பெரிய கோப்பைகள் நிரம்ப தண்ணீரும் அள்ளி அருந்துவதற்காக ‘சுண்டுக்’ கோப்பைகளும் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

முன் கூட்டியே, செய்திகள் பரிமாறிக் கொண்டதனால் இருதரப்பினரதும் இச்சந்திப்பு இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு சிநேகபூர்வமான பேச்சு வார்த்தைகள் இடம் பெறுகின்றன. 

கிரிபண்டா வெளுத்த வெள்ளைச் சாரம் அணிந்து மேலால் வெள்ளை அரைக்கை ‘நெஷனலுடன்’ புதியதுவாய்த் துண்டை யும் போட்டிருந்தான். 

முஸ்லிம் கிராமத்திலிருந்து வந்த இளைய விருந்தாளிகள் நீட்டு களிசானும் சேட்டும் உடுத்தியிருந்தனர். சமது விதானையையும் அபூதாலிபையும் தவிர, அவர்கள் அந்த வருட நோன்புப் பெரு நாளைக்கு எடுத்திருந்த சாரம் சேட்டுடன் காணப்பட்டார்கள். 

மைதானம் போல் அமைக்கப்பட்டிருந்த பரந்த முற்றத்தில் நின்று கொண்டே அந்த அழகிய சூழலை ரசித்துக் கொண்டிருந் தவர்களை கிரிபடாவும் அமரதாசவும் இரு கரங்கள் கூப்பி இன்முகத்துடன் வரவேற்று விறாந்தையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அமரச் செய்தனர். 

அமரதாசவும் பியசீலியும் அவளது தோழிகளும் பம்பரம் போல் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் ஓர் அரைவட்டமாக இருக்கை கொள்ள, அவ்வரை வட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு சிங்கள கிராமத்து பிரதிநிதிகள், கிரிபண்டாவின் தலைமையில் மிகவும் பண்புடன் அமர்ந் தார்கள். ஆனால் அமரதாச ஹலீம்தீனின் பக்கத்திலேயே அமர் ந்து கிராமத்து விவகாரங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தான். 

“அமர புதத் மெஹாட்ட ஆவொத்….” என்று கிரிபண்டா சம்பிரதாயத்திற்கு அழைத்தாலும்… 

“நே…நே… ஓஹே இந்தி… காரியக்நே…” என்று கிரி பண்டாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த மூத்தவர்களான பிங்கா மில புஞ்சிரால, முதியான்ச முதலியோர் ஆதரவாகப் பேச இளைஞர்களான பியசேன, சந்திரபால, சோமரத்ன, விக்டர் ஆகியோர் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். பெண் பிரதி நிதிகளாக, சபையில் உட்காராவிட்டாலும், பியசீலி, யசவத்தி, லதா, நந்தா, மாலினி போன்ற இளம் யுவதிகள் மகிழ்ந்து வாழ்த்துவதில் இணைந்து கொண்டனர். 

ஊர் இரண்டுபட்டு இருந்தாலும் ஹலீம்தீனும், அமரதாசவும் நீண்ட நாளைய நண்பர்கள். அவன் சிங்கள மகாவித்தியால யத்தில் ஏ.எல். இறுதியாண்டு விஞ்ஞான மாணவன். கிரிபண்டா வின் மகள் பியசீலி கலைப்பிரிவு, ஒரு பட்டதாரி ஆசிரியையாக வந்தால் போதும் என்று நினைப்பவள். 

இப்படியாக இளைய பரம்பரை ஒருமைப்பாட்டுக்கு ஒன்று பட்டு உழைக்க அடியெடுத்து வைக்கும்போது, பெரியவர்கள் தடைக்கற்களாக இருக்க விரும்புவார்களா? 

பேச்சு சுமுகமாகத் தொடங்குகிறது. கடந்த ஒரு தஸாப்த காலமாக அவர்கள் மத்தியில் ஒரு மௌனச் சுவர் எழும்பி யிருந்தது. அவர்கள் பகைவர்கள் அல்லர். அதேநேரத்தில் அவர்களிடையே நட்புறவும் இருக்கவில்லை. அவ்வப்போது எழும் சிறு சிறு பிரச்சினைகளால் மனம் குமைந்து வேறுபட்டி ருந்தனர். நல்லவற்றிற்கும் பொல்லாதவற்றிற்கும் ஒன்றுகூடா மல் மௌனிகளாகவே காலங்கழித்து விட்டிருந்தனர். 

மனங்கள் பக்குவப்பட்டு விட்டனவோ, என்னவோ, பள்ளி வாசல் முறைப்பாடுகளும் பொலிஸ் முறைப்பாடுகளும் வெகு வாகக் குறைந்து விட்டதும் நல்ல சகுனம்தான். 

பழைய நிலைமை இப்பொழுது இல்லை. கல்வி கமக் காரர்களின், குறிப்பாக இன்றைய தலைமுறையினரின் அகக் கண்ணை திறந்து விட்டிருந்தது. அதனால் ஒரு வகைப் புரிந் துணர்வு, ஏற்பட்டு கம்பு, தடி வெட்டுக்கத்தி முதலியவற்றைத் தூர எறிந்துவிட்டு, அத்துடன் அந்த மெளன விலங்கும் அறுந்து நட்புறவு உதயமாகத் தொடங்கியிருந்தது. 

இனி அவை நேசக்கிராமங்களே, சில காலமாக அமரதாசவும் ஹலீம்தீனும் எடுத்த முயற்சிகள் இன்று சாத்தியப்பட்டு விட்டன. 

அக்கம் பக்கத்து சிங்கள முஸ்லிம் கிராமங்களின் ஒருமைப் பாட்டை பலப்படுத்துவது முக்கியம் என்பதை இரு சாராருமே, குறிப்பாக முதியவர்களே உணர்ந்து விட்டனர். 

பியசீலி அம்மாவுடனும் தோழிகளுடனும் ஏலவே தயாரித்து வைத்திருந்த பலகாரம் பழங்களுடன் வந்து சேரமசூதானம் எல்லாம் ஆயத்தம்’ என்பதை உணர்த்த கதவுத்திரைச் சீலையை ஒதுக்கி தகப்பனை எட்டிப்பார்த்தாள். 

கிரிபண்டா மெள்ளமாக சைகை காட்டவே அமரதாசவும் பியசீலியும் விருந்தினருக்கு பலகாரமும் (கெவுங்) கோழிகுட்டு பழமும் பரிமாறினார்கள். 

தேநீர் விருந்துபசாரத்திற்குப் பிறகு விவசாயம் முஸ்லிம் களுக்கு எப்படித் தலையெழுத்தானது? என்று யாசீன் கேட்ட வினாவுக்குக் கொடுத்த விளக்கத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள் அநுராதபுரத்திற்கு அநுராத புர- காட்டிற்கு வந்த வரலாற்றுச் சுருக்கத்தை மிக உருக்கமாக சிங்கள மொழியில் எடுத்துரைத்து, சிங்கள மன்னராட்சியில், சிங்கள முஸ்லிம் நெருக்கத்தை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து விளக்கினான் ஹலீம்தீன். 

இதற்குமுன் இவ்விதிகாச உண்மை அறியாத அக்கிராமவாசி கள் அசந்து அதிசயித்துப் போனார்கள். அவர்களிடையே ஒரு புத்தம் புதிய பாச உணர்வு துளிர் விட்டது. 

சில தினங்களுக்கு முன் இரு கிராமத்தவர்களும் இணைந்து காட்டின் ஒரு பயங்கரமான பகுதிக்கு வேட்டைக்குப் போகவும் அங்கே இரு சாராரின் எல்லைகளுக்கு மத்தியில் விவசாயத்திற்கு இதுவரைக்கும் கிடைக்காத, மிக அற்புதமான நிலப்பரப்பைப் பார்வையிடவும் திட்டமிட்டிருந்தார்கள். நீர்த்தன்மை மிகுந்த அவ்வெல்லையில் ஒரு சிறு குளம் தோண்டினாலே இரு கிராமங் களுக்கும் விவசாயத்தில் எதிர்பாராத பயனைப் பெறமுடியும் என் பதை விவசாய மாணவர்கள் தெட்டத்தெளிவாக ஆய்ந்துள்ளனர். 

ஆனால், கிராமத்தில் வேறு சில பிரச்சினைகள் தலைதூக்கி யிருப்பதால், வேட்டைக்குப் போகவோ, அந்தப் பகுதியை பார்வையிடவோ சாத்தியப்படாது என்பதை ஹலீம்தீன் தெளிவாக்கினான். 

“கிரிபண்டா, நீங்க திட்டமிட்டபடி வேட்டைக்குப் போங்க… நாங்க கொமிட்டி கூடி பேசினம்… உங்கட திட்டத்துக்கும் நல்ல ஆதரவு கிடைச்சிருக்கு, எதிர்ப்பு இல்ல, ஊர்க்கட்டுப்பாட்ட மீறி இப்ப வந்தா காரியம் கரச்சல்…நாங்க எடுத்திருக்கிற முயற்சி கள், திட்டங்கள் எல்லாம் பாழ்பட்டு போயிடும்… கொஞ்சம் பொறுமையா இருந்தா பின்னால எல்லாம் வெற்றியாகத்தான் முடியும். எடுத்த எடுப்பில அவசரப்பட்டு… நிலமைகளை மோச மாக்கிக் கொள்ளக்கூடாது தானே” 

ஹலீம்தீன் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்து தீர்க்கதரிசனப் பார்வையுடன் கரும மாற்றுகிறான்’ என்று கிரிபண்டாவும் ஏனையோரும் வியந்து பாராட்டினர். 

“நாங்க இந்த மொறக்கி வராட்டாலும் நீங்க எங்கட கிரா மத்து வழியால போங்க… அதுக்கு அனுமதி வழங்கிட்டம்… இனியும் சுத்தி வளச்சி காட்டு வழியாப் போகத் தேவைப் படாது…”

இதைக் கேட்டதும் கிரிபண்டாவுக்கு இருப்புக் கொள்ள வில்லை. அப்பொழுதே வெளியேறி யார்யாருக்கோ, வேட்டைக் காரர்களுக்கு அழைப்பாணை விடுக்க வேண்டும் போலிருந்தது. 

கொஞ்சநாள் சென்றதும்… மீண்டும் வேட்டையில் இணைய வும், விதை நெல், மிளகாய்க்கன்றுகள் பரிமாற்றம் செய்யவும், வயல் வேலைகளுக்கு கூலி அடிப்படையில் ஆட்கள் போகவும் வரவும்… 

கிரிபண்டாவின் எதிர்பார்ப்புகள் நீண்டு கொண்டே சென்றன.

இறுதியாக… சுற்றுப்புற சிங்கள முஸ்லிம் கிராமங்கள் அன்று இருந்த நிலையையும் இன்று இருக்கின்ற நிலையையும், விட்ட தவறுகளும், அதனால் இன்று ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி யும் இனியும் காலந்தாழ்த்தாமல் செய்ய வேண்டிய கருமங்கள் பற்றியும் தொட்டுக்காட்டி, இவை பற்றி விரிவாக ஆராய்வதற்கு கிராம மட்டத்தில் கருத்தரங்குகள் நடத்த நாட்கள் குறிக்கப் பட்டு, ஒரு செயற்குழுவும் அமைக்கப்பட்டது. 

இனிய விருந்துபசார வைபவம் வெற்றிகரமாக முடிந்ததும் ஒருவகைப் புதுப் பொலிவுடன் ஆட்கள் கலைந்தனர். ஹலீம் தீனும் நண்பர்களும் எழுந்து கிராமத்து பெரியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறிய போது வாசலில் பியசீலி யும் தோழிகளும் காத்திருந்தனர். 

“ஹலீம் அய்யே” என்று தொடங்கி சிங்கள மொழியில் கணீரென்று மனதில்பட்டதைக் கேட்டுவிட்டாள். 

“…ஓகஸ்ட் மாதத்தில் ஏ.எல் சோதின எடுக்கப் போறீங் களா… அல்லது… நீங்கள் எல்லாம் கிராம முன்னேற்றத்துக்கு பாடுபட போறீர்களா…? 

“தெகம கரனவா” என்று பதிலிறுத்ததோடு, பாடங்கள் பரீட்சை சம்பந்தமாக உரையாடினர். 

“நீங்க எல்லோரும் படிக்கிற மாதிரி தெரியல்ல… அமர அய்யாவுக்கு படிப்பில் கவனக் குறைவு. 

“இராச் சாப்பாடு முடிந்ததும் ஊர்ப் பாடசாலையில் இரவி ரவா படிக்கிறம்… படிப்பு முடிஞ்ச பருவத்திலதான்” 

”உண்மையா உங்களுக்கு அந்த வசதி இருக்கு… இடைக் கிடை கலந்துரையாடல் மூலம் நிறைய விசயங்கள் மனதில் பதியும்… ஆனால் எங்கட இந்தப் புதிய வீட்டுக்கு இன்னும் ‘இலக்றிசிட்டி’ கிடைக்கல்ல… என்னோடு படிக்க யசவத்தியும் மாலினியும் வந்து தங்குவார்கள். நாங்க இந்த புதிய மண்டபத் தில் ‘அரிக்கன்’ லாம்பை ஏற்றி வைத்து தூங்கி விழுவம்…’ அவர்கள் சிரித்தார்கள். 

“கொழும்பில எண்டா டியுசனும் டியூட்டரிகளும் நிறைய இருக்கு. யாசீன் யூ.டி.ஐ நண்பர்கள் மூலம் நோட்ஸ் எடுத்துப் படிப்பதால் பலருக்கும் உதவியாயிருக்கு… ஆனால் தமிழ் மூலம் நோட்ஸ் உங்களுக்கு பிரயோசனப்படாது…’ 

“பரவாயில்லை ஹலீம், பிரஸ்னயக் நே. எங்களுக்கு சனி ஞாயிறு நாட்களில் கொழும்பிலிருந்து விசேட பாட ஆசிரியர் கள் வந்து கருத்தரங்குகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

“அது நல்லது.”

“அப்பஹலீம் நாங்க முந்துறோம். நீகதைச்சிட்டு, ஆறுதலா… வாவென்.” 

“இல்ல… இல்ல… நானும் வரத்தான்… அநுராதபுரம் போகனும்.”

மேலும் சில நிமிடங்கள் அமரதாச நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி விட்டு அவர்கள் பிரிந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பஸ்ஸில் அநுராதபுரம் சென்றனர். சில முக்கிய விடயங்களுக்காக சுற்றியலைந்துவிட்டு ஊர் திரும்பிய போது… 

பள்ளிவாசலில் இருந்து, மஃறிப் தொழுகைக்கான அழைப்பு தென்றலில் மிதந்து கொண்டிருந்தது. 

