பொன்னிக்கு உதவிய மின்மினி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 2,732 
 

காடெல்லாம் சுற்றி இரை தேடியதில் களைத்திருந்தது அந்த மின்மினி. வயிறு நிறைய உணவு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும், காட்டுக்குள் நீண்ட தொலைவு வந்துவிட்டதைப் புரிந்துகொண்டது. காடு முழுவதும் இருள் சூழ்வதை அறிந்த மின்மினிக்கு அதிர்ச்சி. சீக்கிரம் காட்டின் கிழக்குப் பகுதிக்குத் திரும்ப வேண்டும். மின்மினியின் வருகையை எதிர்பார்த்து பொன்னி காத்திருப்பாள். காட்டை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும் சிறுமி.பொன்னியும் மின்மினியும் நண்பர்கள்.

மின்மினிக்கு தூக்கம் கண்களைச் சொக்கியது. வயிறுமுட்ட சாப்பிட்டதின் விளைவோ? வீடு திரும்புவதற்குள் இருட்டிவிடும். மின்மினிக்கு இருட்டு பயமா என்ன? இல்லவே இல்லை. இரவு நேரத்தில் வால்முனையிலிருக்கும் விளக்கு, பளிச்செனப் பிரகாசமாக எரிய ஆரம்பிக்கும். மஞ்சள், பச்சை கலந்த வெளிச்சம்.

ஆனால், இப்போது பிரச்னை வேறு. ‘அய்யோ… உறக்கக் கலக்கத்தில் பறக்க முடியவில்லையே. உடலிலுள்ள விளக்கு சிந்தும் வெளிச்சத்தில் எப்படி உறங்குவது? இரவு நேரத்தில், இந்த விளக்கை அணைக்கவும் முடியாதே!’

தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தது. அது கோடைக்காலம். மண்ணுக்கடியில் மறைந்துவாழும் ஒரு தவளை, பளிச்சிடும் வெளிச்சத்தைப் பார்த்தவுடன் மின்மினி அருகில் இருப்பதைப் புரிந்துகொண்டது.

“க்ராக்…க்ராக். யாரது மின்மினியா? நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?” என்று கேட்டது.

“தவளையாரே! உடல் களைப்பாக இருக்கிறது. உறக்கம் வருகிறது. மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைக்கிறேன்” என்றதும், தவளை பதற்றம் அடைந்தது.

“மன்னிக்கணும் மின்மினி! இந்தப் பகுதியில் ஏற்கெனவே பாம்புகளின் தொல்லை அதிகம். இந்த விளக்கு வெளிச்சம் பாம்புகளின் கவனத்தை ஈர்க்கும். என் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். நீ போய்விடு” என்றது.

அதைக் கேட்டு மனமுடைந்த மின்மினி, பதில் பேசாமல் பறந்துசென்றது. காட்டில் எதிர்ப்பட்ட மற்ற மின்மினிகளைச் சந்தித்துப் பேச விருப்பமில்லை. ‘இந்நேரம் பொன்னி தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்’ என்ற எண்ணத்தில் வேகமாகப் பறந்தது.

தினமும் இரவில் பொன்னியின் மூக்குத்தியில் உட்கார்ந்து மின்மினி கதையாடும். ஆசை தீர விளையாடுவதுண்டு. பிறகு, ‘இரவு வணக்கம்’ சொல்லி விடைபெற்றவுடன் பொன்னி உறங்கச் செல்வாள்.

அவள் தூங்கிய பிறகும் அவளது நாய்க்குட்டி விழித்திருக்கும். அதிகாலை வரை நாய்க்குட்டிக்குத் துணையாக சேர்ந்து விளையாடுவது என்று மின்மினி ஒப்பந்தம் செய்திருந்தது.
பொன்னிக்கு உதவிய மின்மினி!

அந்த வாக்கையும் காப்பாற்ற வேண்டும். மரங்களைக் கடந்து மாற்றுப் பாதையில் பறந்துசென்றது மின்மினி. அருகிலிருந்து தேனீக்களின் ரீங்காரம் கேட்டு ஒரு மரக்கிளையை அடைந்தது. ஆயிரக்கணக்கான தேனீக்கள் சேர்ந்து கட்டிய தேனடையைப் பார்த்து வியந்த மின்மினி, ஒரு தேனீயிடம் பேச்சுக் கொடுத்தது.

“தேனீ அக்கா, உடல் களைப்பாக இருக்கிறது. உறக்கம் வருகிறது. சிறிது நேரம் தேனடையின் ஓர் அறையை ஒதுக்கித் தரமுடியுமா?”

அதைக் கேட்ட தேனீ, “தேனடையில் புதிதாகப் பிறந்துள்ள தேனீக்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்காவிட்டால் ராணித் தேனீக்குக் கோபம் வந்துவிடும். தயவுசெய்து நீ இங்கிருந்து கிளம்பு’’ என்றது.

‘இதென்ன கொடுமை? யாரும் உதவ முன்வரவில்லையே. பொன்னி அக்காவிடம் தவளைப் பற்றியும் தேனீயைப் பற்றியும் புகார் செய்கிறேன். அக்கா வந்து இவர்களிடம் சண்டையிடுவாள்’ என்று எண்ணியவாறு மின்மினி பயணத்தைத் தொடர்ந்தது.

உடல் சோர்வு அதிகரித்ததால் ஒரு பூச்செடியில் உட்கார்ந்தது. ஓர் இலையின் மறைவில் ஓய்வெடுக்க நினைந்து லேசாகக் கண்களை மூடிய நொடியில் அதட்டல் குரல்.

“ஏன் இங்கே இவ்வளவு வெளிச்சம்? இந்தச் சிறு இலை எனக்குச் சொந்தம். இதோ, பாதி இலையைக் கடித்துச் சாப்பிட்டுவிட்டேன். ஒரு சில நிமிடங்களில் மீதியையும் தின்று முடிப்பேன். பிறகு, கீழே உள்ள இலைமீது விழுவேன். நாளை விடிவதற்குள் கூட்டுப்புழுவாக மாறுவேன். இதற்கெல்லாம் வெளிச்சம் தடையாக இருக்கக்கூடாது” என்றது இலையிலிருந்த பச்சை நிறப் புழு.

மனமுடைந்த மின்மினி அங்கிருந்தும் பறந்தது.

நீண்ட நேரம் பறந்து பொன்னி அக்கா வசிக்கும் குடிசையை அடைந்தது. பொன்னி முற்றத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறந்து பொன்னிக்கு அருகில் சென்று, “ஏனக்கா அழுகிறாய்?” என்று ஆறுதலாகக் கேட்டது.

“நாய்க்குட்டி காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. உடல்நலம் சரியில்லை. நாள் முழுவதும் முனகியபடி படுத்திருந்தது. அதைக் காப்பாற்ற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். விலங்குகளுக்கான மருத்துவ உதவி வாகனம் தயாராக உள்ளது. வாகனத்தில் எச்சரிக்கை மணி இருந்தும் அவசரக்கால விளக்கு எரியவில்லை. இரவு நேரத்தில் விளக்கு எரியாமல் சாலையில் பயணிக்க முடியாது” என்றது.

சற்றும் தாமதிக்காத மின்மினி உதவ முன்வந்தது. “அக்கா, கவலையை விடுங்கள். நான் என் நண்பர்களுடன் வருகிறேன். வாகனத்தின் முன்பாகப் பறந்து செல்கிறோம். அந்த வெளிச்சம் உதவியாக இருக்கும். சீக்கிரம் சென்று நாய்க்குட்டியைக் காப்பாற்றலாம்” என்றது.

மின்மினி சொன்னதைப்போலவே செய்தாள் பொன்னி. சரியான நேரத்தில் சிகிச்சை செய்ததால் நாய்க்குட்டி உயிர் பிழைத்தது. மின்மினிக்கும் தனது கவலைகள் காற்றில் கரைந்துவிட்ட உணர்வு.

வீடு திரும்பிய நாய்க்குட்டியுடன் சேர்ந்து முற்றத்தில் விளையாட ஆரம்பித்தது.

– ஆகஸ்ட் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *