(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பெரியாரது தன்மை
தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம் பலத்தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருநெல் வேலியில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் தாம் கற்றிருந்த போதிலும் எவரிடத்தும் அடக்க முடையவராகவே நடந்து வந்தார்கள். இவர்களது அடக்கத்தை அறி யாமல் திருச்செந்தூரில் உள்ள புன் புலவன் ஒரு வன் இவர்களுக்கு என்ன தெரியும்? என்று இழி வாகப்பேசித் தன்னைப்போல் படித்தவர்கள் இல்லை என்று தன்னைத்தானே பெருமையாகப் பிறரிடம் பேசுவான். கேட்பவர்கள் இவனது அறியாமைக்கு வருந்திச் செல்வார்கள். திருச்செந்தூர் சென்ற சிவப்பிரகாசர் இதைக்கேட்டார். எனக்குத் தொல் காப்பியத்தை 15-நாளில் கற்பித்த பேரறிவுள்ள குருவையா? எவ்விதம் பேசுகிறீர். அவர் மாண வன் யான்? என்னை வென்றால் என் குருவை வென்றதாகும் என்று வாதுக்கழைத்து இருவரும் நிரோட்டயமக அந்தாதி பாடத் தொடங்கினர். புன் புலவன் முதற்பாடலிலே தோற்றான், சிவப் பிரகாசர் முழுதும் பாடிமுடித்தார். கண்டவர் அனைவரும் இப்புன் புலவன் இவ்வளவு பெருமையா கப் பேசினானே அச்சொல் எல்லாம் இவனது சிறு மையினால் அல்லவாபேசினான் ? இவர் குருவாகிய சுவாமிகள் தம்வாயால் இவ்விதம் ஒருசொல் கூடச் சொல்லாமை அவர்கள் பெருமையால் அல்லவா? என்று குருவை வியந்து பேசினார்கள். இக்கருத் துள்ளது இக்குறள்.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (71)
பெருமை = மேன்மையுடையவர்
என்றும் = அச்சிறப்பு உண்டான பொழுதும்
பணியும் = செருக்கின்றி அடங்கி நடப்பர்
சிறுமை = தாழ்மையுடையவர்
என்றும் = அச்சிறப்பு இல்லாத பொழுதும்
தன்னை வியந்து = தம்மைப்புகழ்ந்து
அணியும் = பெருமைப் படுத்திக் கொள்வர்.
கருத்து: பெரியார் பணிவுடன் இருப்பர்; சிறியார் செருக்குடன் இருப்பர்.
கேள்வி: தம்மை வியந்து பெருமை படுத்திக் கொள் பவர் எவர்?
ஆல் இரண்டும் அசைகள்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.