விடாமுயற்சியும் மன உறுதியும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,917 
 

அழகான மலைகள் சூழ்ந்த கிராமம். மலைகளின் ஊடாக சலசலவென பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் இரண்டு குருவிகள் ஒரு மரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

ஒருசமயம் பெண் குருவி மூன்று முட்டைகள் இட்டது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் எப்போது வெளியே வரும் என எண்ணி குருவிகள் இரண்டும் ஆவலாகக் காத்திருந்தன.

விடாமுயற்சியும் மன உறுதியும்...ஒருநாள் ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. ஆற்றில் அலை உயர்ந்து கொண்டே இருந்தது. காற்றும் வேகமாக வீசிக் கொண்டிருந்தது.

அப்போது ஓர் அலை மேலெழுந்து குருவிகளின் கூட்டையும் அதோடு சேர்த்து உள்ளிருந்த முட்டைகளையும் ஆற்றுக்குள் தூக்கிப் போட்டது. ஆற்று வெள்ளத்தில் முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இதை சற்றும் எதிர்பாராத குருவிகள் இரண்டும் மனம் வருந்து அலறின. ஆற்று தேவதையை நோக்கிப் பிரார்த்தனை செய்தன. எனினும் ஆற்று தேவதை அவைகளின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்ததாகத் தெரியவில்லை!

மனம் வருந்திய குருவிகள் தங்களது சிறிய அலகுகளால் ஆற்று நீரை எடுத்துக் கரையில் கொட்டிக் கொண்டிருந்தன. இப்படியே நாட்கள் பல சென்றன.

ஒருநாள் அவ்வழியே வந்த நாரதர், “குருவிகளே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

குருவிகள் நடந்ததை விளக்கிக் கூறின.

குருவிகள் கூறிய கதையைக் கேட்ட நாரதர் சிரித்துக் கொண்டே, “நீங்கள் செய்யும் இந்த முயற்சி வீண்! ஒருநாளும் ஆற்று நீர் முழுவதையும் உங்களால் எடுத்துவிட முடியாது!’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் கூறியதை எண்ணி மனம் வருந்தாமல், தாங்கள் செய்து கொண்டிருந்த பணியைத் தொடர்ந்து செய்தன அந்தக் குருவிகள்.

எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்தாலும் ஆற்றுநீர் குறைந்தபாடில்லை.

திடீரென்று ஒருநாள் ஆற்றின் நடுவே ஒரு அழகிய தேவதை தோன்றினார்.

தேவதையின் முகத்தில் புன்னகை! தேவதை பரிவுடன் குருவிகளிடம், “குருவிகளே, நான்தான் ஆற்று தேவதை! இதோ பெற்றுக் கொள்ளுங்கள் உங்களது முட்டைகளையும் கூட்டையும். நான் இதை உங்களிடம் ஒப்படைத்ததற்குக் காரணம், நாரதர் உங்களை எள்ளி நகையாடினாலும், நீங்கள் விடாமுயற்சியுடனும் மன உறுதியுடனும் உங்களது பணியைத் தொடர்ந்து செய்தததுதான்’ என்று கூறிவிட்டு முட்டைகளையும் கூட்டையும் ஒப்படைத்துவிட்டு மறைந்து போனார்.

இது போலத்தான்… கல்வியெனும் கரையினைக் கடக்க விடாமுயற்சியும் மன உறுதியும் தேவை!

(இது எங்கள் பள்ளி ஆசிரியர் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையின்போது
எங்களுக்குச் சொன்ன கதை)

– பூர்ணிமா சண்முகநாதன் (பெப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *