வயிறும் உணவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 177 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஓர் ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் பரம்பரைப் பிச்சைக்காரன். அதாவது அவன் தகப்பனும் பிச்சைக்காரன், பாட்டனும் பிச்சைக் காரன். அவர்கள் வழியில் வந்த அவனும் பிச்சைக்காரன். 

பொதுவாக உலகத்தில் வேலை செய்யச் சோம்பல் கொண்டவர்கள் பிச்சைக்காரர்களாக மாறுவார்கள். உழைக்காமல் பிழைக்கலாம் என்று பலர் பிச்சையெடுப்பார்கள். பரம்பரைப் பிச்சைக் காரனான அவனுக்கு வீடு வீடாகப் படியேறிப் பிச்சையெடுப்பதே தொல்லையாக இருந்தது. 

ஒரு நாள், பிச்சையெடுத்ததை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு விட்டுப் பிள்ளையார் கோயிலில் படுத்துத் தூங்கி னால் என்ன இன்பமாக இருக்கும் என்று அவன் கற்பனை பண்ணிப் பார்த்தான். ஆனால், வீடுகளில் பிச்சை போடுகிறார்களே, அவை இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்திருப்பதில்லை. 

பழைய கஞ்சியும் சுண்டற் குழம்பும் எத்தனை நாளைக்குத்தான் நன்றாக இருக்கும். சில வீடுகளில் அரிசி போடுவார்கள். அதை அவன் வாங்குவதே யில்லை. அடுப்பு மூட்டி சோறு வடிப்பதென்றால் அது ஒரு பெரிய வேலையென்று அந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் அரிசி வாங்குவதில்லை. கஞ்சி, குழம்பே போதுமென்றிருப்பான். 

ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரர் அன்னதானம் செய்தார். அவர் தெய்வத்துக்கு நேர்ந்து கொண்ட படி நூறு பேருக்கு அன்னதானம் செய்தார். அந்த நூறு பேரில் இந்தப் பிச்சைக்காரனும் ஒருவனாகப் போய்ச் சேர்ந்தான். 

அன்னதானம் என்றால் வெறும் சோற்று உருண்டையல்ல; நல்ல சாப்பாடு – வடை, பாயசத் தோடு கூடிய அறுசுவையுண்டி! பிச்சைக்காரன் அதுபோல் அவன் ஆயுளில் சாப்பிட்டதேயில்லை. 

அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இது போல் நல்ல சாப்பாடு இனிமேல் கிடைக்காது. இரண்டு மூன்று நாள் சாப்பாட்டை ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்த எண்ணத்தோடு மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டான் அவன். 

சாப்பிட்டபின் எழுந்திருக்கக் கூட முடிய வில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். கை கழுவி விட்டுப் பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தான். வழியில் தொண்டையை என்னவோ செய்வது போலிருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவுதான். சாப்பிட்டதெல்லாம் அப்படியே வாந்தியெடுத்தான். 

“என்ன வயிறு இது !” என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டு சென்றான் பிச்சைக்காரன்.

கருத்துரை :- நாள்தோறும் உழைக்கவேண்டும். உழைத்துச் சாப்பிடவேண்டும் என்பதற்காகவே வயிறு ஒரு வேளை யுணவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அளவுடையதாய் உள்ளது. 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *