போரும் சமாதானமும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 4,310 
 
 

முகிலனின் மாமா செழியன் ஊர் ஊராகப் பயணிப்பவர். சில சமயங்களில் முகிலனையும் அழைத்துச் செல்வார். முகிலனின் அக்கா அகிலாவுக்கும் அப்படிப் பயணிக்க ஆசை. இந்தமுறை இருவரையுமே

அழைத்து வந்திருந்தார். அகிலாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. வால்பாறையின் பழங்குடியின மக்கள் குடியிருப்பே அவர்கள் சென்ற இடம்.

அங்கேயே பிறந்து வளர்ந்த காட்டரசு என்ற சிறுவனுடன் சேர்ந்து இருவரும் அங்கிருந்த விதவிதமான பறவைகளை ரசித்தனர். அப்போது இருவாச்சியைப் பார்த்தார்கள். இருவாச்சிகள் உயரமான மரங்களில்தான் வாழும் என்று மாமா சொல்லியிருக்க, இதுவோ தாழ்வான மரத்தில் உட்கார்ந்திருந்தது.

அது பறந்துசென்றதும் அகிலாவும் பின்தொடர்ந்து ஓடினாள். அதைப் பார்த்து காட்டரசும் போனான். கீழே கிடந்த கழிவுகளை உருண்டைப் பிடிக்கும் சாண வண்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்த முகிலன், இவர்கள் போவதைக் கவனிக்கவில்லை.

அகிலா நீண்ட தூரம் காட்டுக்குள் சென்றுவிட்டாள். அவளை விரட்டிப் பிடித்த காட்டரசு, ‘‘அகிலா நில்லு! முகிலன் அங்கே தனியா…’’ என்று சொல்லிக்கொண்டே சட்டென பேச்சை நிறுத்தினான். வேறு யாரோ பேசுவது கேட்டது.

இவர்கள் இருந்த மேட்டுக்கு அந்தப் பக்கத்திலிருந்து, “நீங்க எல்லாரும் தயாரா இருக்கீங்கதானே!” என்றது அந்தக் குரல்.

செடிகளை விலக்கி எட்டிப் பார்த்தார்கள். குரங்குகள் ஒரு பக்கம் மரங்களில் அமர்ந்திருந்தன. இன்னொரு பக்கம் கழுகு, ஆந்தை, இருவாச்சி, குருவி வகைகள் இருந்தன. மரத்தில் ஒரு சிறுத்தையும் உட்கார்ந்திருந்தது. யானையும் இருந்தது.

“இவங்க சாலை போடுறதுக்காக நம்ம மரங்களை வெட்டிட்டிருக்காங்க” என்றது அகிலா பின்தொடர்ந்த இருவாச்சி.

“எங்கே பார்த்தாலும் சொகுசு பங்களா. நம்ம பாதையில நம்மையே போகவிடாம அடிச்சு துரத்துறாங்க. இது போதாதுன்னு இப்போ புதுசா இன்னும் உள்ளுக்குள் பாதை போடப்போறாங்களாம். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது யானை.

காட்டு வண்டு ஒன்றின் ரீங்காரம், அவர்கள் பேச்சைவிட சத்தமாகக் கேட்டது. திடீரென்று ஒரு மலை அணில், இலைகளால் செய்த ஒலிப்பெருக்கியுடன் வந்து நின்றது.

‘கீச்…கீச்… கீச் கீச் கீச்…’ என்று ஏதோ சொன்னதும் மொத்த காடும் அமைதியானது.

இரண்டு சிறுத்தைகள் இரண்டு பக்கமும் வர, நடுவில் கம்பீரமாக நடந்துவந்தது புலி. அங்கிருந்த அனைத்து விலங்குகளையும் நோட்டமிட்டது. “மான்கள் எங்கே? ஏன் வரவில்லை?” என்று உறுமியது.
யானை முன்னால் வந்து, “மான்களுக்கு இந்தப் போரில் விருப்பமில்லையாம்” என்றது.

“போகட்டும். நாம் இந்தப் போரை முன்னெடுப்போம். இந்தக் காடு நமக்குச் சொந்தம். இது இல்லைன்னா அவங்க நாடு இல்லை. இனி நம் காட்டை யார்கிட்டயும் இழந்துடக் கூடாது. அவங்க சாலை போட உள்ளே வந்தால், போரை ஆரம்பிப்போம்” என்றது புலி.

அனைத்து விலங்குகளும் பறவைகளும், “போர்… போர்” என்று ஒன்றுசேர்ந்து கத்தின.

அகிலாவும் காட்டரசும் திகைத்துப் போனார்கள். நடப்பது என்ன என்று அவர்களுக்குப் புரிந்தது. ஆனாலும் அந்தப் புலியைப் பார்த்து அகிலாவுக்கு பயம் வரவில்லை; மரியாதைதான் வந்தது.

“அந்தப் புலி நினைச்சிருந்தா எல்லா விலங்குகளையும் கூட்டிட்டு ஊருக்குள்ளயே போயிருக்கலாம். ஆனா அவங்க இடமான காட்டைப் பாதுகாக்க மட்டுமே நினைக்குது’’ என்றாள் அகிலா.

“இவங்க போருக்குத் தயாரானதுகூட பயமா இல்லே. மனுசங்க இவங்களை காயப்படுத்தாத வரை இவங்களா ஒண்ணும் பண்ணமாட்டாங்க. ஆனா, மனுசங்க அப்படி யோசிக்க மாட்டாங்களே. மக்கள் சுற்றுலா வர்றாங்க. அதனால் வருமானம் வருது. அதையெல்லாம் விட்டுட்டு எப்படிப் போவாங்க. கூட்டம் கூட்டமா மக்கள் வந்தால்தானே காசு கிடைக்கும். எங்களை மாதிரி பழங்குடி மக்களையே சில முதலாளிகள் வேற இடத்துக்கு விரட்டுறாங்க. இதுங்களை சும்மா விடுவாங்களா’’ என்றான் காட்டரசு.

“நீ சொல்றதும் சரிதான். இப்போ என்ன செய்யறது? இதுங்களுக்கு ஒண்ணும் ஆகிடக்கூடாதே!” என்றாள் அகிலா.

“எனக்கொரு யோசனை தோணுது. நாம மான்களிடம் உதவி கேட்போம். அதுங்களுக்குப் போர் மேலே விருப்பமில்லை எனத் தெரியுது. காட்டு விலங்குகளிடமும் நட்பும் செல்வாக்கும் இருக்கும்” என்றான் காட்டரசு.

“காட்டரசு, மானை வேட்டையாடிச் சாப்பிடும் புலியிடம் பேச மானையே தூது போகச்சொல்றியே?” என நம்பிக்கையின்றி கேட்டாள் அகிலா.

“உனக்கு விஷயமே தெரியலை. இங்கிருக்கும் எல்லா விலங்குகளுமே அப்படித்தான். வேட்டை என்பது அவங்க பசிக்காக மட்டுமே. மற்ற நேரங்களில் பகையோ, சண்டையோ கிடையாது. இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் பழி வாங்கும் பழக்கமோ, நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்ற வெறுப்போ கிடையாது. உழைச்சு வாழும் வாழ்க்கை மட்டும்தான் இருக்கு” என்றான் காட்டரசு.

“அப்படீன்னா, மான்கள் சொல்றதை புலி காது கொடுத்துக் கேட்குமா?” என இன்னமும் சந்தேகமாகக் கேட்டாள் அகிலா

“முயன்று பார்ப்போமே” என்றான் காட்டரசு.

அந்த விலங்குகள் கூட்டம் கலையும் வரை இருவரும் அங்கேயே ஒளிந்திருந்தார்கள். பிறகு, மெதுவாக வெளியே வந்தார்கள்.

“வழக்கமாக புள்ளிமான்கள் கூடும் இடம் எனக்குத் தெரியும். வா, போய்ப்பேசிப் பார்க்கலாம்’’ என்றான் காட்டரசு.

காட்டுக்குள் நடந்து அந்த இடத்தை அடைந்தார்கள். காட்டரசுவை அங்கே அடிக்கடி பார்த்திருப்பதால் இவர்களைப் பார்த்தும் புள்ளிமான்கள் மிரளவில்லை.

விஷயத்தைச் சொன்னதும் புள்ளிமான்களின் தலைவன், “இந்த விஷயத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்த ஒரே ஆள் கடமான்களின் தலைவன்தான்” என்றது.

இருவரும் கடமானைப் பார்க்கச் சென்றனர். விஷயத்தைச் சொன்னார்கள். அவர்கள் எடுத்துள்ள முடிவையும் சொன்னார்கள். கடமான் தலைவனும் புலியிடம் பேச ஒப்புக்கொண்டது. புலியைச் சந்திக்க இவர்களையும் அழைத்துச் சென்றது.

அகிலா, காட்டரசு இருவரையும் வெளியே நிறுத்திவிட்டு, புலியின் குகைக்குள் சென்றது. இருவரும் தவிப்புடன் நின்றிருந்தனர். மெதுவாகக் குகைக்குள் எட்டிப் பார்த்தனர்.

உள்ளே காரசாரமாக புலி பேசுவது தெரிந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கடமான் தலைவன், ஒரு வழியாக சமாதானம் செய்திருக்கிறேன். உங்களிடம் பேசணுமாம்” என்றது.

அகிலாவுக்கு பயம். காட்டரசுதான் தைரியம் சொல்லி அழைத்துச் சென்றான்.

புலி உறுமலுடன், “நீங்க எங்களை போர் செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா, நீங்க செய்யறது நியாயமா? எங்க குரங்குகளுக்குத் தீனி போட்டுப் பழக்கிட்டீங்க. அதுங்க மனிதனிடம் பிச்சை எடுத்துட்டு நிக்குதுங்க. எங்க யானைகள் நிம்மதியா உணவையும் தண்ணீரையும் தேடிப் போக முடியலை. இடைஞ்சலா சாலையைப் போட்டது யாரு? கூட்டம் கூட்டமா மக்கள் வந்து குவியறாங்க. எந்த விலங்கும் நிம்மதியா வெளியவே வரமுடியலை’’ என்றது கோபமாக.

“மன்னிச்சுருங்க புலி ஐயா. இனிமே குரங்குகளுக்கு உணவு கொடுக்க மாட்டோம். அவங்க உழைச்சு சாப்பிடுறதை தடுக்கமாட்டோம். கூட்டம் கூட்டமா மக்கள் வர்றதை உடனடியா நிறுத்த முடியாது. எங்களைப் போன்ற குழந்தைகளிடம் நீங்க சொன்ன எல்லாப் பிரச்னைகளையும் சொல்வோம்” என்றான் காட்டரசு.

“ஆமாம். நான் நாலு பேரிடம் சொல்வேன். அவங்க எட்டு பேரிடம் சொல்வாங்க. இப்படியாகச் சொல்லி, எங்களை மாதிரி குழந்தைகளுக்குப் புரியவைப்போம். நாங்க வளரும்போது உங்க காட்டுக்கு எந்தப் பிரச்னையுமே இல்லாமல் பார்த்துப்போம். தயவுசெஞ்சு போர் வேண்டாம்” என்று கைகூப்பினாள் அகிலா.

புலியின் கோபம் தணிந்தது. “சரி, உங்களை நம்பறேன். நாங்க போரை ஆரம்பிக்கலை. நீங்க கொடுத்த வாக்குறுதியை மறந்துடாதீங்க” என்றது.

மகிழ்ச்சியுடன் காட்டிலிருந்து திரும்பிய இருவரும் நடந்த விஷயத்தை முகிலனிடம் சொன்னார்கள். அன்றிலிருந்தே விலங்குகளையும் காட்டையும் காக்கும் பணியை நண்பர்கள் மூலம் ஆரம்பித்தார்கள்.

– ஜனவரி 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *