புத்திசாலி கழுதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,501 
 
 

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று புல்மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, “”ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்… நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,” என வேண்டிக் கொண்டது.

“”நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல். எனக்கு பசி அதிகமாக இருக்கிறது,” என உறுமியது ஓநாய்.

“”ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீர் என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உமது தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உமது உயிரை வாங்கி விடவும் கூடும். அதற்கு அருள் கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடும். அதற்குப் பிறகு நீர் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை,” என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, “”இடது காலில் தான் முள் இருக்கிறது!” எனக் கூறிற்று.

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்துப் படுகாயப்படுத்தியது.

கழுதையின் உதை தாளமாட்டாது ஓநாய் துடிதுடித்து வீழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *