(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர இரவில் இப்படி ஒரு துணிகரச் செயலை செய்ய நீ முயல்வதால் மாபெரும் வீரன் நீ எனவே எண்ண வேண்டி உள்ளது. ஆனால் மாவீரனும் தன் தவறான செயலால் தன் மதிப்பை யும் இழக்க நேரிடுகிறது. இதனை விளக்க வீரசேனன் என்பவனைப் பற்றிக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.

விஜயபுர நாட்டில் கபிலபுரம் என்ற கிராமத்தில் வீரசேனன் என்ற வாலிபன் இருந்தான். அவன் அனாதை. சிறு வயதில் ஊர் தயவில் வாழ்ந்தான். வாலிபனானதும் அவன் தன் உழைப்பைக் கொண்டே வாழ்ந்து வரலானான்.
வீரசேனன் மிகவும் துணிச்சல் கொண்டவன். உடல் பலமும் உடையவன். ஒரே அடியில் பத்து பேர்களை அடித்து வீழ்த்தி விடுவான். ஒருமுறை அவனது ஊரருகே இருந்த காட்டிலிருந்து ஒரு புலி வந்து அந்த ஊரில் பலரைக் கொன்று காட்டிற்குள் இழுத்துப் போனது.
மன்னனிடம் அந்தப் புலி பற்றிக் கூறி அதனைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவ்வூரார் நினைத்தார்கள். ஒரு நாள் மத்தியான வேளையில் வீரசேனன் காட்டிற்குள் போனான். அப்போது ஒரு பெண் வேகமாக ஓடி வருவதை அவன் கண்டான். அவள் பின்னால் ஒரு புலி வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த வீரசேனன் ஓடி வரும் புலியைத் தன் கோடாலியால் ஓங்கி அடித்தான். புலி கோபம் கொண்டு பெண்ணை விட்டுவிட்டு வீரசேனன் மீது பாய்ந்தது. அதற்குள் வீரசேனன் மேலும் இரண்டு அடிகளைக் கொடுத்துப் புலியை அடித்து வீழ்த்தினான். புலி இறந்து வீழ்ந்தது. புலி தாக்கிக் கீறிய காயங்களுடன் ரத்தம் சிந்த வீரசேனன் ஊர் திரும்பினான். ஊரார் அவனைப் பாராட்டி, தக்க சிகிச்சையும் அளித்து குணப்படுத்தினார்கள்.
வீரசேனனின் பலத்தையும் துணிச்சலையும் கேள்விப்பட்ட அந்நாட்டு மன்னன் அவனை வர வழைத்து தன் தர்பாரின் காவலாளியாக நியமித்தான். சிலநாட்களுக்குப் பின் சமரபுரி மன்னன் விஜயபுரத்தின் மீது திடீரெனப் படை எடுத்து வந்தான். போர்க்களத்தில் இருதரப்பினரிடையே பயங்கரத் தாக்குதல் நடந்தது. ஓரிடத்தில் மன்னர்கள் இருவரும் வாட் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வீரன் வீசிய ஈட்டி விஜயபுரி மன்னனைத் தாக்கவே அவன் கீழே விழுந்து விட்டான். சமரபுரி மன்னன் தன் வாளை எடுத்து விஜயபுரி மன்னனின் தலையை வெட்டப் போனான்.

இச்சமயத்தில் வீரசேனன் மின்னல் போலப் பாயந்து ஒரே அடியில் சமரபுர மன்னனின் வாளை வெகுதூரத்தில் போய் விழச் செய்தான். தன் கத்தியை அவனது மார்பிற்கு மேல் வைத்து “மன்னா! தோல்வியை ஒப்புக் கொள்” என்றான்.
சமரபுரி மன்னன் தோற்றதைக் கண்ட அவனது படை பின் வாங்கி ஓடியது. விஜயபுரி மன்னன் அவனைச் சிறைப்படுத்தினான். போரும் முடிவுற்றது. போர்க்கலையைக் கற்றிராத வீரசேனன் போர்களத்தில் துணிச்சலுடன் சமரபுரி மன்னனைத் தாக்கி வீழ்த்தி, தனக்கு வெற்றி கிடைக் கச் செய்ததற்கு விஜயபுர மன்னன் அவனை வெகுவாகப் பாராட்டினான். அவனுக்கு விலையுயர்ந்த பல பொருள்களைப் பரிசாகவும் அளித்தான்.
ஆனால் வீரசேனன் அவற்றை ஏற்காமல் “அரசே! ஒரு வீரனின் கடமை தன் உயிரைக் கொடுத்தாவது போரில் தன் மன்னனைக் காப்பதே. அதைத்தான் நான் செய்தேன்” என்றான். விஜயபுர மன்னன் அவனது ராஜவிசுவாசத் தைப் பாராட்டினான். அவன் முறைப்படி போர்கலைகளைக் கற்க ஏற்பாடு செய்தான். அவன் அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றதும் மன்னன் அவனைத் தன் மெய்க் காவலாளியாக நியமித்தான்.
அந்நாட்டில் இரண்டு ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அதனால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது நவமணி என்ற சோதிடன் மன்னனைக் கண்டு “அரசே! இந் நாட்டின் தெற்கே பழைமைமிக்க ஒரு காளிகோயில் உள்ளது. அதில் ஒரு சாசனம் உள்ளது. அதன்படி யாராவது ஒருவன் எதையும் வேண்டித் தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாரானால் அவனது விருப்பம் உடனே நிறைவேறும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அப்படி உயிர்விட முன் வருபவன் பலசாலியாகவும் துணிச்சல்மிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனைத் தாங்கள் பயன்படுத்த ஏதாவது வழி செய்து பாருங்கள்” என்றான்.
சோதிடன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த வீரசேனன் “அரசே! நான் என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் போய் அந்தக் காளிதேவியிடம் நம் நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்றான். அவன் மன்னனிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தக் காளி கோவிலை அடைந்தான்.

அந்த ஆலயத்தில் காளிதேவியின் பக்கம் ஒரு திரிசூலம் இருந்தது. வீரசேனன் காளிதேவியை விழுந்து வணங்கிவிட்டு எழுந் தான். “உலகைக் காக்கும் நாயகியே! என் நாட்டில் நல்ல மழை பெய்யச் செய்து என் நாட்டின் பஞ்சத்தைப் போக்கி செழிப்புறச் செய்” என்று கூறி அந்தத் திரிசூலத்தை எடுத்துத் தன் மார்பில் பாய்ச்சிக் கொள்ளப் போனான். அப்போது விக்கிரத்திலிருந்து “வீரசேனா! நில். உன் போன்ற தியாக சீலனை நான் பலி கொள்ள மாட்டேன். உன் விருப்பம் நிறை வேறும்” என்ற குரல் ஒலித்தது. மறுநிமிடம் வீரசேனனின் கையில் இருந்த திரிசூலம் மின்னல் போலக் கிளம்பி ஆகாயத்தில் சென்று மறைந்தது. மறு நிமிடமே நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது.
வீரசேனன் தலைநகருக்குத் திரும்பி வந்து காளி கோவிலில் நடந்ததைக் கூறினான். மன்னனும் வீரசேனனைப் பாராட்டி “உன்னால் நம் நாட்டில் பல உயிர்கள் பிழைத்தன. இதனால் மகிழ்ச்சியுற்று நான் இந்நாட்டின் எந்த ஒரு பகுதியையும் உனக்கு அளித்து உன்னை என் சிற்றரசனாக்கிக் கொள்கிறேன். எப்பகுதி வேண்டும் என்று சொல்” எனக் கேட்டான்.
அதற்கு வீரசேனன் “அரசே! நான் உங்கள் ஊழியனாகத்தான் இந்தப் பணியைச் செய்தேன். எனக்கு நாடும் வேண்டாம். சிற்றரசுப் பதவியும் வேண்டாம். நான் உங்கள் பணியாளனாக இப்படியே இருந்து விடுகிறேன்” என்றான்.
இது கேட்டு மன்னன் மகிழ்ந்ததோடு தன் பட்டத்து ராணியுடன் கலந்து யோசித்து அவனது அந்தரங்கத் தோழியை வீரசேனனுக்குக் கல்யாணம் செய்து வைத்தான். திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளாயின. அப்போது வீரசேனன் இரு குழந்தைகளின் தந்தையாகி விட்டான்.
இச்சமயத்தில் அந்நாட்டிற்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. தலை நகருக்கு அருகேயுள்ள காட்டிற்கு ஜடாதரன் என்ற ராட்சஸன் எங் கிருந்தோ வந்து சேர்ந்தான். அவன் தன் இஷ்டப்படி எங்கும் போய் மனிதர்களைப் பிடித்துக் கொன்று விழுங்கலானான். பயங்கரமான அவன் ஆயிரம் யானைகள் பலம் கொண்டவன் என்பதும் மன்னனுக் குத் தெரிந்தது.

மன்னன் அந்த ராட்சஸனைப் பற்றி தர்பாரில் கூறி “அந்த ராட் சஸனை அடக்க நம் படைகளை அனுப்பலாம். ஆனால் இதில் நம் பல வீரர்களின் உயிர்களை இழக்க வேண்டிவரும். எனவே அந்த ராட் சஸனிடம் ஒருவனைத் தூது அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். ராட்சஸன் கண்டபடி மனிதர்களைப் பிடித்துத் தின்னாமல் இருந்தால் அவனுக்கு தினமும் அவன் சாப்பிடும் அளவிற்கு மாமிசத்தைப் பக்குவப்படுத்தி நான் அனுப்பத்தயார் என்பதை அந்த தூதன் அவனிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் நான் அனுப்பும் தூதனையே ராட்சஸன் கொன்று தின்றாலும் தின்று விடுவான். இந்த நிலையில் ராட்சஸனிடம் தூது செல்ல யாராவது முன் வருகிறீர்களா?” என்று கேட்டான்.
தர்பாரில் இருந்தவர்கள் எல்லோரும் வீரசேனனைப் பார்த்தார்கள். அவர்கள் விருப்பத்தைக் கண்ட மன்னன் வீரசேனனிடம் “வீரசேனா! நீ இதற்கு முன் எவ்வளவோ தீர வீரச் செயல்களைத் துணிச்சலுடன் செய்திருக்கிறாய். நீ உன் உயிரைக் கூட லட்சியம் செய்தது இல்லை. இம்முறையும் நீ இந்தச் செயலைச் செய்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு வீரசேனன் “அரசே! என்னை மன்னியுங்கள், நான் அந்த ராட்சஸனிடம் தூது செல்ல முடியாது” என்றான்.
வேதாளம் இக்கதையைக் கூறி “மன்னனே! வீரசேனன் போர்கலையில் தேர்ச்சி பெறாதிருந்தும் போர்க் களத்தில் துணிச்சலுடன் சமரபுரி மன்னனைத் தாக்கி வீழ்த்தியவன் நாட்டை பஞ்சத்திலிருந்து காக்கக் காளிதேவிக்குத் தன்னையே பலி கொடுத்துக் கொள்ளவும் தயாராக இருந்தவன். இப்படிப்பட்ட துணிச்சல் கொண்ட மாவீரனான வீரசேனன் ராட்சஸனிடம் தூது செல்ல மறுத்தது விசித்திரமாக இல்லையா? இது அவனது அறிவற்ற செயலா? இக்கேள்விகளுக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது. விக்கிரமனும் ஒரு மனிதன் வாழும் முறை அவனது மற்ற செயல்களோடு சம்மந்தப்பட்டது. வீரசேனன் மணமாகமல் தனிக்கட்டையாக இருந்த போது எந்தச் செயலையும் துணிச்சலுடன் செய்தான். அப்போது குடும்பம் என்ற கவலையோ அதற்கான பொறுப்போ அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் இந்தத் தடவை அவன் குடும்பத் தலைவன். தன் மனைவி, மக்களைப் பற்றிக் கவலைப்பட்டு அவர்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவன். இக்காரணத் தால் தான் ராட்சஸனிடம் தூது செல்ல அவன் இசையவில்லை. இது அறிவற்ற செயல் அல்ல. இதனால் அவன் மதிப்பு குறையவில்லை. அவன் எடுத்த இந்த முடிவு புத்திசாலித்தனமானதே” என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பி மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.
– மார்ச் 1991