கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,024 
 
 

கதிருக்குக் குழப்பமாக இருந்தது. ‘ரகு, தன் பிறந்த நாள் பார்ட்டிக்கு என்னை ஏன் அழைக்கவில்லை..?’

ரகுவும் கதிரும் திக் ஃபிரண்ட்ஸ். ஒரே பெஞ்சில் உட்கார்ந்து ஒன்றாகப் படித்து ஒரே ரேங்க், அதுவும் முதல் ரேங்க் வாங்குபவர்கள். ஒரு பென்சில் வாங்கினால்கூட தன்னிடம் சொல்லிவிடும் ரகு, கிளாசையே விருந்துக்கு கூப்பிட்டு, தன்னைக் கூப்பிடாததை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அன்று சாயந்திரம் ரகு வீட்டுக்குப் போய் அவனையே கேட்டுவிடலாம் என்று புறப்பட்டான். யாரிடமோ சுவாரசியமாக டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தான் ரகு. கதிர் வந்ததை கவனித்த மாதிரியே தெரியவில்லை.

சங்கடப்பட்டுக்கொண்டே வீடு வந்து தூங்கினான் கதிர். விடிந்தது. பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை அவனுக்கு. வீட்டிலேயே இருந்துவிட்டான். ‘ரகுவுக்கும் கதிருக்கும் ஏதோ பிரச்னை’ என்று புரிந்துகொண்டார்கள் வகுப்புத் தோழர்கள்.

விஷ்ணுவும் விஜயும் வந்து ‘‘நீ எப்படா கதிர் கிளம்பறே?’’ என்றார்கள். அங்கே வந்த சீனு, ‘‘டேய்! அவன் கதிரைக் கூப்பிடவே இல்லைன்னு நினைக்கிறேண்டா!’’ என்றான்.

உடனே விஷ்ணு, ‘‘என்ன, உன்னைக் கூப்பிடலையா? கிளாஸ் பசங்க மொத்த பேரையும் கூப்பிட்டு இருக்கான் தெரியுமா? நேத்துகூட அவன் பேனா கொண்டுவரலைன்னு உன் பேனாவை கொடுத்துட்டு நீ மிஸ்கிட்ட அடி வாங்கினியே, பார்த்தியா அவனை… இப்பவாவது தெரிஞ்சுக்க அவனப் பத்தி’’ என்று பொரிந்தான்.

கதிர் ஏதும் பேசவில்லை. இன்று பள்ளிக்குப் போனால் இதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும் என்று போகவே இல்லை. வீட்டிலும் இருக்கப் பிடிக்காமல், வெளியே நீண்ட நேரம் சுற்றிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்குள் ஏகப்பட்ட ஆள் நடமாட்டம் தெரிந்தது. ஒரே பேச்சுச் சத்தம். யாராக இருக்கும்..? ஆச்சர்யத்தோடு தன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே ரகுவும் வகுப்புத் தோழர்களும்!

கதிர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் சந்தோஷக் கூச்சலை எழுப்பினார்கள்.

ஃப்ரண்ட்ஸ்…’’ என்று ஆரம்பித்தான் ரகு. என்னோட பிறந்த நாளை கதிர் வீட்டுலதான் கொண்டாடணும்னு ஏன் சொன்னேன் தெரியுமா?’’ என்று கேட்டு ஓர் இடைவெளி கொடுத்து நிறுத்தினான்.

அனைவரும் ரகுவை ஆர்வத்தோடு பார்த்தார்கள். ‘‘கொண்டாட இன்னொரு விஷயமும் இருக்கறதால இது ‘டூ இன் ஒன்’ பார்ட்டி! போன மாசம் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடந்தது. அதில் கதிர் ‘இந்தியாவின் பலம்’ என்ற தலைப்பில் வரைஞ்ச ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு. இந்த போட்டியில முதல் மூணு பரிசு வாங்கினவங்களை ஜப்பானுக்குக் கூட்டிட்டுப் போறாங்க.

நம்ம கதிர் முதல் பரிசு வாங்கியது இன்னும் அவனுக்கே தெரியாது. என் மாமா கணேஷ் பிரபல ஓவியர்னு உங்க எல்லோருக்கும் தெரியுமில்லையா? அவர்தான் இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னார். கதிருக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்&னு நான் முன்னாடியே சொல்லலை. கதிரோடு இன்னொருத்தரும் ஜப்பான் போகலாம்’’ என்று சொல்லி முடித்தான் ரகு.

‘‘அது நீயில்லாம வேற யாருடா’’ என்று ரகுவைக் கட்டிக்கொண்டான் கதிர்.

வெளியான தேதி: 16 பெப்ரவரி 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *