நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.
http://3.bp.blogspot.com/_0pmFUUzqRK…nasruddin2.jpg
ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.
அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,
உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.
நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.
அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.
அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.
மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.
அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.
முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்?
முதல் அறிஞர் முல்லாவிடம், “இந்த உலகின் மைய இடம் எது?” என்று கேட்டார்.
அதற்கு முல்லா, “”என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,” என்றார்.
அந்த அறிஞர், “அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்றார்.
உடனே முல்லா, “அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,” என்றார்.
முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.
அடுத்து இரண்டாம் அறிஞர், “ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு முல்லா, “என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,” என்றார்.
இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.
மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், “மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?” என்றார்.
அதற்கு முல்லா, “அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.
“இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,” என்றார்.
இவ்வாறு முல்லா கூறியதும், “வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்” என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.
போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.
அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.