அத்தியாயம் மூன்று 

ஓர் இனிய திருப்பத்தையே ஏற்படுத்திய அந்த விருந்து பசாரத்திற்குப் பிறகு வந்த அந்த சனிக்கிழமை அமரதாசவுக்கும் ஹலீம்தீனுக்கும் ஓய்வுநாளாய் இருந்தது. இருவருக்கும் பிரத்தியேக வகுப்புகள் எதுவும் இருக்கவில்லை. அமரதாச ஹலீம்தீனுக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். 

அன்று காலை ஹலீம்தீன் தனது புதிய ஹொன்டா மோட்டார் சைக்கிளில் யாசீனையும் ஏற்றிக் கொண்டு முக்கிய அலுவலாய் சிங்களக் கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந்தான். 

கிரிபண்டா அந்த விருந்துபசாரத்திற்கு அழைப்பு விடுத் திருந்தும், சமரசிங்கவும் குணத்திலகவும் சமூகமளித்திருக்க வில்லை. அந்தக் கணமே கிரிபண்டாவும், அமரதாசவும் அவர் களை மட்டிட்டுக் கொண்டனர். ‘விருந்து சுவைக்க நியாயம் இல்லா விட்டால் உள்ளத்தில் கசப்பு இருக்கிறது…’ 

அதையெல்லாம் அமரதாச பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ‘இவர்களெல்லாம் பெரிய எதிரிகள் அல்ல…’ என்பது தான் அவனுடைய கணிப்பு. 

இன்று அவர்கள் வயலுக்குப் போகவில்லை. நந்தசேனவின் கடையில் கஹட்ட உறிஞ்சிவிட்டு, கிண்டலாக உரையாடிக் கொண்டிருந்தனர். 

“குணே… மெச்சர கல்…’ என்று தொடங்கி, சமரசிங்க ஒரு கேள்வி கேட்டான். 

“இவ்வளவு நாள் இல்லாம, கிரிபண்டாவுக்கு திடீரென்று சோன கனோட உறவாட அப்படி என்ன அவசியம் வந்து விட்டது?” 

“ஹா… ஹா… ஹா… உண்மையில ஒனக்கு தெரியாதா…?”

“தெரியாதே…” என்றான் குனே. 

‘ஒருவேள மகளுக்கு அங்க சம்பந்தம் செஞ்சி வைக்கப் போறானோ?” 

“சே… சே… அப்படி இருக்காது” 

“குணே… ஒனக்கு உலகமே தெரியாது…. கிரிபண்டன் மகள் அந்த சோனகப் பொடியனோட அவ்வளவு நெருக்கமா ஏன் பழகனும்? ஒரே வகுப்புதான்… ஆனா அவ வேற பாடசாலை… அவன் வேற பாடசாலை… அங்க தான் விசயமிருக்கு… இப்ப ஒனக்கு புரீதா?” 

“…இருந்தாலும் இந்தக் காலத்து புள்ளங்க… பழகுறது அப்படித்தான்.. அதவச்சி நாங்க அப்படி முடிவுக்கு வரக் கூடாது.’ 

“சரி… சரி… நீ படிச்ச மனிசன்… ஒனக்கு இப்ப புரியாது. படிச்சவங்க எப்பவும் விட்டுக் குடுப்பீங்க… தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகுதான் ….” 

இவ்வளவு நேரமும் மௌனமாயிருந்த உக்குரால உரக்கச் சிரித்து, அந்தக் கிண்டலுக்கு மெருகூட்டினான். அவனுடைய அந்தப் பேச்சில் அப்படி என்ன நகைச்சுவையைக் கண்டு விட்டானோ! 

“புதிய தொல்லைகள் எங்களுக்குத் தேவையில்ல… நாங்க எப்பவும் போல ஒண்டுக்கும் சேராம எங்கட வேலவெட்டிகள் கவனிச்சிக்கிட்டு ஒதுங்கியிருப்பம், என்ன நந்தசேன நான் சொல்றது…?” 

”அப்போவ்… உக்குரால… நான் கடைக்காரன்; பொது மனிதன். என்னை ஒண்டுக்கும் இழுக்காதீங்க. நான் கடைக்கு ‘யுனைடட் ஸ்டோர்ஸ்’ என்றுதான் பெயர் வைக்க யோசித் திருக்கிறன். ஏனென்டா என் கடைக்கு எந்தவித வித்தியாசமு மில்லாம எல்லோரும் வந்து போகனும்; கிராமத்துக்கு நன்மை தரும் எந்த விசயத்துக்கும் நான் ஆதரவுதான்…” 

பின்னர் சமரசிங்கவும், குணதிலகவும், உக்குராலவும் கிரி பண்டாவின் வீட்டுப் பக்கமாக நடந்தனர். 

ஹலீம்தீனும் யாசீனும் தூரத்தில் சைக்கிளில் வந்து கொண்டி ருந்ததைக் கண்டதும் சமரசிங்கவின் பகிடி எல்லை மீறியது. 

“அன்ன உம்பலாகே மரக்கலயா எனவா…” என்ற வார்த்தை கள், கடப்பல் அருகே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டி ருந்த அமரதாசவின் காதுகளில் ரீங்கரித்ததும், அவனது இரத்தம் ஒருகணம் உறைந்து விட்டது. பாய்ந்து சென்று அவனுடைய சேட்டைப் பிடித்து இழுத்துக் கொண்டான். அப்படியும் அவன் நிதானம் இழக்கவில்லை. நண்பர்களான பியசேன. லால், விமல், காமினி போன்றவர்கள் முன்எச்சரிக்கையாக பிடித்துக் கொண்டனர். 

“சமரசிங்க… எமது கிராமங்களைப் பொறுத்தவரையில் பாரிய அளவில் இனக் குரோதங்கள் தோன்றி, பிரச்சினைகள் எழும்பவில்லை. அதனால் இன்றைக்கி நூற்றுக்கு தொன்னூற் றைந்து வீதத்தினர் இந்தக் கிராம ஒருமைப்பாட்டை விரும்புகிற கட்டத்தில் நீ இப்படி எல்லாம் மனிதத்தன்மை இல்லாம தகாத முறையில பேசக்கூடாது…” என்று அனைவருமே அறிவுறுத் தினார்கள். 

ஹலீம்தீனும், யாசீனும் அவ்விடத்திற்கு வரும் முன்பே அமரதாச ஓட்டமும் நடையுமாகச் சென்று வரவேற்றான். 

அமரதாசவின் நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்கள் கலைந்து சென்று விட்டனர். 

ஹலீம்தீனும் அமரவும் இதர நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே கிரிபண்டாவின் திறந்த வெளி மண்டபத்திற்கு வந்து விட்டார்கள். 

கிரிபண்டா வயல் மேற்பார்வைக்குப் போயிருந்தான். பியசீலிக்கு இன்று ஹொரவப்பொத்தானையில் டியூசன் வகு ப்பு. அம்மாபின்கட்டில் வேலையாக இருந்தாள். மண்டபத்தின் மூலையில் ஓர் இளம் பெண் அவித்த நெல்லை பன்பாயில் பரத்திவெயிலில் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். 

“நந்தா…” என்று அமரதாச அவளை அழைத்தான். ஓட்ட மும் நடையுமாக வந்து ஓரமாக நின்றாள் அந்த அழகிய யுவதி. 

“… அபிட்ட தெம்பிளி கேன்ன… அவள் ஒரே பார்வையில் ஆட்களின் தலைகளை எண்ணிக் கொண்டுபோய் சில நிமி டங்களில் பெரிய தம்ளர்கள் நிரம்ப இளநீர் பரிமாறினாள். 

அமரதாச விளக்கம் கூறினான். 

“எங்கட அப்பச்சி காலம் தொட்டே ஒவ்வொரு கிராமத்திலும், அது சிங்கள கிராமமாயிருந்தாலும் சரி, முஸ்லிம் கிராம மாயிருந்தாலும் சரி, கிராமத்திற்கு ஒரு நிர்வாக சபைதான் இயங்கி வந்திருக்கு. சென்ற வாரம் நாங்கள் ஒரு புதுமை செய் திருக்கிறோம்… ஒங்கட கிராமத்திலிருந்தும் எங்கட கிராமத்தி லிருந்தும் ஒரு செயற்குழு அமைத்தோம் இல்லையா…?” 

“ஓம்…” 

“அதை நாங்க விஸ்தரிக்க வேண்டும்.” 

“எப்படி…?” 

“சிங்கள முஸ்லிம் கிராமங்களை நிர்வகிக்கும் சபைகளி லிருந்து இரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட அல்லது பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் ஒன்று உருவாக்க வேண்டும்… எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இது உறுதுணையாக இருக்குமல்லவா…?’ 

“இது அருமையான யோசனை…” என்று எல்லோரும் பாராட்டினர். 

“எமது தேர்தல் தொகுதியிலேயே முக்கிரவெவ தொடக் கம்… கிரிபேவ வரைக்கும் முப்பது கிராமங்கள் இருக்கு… சிங்கள கிராமங்கள்… ? அதையும் கணக்கெடுத்து, எமது திட்டங் களையும் அங்கத்துவ படிவமும் அச்சடித்து, ஒவ்வொரு கிராமத் திற்கும் அனுப்பினால்….” என்று நிறுத்தினான் ஹலீம்தீன். 

“அனுப்பினால் என்ன… ஒரு கேந்திர இடத்தில் சங்க அங்கு ரார்ப்பண கூட்டத்தை வைக்கலாம்… அப்புறம் எல்லாமே சங்க மூலம்… குரல்கொடுத்து அபிவிருத்திக்குப் பாடுபடலாந் தானே…?” என்று முடித்து வைத்தான் அமரதாச. 

இந்த யோசனைகளைப் பற்றி ஏனைய நண்பர்கள் வெகு வாகப் பாராட்டினார்கள். 

“ஒங்கட நிர்வாக சபையைக் கூட்டி ஆலோசித்தீர்களா…?” என்று யாசீன் கேட்டான்

“கலந்துரையாடினோம்… வயலையும் வயலைச் சார்ந்த ஒவ்வொரு உழவனினதும் நியாயமான பொதுப் பிரச்சினை களையும் முன்வைத்து சங்கம் போராடும் என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது… இனி நீங்களும் நாங்களும் ஒன்றுகூடி உத்தியோகபூர்வமாக இன்னும் அலசி ஆராய்ந்து முடிவுகள் எடுக்க வேணும்”. 

“சங்கத்தின் தலைமை அலுவலகம் அமைப்பதற்கு உன்ற இந்தப் புதிய வீடும், திறந்த வெளியும் மிகப் பொருத்தமாயிருக்கு…” இதுவும் யாசீனின் கூற்று. 

ஆனால் அதை மறுத்தான் அமரதாச. 

“இதைவிட ஒரு சங்கத்தின் தலைமைக் காரியாலயம், அநு ராதபுர நகரத்தில் அமைவதுதான் மிகப் பொருத்தம், என்று நான் நினைக்கிறன்…” என்றான். கூடி நின்ற நண்பர்கள் எல்லோரும் அதனை முற்று முழுதாக ஆதரித்தனர். 

“ஆனா மூன்றுமாத கால அவகாசம் தேவை….” என்றான் ஹலீம்தீன். 

“எதுக்கு…?” 

“ஏ.எல். சோதின முடிஞ்சாப் போலத்தான்… களத்தில இறங்கி வேலை செய்ய… நேரமிருக்கும்… இப்பதான் விளங்குது, நீங்கள் எல்லாம் கிராம முன்னேற்றத்திற்கு பாடுபட போறீங்களா என்று பியசீலி கேட்ட கேள்விக்கு முழுமையான அர்த்தம்…. 

“எல்லாமே பரீட்சைக்குப் பிறகு. அதில் எந்தவித சந்தேகமும் இல்ல… கல்வி அபிவிருத்திக்கு, நாங்க முதலில் சோதினையில் பாஸ்பண்ணி முன்மாதிரி காட்ட வேண்டியது அவசியம். சோதின முடிஞ்சகையோடு, மகஜர்தயாரிக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்…” 

“பரீட்சை முடிவுகள் வரும் வரைக்கும்…. இல்லாவிட்டா பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் வரைக்கும் நீண்டகால அவகாசம் கிடக்கு” என்று கூறிய ஹலீம், சற்று சிந்தனை செய்து விட்டு “நாம திட்டமிட்டு இக்கால அவகாசத்தில் பிரதிநிதிகள் கிராமந்தோறும் விஜயம் செய்து, பிரதேச விவசாயிகள் முன் னேற்றச் சங்க அமைப்பு பற்றியும் அதன் புனிதமான நோக்கங் கள் பற்றியும் பிரச்சாரம் செய்தால் அனைத்து கிராமவாசி களினதும் ஒத்துழைப்பைப் பெறமுடியும்…. என்று ஹலீம்தீன் மற்றுமொரு யோசனையை முன்வைத்தான். 

அதனை மிக்க மகிழ்ச்சியுடன் ஆதரித்த அமரவும் நண்பர் களும், நீங்க சொல்வது சரி… எமது நூற்றுக்கணக்கான கிராமங் கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியே ஒதுங்கி பிரிந்து கிடப்பதால் தான் எல்லாத்துறைகளிலும் நாம் முன்னேற் றம் காணாமல் பின்தங்கிக் கிடக்கிறோம். இதனை கமக்காரர் களுக்கு உணர்த்தி, ஒரு பலமான பிரதேச ஒன்றியம் மூலம் இதுவரை காலமும் குறைபாடுகள் நீக்கப்படாமல் இருளிலே வாழ்ந்துவிட்ட எமது விவசாய சமூகத்திற்கும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறமுடியும் என்பதைத் தெளிவாக, ஆணித்தர மாக எடுத்துரைக்க பிரச்சாரம் தேவைதான்.’ என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு கூறிமுடித்தான் அமரதாச. 

“வெள்ளாம வெட்டின கையோடு நீயும் மோட்டார் சைக்கி ளுக்கு அப்பாவிடம் அப்பிளிகேசன் போட்டுவை. பிரச்சார வேலைகளுக்கு, பஸ்ஸுக்காக மணிக்கணக்காக காத்துக் கொண் டிருக்கும் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்தானே”. 

”உண்மைதான். போக்குவரத்தும் எங்களுக்கு ஒரு பிரச்சினை. பஸ் வண்டிகளுக்காக காத்திருந்தே கால விரயம் செய்,திருக் கிறோம். முந்தியெண்டா ஒரு ஹையேஸ் வான் வாங்க வேண்டு மென்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா…. இப்ப இந்த விசாலமான வீட்ட கட்டினதால்… பணப்பிரச்சினைகள் கிடக்கு… எதுக்கும் யோசிப்பம்”. 

“மனித வாழ்க்கையை ஒருமைப்படுத்தும் போக்குவரத்து மற்றும் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் எத்தனை கிராமங் களுக்கு வந்திருக்கின்றன, என்று ஒரு கணக்கெடுக்க வேண்டும். வெறும் கிணற்றுத் தவளைகளாய் வயல்களிலும் வயலைச் சார்ந்த நிலங்களிலும் பருவ மழையை மட்டும் நம்பியே உழுது உழுது உண்டு வறுமைப்பட்டே வாழ வைத்து விட்டார்கள். 

ஒரு முழுமையான விழிப்புணர்வு ஒவ்வொரு விவசாய உள்ளங்களிலும் முகிழ்த்தெழ வேண்டும்…. என்று அவ்விளை ஞர்கள் விரும்பினார்கள். 

அதற்கு முன்னோடியாக முன்னர் முஸ்லிம் கிராமவாசி களால் தடைபோடப்பட்டிருந்த, குளக்காட்டுக்குப் போகும் பாதையை ஹலீம்தீன் மூலம் திறந்து… அதுவும் நாட்கணக்கில் சுற்றி வளைத்து, பயங்கரகாடுகள் வழியே போகாமல் முஸ்லிம் கிராமத்தின் ஊடாகப் போக அனுமதி கிடைத்திருப்பதே கிரி பண்டன் குழுவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்திருப்பதை மீண்டும் அமரதாச நினைவு கூர்ந்தான். 

இனி அதற்கென ஒரு நாளை நிச்சயித்து வேட்டைப் பயண த்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெளிக்கிட்டால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு ஊர்திரும்பி விடலாம். இந்த வேட்டையில் இந்த முறைக்கு முஸ்லிம் கிராமவாசிகள் பங்குபற்றாததால் சிங்கள கிராமத்து வேட்டைக்காரர்கள், முஸ்லிம் கிராமத்திற்கு அதி காலையில் வந்து அங்கு காலையுணவை முடித்துக் கொண்டு அவ்வழியே புறப்பட வேண்டும் என்று ஹலீம்தீன் அன்புக் கட்டளையிட்டான். 

அன்று மதியம் ஹலீம்தீனும் யாசீனும் ஊர்திரும்பிக் கொண் டிருந்த போது ‘ஹலீம்… இப்ப எல்லாம் என்ற மனசிலே ஒரு புதிய பிரச்சினை தலைதூக்கி வேதனை தந்து கொண்டிருக்கு….” 

காட்டுவழியே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ”அதென்ன பிரச்சினை?” என்று ஆவலுடன் கேட்டான் ஹலீம். 

‘காட்டுக்குள் ஒதுங்கி வாழ்ந்து, எங்கட முன்னோர் கட்டிக் காத்த மதக் கலாச்சாரத்தில் எத்தகைய சிதைவுகளும் ஏற்படப் போவதில்லை…. அதாவது அந்நியர்களிடமிருந்து எமக்கு எந்தவிதமான ஆபத்துகளும் இல்ல. குழிவெட்டிக் கொள்வது எமக்கு நாமேதான். 

“எனக்கொன்றும் விளங்கல்ல”. 

“கொழும்பு போன்ற நகர்ப்புரத்து நாகரீகம் மெள்ள மெள்ள எங்கட ஊர்களிலும் ஊடுருவுவதால் எங்கட கிராமங்களுக்குரிய தனித்துவமான விழுமியங்கள் மாறுகின்றன. எங்கட வாழ்க்கை முறை படிப்படியாக எங்களாலேயே அழிவுப்பாதைக்குப் போய்க் கொண்டிருக்கு….. ஒண்டு கேட்கிறன் இப்ப எங்கட பெண்டுகள் சவுதிக்கும் துபாய்க்கும் போறது என்ன கலாச்சாரம் ? ஹஜ்ஜுக்குப் போறதாயிருந்தாலும் பெண்கள் தங்கட கணவர் மாருடன் அல்லது நெருங்கிய சொந்தங்களுடன் போக வேண்டு மென்பது சட்டம். அந்த மாதிரியான எங்கடதனித்துவத்த இழக்க வேணுமா…..? என்று உணர்ச்சிவசப்பட்டான் யாசீன். 

“நீ சொல்றதில முழுக்க முழுக்க உண்மை இருக்கு. நானும் பலமுறை அதப்பத்தி யோசிச்சது தான்…. ஆனா நாம படிப் படியா வகுத்துக் கொண்டு போற திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, அவற்றிற்கு பரிகாரம் கிடைக்கும் என்று நம்பு றேன்… எமது கிராமங்கள் இன்னும் தன்னிறைவு அடையல்ல… அதான் நான் அண்டக்கும் எங்கட கருத்தரங்கில சொன்ன. அந்தக் காலத்தில மன்னர்கள் குளங்கள கட்டிப் போட்டனர். விளைச் சல்கள் தவறவில்லை. யானைகளை வெளிநாடுகளுக்கு அனுப் பினது போல அரிசியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த னர் எங்கட சிங்கள மன்னர்கள். சனப்பெருக்கம் கூடிக்கொண்டு வார இந்தக் காலகட்டங்களில ஒழுங்கான நிரந்தரமான போதிய அளவு குளங்கள் இல்ல. வருஷா வருஷம் பருவ மழைய மட்டும்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதுவும் காலை வாரிவிட்டா எல்லாம் போச்சி. ஏன் தொடர்ந்து 1970களில் மூன்று நாலு வருஷம் விவசாயம் செய்ய முடியாம, கொடிய வறுமைக்குத் தள்ளப்படவில்லையா? இப்படியான கட்டங் களில் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென்று சட்டம் போட்டு தடுக்க ஏலுமா? 

ஆனா பெண்கள் போறது மார்க்க சட்டத்திற்கு விரோத மானது, அது ஒரு பக்கத்தில கிடக்க… எங்கட கிராமத்திலிருந்து பலர் போயிருக்கிறாங்க… அதில ஒரு குடும்பத்தில ஒரு தாய் போனதிலிருந்து பிள்ளைகளின் செலவுக்காகவும், கல்விக் காகவும் வீட்டைப் பெருப்பிப்பதற்காகவும் பணம் அனுப்பிக் காண்டிருந்தா…. ஆனா என்ன நடந்தது? இங்க கணவன் ஒன்னையும் கவனிக்காம…. அனுப்பின பணத்த எல்லாம் கண்டமாதிரி நாசமாக்கி…. சே… அதே நேரத்திலே இன்னொரு ஏழைக் குடும்பத்துப் பெண் அனுப்பின பணத்தால குடும்பத் தரம் உயர்ந்திருக்கு…. 

ஒரேயொரு பெண் ‘ஹவுஸ் மேட்டாக’ சில வருஷங்கள் இருந்து வந்து… பணத்திமிரால் புருஷன விவாகரத்து செய்திருக்கா… 

“சரி… சரி… யாசீன்… அதெல்லாம் தனிப்பட்ட முறையில் குடும்பப் பொறுப்பில்லாத தன்மையைத்தான் எடுத்துக் காட் டுது. இருப்பினும் முதல்ல எல்லா கிராமங்களும் தன்னிறைவு உள்ள கிராமங்களாக மாறனும், இப்பதான் சிங்கள முஸ்லிம் கிராமங்களில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டிய காலத்தின் தவிர்க்க முடியாத தேவை உணரப்படுகிறது. இன்று வரைக்கும் நம்மட ஆக்கள் அறியாமையில இருந்தது ஒரு புறமிருக்க வாழ்க் கைக்கு அல்லது நடைமுறைக்கு ஒத்துவராததத்துவங்கள பேசியே காலத்த வீணாக்கியிருக்கிறாங்க, இப்ப அதல்ல என் கவலை… நீ சொன்னியே நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்கிறோம் எண்டு….. அது வேறொரு பக்கத்திலயும் சரி” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான் ஹலீம். 

“அதென்னது….?” 

“அது எங்கட கிராமத்துக்கு இன்னும் வரல்ல… இப்ப எமது மத அனுஷ்டானங்களில், நாடளாவியரீதியில் பல்வேறுபட்ட பிரிவினைகள் முளைத்து, மதப்பூசல்களாய்க் கிளம்பி அடிபிடி படுவது போல்…. எமது கிராமங்களிலும் புகுந்து விளையாடி. எமது கிராமவாசிகளை சின்னாபின்னப் படுத்தாம்…. நாம் கவனமா பாத்துக் கொள்ள வேணும். அதில தான் என் கவனம். அது தவிர நம்மட பெண்டுகள் வெளிநாடுகளுக்குப் போகி றார்கள் என்று நாம ஆதங்கப்பட்டு தடுத்து நிறுத்த முயல்வது முடியாத காரியம். எமது கிராமத்தில் வாழும் சகல விவசாயி களுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிலப்பரப்புக் கிடைத்து விடுமானால், நிரந்தரக் குளங்களைக் கட்ட நடவ டிக்கை எடுத்து விட்டா வருவாய் பெருகும்… பெண்கள் ‘ஹவுஸ் மேட்’ வேலைதேடி வெளிநாடுகளுக்கு அலைய வேண்டிய தேவை ஏற்படாதுதானே. 

“அதுவும் நியாயம்தான். நீ சொன்ன மத அனுஷ்டான விஷயங்கள நானும் கேள்விப்பட்டன்… எதற்கும் நாம பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட நிர்வாக விவகாரங்களில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ்…. இவற்றைத் தான் நாங்கள் பின்பற்ற வேண்டும். புதிய புதிய கொள்கைகளால் நாங்கள் வழி தவறிவிடக்கூடாது. அடிக்கடி பள்ளி மௌலவியும் ‘குதுபாப்’ பிரசங்கங்களில் இவற்றை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேணும்…..” 

அன்று ஊர் திரும்பிய ஹலீம்தீனும் யாசீனும் இதர அங்கத்தவ நண்பர்களை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து விடயங் களைப் பகிர்ந்து கலந்துரையாடினர். 

‘சகல கிராமங்களையும் ஒன்றிணைக்க முன், பாதைகளை சீர மைத்து பஸ் போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இதுவே எங்கள் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும் என்றே சகலரும் வலியுறுத்தினர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மார்க்கம் சம்பந்தப்பட்ட பேச்சு இடம்பெற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேறியது. 

– தொடரும்…

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *