(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் பச்சைமணி என்னும் பெயருடைய ஒரு சிறுவன் இருந்தான். அவன் சிறு வயதில் ஓரிடத்திலும் அமைதியாக இருப்பதில்லை. வீடுவீடாகச் சுற்றிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடத்தில் அவனை விட்டார்கள். அவன் அங்கும் அமைதியாக இராமல் வகுப்புக்கள் தோறும் அலைந்து திரிந்துகொண்டிருந் தான். பச்சைமணியைக் கண்ட மற்றைய மாணவர்கள், ‘சீ இவன் என்ன இப்படி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்’ என்று கூறி இகழ்ந்தார்கள்.
பச்சைமணி நாளடைவில் பெரியவனானான். அவனுக்குத் திருமணமும் நடைபெற்றது. அப்பொழுது கூட அவன் அலைந்து திரிவதை நிறுத்தவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் பின்தொடரு மன்றோ? வீடு வீடாகப் போய் அமர்ந்துகொண்டு வீண்பேச்சுப் பேசலானான். பல தினங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பிறகு பச்சைமணி தங்கள் வீட்டிற்குவந்து வீண் அரட்டையடித்துப் பொழுது போக்கக்கூடாது என்று கண்டித்தார்கள். பச்சைமணிக்கு ஊரில் மதிப்பே இல்லாமற் போய்விட்டது. பச்சைமணியைக் கண்டவர்கள் ‘ஊர் சுற்றி’ என்று இகழ்ந்தார்கள்.
பச்சைமணிக்குப் பலரும் தன்னை இகழ்வது மதிப்புக் குறைவாக இருந்தது. எங்கும் சென்று சுற்றுவதில்லையென்னும் மனவுறுதியுடன் வீட்டில் தானே மடங்கிவிட்டான். அதன்பிறகு அவனுடைய மதிப்பு ஊரிலே உயர்ந்தது. பலரும் பச்சைமணி நல்லவனாகிவிட்டான் என்று பேசிக்கொண்டார்கள்.
“சையெனத் திரியேல்” (இ-ள்.) சை என – மற்றவர்கள் உன்னைச் சீ என்று இகழு மாறு; திரியேல் – நீ அலையாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,