புதுச்செருப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,344 
 
 

ஒரு நாள் முல்லா, தான் வாங்கிய புத்தம் புதுக் காலணிகளை அணிந்து பெருமிதத்தோடு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். ஆலமரத்து நிழலில் ஒரு சிறுவர் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் முல்லா அணிந்து வந்த புதிய செருப்புக்களைப் பார்த்து விட்டான். “டேய் நம்ம முல்லாஜி போட்டு வரும் செருப்பைப் பாருங்க எவ்வளவு அழகு” என்றான்.

அடேங்கப்பா! என்ன பளபளப்பு! அதில் முகம் பார்க்கலாமே. அதோடு ரசம் பூசப்பட்ட கண்ணாடிச் சில்லுகளைப் பதித்து இருக்கின்றனர். அதில் சூரிய ஒளி பட்டுத் தெறித்து வர்ண ஜாலம் காட்டுகிறது பார்,” என்று சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அப்போது ஒரு சிறுவன், “”டேய் இந்தச் செருப்புகளைத் தந்திரமாக அவரிடமிருந்து பறித்துவிட வேண்டும். செய்யலாமா?” என்றான்.

“”கண்டிப்பாக செய்யலாம்!” என்று எல்லாச் சிறுவர்களும் ஒரே குரலில் ஆமோதித்தனர். இப்படி இவர்கள் திட்டம் போட்டுப் பேசி முடிப்பதற்கும், முல்லா களைப்பு தீர மர நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

“”வாங்க மாமா!” என்று வரவேற்றான் ஒருவன்.

“”என்னடா? பசங்களா, வரவேற்பு பலமாக இருக்கிறது,” என்றார் முல்லா.

“”ஒன்றுமில்லை!” என்றான் ஒரு சிறுவன்.

வேறு ஒருவன் அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தான்.

“”என்னடா?” என்றார் முல்லா எரிச்சலோடு.

அப்போது, கூட்டத்திலிருந்து ஒரு பொடியன் முன்னால் வந்து, “”முல்லா மாமா, இந்த நோஞ்சான் பையன் சொல்கிறான், இந்த ஆல மரத்தின் மீது யாராலுமே ஏற முடியாதாம்!” என்றான்.

“”பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூ உலகமே இருண்டு போய் விடுமா? அவன் சோனியாக இருப்பதால் மரம் ஏற முடியாது. எனவே, யாராலும் முடியாது எனத் தவறாக முடிவு கட்டிவிட்டான்,” என்றார் முல்லா.

“”அப்படி என்றால் உங்களால் முடியுமா?” என்றான் பொடியன்.

“”அது இருக்கட்டும், ஏன் உங்களில் யாராவது ஒருவன் மரம் ஏறிப் பார்ப்பதுதானே,” என்றார் முல்லா. முயன்று பார்த்துவிட்டோம், முடியவில்லை,” என்றான்.

“”அப்படியானால் விட்டுத் தள்ளுங்கள். இந்த மரத்தில் ஏறி விடுவதால் மட்டும் பெரியதாக என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது?” என்றார் முல்லா சாதுர்யமாக.

“”டேய் அவருக்கு வயதாகிப் போச்சுடா அதான் நழுவுறாருடா!” என்றான்.

“”இனிமேல் நாம் அவரை முல்லா மாமா என்று கூப்பிட வேண்டாம். முல்லா தாத்தா என்று கூப்பிடுவோம்,” என்றான் பொடியன் ஒருவன்.

உடனே எல்லா சிறுவர்களும் அவரை, “”தாத்தா! தாத்தா,” என்று கூப்பிட்டுக் கேலி செய்தனர்.

முல்லாவால் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்களைப் பார்த்து, “”யாருக்கு வயதாகிவிட்டது? ஹும் எனக்கா? இதைப் போல் பத்து மரங்களில் ஒரே நாளில் ஏறி இறங்குவேன் தெரியுமா?” என்று சவால்விட்டார்.

“”பத்து மரம் வேண்டாம். இந்த ஒரே மரத்தில் ஏறி இறங்குங்க. அது போதும்!” என்றான் நோஞ்சான் சிறுவன்.

“”அப்பத்தான் உங்களை முல்லா மாமா! என்று கூப்பிடுவோம் என்றனர் சிறுவர்கள்” அனைவரும்.

ஏதோ ஒரு திட்டத்துடன் தான் சிறுவர்கள் தன்னை உசுப்புகின்றனர் என்பதை முல்லா புரிந்து கொண்டார்.

“”இதைவிட நெட்டுக்குத்தான மரத்தில் எல்லாம் நான் ஏறி இறங்கி விளையாடி இருக்கிறேன் தெரியுமா?” என்றார் ஒரு சிறுவனைப் பார்த்து.

“”அதெல்லாம் அந்தக் காலம், இப்போ கிழவராயிட்டீங்க!” என்றான் அவன்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவருக்கு “சுர்’ என்று கோபம் வந்துவிட்டது. என்னையா கிழவன் என்கிறாய்? இப்போதே இந்த மரத்தில் என்னால் ஏறி நான் கிழவனல்ல என்று நிரூபிக்க முடியும் என்று கத்தினார்.

“”எங்கே ஏறுங்களேன், பார்க்கலாம்!” என்றனர் சிறுவர்களும் விடாப்பிடியாக.

வேறு வழி இல்லாமல், முல்லா மரம் ஏறுவதற்குத் தயாரானார். முதலில் செருப்புக்களைக் கழற்றினார். தான் கொண்டு வந்திருந்த பைக்குள் அவைகளைப் போட்டார். பையை இடுப்பில் கெட்டியாக செருகிக் கொண்டு, கிடு கிடு என்று மரம் ஏறினார்.

முல்லா மரம் ஏறும்போது தனது செருப்புக்களை மரத்தின் அடியில் விட்டுச் செல்வார். அவர் மரத்தின் மீது ஏறியவுடன் செருப்புக்களை கிளப்பிச் சென்று விட வேண்டும் என்று சிறுவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

முல்லாவோ முன் எச்சரிக்கையாக, மடியில் �செருப்புக்களை கட்டிக் கொண்டு மரம் ஏறுகிறார். தங்கள் திட்டம் தோல்வி அடைவதைப் பார்த்து சிறுவர்கள் திட்டமிட்டனர். எனவே ஒரு சிறுவன், முல்லாஜி, மரத்தின் மீது என்ன தெருவா இருக்கிறது, “”செருப்பையும் எடுத்துக் கொண்டு ஏறுகிறீர்களே அவைகளைக் கீழே எறியுங்கள்,” என்றான் தந்திரமாக.

“”ஒரு வேளை இங்கு ஏதாவது தெரு இருந்துவிட்டால், நான் மீண்டும் கீழே இறங்கி வந்து அல்லவா செருப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டி இருக்கும். இரண்டு வேலை எதற்கு? அது முட்டாள் தனமல்லவா? ஆகவேதான் செருப்புக்களைக் கையோடு எடுத்து வந்து விட்டேன்,” என்று சொல்லியபடியே மரத்தின் மேல் கிளையில் அமர்ந்து கொண்டார். தங்கள் தந்திரம் பலிக்காததை அறிந்த சிறுவர்கள், “”மாமா நீங்க கிழவரல்ல! கீழே இறங்கி வாருங்கள், நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்,” என்று ஏமாற்றத்தோடு குரல் கொடுத்து அவரை அழைத்தனர்.

முல்லா புன்சிரிப்போடு, மரத்தில் இருந்து இறங்கினார். பெருமிதத்தோடு மடியில் இருந்த செருப்புக்களை எடுத்து கால்களில் அணிந்து கொண்டார். சிறுவர்களை வெற்றிப் பெருமிதத்தோடு ஒரு பார்வை பார்த்தார். பிறகு வீட்டை நோக்கி “டக் டக்…’ என்று நடந்து போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *