மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள் துளிர்த்துச் செழித்துக் கிடந்தன. மழைக்குருவிகள் தாழப்பறந்து கொண்டிருந்தன. அப்போது ரம்யாவின் கையில் பொன்வண்டு ஒன்று வந்தமர்ந்தது. பார்ப்பதற்கு அதுமிகவும் அழகாய் இருந்தது. அந்தப்பொன்வண்டிற்கு மினுமினுக்கும் பச்சைநிறத்தைத் தந்தது யாராக இருக்கும்? இந்தக் கேள்வி மனத்தில்எழ அதனிடம் கேட்டாள்.
“எனக்குத்தெரியாது! ஆனால் பூக்களுக்கு நிறத்தைத்தந்தது யாரோ அவரே எங்களுக்கும் நிறத்தைத் தந்திருக்கக்கூடும்!”- என்றது பொன்வண்டு.
ரம்யாவின் வீட்டுவாசலில் ரோஜாச்செடிகள் உண்டு. அதில் சிவந்த மற்றும் மஞ்சள் நிறப்பூக்கள் பூத்துக்கிடந்தன. ரம்யா அவைகளிடம் சென்று “பொன்வண்டிற்;கும் உங்களுக்கும் நிறத்தைத்தந்தது யார்?”- என்று கேட்டாள்.
“எங்களுக்குத் தெரியாது? ஆனால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு நிறத்தைத்தந்தது யாரோ அவரே எங்களுக்கும் நிறத்தைத் தந்திருக்கக்கூடும்!”- என்றன அவைகள். நிறைய பட்டாம்பூச்சிகள் மலர்களின் தேனைத்தேடி அங்கும்இங்கும் தாவிக்கொண்டிருந்தன. அதில் நீலநிறப் பட்டாம்பூச்சி ஒன்றைத் தடுத்துநிறுத்தினாள் ரம்யா. அதன்pடம் “பொன்வண்டுகளுக்கும் பூக்களுக்கும் உங்களுக்கும் நிறத்தைத்தந்தது யார்?”-என்று கேட்டாள்.
“நாங்கள் வானவில்லை எங்கள்மீது ஆடையாய் போர்த்திக்கொண்டதால் எங்களுக்கு விதவிதமான வண்ணங்கள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்! வானவில்லைதான் கேட்க வேணடும்!”- என்றது அது.
கிழக்குத்திசையில் மேகங்களின் பிண்ணனியில் ஓர் அழகிய வானவில் தெரிந்தது. ரம்யா அதனிடம் போனாள். “பொன்வண்டிற்கும் பூக்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் நிறத்தைத் தந்தது யார்?”- என்று கேட்டாள்.
“ஒரு வில்லைப்போன்று வளைந்துநிற்கும் பிரம்மாண்டமான எனதுதோற்றம் எனக்கே வியப்பைத் தருகிறது! ஒளியிலிருந்து பிறக்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது! ஆனால் நீ சொன்ன யாருக்கும் நான் நிறத்தைத் தரவில்லை! வேண்டுமானால் ஒளியைஉமிழும் சூரியனைச் சென்று கேட்டுப்பார்!”-என்றது வானவில். சுட்டெரிக்கும் சூரியனுக்குச் சற்றுஎட்டத்தில் போய் நின்றுகொண்டாள் ரம்யா. அதனிடம் “நீதான் அனைத்திற்கும் நிறத்தைத் தந்ததா?”- என்று கேட்டாள் ரம்யா.
“நான் தருவது நிறமற்றஒளி! அதாவது வெள்ளைஒளி! ஆனால் சிதறும்போது அந்தஒளி பலநிறங்களாகப் பிரிவது எனக்கே விந்தையாகத்தான் இருக்கிறது! வேண்டுமானால் கடவுளைச்சென்றுதான் கேட்கவேண்டும்!”- என்றது சூரியன்.
கடவுளைச்சந்திக்க நீண்டவரிசை காத்திருந்தது. இருந்தாலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை என்பதால் ரம்யாவால் எளிதில் சந்திக்க முடிந்தது. அவள் எடுத்தஎடுப்பில் கேட்டாள்.
“நீங்கள்தான் அனைத்திற்கும் நிறத்தைத் தந்ததா?”
“ஆம்! எப்போது பிரபஞ்சத்தைப் படைத்தேனோ அப்போதே உயிருள்ளஉயிரற்ற அனைத்திற்கும் நிறத்தைத் தந்து விட்டேன்!”-என்றார் கடவுள். கடவுள்அன்பானவர் கருணையின்வடிவானவர் என்கிறார்கள். இங்கோ அவர் அளந்து பேசுகிறாரே? அவரிடம் மேலும் வார்த்தைகளை கறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள்.
“எதற்காக நீங்கள் அனைத்திற்கும் நிறத்தைத் தரவேண்டும்?”-என்று கேட்டாள்.
“எல்லாம் மனிதர்களாகிய உங்களுக்காகத்தான்! பொறிகளையும் புலன்களையும் படைத்ததோடு நின்றிருந்தால் ஐந்தறிவோடு போயிருக்கும்! ஆனால் நான் உங்களுக்கு ஆறாவதுஅறிவு எனும் பகுத்தறிவைத் தந்துவிட்டேனே! தனதுஉடலில் அழகானவரிகள் இருப்பது ஒரு வரிக்குதிரைக்குத் தெரியாது! ஆனால் உங்களுக்குத் தெரியும்! கூர்மையான சிவந்தநாசியும் பச்சைநிற உடலும் இச்சைதரும்அழகு என்பது ஒருகிளிக்குத் தெரியாது! ஆனால் உங்களுக்குத் தெரியும்! கரைபுரண்டோடும் ஆற்றுநீரில் பொங்கும் வெண்மைநுரை காண்போரைப் பரவசப்படச் செய்யும் என்பதை ஒருஆறு அறியாது! ஆனால் நீங்கள் அறிவீர்கள்? கருப்புதுக்கம் சிகப்புபுரட்சி வெண்மைசமாதானம் என்று உங்களின் உணர்வுகளை நிறங்களோடுத் தொடர்புபடுத்த முடிகிறதே? இது பகுத்தறிவினால் உண்டானதுதானே? அதனால் நிறங்களைப் படைத்தேன்!”- என்றார் கடவுள்.
ரம்யா விடவில்லை. “ஒன்றை உருவாக்கி அதற்குப்பதிலாக மற்றொன்றையும் உருவாக்கி இது என்ன விளையாட்டு?”- என்று கேட்டாள்.
“எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என்னை நீங்கள் உணரவேண்டாமா? அதனால் இந்த விளையாட்டு! நீ நிறங்கள் தரும் சநதோஷங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறாய்! நிறங்கள் திகைப்பையும் அச்சத்தையும் ஏன் துன்பத்தையும் அவலத்தையும் கூட தரவல்லது! அனைத்தும் நாம் இருக்கின்ற இடம் சூழலைப் பொறுத்தவிஷயம்! எங்கும் கவிழ்ந்திருக்கும் இருளின் கருமைநிறம் உனக்கு அச்சட்டுவதில்லையா? ஆளைவிழுங்கவரும் ஆழிப்பேரலைகளின் நீலநிறத்தை நின்று ஆராதிப்பாயா?; நிறங்கள் எனதுபடைப்பின் சிறுபகுதி அவ்வளவே!”- என்ற கடவுள் சற்று இடைவெளிவிட்டு “எதை நீ எங்கு எப்படி ஆரம்பித்தாலும் அது கடைசியில் என்னையே வந்துமுடியும்! ஏனென்றால் தோற்றமும்நான் ஒடுக்கமும்நான்! நான் பரம்பொருள்!”- என்றார் கடவுள். ரம்யா கடவுள்சொன்னதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தபடி மண்டையைச் சொறிந்தாள். பொன்வண்டு அவளைத் தட்டிஎழுப்பியது.
“என்ன ரம்யா பகற்கனவா? எனக்கு நிறத்தைத் தந்தது யார்என்று கண்டுபிடித்துவிட்டாயா?”- கேட்டது அது.
“ஆம்! கடவுள்!”-என்றாள் ரம்யா.
“பச்…இந்தப்பதில்தான் எனக்குத் தெரியுமே! வேறு ஏதும் புதிதாக சொல்வாய் என்று எதிபார்த்தேன்!”- என்ற பொன்வண்டு அவளை விட்டு அகன்று சென்றது.