பனிமலையின் நாய்க்குட்டி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 64,569 
 

இரநூறு ஆண்டுகளுக்கு முன் “பெருங்குடி” என்ற ஒரு சிறிய கிராமத்தில் பனிமலை என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான். அவனுடன் எங்கும் எப்பொழுதும் அவனுடைய செல்ல நாய்க்குட்டி “சீனு” சுத்திகொண்டிருக்கும்.

சீனு மற்ற நாய்களை போலல்ல. அதற்கு நான்கு கால்கள், “விஷ் விஷ்” என சந்தோஷத்தில் குழையும் வால், இரு காதுகள், ஒரு ஈரமான மூக்கு போன்ற பல அம்சங்கள் சாதரணமாகவே இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் அது சற்று வித்யாசமாக இருந்தது. சீனு மிக அழகாக தமிழில் பேசக்கூடிய அபூர்வ நாய்!

சீனுவிற்கு புத்தகங்கள் படிக்கவும் தெரியும். தொன்மை வாய்ந்த ஓலைசுவடுகளிலிரிந்து கலேலியோவின் விதிகள் வரை அதற்கு எல்லாம் மனப்பாடம்.

கோவில் பூசாரி அதை தெய்வம் என்று நினைத்து வணங்குவார். பனிமலை, அவர் சீனுவை பார்த்த பொழுதெல்லாம் “பைரவா” என்று கன்னத்தில் போட்டுகொள்வதை கண்டு சிரிப்பான். சீனுவும் வாலை ஆடிக்கொண்டு “வவ்வ்” என சிரிக்கும்.

பெரும்மலை ஒன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்த பெருங்குடியில் மொத்தம் நூற்று முப்பத்தைந்து மனிதர்களே வாழ்ந்து வந்தனர். அதில் சில குடும்பங்கள் அக்கிராமத்தினருகில் ஓடிய ஆற்றில் மீன் பிடித்து விற்றனர்.மற்ற சிலர் ஆடு மாடு வளர்த்தனர். சிலர் இரும்பு மற்றும் மண் பொருட்கள் செய்தனர். பனிமலையின் தந்தை இவர்களின் தலைவனாக செயல் புரிந்துவந்தார்.

இவ்வாறு பெருங்குடி கிராமம் காலத்தை சர்ச்சைகளும் துக்கங்களும் இல்லாமல் தம்வழியே எளிமையாக போக்கி வாழ்ந்தது. ஆனால் ஒரு வருடம் எதிர்பார்த்த மாதங்களில் மழை வராமல் போனது. ஆறு வரண்டது. தண்ணீரில்லாமல் மீன் பிடிப்போர் வாழ்வு கடினமானது. ஆடு மாடுகள் வாடின. கினற்றினில் தண்ணீர் அளவு மெதுவாக குறையத்தொடங்கியது.

பெருங்குடியின் அணைத்து குடிமக்களும் பனிமலையின் இல்லத்தின் வாசல் முன் அமர்ந்து அவர்களின் தலைவரின் ஆலோசனை கேட்டனர்.

“நாம் இனி இக்கிராமத்தில் வாழ்வது பயனற்றது,” என்றார் பனிமலையின் தந்தை. “ஆற்றின் பாதையில் நாம் மேற்கே முன்னூறு மைல் சென்றால் என்னுடைய பெரியப்பாவின் கிராமத்தில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். நாமும் அங்கு அவர்கள் பயன் பெற நம் கலைகளும் தொழில்நுட்பங்களும் பகிர்ந்து வாழ்ந்தால் அனைவரும் கவலையின்றி அங்கு வசிக்கலாம்.”

இதை கேட்ட பூசாரி சொன்னார் “ஐயா! நம் கிராமத்தில் வாழும் பைரவமூர்த்தி கோவிலை விட்டு நான் எங்கும் வர இயலாது.”

பெருங்குடியின் முதியோர்கள் அனைவரும் ஒரு குரலில் கூறினர் “எங்களால் இரண்டு மைல் கூட நடக்க முடியாது. எங்களை சுமந்து செல்ல காளை மாடு ஒன்று கூட இப்பொழுது திடமாக இல்லை. அதனால் எங்களையும் விட்டு செல்லுங்கள்.”

இதையெல்லாம் கேட்டு மிக்க சோர்வடைந்தார் பனிமலையின் தந்தை.

தூரதிளிரிந்து பார்த்துக்கொண்டிருந்தனர் பனிமலையும் சீனுவும்.

“இந்த ஊரைவிட்டு போக உனக்கு விருப்பமா பனிமலை?” என்று வினவியது சீனு.

சற்று நேரம் சிந்தனை செய்தான் பனிமலை. “அந்த ஊரிலும் இங்கிருக்கும் வேட்ப மரம், குருவிக்கூடு,மீன் சந்தை, பலாப்பழம்…இவையெல்லாம் கிடைக்குமா?”

“சந்தேகம் தான்,” என்றது சீனு. “எனக்கும் இங்கிருக்கும் மக்களை போல் அக்கிராமத்தினர் நல்லர்வர்களாகவும் எளியவாழ்வை விரும்புவர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.”

இதை கேட்ட பனிமலைக்கு அழுகை வந்துவிட்டது.

“அழாதே! நான் இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டுபிடிக்கிறேன் . சற்று நேரம் பொறு.” என்றது சீனு.

அதன் சிறிய வீட்டிற்குள் புகுந்து தனது புத்தகங்கள் அனைத்தையும் புரட்டி பார்த்தது.

பல மணி நேரமான பிறகுதான் அது வெளியே வந்தது. படித்து படித்து அதனுடைய பெரிய கண்கள் சிவந்திருந்தன.

“ஏதாவது தெரிந்ததா?” என்று பதட்டத்துடன் பனிமலை கேட்டான்.

சீனு தன் காதுகளை பின் வளைத்து வாலை ஆட்டிக்கொண்டு அங்கும் இங்கும் குதித்தது.

“இந்த பிரச்சனையின் தீர்வு உனது பெயரில் ஒழிந்து கொண்டிருக்கிறது!”

“அப்படி என்றால்?”

“அதோ இருக்கிறதே நமது பெரிய மலை! அதில் பனி மூட்டம் உருவாக்கினால் போதும்!”

“பனி மூட்டம் நாம் எப்படி உருவாக்க முடியும்?”

“அதற்கான விடையை பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற ஒரு அமெரிக்கர் நமக்கு கொடுத்துள்ளார்”

“எனக்கு நீ சொல்வது ஒன்றுமே புரியவில்லை சீனு!”

“போக போக புரியும். முதலில் நமக்கு தேவை – இரு 30 அடி பெரிய இரும்பு கம்பிகள், ஒரு சிறிய இரும்பு குச்சி, நமது கொல்லன் வைத்திருக்கும் குட்டி காந்தக்கல். எரிப்பதற்கு விறகு. இதை எல்லாம் மலை உச்சிக்கு எடுத்து செல்ல ஒரு குட்டி தள்ளுவண்டி.”

“மலை உச்சிக்கா?”

“ஆமாம். நாளை காலை நாம் இருவரும் சென்று நமது விஞ்ஞான சோதனையை செய்து வெற்றிப்பெறுவோம்.”

எதுவும் முழுவதாக புரியவில்லை என்றாலும் பனிமலை சீனு சொல்படி அணைத்து பொருட்களையும் ஒரு தள்ளுவண்டியில் சேர்த்து குவித்தான்.

மறு நாள் விடிவதற்கு முன் சீனு அவனை தட்டி எழுப்பதியது.

“புறப்படுவோம் வா!” என்று சொல்லி தன் நான்கு கால்களை உதறிகொண்டு ‘கட கட’ வென மலை ஏற தொடங்கியது.

பனிமலையும் அதன் பின் தன் ஒரு சக்கர கைவண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.

மூன்று மணி நேரம் தளராமல் இருவரும் மலை ஏறினர். கடைசியில் மலையின் உச்சியை அடைந்த போது பனிமலை கை கால் அசைக்க முடியாத சோர்வில் தரையில் சாய்ந்தான்.

சீனு அவர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரை சற்று குடித்துவிட்டு மிக்க களிப்புடன் அங்கும் இங்கும் தாவியது.

“முதலில் அந்த விறகுகட்டைகளை குமித்து தீ மூட்டு.”

பனிமலையும் அவ்வாரே செய்தான்.

“அடுத்து அந்த குட்டி இரும்பு துண்டை தீயின் மேல் வைக்கவும்.”

“எதற்காக?”

“நாம் இப்பொழுது ஒரு சிறு காந்தத்தை உருவாக்கப்போகிறோம். இரும்பு சூடாகியவுடன் அதை இந்த கல்லைகொண்டு அடிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் இரும்பிலுள்ள சிறு அணுக்களெல்லாம் ஒரே திசையில் சீரமைக்கப்படும். பிறகு நமது காந்தக்கல்லைகொண்டு மேற்கை பார்த்து ஒரு பாதியும்,மற்றொரு பாதி தெற்கை நோக்கியும் தேய்த்தால் நமது இரும்பு துண்டு காந்தமாகிவிடும்.”

சீனு கூறியபடி பனிமலையும் செய்தான்.

சற்று நேரத்தில் அந்த சிறு இரும்பு துண்டு ‘பச்சக்’ என்று ஒரு பெரிய இரும்பு கம்பிடம் ஒட்டி கொண்டது.

“இது என்ன ஆச்சரியம்” என்று வியந்தான் பனிமலை.

“இப்பொழுது நாம் இந்த இரு இரும்பு கம்பிகளையும் இதே வாறு தீயிலிட்டு செய்ய வேண்டும். பலமுறை இவ்வாறு அவைகளை செய்தால் அவை பல நாட்களுக்கு காந்த சக்தியுடன் இருக்கும்.”

பனிமலை அதை செய்யும் பொழுது சீனு எங்கோ மறைந்தது. சில நேரம் கழித்து வாயில் பெரிய நூல் பந்தை கவ்வி வந்தது.

“காந்தங்கள் இரண்டும் தயாரா?”

“இரு கம்புகளும் ஒட்டிகொண்டிருக்கின்றன பார்” என்று பெருமையுடன் கூறினான் பனிமலை.

“பிரமாதம்!இப்பொழுது நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். ஒர் இரும்பு கம்பை இக்கர்களில் நிற்கவை. மற்றொன்றை அதன் தலைக்கு மேல், அதே துருவங்கள் பார்க்க, இந்நூலை கொண்டு தொங்க விடு.”

அதை செய்தவுடன் இரு துருவங்களும் எதிர்க்க இரு கம்புகளும் சண்டை போடுவதை போல் ஆடின.

“அற்புதம்! காரியம் முடிந்தது. செல்வோம் வா!” என்று சீனு கீழே செல்ல துவங்கியது.

பனிமலை ஒன்றும் புரியாமல் பின்வந்தான்.

அவர்கள் கீழே வந்த பின், சில மணிகளுக்கு ஒரு முறை சீனு மலையை பார்த்து பேரு மூச்சு விட்டது.

மூன்று நாட்கள் கழிந்தன.

இரண்டு நாட்களில் பெருங்குடியிளிருந்து நாற்பது ஆண்களும் பெண்களும் பயணம் தொடங்க தயாராகினர்.

திடீரென்று சீனு உற்சாகத்துடன் அங்கும் இங்கும் குதித்தது.

மலையை நோக்கி பார்த்த வண்ணம் பனிமலையை “அங்கே பார்!” என்றது.

மலையின் மேல் கரு மேக மூட்டம் தோன்றியது.

சில நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.

கிராமத்தில் அனைவரும் குதூகலத்துடன் ஆடத்தொடங்கினர்.

பனிமலையும் ஆடினான்.

கவலை ஒழிந்தது.

பிறகு பனிமலை சீனுவை அந்த அதிசயம் எவ்வாறு நடந்தது எனக்கேட்டான்.

“எல்லாம் அறிவியல் தான். இரு காந்தங்கள் எதிர்க்கும் பொழுது மின்சாரம் என்ற ஒரு அதிசய நிகழ்வு உருவாகிறது. அம்மின்சாரத்தில் வானத்தின் தண்ணீர் துளிகள் அகப்படும் போது மேகங்கள் உருவாகின்றன. இதை தான் அந்த அமெரிக்கர் எழுதியுள்ளார். நானும் அவ்வாறு ஓர் சிறு சோதனை செய்தேன். வெற்றி அடைந்தேன்.”

பனிமலை தன் நாய்க்குட்டியின் ஞானத்தை கண்டு வியந்தான்

Print Friendly, PDF & Email

1 thought on “பனிமலையின் நாய்க்குட்டி

  1. இன்னும் பல அறிவியல் விடயங்களை எளிதாக தர வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *