வல்லவன்பட்டினத்து மல்லன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 26, 2024
பார்வையிட்டோர்: 251 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வல்லவன்பட்டினம் என்ற ஊரில் திண்ணன் என்றொரு பலவான் இருந்தான். திண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே அந்த வட்டாரத்தில் உள்ள தீயவர்கள் அஞ்சுவார்கள். 

திண்ணன் நல்ல உடற்கட்டு உடையவன். நாள்தோறும் விடாமல் செய்து வரும் பயிற்சினால் அவன் தன் உடல் வலிவைக் காப்பாற்றி வந்தான். வீரர்களுக்கு உரிய பல அருங் கலைகளில் அவன் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான். மற்போரிலும், சிலம்பம் ஆடுவதிலும் அவன் மிகுந்த புகழ் பெற்றிருந்தான். 

திண்ணன் இருந்ததால் வல்லவன்பட்டினத் தில் திருட்டு பயமே அற்றுப் போயிருந்தது. அவன் கைப்பிடியில் சிக்கி உயிரை விட்டு விடக் கூடா தென்று திருடர்கள் அந்தப் பக்கமே தலை காட்டா மல் இருந்தார்கள். 

திண்ணனிடம் ஒருநாள் ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். அவன் தன் பெயர் பஞ்சப்பன் என்று கூறினான். இந்த பஞ்சப்பன் என்ற மனிதன் பார்ப்பதற்கே ஒடிந்து போன முருங்கை போல் தோற்றமளித்தான். ஊதினால் சாய்ந்து விடும் புல்லரும்பு போல் இருந்தான். எலும்பே வடிவமாக இருந்த அந்த மனிதன், திண்ணனிடம் வந்து தன்னை வைத்துக் காப்பாற்றும்படி வேண்டினான் 

திண்ணனுக்குப் பஞ்சப்பனைப் பார்த்தபோது இரக்கமாக இருந்தது. தான் காப்பாற்றா விட்டால், அவன் இறந்து போக வேண்டியதுதான் என்று எண்ணினான். ஆகவே, அவனைத் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான். 

பஞ்சப்பனுக்காகத் திண்ணன் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கவில்லை. 

ஓர் இட்டிலிக்கு மேல் அவனால் சாப்பிட முடியாது. இரண்டு கவளம் சோற்றுக்கு மேல் அவன் தொண்டையில் இறங்காது. 

உணவு செல்லாததால் உடலிலும் வலுவில்லா மல் இருந்தான் பஞ்சப்பன். பிறவியிலேயே அவனுக்கு இந்த மாதிரிக் கோளாறு இருந்ததால், பின்னால் அவனால் தன் உடலை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 

பஞ்சப்பன் வலிமை சிறிதும் அற்றவனாக இருந்தும், அவன் வந்த பிறகு, திண்ணனின் புகழ் பெருகியது. புகழ் காரணமாக அவனுக்குச் செல்வமும் குவிந்தது. எல்லாம் பஞ்சப்பன் வந்த நல்ல நேரத்தின் பலன்தான் என்று திண்ணன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான். 

திண்ணனுடைய புகழ் பெருகுவதற்குப் பஞ்சப்பனும் ஒரு வகையில் ஓரளவு உதவியாயிருந்தான் என்று சொல்லலாம். ஓங்கி வளர்ந்த திண்ணனுக்குப் பக்கத்தில் பஞ்சப்பன் நிற்கும் போது, திண்ணனுடைய உடலின் தோற்றம் மிகுந்த எடுப்பாகத் தோன்றியது வீமசேனன் மாதிரி அவன் காட்சி அளித்தான். 

திண்ணன் பின்னால் வரும்போது, பஞ்சப்பன் சிறிது தூரம் முன்னால் கட்டியங் கூறிக் கொண்டு போவான். 

“மாவீரர் திண்ணன் வருகிறார்! மல்லிலே வெல்லும் மாவீரர் வருகிறார் ! யானையை அடக்கும் ஐயன்! சிங்கத்தை வெல்லும் சீரியர்! புலியைப் புறங்காணச் செய்யும் போர்வீரர்! மாவீரர் திண்ணன் வருகிறார்!” என்று உரத்த குரலில் அவன் கட்டியங் கூறிக் கொண்டு செல்வதைப் பார்த்தாலே கலங்க வேண்டும். 

பஞ்சப்பன் கட்டியங் கூறுவதோடு மட்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை. திண்ண னுடன் போட்டியிட வரும் வீரர்களை ஆராய் வதிலும், அவர்கள் கையாளும் சூழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதிலும் திறமை மிக்கவனாக இருந் தான். அவனால் திண்ணன் பலமுறை முன் னெச்சரிக்கை யடைந்து போட்டிகளிலே வெற்றி பெற்றிருக்கிறான். 

ஒரு முறை திண்ணனோடு மல் புரிய வந்த ஒரு வீரன் தன் கையில் மிளகாய்ப் பொடியைத் தடவிக் கொண்டு வந்திருந்தான். போரிட்டுக் கொண் டிருக்கும்போதே, தன் கையைத் திண்ணனுடைய கண்ணில் வைத்து அழுத்தித் தேய்த்தால், கண் எரிச்சல் தாங்க முடியாமல் திண்ணன் திணறுவான்; அப்போது, தான் வெற்றியடைந்து விடலாம் என்று அந்தப் போர் வீரன் எண்ணியிருந்தான். ஆனால், பஞ்சப்பனுடைய மூக்கில் அந்த மிளகாய்ப் பொடியின் வாசம் பாய்ந்து விட்டது. அவன் மல் புரிய வந்த வீரனைக் கையை நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டு வரும்படி கட்டளையிட்டான். அன்று போரில் திண்ணனே வென்றான். 

மற்றொரு முறை போர் புரிய வந்த வீரன் ஒருவன், தன் காற் பெருவிரல் நகங்களை ஊசி போல் கூராகச் சீவி விட்டுக் கொண்டு வந்திருந் தான். மல்லுக்கட்டி நிற்கும்போது பெருவிரலால் திண்ணனைக் குத்தி வருந்தச் செய்து எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பது அவன் திட்டம். பஞ்சப்பனின் கூரிய கண்கள் அந்தக் கூரான நகங்களைக் கண்டுபிடித்து விட்டன. அவன் உடனே ஒரு சிறு பேனாக் கத்தியை எடுத்து வந்து அந்தக் கூரான நகங்களைச் சீவியெறிந்துவிட்டான். அத்தோடு வந்த வீரனின் திட்டம் தவிடு பொடி யாகி விட்டது. அவன் மல்லுக்கே நில்லாமல் ஓடி விட்டான். 

இப்படிப் பலமுறை திண்ணன் வெற்றி பெறப் பஞ்சப்பனுடைய அறிவு பயன்பட்டிருக்கிறது. ஆனால் திண்ணன் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருநாள், பஞ்சப்பன் ஏதோ தவறு செய்து விட்டான். அந்தத் தவறு திண்ணனுக்குப் பெரிதாகப் பட்டது. அதனால் கோபமடைந்த திண்ணன், பஞ்சப்பனைத் தன் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான். 

பஞ்சப்பனும் திண்ணனுடைய கோபத்தைப் பொறுக்க முடியாமல் ஓடி விட்டான். அவன் போனது பற்றித் திண்ணன் சிறிதுகூடக் கவலைப் படவில்லை. தனக்கு ஒரு மெய்க் காப்பாளன் போலவும், சிறந்த அமைச்சன் போலவும் விளங்கிய ஒருவனை விரட்டி விட்டோமே என்று அவன் சிறிதுகூட எண்ணிப் பார்க்கவில்லை. 

பஞ்சப்பன் போன பிறகு, அயலூரிலிருந்து வல்லவன்பட்டினத்துக்கு ஒரு பயில்வான் வந்திருந் தான். அவன் தன்னுடன் போட்டிக்கு வரத் திண்ணன் ஆயத்தமா? என்று சவால் விட்டழைத் தான். எந்த சவாலையும் திண்ணன் மறுத்துத் தள்ளியதில்லை. 

மற்போர் நடைபெற ஏற்பாடாயிற்று. ஊர்ப் பொதுவெளியில் போட்டி நடந்தது. நூற்றுக் கணக் காண மக்கள் போட்டி காணக் குழுமியிருந்தார்கள். 

அயலூர்ப் பயில்வானும், திண்ணனும் அந்த மல்லரங்கில் வந்து நின்றது இரண்டு பெரிய யானைகள் ஒன்றோடொன்று மோதிச் சண்டையிட முனைந்து நிற்பது போல் இருந்தது. 

இரண்டு பேரும் தோள் தட்டித் தொடை தட்டி ஆர்ப்பரித்துப் பாய்ந்தனர். ஒருவரை யொருவர் கையினால் பிடித்துக் கையை முறுக்கினர். தோளிலே தோளை யழுத்திச் சாய்க்க முயன்றனர். கட்டிக் கொண்டு புரண்டனர். 

கட்டி புரளத் தொடங்கியவுடன் இடுப்பில் பல ஊசிகள் குத்துவதைப் போல் உணர்ந்தான் திண்ணன். வலி தாளாமல் பிடி நழுவியவுடன் திண்ணனைக் கீழே தள்ளிச் சாய்த்து விட்டான் அந்தப் பயில்வான். தவறான ஆட்டம் என்று சொல்லத் திண்ணன் வாய் திறக்கு முன் அந்தப் பயில்வான் தன் கையைத் திண்ணனுடைய வாய்க்குள் திணித்து அவனைப் பேச விடாமல் செய்து விட்டான். 

திண்ணன் கீழே சாய்ந்துவிட்டதை – அவ்வளவு விரைவில் சாய்ந்து விட்டதைக் கண்டு உள்ளூர் மக்கள் வந்திருந்தனர். நல்லதொரு பந்தயத்தைப் பார்க்க வந்த பலர் சப்பென்று போன இந்தப் போட்டியைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். தீயவர்கள் சிலரோ, திண்ணன் சாய்ந்ததைப் பெருவெற்றியாகக் கருதிச் சீட்டியடித்துக் கூச்ச லிட்டு ஆரவாரம் செய்தனர். 

அயலூர்ப் பயில்வானே வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவனுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. 

திண்ணன் என்றுமில்லாத அவமானத்துடனும், குன்றிய மனத்துடனும் வீட்டுக்குத் திரும்பினான். 

திண்ணனை எளிதாக வெல்ல அந்த அயலூர்ப் பயில்வான் செய்த சூழ்ச்சி இதுதான். தன் இடைத் துணிக்குப் பின்னால் பல சிறு ஊசிகளைப் பொருத்தி யிருந்தான். உடலோடு உடல் சேர்த்து அழுத்தும் போது எதிரியின் உடலில் அவை குத்துமாறு அமைக்கப்பட்டிருந்தன ஊசிகள். இந்தச் சூழ்ச் சியை யாரும் கண்டுபிடிக்கவில்லை. 

இடையில், சூழ்ச்சிக்கு ஆளான திண்ணனும் அப்போதே சொல்ல முடியவில்லை. அப்போதே சொல்லியிருந்தால், அந்த அயலூர்ப் பயில்வான் திண்ணனிடம் தப்பினாலும் ஊர் மக்களிடம் தப்பிப் போயிருக்க முடியாது. 

வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்ட பின்னர், ஏற் பட்ட ஆரவாரத்தில் திண்ணன் தன் சொல் ஏறாது என்று கண்டு கொண்டான். பேசாமல் வீடு திரும்புவதைத் தவிர, வேறு செய்யத் தக்கது ஒன்றுமில்லை. 

வீடு திரும்பும்போது, தன்னுடன் பஞ்சப்பன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று திண்ணன் எண்ணினான். இம்மாதிரியான சூழ்ச்சிகளைப் பஞ்சப்பன் எளிதாகக் கண்டுபிடித்து விடும் திறமையுள்ளவன். அவனைக் கோபித்து வீட்டை விட்டுத் துரத்தியது தன் தவறு என்று உணர்ந்தான் திண்ணன். அன்றே அவனைத் தேடத் தொடங்கினான். 

கருத்துரை :- எவ்வளவு வலிமையுள்ளவர்களானாலும், துணையில்லாமல் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய முடியாது. 

– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *