புத்திசாலி வியாபாரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,980 
 
 

ஆனந்தபுரி என்ற கிராமத்தில் ஆண்டியப்பன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்தான். அவனுக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமண வயதை எட்டி நின்றாள். ஆண்டியப்பன் கடும் உழைப்பாளி. ஆனால், கடுமையாக உழைத்தும் அவன் வீட்டில் வறுமை தலை விரித்து ஆடியது. அன்றும் வழக்கம் போல் வயலில் இருந்து வீடு திரும்பினான் ஆண்டியப்பன். சோகமாக தூணில் சாய்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

“”ஏனுங்க, ஒங்களைத்தானே கேட்கிறேன், என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டாள் அவள் மனைவி ராசாத்தி, “”மூத்தவ திருமண வயதை தாண்டிவிட்டாள். அவளுக்கு மணம் முடித்து வைக்கணுமே. அதுக்கு பணம் வேண்டுமே… நான் எங்கே போவது பணத்துக்கு? அதை நினைக்கிறப்ப தூக்கமே வரமாட்டேங்குதடி,” என்றான். “”இதுக்குப் போய் இப்படி இடிஞ்சு போனா எப்படி? எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ரொம்ப காலம் சேமித்து வச்சது,” என்றாள் அவள்.

சற்று நேரத்தில் சிறிய பானை ஒன்றுடன் திரும்பி வந்தாள். பானையில் இருந்த பணத்தை கணவன் முன் தரையில் கொட்டினாள். காலையில் உற்சாகத்துடன் எழுந்து ஆண்டியப்பன் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு வயலுக்கு புறப்பட்டான். வழக்கத்தை விட உற்சாகமாக வேலை செய்யும் ஆண்டியப்பனை வியப்புடன் பார்த்தனர் உடன் வேலை செய்பவர். மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வயல் ஓரம் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “”அண்ணே, நேத்து ராத்திரி பக்கத்து கிராமத்திலே கொள்ளைக்காரங்க புகுந்து கொள்ளை அடிச்சிட்டாங்க,” அதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.

ஆண்டியப்பன் சற்று கூடுதலாகவே திடுக்கிட்டான். “”அய்யய்யோ! மகள் திருமணதுக்கு வைத்திருக்கும் பணத்தை படுபாவிங்க கொள்ளையடிச்சா என்ன செய்வேன்,” என்று தனக்குள் பதட்டத்துடன் கூறினான் ஆண்டியப்பன். மாலையில் வீடு திரும்பிய ஆண்டியப்பன் கவலையுடன் இருப்பதைக் கண்டு மனைவி திடுக்கிட்டாள். “”ஏனுங்க, என்னங்க ஆச்சு. ஏனிப்படி பேயறைஞ்சாப்ல இருக்கீங்க?” என்று கேட்டாள் ராசாத்தி. “”அடியே நேத்திக்கு பக்கத்து கிராமத்துல கொள்ளைக்காரங்க புகுந்து ஏகப்பட்ட பொருட்களை கொள்ளை அடிச்சாங்களாம்!” என்றான். மனைவி பயத்தால் வாய் பொத்தி நின்று தேம்பி அழுதாள்.

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் பயந்து நடுங்கினர். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவன் எதுவும் பேசவில்லை. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டது. “”என்னங்க உள்ளே யாரும் இல்லையா?” என்றது ஒரு குரல். மீண்டும் மீண்டும் அதே கேள்வி எழுந்தது. வருவது வரட்டும் என்று, “”யாருங்க அது?” என்று நடுக்கத்துடன் கேட்டான் ஆண்டியப்பன். “”நான் ஒரு வியாபாரி, இந்தப் பக்கம் வந்த போது இரவு ஆயிடுச்சு. அதனால இரவு இங்கே தங்கிவிடலாம்னு தான் வந்திருக்கிறேன்,” என்றது அந்த குரல். சற்று நேரத்தில் கதவு திறந்து, உடல் நடுங்கியபடி வெளியே எட்டிப் பார்த்தான் ஆண்டியப்பன்.

“”நீங்க ஏங்க இப்படி பயப்படுறீங்க?” என்று கேட்டான் வியாபாரி.

“”ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல,” என்றான் ஆண்டியப்பன்.

இருவருக்கும் உணவு வழங்கினாள் ராசாத்தி. இருவரும் ஊர் கதை பேசிக் கொண்டே உணவு சாப்பிட்டனர். “”நீங்கள் பயப்படுறாப்ல இருக்கே… என்ன காரணம்?” என்றான் வியாபாரி.

இனிமேல் இவரிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை என்று முடிவு செய்த ஆண்டியப்பன், “”அய்யா, ஊரெல்லாம் ஒரே திருட்டு பயம். பக்கத்து கிராமத்தைக் கூட கொள்ளையர்கள் கொள்ளை அடிச்சுட்டாங்க. என் மகளோட கல்யாணத்துக்காக கொஞ்சம் பணம் வைத்திருக்கிறேன். அதை கொள்ளைக்காரங்க கொள்ளை அடிச்சுக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயமாயிருக்குங்க,” என்றான். அதைக் கேட்ட வியாபாரியும் பயந்து நடுங்கினான். “”அப்படியா! அய்யய்யோ! அவனுங்க இங்கே வந்துட்டா என்ன பண்றது? ஆமா, நீங்க எவ்வளவு பணம் வைத்து இருக்கிறீர்கள்?” என்றான் வியாபாரி.

“”ஆயிரம் பணம்,” என்றான் ஆண்டியப்பன். வியாபாரி சற்று நேரம் யோசித்த பிறகு, “”நான் ஒரு யோசனை சொல்கிறேன்,” என்றான் வியாபாரி. “”சீக்கிரம் சொல்லுங்க,” என்று ஆவலுடன் கேட்டான் ஆண்டியப்பன். “”முற்றத்தில் ஒரு குழி தோண்டி பணத்தை அதில் புதைத்து விடுவோம். பிறகு கொள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றான் வியாபாரி. “”நல்ல யோசனை, அப்படியே அந்த பணத்தை எடுத்துகிட்டு வா,” என்று மனைவியை பார்த்து கூறினான் ஆண்டியப்பன். பணப் பானையுடன் வந்தாள் ராசாத்தி.

ஆண்டியப்பன் வீட்டு முற்றத்தில் ஒரு குழி தோண்டி பானையை அதற்குள் வைத்து மண் போட்டு மூடினான். ஆண்டியப்பனுக்கு கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது. ராசாத்தியும் மகிழ்ச்சி அடைந்தாள். அனைவரும் படுத்தனர். சற்று நேரத்தில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசை அவர்களை நடுங்க வைத்தது.

குதிரைகள் வீட்டு முற்றத்திற்குள் புகுந்தன. வியாபாரியும், ஆண்டியப்பனும், மனைவியும், குழந்தைகளும் பயந்து நடுங்கினர். குதிரை மீது அமர்ந்து இருந்த கொள்ளையர்கள் பலமாக கதவை தட்டினர். உள்ளிருந்த யாரும் பேசவில்லை. ஆத்திரம் கொண்ட கொள்ளையர்கள் கதவை உதைத்து உடைத்தனர். “”வெளியே வாங்கடா கழுதைகளே…” கொள்ளைத் தலைவன் கத்தினான். அவர்கள் கைகளில் வாள்கள் மின்னுவதை கண்டு அனைவரும் நடுங்கினர்.

கொள்ளைத் தலைவன் ஒவ்வொருவராக வெளியே இழுத்துப் போட்டான், “”எடுடா பணத்தை,” என்று அலறினான். “”எங்கிட்ட என்று அழுது கொண்டே சொன்னான் ஆண்டியப்பன், கொள்ளையன் தன்னிடம் இருந்த சவுக்கால் ஆண்டியப்பனை ஓங்கி அடித்தான். “”உம்… சொல்லுடா எங்க வச்சிருக்கே பணத்தை?” அடிபட்ட ஆண்டியப்பன் கொள்ளையனின் கால்களை பற்றி அழுதான். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவன் தன் கால்களால் ஆண்டியப்பனை உதைத்தான். அப்போது வியாபாரி முன் வந்து, “”அடிக்காதீங்க, நான் சொல்றேன்,” என்றான். கொள்ளையன் வியாபாரியை முறைத்துப் பார்த்தான். “”இந்த முற்றத்தில் குழி தோண்டி புதைத்து இருக்கிறான்,” என்றான் வியாபாரி ஆண்டியப்பனும், மனைவியும் பரிதாபத்துடன் வியாபாரியை பார்த்தனர். கொள்ளையர்கள் குழிக்குள் மறைத்து வைத்திருந்த பானையை தோண்டி எடுத்தனர்.

பிறகு பணத்துடன் அங்கிருந்து பாய்ந்து சென்றனர். இந்த வியாபாரியும் கொள்ளையர்களின் ஆள் என்று முடிவு செய்தான் ஆண்டியப்பன். “”இவன் பேச்சைக் கேட்டு ஏமாந்து விட்டேனே. மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிகொடுத்து விட்டேனே,” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் ஆண்டியப்பன். ஆண்டியப்பன் வியாபாரி முன் நின்ற அழுதபடி கத்தினான். “”அடே பாவி… உம் பேச்சைக் கேட்டு பணத்தை பறி கொடுத்துட்டேனே… நீ நல்லா இருப்பியா?” என ஆண்டியப்பன் போட்ட கூச்சல் கிராமத்தை உலுக்கியது. மக்கள் அனைவரும் ஆண்டியப்பன் வீட்டுக்கு விரைந்தனர்.

கிராம மக்களை கண்ட ஆண்டியப்பன் நடந்ததை சொன்னான். “”ஏம்பா, உனக்கு இரவில் உணவு தந்து, தங்க இடம் தந்த ஒரு வரை இப்படியா காட்டிக் கொடுப்பது?” என்று ஒருவர் ஆத்திரத்துடன் கேட்டார். மக்கள் அனைவரும் வியாபாரி மீது கடும் கோபத்தில் இருந்தனர். கொள்ளையர்கள் மீது இருந்த கோபத்தை வியாபாரி மீது காட்டுவதற்காக மக்கள் துடித்தனர். இன்னும் சிறிது நேரத்தில் கிராம மக்கள் தன் மீது பாய்ந்து தாக்கிவிடக் கூடும் என்று உணர்ந்த வியாபாரி, “”அய்யா, நான் சொல்றதை கேட்டு விட்டு தீர்ப்பு கூறுங்கள்,” என்றான்.

அனைவரும் அவனை உற்றுப் பார்த்தனர். அவன் தன்னிடம் இருந்த கோணிப் பையை அவிழ்த்தான். அதற்குள் ஏகப்பட்ட பணம்! “”இதுக்குள் பத்தாயிரம் பணம் உண்டு. கொள்ளையர்கள் கேவலம் ஆயிரம் பணம் தான் எடுத்துச் சென்றனர். அந்த ஆயிரத்தை காட்டிக் கொடுத்து பத்தாயிரத்தை பாதுகாத்தேன்,” என்றான் வியாபாரி. அதைக் கேட்ட ஆண்டியப்பன், “”அய்யா, உன் பணத்தை காப்பாத்திட்டிங்க… ஆனா என் மக கல்யாணத்துக்கு வச்சிருந்த பணம் போயிடுச்சே,” என்று அழுதான். “”அய்யா, நான் நன்றி கெட்டவன் அல்ல. என் பத்தாயிரத்தை காப்பாற்றிய உங்களை நான் காப்பாற்ற மாட்டேனா,” என்று கூறியபடி ஆயிரத்து ஐநூறு பணத்தை ஆண்டியப்பனிடம் கொடுத்தான் வியாபாரி. அங்கு கூடியிருந்தவர்கள் வியாபாரியின் புத்திசாலிதனத்தை பாராட்டினர்.

குட்டீஸ்களே… எதிர்பாராமல் நடைபெறும் ஆபத்தை புத்திசாலித்தனமாக சமாளிக்கலாம். அப்படி புத்தியால் எந்த ஆபத்தையும் வெல்ல முடியும் என்பதை பார்த்தீர்களா? எனவே, நீங்களும் புத்திசாலித்தனமாக இருங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *