(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அவரவர் திறத்தை ஆராய்ந்து காரியங்களில் செலுத்துதல்
சாளுக்கிய நாட்டுப் புலிகேசியை வென்ற பல்லவன் தமிழ்நாட்டுப் பாண்டியரையும் வெல்ல எண்ணித் தன்னிடம் அன்புள்ள ஒரு வீரனைப் படையுடன் அனுப்பினான், அவனுக்கும் நெடுமாறனுக்கும் “சங்கரமங்கை” என்னும் இடத்தில் போர் நடந்தது. நெடுமாறன் சிறந்த போர்வீரன். ஆகையால் நரசிம்மவர்மன் தன் மீது அனுப்பிய படையைத் தோற்கடித்து ஓடச் செய்தான். இதை அறிந்த பல்லவன், தொழில் செய்யும் உபாயங்களை அறிந்து முடிப்பவனுக்கு அல்லாமல் நம்மிடம் அன் புடையவன் என்று இவனை அனுப்பியது தவறு என்பதை அறிந்து, புலிகேசியை வென்ற சிறுத் தொண்டரை வென்று வரும்படி அனுப்பினான். அவர் சோழனையும், பாண்டியனையும் தோற்கடித்து அவர்கள் நாட்டிற்கு அப்பால் ஓடி ஒளிந்து கொள்ளும்படிச் செய்து வந்தார். இவ்விதம் மேற்கொண்ட தொழிலை முடிக்கும் வல்லமையுடையவனிடமே காரியங்களை ஒப்படைக்கும் பொறுப்புப் பல்லவனுக்கு இது முதல் தோன்றியது.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.
வினை அறிந்து = (தொழில் செய்யும் உபாயங்களை) அறிந்து
ஆற்றி = (அதைச் செய்யும்போது செயலாலும், இடையூறுகளாலும் வரும் துன்பங்களைப்) பொறுத்து
செய்கிற் பாற்கு = (எடுத்த காரியத்தை முடிக்கும்) வல்லமையுடையவர்க்கு
அல்லால் = அல்லாமல்
சிறந்தான் என்று = இவன் நம்மிடம் அன்புடையவன் (ஆதலால் இதை இவனிடம் ஒப்புவிக்கலாம்) என்று
ஏவல் பாற் றன்று = (வேறொருவனை) அத்தொழிலுக்கு ஏவுதல் தக்கது அன்று.
கருத்து: மேற்கொண்ட தொழிலை முடிக்கும் வல்லமையுடையவனிடமே காரியங்களை ஒப்படைத்தல் வேண்டும்.
கேள்வி: சிறந்தான் என்று எதை ஏவுதல் கூடாது? ஏன்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.