(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
செய்யப்படும் செயல்கள் அறம், பொருள், புகழ் முதலியவற்றைத் தரவல்ல தூய்மை பெற்றிருத்தல்.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்தவன் கோப்பெருஞ் சோழன். இவன் தன் பிள்ளைகள் இருவர்களுடன் பகைமை கொண்டு போர்செய்தற்கு எழுந்தான். அதுசமயம் புல்லாற் றூரில் வாழ்ந்த எயிற்றியனார் என்பவர் வந்து, ”நீ ஒருவேளை வெற்றி பெற்றால் அரசை எவர்க்கு அளிப்பாய்? இவர்கள் தானே அடைவார்கள். ஒரு வேளை தோற்றால் பிற அரசர்கள் உன்னை இகழ் வார்கள். பின் அடையும் உரிமையுள்ள உன் பிள்ளைகளிடமா? நீ சண்டைக்கு எழுவது” என்றார். இதைக் கேட்டு ! தான் செய்த தவறை உணர்ந்து, தன் பிள்ளைகளிடம் அரசை விட்டுப் பின் மேலும் இவ்வித துன்பத்தைச் செய்தோமே என்று நினைத்து வருந்தாமல் இருக்க வடக்கிருந்து தன் உயிரை விட்டான்.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (49)
எற்று என்று = யான் செய்தது எப்படிப் பட்டதென்று
இரங்குவ = பின் தானே வருந்தும் தொழில்களை
செய்யற்க = ஒருகாலும் செய்யாது ஒழிக.
செய்வானேல் = ஒருகால் மயங்கி அவைகளைச் செய்வானாயின்
மற்று = பின்பு
அன்ன = அவ்வாறு வருந்துதலே
செய்யாமை நன்று = செய்யாது ஒழிதல் நல்லது.
கருத்து: தான் செய்தது தவறு என்று நினைத் துப் பின் வருந்தும்படியான தொழில்களை ஒருகாலும் செய்தல் கூடாது. செய்தால் அதைப்பற்றியே நினைந்து வருந்திக் காலங்கழித்தல் கூடாது.
கேள்வி : வருந்தும்படியான தொழிலைச் செய்தவன் எதைச் செய்யாமை நல்லதாகும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.