கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,006 
 

மகாத்மா காந்தி குட்டிபிள்ளையாக இருக்கும் போது, விளையாடுவதில் பிரியம் அதிகம். எனவே, அவர் தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடுவார். காந்திஜியை அவருடைய பெற்றோர் “மோனியா’ என்று செல்லமாக அழைப்பர்.

காந்திஜி தன் சகோதரர்களுடன் சிறு குழந்தைகள் விளையாடும் சாதாரண விளையாட்டுக்களான ஓடிப் பிடித்து விளையாடுதல், ஒளிந்திருந்து விளையாடுதல், மரத்தில் ஏறி விளையாடுதல் ஆகிய விளையாட்டுக்களையே பெரும்பாலும் விளையாடுவார். அவர் அப்படிச் செய்யும்போது, மிகவும் உற்சாகமாகக் காணப்படுவார். அவர் சகோதரர்களுக்கும் காந்தி வந்துவிட்டாலே உற்சாகம்தான். ஏனென்றால், காந்தி சோனியாக இருந்தார். எனவே, அவரைக் கீழே தள்ளிவிடுவதும், அடித்து விளையாடுவதும், அவரை அழச் செய்வதிலும் பிரியம் அதிகம். விளையாட்டு என்றால் எல்லாமும்தான் இருக்கும் என்று காந்திஜி கருதியதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு நாள் காந்திஜி விளையாடும் போது மரம் ஒன்றில் ஏறிக் கொண்டார். அவரைத் தேடி வந்த சகோதரன், அவர் ஒளிந்து கொண்டிருந்த இடத்தைக் கண்டு பிடித்தவுடன் உற்சாகத்துடன், “”இதோ மோனியா, அவனைக் கண்டுபிடித்துவிட்டேன் அவன் அவுட்!” என்று கூறிக் கொண்டே காந்திஜியின் கையைப் பிடித்து இழுத்துக் கீழே போட்டுவிட்டார். உடனே மற்றவர்கள், “”மோனியா அவுட்டாகி விட்டானா, எப்போதும் இந்தப் பயல்தான் முதலில் அவுட்டாவான்,” என்று கூறியவாறே நாலு மொக்கு மொக்கிவிட்டு, எங்களைக் கண்டுபிடிடா பார்க்கலாம், என்று ஓடி ஒளிந்தனர்.

அன்று காந்திஜிக்கு மரத்திலிருந்து கீழே விழுந்ததால், உடலெல்லாம் நல்ல அடி. அத்துடன் மற்றவர்கள் உதைத்து விட்டுச் சென்ற உதைகளும் சேர்ந்து கொள்ள வலியினால் துடித்தார். அவர் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. மோனியா, ஆட்டத்துக்கு வருகிறாயா இல்லையா என்று குரல் கொடுத்தனர் மற்ற சிறுவர்கள். ஒருவாறு வலியை சமாளித்துக் கொண்டு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இப்படி ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல காந்திஜி விளையாடும் நாளில் எல்லாம் நிகழ்ந்தது.

“இப்படி இவர்கள் நம்மைத் தள்ளிவிட்டார்களே, அடித்து உதைத்து விட்டார்களே! பதிலுக்கு நாமும் ஒரு நாள் இவர்களை இப்படிச் செய்ய வேண்டும்! வலி என்றால் என்ன என்று உணரச் செய்ய வேண்டும் என்றெல்லாம் பழி உணர்ச்சி காந்திஜியிடம் இல்லை. எப்போதுமே காந்திஜி அடிபடுபவராக இருப்பாரே தவிர, அடி கொடுப்பவராக இருக்கமாட்டார். அம்மாதிரி வாய்ப்பு வந்தால்கூட அவர் அவர்களை அடிக்கமாட்டார். மனம் நோக பேசமாட்டார்.

ஆனால், எல்லாவற்றையும் தன் அன்னையிடம் சென்று ஒன்றுவிடாமல் கூறி வருந்துவார். “என் சகோதரர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்கின்றனர்’ என்று கூறுவார். இதைக் கேட்ட அத்தாயுள்ளம் பரிதவிக்கும்.

“இச்சிறுவன் ஏன் இப்படி இருக்கிறான். எல்லாக் குழந்தைகளும் தம்மை அடித்தவனைத் திருப்பித் தாக்கிவிட்டு, தம் அன்னையிடம் சென்று இல்லாததையும் பொல்லாததையும் கூறி அத்தாய்க்கும், அடிப்பட்டவனுடைய தாய்க்கும் பெரும் சண்டையை மூட்டி விட்டுவிடும்.
இவனோ, எதுவொன்றும் செய்யாமல் மண்ணாக அங்கே நின்றுவிட்டு, தன்னிடம் வந்து புகார் கூறுகின்றானே’ என்று ஆதங்கப்பட்டாள்.

பின்னர் மகனை அழைத்து, “”மகனே மோனியா! நீ சாதுவாக இருப்பதால்தான் அவர்கள் உன்னை அடிக்கிறார்கள்! யார் உன்னை அடித்தது அண்ணன் தானே!

அவன் உன்னை விட ஒன்றிரண்டு வயதுதானே மூத்த வன். அவனை உன்னால் அடிக்க முடியாதா? உன் அண்ணன் அனாவசியமாக உன்னை அடித்தான் என்றால், நீயும் அவனைத் திருப்பியடிக்க வேண்டியதுதானே! என்னிடம் வந்து சொல்லுவதை விட நீயே உங்கள் விளையாட்டில் இப்படிச் செய்து கொள்வதுதானே நியாயம்!” என்று கூறினார்.

“”அம்மா, அவன் தான் பெரியவன். என்னை அடித்துவிட்டான். அவன் அடித்துவிட்டான் என்ற உண்மையைச் சொன்னதற்கு காரணம் என்னவென்றால், உடம்பிலே ஏது இந்தக் காயம் என்று நீ கேட்டாய்” அதற்காக சொன்னேன். அண்ணன் என்னை அடித்து விட்டான் என்று நான் உன்னிடம் கூறினால், நீ அவனை ஏன் நான் அடிக்கவில்லை என்று கேட்கிறாய். நீ என் அம்மா, நீயே எனக்குப் பிறரை அடி என்று கற்றுக் கொடுக்கலாமா? அவன் என்னை விட வயதில் பெரியவன். ஆகவே அடித்தான். நான் அவனை விட இளையவன். அடிவாங்கினேன். அவ்வளவுதான். என் அண்ணனை நான் ஏன் அடிக்க வேண்டும் என்று சொல்கிறாய்?” என்று திருப்பிக் கேள்வி கேட்டார்.

“”மோனியா, மோனியா, நீங்கள் இருவரும் சகோதரர்கள். அதிலும் சிறுவர்கள். எனவே, நீங்கள் அடித்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லையே,” என்று கூறினார்.

“”அம்மா, அண்ணன் என்னைவிட வயதில் மூத்தவன். ஆகையினால் அவன் என்னை அடித்தால் தவறு இல்லை. ஆனால், நான் அவன் தம்பி, நான் திருப்பி அடிக்கக் கூடாது. அது தவறு. நீ நியாயமாக என்ன சொல்ல வேண்டும்?

“”நீ என்னிடம் திருப்பி அடி என்று சொல்வதற்குப் பதிலாக, அண்ணனை அழைத்து இனிமேல் தம்பியை அடிக்கக் கூடாது என்று சொல்லக் கூடாதா?” என்று கேட்டார். இதைக் கேட்ட காந்திஜியின் அன்னை அவருடைய சாத்வீக குணத்தை கண்டு பெருமையடைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *