புதையல் யாருக்கு?

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,724 
 
 

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான்.

ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான்.

காலையில் தனது நிலத்தில் வேலை செய்வதற்காகப் போகும்போது இரவில் வந்த கனவைப் பற்றி யோசித்தவாறே சென்று கொண்டிருந்தான்.

புதையல் யாருக்கு“என்ன விந்தையான கனவு..!’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அப்போது வழியில் அவனது நண்பன் பாவ் வருவதைக் கண்டான் சங்.

“பாவ், நல்லவேளை நீ வந்துட்டே! உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இரவு ஒரு கனவு

கண்டேன்… அதைப் பற்றி உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்…’ என்றான்.

“ஓ! அப்படியா, என்ன கனவு? சொல்லுப்பா…’ என்றான் பாவ்.

“என் வீட்டுக் கூரையிலிருந்து தங்கக் காசா கொட்டுது… இதுதான் நான் கண்ட கனவு…’ என்று மெல்லக் கூறினான் சங்.

இதைக் கேட்ட பாவ் சொன்னான் –

“உனக்கும் எனக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாரேன்! எனக்கும் இதே மாதிரி ஒரு கனவு வந்தது. ஆனால், எனக்குப் புதையல் கூரையிலிருந்து கொட்டவில்லை. நிலத்தடியிலிருந்து கிடைத்தது!’

இதைக் கேட்டதும் சங்குக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இந்தக் கனவுகள் நிஜமாவதுண்டா?’ என்று ஒன்றும் புரியாதவனாகக் கேட்டான் அந்த அப்பாவி.

“யாருக்குத் தெரியும்? நிஜமானாலும் ஆகலாம்..’ என்றான் பாவ் தோள்களைக் குலுக்கியவாறே.

நண்பனிடம் பேசிவிட்டுத் தனது நிலத்துக்குத் திரும்பினான் சங்.

வழக்கம்போல நிலத்தை உழ ஆரம்பித்தான். உழுது உழுது களைப்படைந்த நேரம், அவனது கலப்பை ஏதோவொரு கெட்டியான பொருள் மீது பட்டு கணீரென்ற சத்தம் வந்தது.

அந்த இடத்தை மேலும் நன்றாகத் தோண்டிப் பார்த்தான். அங்கே ஒரு பித்தளைக்குடம் தென்பட்டது.

“அட்டா, என்ன இது? பித்தளைக் குடம்! ரொம்ப கனமாக வேறு இருக்கிறது! நிச்சயமாக இதற்குள் ஏதோ தங்க வெள்ளி நாணயங்கள் நிறைய இருக்கும்!’ என்று முணுமுணுத்தவாறே, அதைத் திறக்க முயன்றான்.

ஆனால், அவனுக்கு ஏனோ அப்போது பாவ் அவனிடம் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

“அடடா… பாவ் சொன்னானே? பூமிக்கடியிலிருந்து செல்வம் கிடைப்பதாக அவன் கனவுகண்டானே! அப்படியானால் இந்தக் குடம் அவனுக்குத்தான் சொந்தம்… நமக்கு வந்த கனவில் கூரையிலிருந்துதானே தங்கக் காசுகள் கொட்டின.’ என்று நினைத்தவன் அந்தக் குடத்தை எடுத்த இடத்திலேயே வைத்தான். பிறகு பாவ் வீடு நோக்கி நடந்தான். அவனைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லவேண்டுமென்று விரைவாக நடந்தான்.

சிறிது நேரத்தில் பாவ் வீட்டை அடைந்தான்.

அங்கு பாவ் இருப்பதைப் பார்த்தான். அவனிடம், “பாவ், என் நிலத்தில் நான் ஒரு புதையலைக் கண்டேன். அதற்குள் நிறைய தங்கக் காசுகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நிலத்திலிருந்து கிடைத்ததால் அது உனக்குத்தான் சொந்தம். நீதானே அதைப் பற்றிக் கனவு கண்டாய்!’ என்றான் நல்ல குணம் படைத்த சாங்.

இதைக் கேட்டதும் பாவுக்கு வியப்பாக இருந்தது. யோசிக்க ஆரம்பித்தான்.

சரியான முட்டாளாக இருக்கிறானே இந்த சங். கனவுல வர்றதெல்லாம் நிஜமென்று நினைக்கிறான். அதுவும் தனக்குக் கிடைத்த புதையலை, எனக்குச் சொந்தம் என்கின்றான். நல்லதுதான்… இதை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

தனக்குள் சிரித்தும் கொண்டான்.

பிறகு சங்கை நோக்கி, ‘நீ சொல்வது சரிதான். அது எனக்குச் சொந்தமானதுதான். நானே அதை எடுத்துக் கொள்கிறேன்’ என்றான்.

அவசர அவசரமாக சங்கின் நிலத்துக்குச் சென்றான்.

சங் சொன்ன நிலத்தில் அந்தக் குடத்தைப் பார்த்தான்.

குடத்தை உடனடியாகத் திறந்து பார்த்தான். அதிர்ச்சியில் குடத்தைக் கீழே போட்டான்.

‘அட, குடம் நிறையத் தேள்கள்… மயிரிழையில் உயிர் தப்பினேன். ஓஹோ, இப்போதுதான் புரிகிறது. சங் என் மீது ஏன் அவ்வளவு கரிசனம் காட்டினான் என்று. என்கிட்டயா விளையாடுகிறான்? அவனுக்குச் சரியான பாடம் புகட்டுகிறேன்’ என்று எண்ணியபடி அந்தக் குடத்தை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அன்றிரவு. பாவ் மெதுவாகக் குடத்தை எடுத்துக் கொண்டு சங் வீடு நோக்கி நடந்தான்.

யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து சென்று சங் வீட்டுக் கூரை மீது ஏறினான்.

கூரையின் ஓட்டைப் பிரித்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். சங் கீழே தரையில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. இதுதான் சரியான சமயம் என்று நினைத்தவன் குடத்தை அப்படியே சங்கை நோக்கிக் கவிழ்த்தான்.

‘ஹஹ்ஹா… இப்போது பார்க்கலாம் வேடிக்கை…’ என்று நினைத்தபடியே உள்ளே எட்டிப் பார்த்தான்.

ஏதோ விழும் சத்தத்தைக் கேட்டுத் தூக்கத்திலிருந்த சங், திடுக்கிட்டு எழுந்தான்.

அவன் கண்ட காட்சி…. கண்களை அகல விரித்துப் பார்த்தான். தான் காண்பது கனவா நினைவா என்று அவனுக்குப் புரியவில்லை. ஆச்சரியத்துடன் கத்தினான்.

“என்ன இது! தங்கம், வெள்ளி நாணயங்களாகக் கொட்டுகின்றதே! ஓஹோ,, பாவ் மாதிரியே என்னுடைய கனவும் நிஜமாயிடுச்சே… என் வீட்டுக் கூரையிலிருந்து செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றதே!’ என்று வியந்தான்.

கூரையின் மேலிருந்த பாவ், சங் போட்ட சத்தத்தைக் கேட்டு நன்றாக உற்றுப் பார்த்தான்.

“அடடா…எங்கும் மின்னுகிறதே..! தங்கம் வெள்ளி நாணயங்களாக இருக்கின்றதே! என்னால் நம்பவே முடியவில்லையே… தேளுக்கடியில் காசுகள் இருந்திருக்கும் போல… நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். சங்கை ஏமாற்ற நினைத்தது தப்பாகப் போய்விட்டது..’ என்று வருந்தினான்.

இப்போது யோசித்து என்ன செய்வது? தனது குறுக்குப் புத்தியால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டது என்று எண்ணியபடியே வருத்தத்துடன் வீடு திரும்பினான் பாவ்.

– சீன தேசத்துக் கதை – தமிழில் : உம்மு மைமூனா (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *