தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 204,042 
 
 

ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது.

நல்லதென்றால் வைத்துக்கொள்புத்தரைப் பார்த்து, “பெருமானே, அடியேன் தாங்கள் சொல்லியபடி பிச்சையெடுக்கும்போது சிலர் என்னைப் பார்த்து ஏசுகிறார்கள். தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள்… இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டார்.

புத்தர் பெருமான் சிரித்துக் கொண்டே, ‘நல்லதென்றால் வைத்துக் கொள்… இல்லையென்றால் அதை உடனே மறந்துவிடு’ என்றார்.

சீடரோ, “எனக்குப் புரியவில்லையே…’ என்று இழுத்தார்.

புத்தர் இதை விளக்குவதற்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு செல்ல மகன். அவர்கள் வீட்டில் மாடு, கழுதை, கோழி போன்ற விலங்குகளும் பறவைகளும் இருந்தன.

ஒருநாள் அச்சிறுவன் விளையாட்டாக ஒரு கழுதையின் வாலைப் பிடித்து இழுத்துவிட்டான்.

கோபம் கொண்ட கழுதை அவனை ஓங்கி ஓர் உதை விட்டது.

விவசாயி முன்கோபக்காரர். அதனால் மகனை உதைத்த கழுதையைத் தண்டிக்க எண்ணினார்.

ஒரு பெரிய பள்ளத்தில், கழுதையைத் தள்ளினார். பிறகு அருகிலிருந்த மண்குவியலில் இருந்து மண்ணை உள்ளே தள்ள ஆரம்பித்தார்.

கழுதை யோசித்தது.

விவசாயி மண்ணைப் போடப் போட அதிலிருந்து தனது கால்களை விடுவித்துக் கொண்டு விழுந்த மண் மீது ஏறி நிற்க ஆரம்பித்தது.

இவ்வாறே, விவசாயி மண்ணைத் தள்ளத் தள்ள அதனால் உண்டான மேட்டின் மேல் கழுதை ஏறி நின்று கொள்ள ஆரம்பித்தது.

இப்படியே செய்து பள்ளம் முழுவதும் மண் நிரம்பினாலும் கழுதை மண் மீது ஏறி, ஏறி, இறுதியில் வெளியேயும் வந்துவிட்டது.

விவசாயியின் கைகளில் சிக்காமல் ஓடி மறைந்து போனது.

இந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் புத்தர் சிரித்துக் கொண்டே, “இப்போது புரிந்திருக்குமே! உனது கேள்விக்கும் விடை கிடைத்திருக்குமே’ என்று கேட்டார்.

சீடருக்கு எல்லாம் புரிந்து போயிற்று. தலையைத் தலையை ஆட்டினார்.

புத்தரும் சிரித்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இளம் படைப்பாளி
ம.மனோஜ்கிரண், 6-ம் வகுப்பு, பிஷப் ஹீபர்
மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.
மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *