பன்றியைக் கொன்று விடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,645 
 

ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார்.
ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ஒரு விஷயம் தெரிந்தது.

திடுக்கிட்டவராகக் கண் விழித்த துறவி, தன் சிஷ்யனை அழைத்தார்.

‘‘அப்பனே, இதுநாள் வரை என்னிடம் நல்லுரைகள் பலவற்றைக் கற்றுகொண்டாய். குருவான எனக்கு என்ன தட்சணை தரப் போகிறாய்?’’ என்று கேட்டார்.

‘‘கடவுளுக்குச் சமமான ஆசிரியர் நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன்’’ என்றான் சிஷ்யன்.

‘‘நான் சொல்லப் போவதைக் கேட்டு வருத்தப்படாதே. என் தீர்க்க தரிசனத்தின்படி, சீக்கிரமே நான் இறந்துவிடுவேன்…’’ என்று சொன்ன துறவி, ‘‘அங்கே பார்’’ என்றார்.

அவர் காட்டிய இடத்தில் நான்கைந்து பன்றிகள் மேய்ந்துகொண்டு இருந்தன. மேலே எல்லாம் சகதி. பன்றிகளிடமிருந்து பொறுத்துக்கொள்ள முடியாத நாற்றம் வெளிப்பட்டது. மிகவும் அழுக்காக பார்க்கவே அருவருப்பாக இருந்தன பன்றிகள்.

‘‘அடுத்த பிறவியில் அதோ முதலாவதாக நிற்கிறதே, அந்தப் பன்றியின் குட்டிகளுள் ஒன்றாகப் பிறப்பேன். இப்போது என் காதருகே இருக்கும் தழும்பு போல அந்தப் பன்றிக்குட்டிக்கும் தழும்பு இருக்கும். நான் பிறந்ததும் என்னை அடையாளம் பார்த்துக் கொன்றுவிடு. பன்றி வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை கொடுத்தவன் ஆவாய்’’ என்றார்.

‘‘அய்யோ, குருநாதர் என்று தெரிந்தும் எப்படிக் கொல்வது? என்னால் முடியாது’’ என்றான் சிஷ்யன்.

‘‘எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று’’ என்று சொன்னார் துறவி. சில நாட்களிலேயே இறந்தும் போனார்.

அவர் சொன்னபடியே அந்தப் பன்றி, சில குட்டிகளை ஈன்றது. அருகில் போய்ப் பார்த்தான் சிஷ்யன். குருநாதருக்கு இருந்தது போலவே ஒரு குட்டிக்கு தழும்பு இருந்தது.

குடிசைக்குள் சென்று ஒரு கத்தியை எடுத்து வந்தான். அந்தப் பன்றிக்குட்டியைக் குத்திக் கொல்லப்போனான்.

‘‘நிறுத்து…’’ என்று மனிதக் குரலில் கத்தியது அந்தப் பன்றிக்குட்டி.

பன்றி பேசுவதைப் பார்த்து சிஷ்யன் மிரண்டு போனான்.

‘‘என்னைக் கொன்றுவிடுமாறு உன்னிடம் கேட்டுக்கொண்டது உண்மைதான். மனிதனாக இருந்து பார்த்தபோது பன்றியின் வாழ்க்கை எனக்குக் கேவலமாகத் தெரிந்தது. பன்றியாகப் பிறந்த பிறகுதான் எனக்கு என் உயிர் எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. விடு, நான் பன்றியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்’’ என்றது பன்றிக்குட்டி.

வெளியான தேதி: 16 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *