அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது.
“”நான் இன்று இரவு அரசருக்குத் தெரியாமல் பஞ்ச கல்யாணியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்லப் போகிறேன்..” என்றான்.
அதற்கு மற்றொருவன் “”அரசனுக்குத் தெரிந்தால் உன் நிலை என்னாகும் தெரியுமா? மரண தண்டனைதான்!” என்றான்.
அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் “பஞ்ச கல்யாணி’ என்றொரு நடன மங்கை இருந்தாள். அவள் பேரழகியாகவும் நடனத்தில் சிறந்தவளாகவும் விளங்கினாள். அவளை அபகரித்துச் செல்லப் பல நாட்டு மன்னர்கள் முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. மன்னர் தனது அரண்மனையில் அவளுக்கு ஒரு பகுதியை அளித்து அங்கு தங்க வைத்திருந்தார். அங்கு பலத்த காவலும் போடப்பட்டிருந்தது.
இவ்வீரர்கள் பேசியதைக் கேட்ட அப்பணிப்பெண் இவ்விஷயத்தை யாரிடமாவது கூறவேண்டும் எனத் துடித்தாள். அரண்மனையில் நடைபெறும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என கட்டளையிட்டிருந்தார் மன்னர். பணிப்பெண்களின் தலைவியிடம் கூறினால், அவள் இதை நம்பமாட்டாள். மேலும் சரியான ஆதாரம் இல்லாமல் இத்தகைய தகவல்களை வெளியில் சொல்லவும் முடியாது.
இவ்வாறு சிந்தனை வயப்பட்டவளாய் நடந்து செல்லும் வழியில் பூ விற்கும் பெண்மணியைக் கண்டாள். அவளிடம் விரைந்து சென்று, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். யாரிடமும் சொல்லிவிடாதே… இன்றிரவு ஆட்டக்காரி பஞ்ச கல்யாணியை ஒரு வீரன் அழைத்துச் செல்ல இருக்கிறான்!’ என்றாள்.
இதைக் கேட்ட அந்தப் பூக்காரிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமாவது இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அந்த நேரம் பார்த்து அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட தயிர் விற்கும் பெண்மணி அங்கு வந்தாள். உடனே அவளிடம் ஓடிச்சென்று, “”கேட்டாயா… இந்த அநியாயத்தை! ஆட்டக்காரி பஞ்ச கல்யாணிக்கும் படைவீரன் ஒருவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இன்றிரவு அவர்கள் அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை ஒருவரிடமும சொல்லிவிடாதே…” என்றாள்.
இதைக் கேட்ட அந்த தயிர்க்காரி “”சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்று கூறி அங்கிருந்து அகன்றாள். அவள் ஊருக்குள் சென்று தயிர் விற்கும் பொழுதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனம் இத்தகவலையே நினைத்துக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட பூங்கொடி என்ற பெண், “”என்னம்மா? என்னவோ போல் இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.
தயிர் விற்கும் பெண்மணி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, “”உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். நீ அதை யாரிடமும் கூறக் கூடாது. அரண்மனையில் இருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி இன்று இரவு ஒரு வீரனுடன் தப்பித்துச் செல்லப் போகிறாள்! அவள் பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று நம் நாட்டைப் பற்றிய ரகசியங்களைச் சொல்லிவிடுவாள் என நினைக்கிறேன்..” என்று தனது யூகத்தையும் கலந்து கூறினாள்.
அவள் அங்கிருந்து சென்றவுடன் பூங்கொடி நேரடியாகத் தன் எஜமானியாகிய அமைச்சரின் மனைவியிடம் ஓடிச் சென்று தான் கேள்விப்பட்ட எல்லா விஷயத்தையும் அப்படியே கூறினாள். அமைச்சரின் மனைவி உடனே அமைச்சரிடம் இத்தகவலைக் கூறினாள்.
இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக மன்னரிடம் ஓடிச்சென்று, “”மன்னா.. நமது அரண்மனையில் தங்கியிருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி, வேற்று நாட்டு மன்னனால் அனுப்பப்பட்ட உளவாளி போலும்! அவள் இங்கு நடன மங்கை போல் தங்கியிருந்து நம் நாட்டு ராணுவ ரகசியங்களை சேகரித்து இருக்கிறாள். நம் படை வீரர்களுள் யாரோ ஒருவன் அவளுக்கு உதவி செய்கிறான். இன்று இரவு அவளும் அப்படை வீரனும் இங்கிருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால், வேற்று நாட்டு மன்னன் நம்மை எளிதாக முற்றுகையிட்டு விடுவான். எனவே அவ்விருவரையும் தாங்கள்தான் தண்டிக்க வேண்டும்!” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், “”உங்களுக்கு இத்தகவலைக் கூறியது யாரென்று கூறும்! தீர விசாரிக்காமல் என்னால் ஒருவரையும் தண்டிக்க முடியாது!” என்றார்.
அமைச்சர் தனது மனைவி என்று கூற அவரது மனைவியோ தன் வீட்டுப் பணிப்பெண் பூங்கொடி கூறிய தகவல் என்றாள். பூங்கொடியை அழைத்து விசாரித்ததில், அவள் தயிர்க்காரி கூறிய தகவல் என்றாள். தயிர்க்காரி, பூக்காரிதான் இவ்விஷயத்தைக் கூறினாள் என்றாள். பூக்காரி அரண்மனையில் வேலை செய்யும் பணிப்பெண் கூறியது என்றாள். இதனால் அவள் மன்னர் முன் நிறுத்தப்பட்டாள். அவள் உடல் நடுங்கியபடியே மன்னரிடம், “”மன்னா! எனக்கு அப்படை வீரனின் முகம் தெரியாது! அவன் பேசிய குரலை மட்டுமே கேட்டேன்…” என்றாள்.
அவள் குரல் கேட்ட நேரத்தில் பணியில் இருந்தவர்களை விசாரித்ததில் அவ்வாறு பேசியவன், வீரசிம்மன் என்னும் குதிரைப்படை வீரன் என்பது தெரிந்தது. அவன் உடனே மன்னரிடம் அழைத்துவரப்பட்டான்.
“”மன்னா… எனக்கும் நடன மங்கை பஞ்ச கல்யாணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! நம் குதிரைப் படையில் உள்ள குதிரைகளுக்கு அடையாளத்திற்காக நாங்கள் செல்லப் பெயர் வைப்போம். அப்படி மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்த குதிரைக்குப் “பஞ்சகல்யாணி’ என்று பெயரிட்டோம்.
நான் குதிரையில் ஏறி வேகமாக ஓட்டுவதற்கும் அதை அடக்குவதற்கும் பயிற்சி செய்துவருகிறேன். எனக்குள்ள பணி நேரத்தில் எல்லா குதிரைகளையும் என்னால் பயிற்றுவிக்க இயலவில்லை!
எனவே இன்றிரவு “பஞ்சகல்யாணி’ குதிரையைக் காட்டுக்கு அருகில் உள்ள திடலுக்கு ஓட்டிச் சென்று பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அப்படிக் குதிரையை வெளியே ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால் தங்களின் முன் அனுமதி தேவை. எனவே தங்களுக்குத் தெரியாமல் அவ்வாறு செய்ய விரும்பினேன். ஆனால் எப்படியோ தங்களுக்குத் தெரிந்துவிட்டது! தயவு செய்து என்னை மன்னியுங்கள்!” என்றான்.
இதைக் கேட்ட மன்னர், அமைச்சர் மற்றும் அங்கு கூடியுள்ளோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஆம்! கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீரவிசாரிப்பதே மெய்! ஏனெனில் வதந்தி காட்டுத் தீயை விட மிக வேகமாகப் பரவும்!
– ந.லெட்சுமி (ஜனவரி 2013)