வெப்பமும் குளிர்ச்சியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 46 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காலையில் கதிரவன் தோன்றினான். தன் ஒளியைப் பரப்பி உலகம் முழுவதையும் விளக்கம் செய்தான். கடல் நீர்ப்பரப்பின் மீதும் அவன் கதிர்கள் விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும் என்று கதிரவன் தன் ஒளியை மேன்மேலும் அதன் மீது பாய்ச்சினான். 

வெப்பத்தைத் தாங்க முடியாமல் கடல் முகம் சுருங்கியது. அதன் அலைகள் தளர்ச்சியடைந்து சிறுத்தன. 

தான் அன்போடு கதிர் பாய்ச்சிக் கடலை அழகுபடுத்த முயலும்போது அது ஏன் முகத்தைச் சுருக்கிக் கொள்கிறது என்று கதிரவனுக்குப் புரிய வில்லை. 

“கடலே, என்ன கோபம்?” என்று கேட்டான் 

கடல் பதில் பேசவில்லை. 

பதில் சொல்லக் கூட விருப்பமில்லாத அளவு தன் மீது கடல் கோபமாய் இருக்கக் காரணம் என்ன என்று சிந்தித்தான் கதிரவன். 

அப்போது காற்றரசன் அந்தப் பக்கமாக வந்தான். 

கதிரவன் சிந்தனையைக் கண்டு காரணம் கேட்டான். கடலின் போக்கைப்பற்றிக் கதிரவன் கூறினான். அதைக் கேட்டபின் காற்றரசன் சொன்ன செய்தி கதிரவனை மேலும் துன்பப்படச் செய்தது. 

“நீ வரும்போதுதான் கடல் தன் அலைகளைச் சுருக்கிக் கொள்கிறது. இரவில் நிலவரசன் வரும் போது எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுகிறது. தெரியுமா? பொங்கிப் பொங்கி அலைகளை உயரச் செலுத்தி ஆனந்தம் கொள்ளுகிறது உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான் அது விரும்புகிறது” என்று காற்றரசன் கூறினான். 

மறுநாள் நிலவரசன் பகலிலேயே வெளியில் வந்தான். கடல், அலைகளைப் பெரிதாக்கிக் கொண்டது, கதிரவன் நிலாவரசனை நேருக்கு நேரே பார்த்தான். “நிலாத்தம்பி, இந்தக் கடல் உன்னைக் கண்டு பொங்குவதும் என்னைக் கண்டு பொங்காததும் ஏன் ?” என்று கதிரவன் கேட்டான். 

“அண்ணா, என் கதிர்கள் குளிர்ச்சியா யிருப்பதால் கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. அதனால் ஆனந்தமாகப் பொங்குகிறது. உன் கதிர்கள் வெப்பமாக இருப்பதால் சூடு தாங்காமல் சுருங்குகிறது” என்றான் நிலவரசன். காரணமறிந்த கதிரவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. 

கருத்துரை:- இனிய சொற்களே மகிழ்ச்சியைத் தரும். கடுஞ் சொற்கள் மகிழ்ச்சியைத் தரா. 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *