கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 25,226 
 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொண்டை நாட்டில் சிறந்த ஊர்கள் பல உண்டு. காஞ்சிபுரம் அவற்றுள் புகழ்வாய்ந் தது. பழையகாலத்தில், காஞ்சிபுரம் தலை நகரமாகவும் விளங்கியிருந்தது.

காஞ்சியை அடுத்துப் பல ஊர்கள் விளங்கின. அவற்றுள், தாமல் (அல்லது) தாமப்பல் என்பதும் ஒன்று. அவ்வூரில் அறிவு மிக்க புலவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருடைய இயற்பெயர் கண்ண னார். தாமப் பல் என்ற அவர் ஊருடன் அவர் பெயரையுங் கூட்டித் தாமப்பல் கண்ணனார்’ என்று அவரை எல்லோரும் அழைத்தனர்.

தாமப்பல் கண்ண னார், கல்வியில் கடலை ஒத்தவர். தமிழ் நூல்களை எல்லாம் நன்றாகப் படித்துப் பயின்றவர். அடக்கம் என்ற குணத் தில் சிறந்து விளங்கியவர். தம் கண் முதலிய ஐம்பொறிகளை அவற்றின் விருப்பப்படி விடாமல் தம் விருப்பப்படி அடக்கி அருளாள ராக விளங்கி நின்றார். எல்லா உயிர்களையும் சமமாக நோக்கி, எவ்வுயிர்க்கு எத்துன்பம் வந்தாலும் அத்துன்பம் தமக்கு வந்ததாக எண்ணித் துடிக்கும் நெஞ்சம் பெற்றவர். முடி தரித்து உலகத்தினை ஆளும் மன்னனாயினும், குற்றம் செய்யின் அஞ்சாது எடுத்துக்கூறும் ஆண்மைக் குணத்தினர். இவருடைய அறிவின் ஆழமும், நல்லியல்புகளும் நாடெங்கும் பரவின.

அக்காலத்தில் சோழநாட்டைச் சோழன் நலங்கிள்ளி என்பவன் ஆண்டுவந்தான். இவன் கவிபாடும் செந்தமிழ்ப் புலவன். பாண்டி மன்னனோடு பகைத்துப் போரிட்டு அவனை வென்று அடக்கியவன்.

இவ்வீரனுக்குப் பின் பிறந்தோன் மாவளத்தான் என்போன். மாவளத்தானும் தன் முன்னவனைப்போலவே ஆற்றல் நிறைந்த வன். தமிழ்ப்புலமை நிறைந்த நலங்கிள்ளி போர்க்களத்தையே அவாவினான். ஆனால், அவன் தம்பியாகிய மாவளத்தானோ சிறந்த கல்விக்களத்திலேயே கருத்தைச் செலுத்தினான். மேலும் மேலும் அறிவைப் பெருக்க விரும்பினான். அதனால், தமிழறிஞருடன் உரை யாடுவதை ஓர் உயர்வாக எண்ணினான். தமிழைப் படித்தல் அமிழ்தை உண்ணுதற்குச் சமம் என உறுதிகொண்டான். ‘தமிழமுது, தன்னை உண்டாரை வாழவைக்கும்,’ என்றார் பாரதியார். ஆதலால், தன்னுடனிருந்து தனக்குத் தமிழுணவை ஊட்டவல்ல தமிழறி ஞரை அவன் தேடினான். கண்ணனாரைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவரைத் தன்னுடன் இருக்கும் வண்ணம் கேட்டுக்கொள்ள விழைந்தான். ஒருகால் புலவர்பெருமானுக்குத் தன் கருத்தை அறிவித்தான். புலவரும் அதனை அன்போடு ஏற்றுக்கொண்டு, சோழ நாடு அடைந்தார். புலவரும் புரவலரும் பொருந்திய தமிழ்நேயம் உடையராயினர்.

பொழுது புலர்வதற்கு ஐந்து நாழிகை இருக்கும் அளவில் அரசரும் புலவரும் கண் விழித்தெழுவர். காலையில் உரிய கடன்களை முடித்துக்கொள்வர். கற்றற்கிடமாய தமிழ் மன்றம் சார்வர். அங்கே அழகிய நூல் நிலையம் விளங்கிக்கொண்டிருக்கும். அதன் கண் பல ஓலை நூற்கட்டுகள் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இலக்கணச் சுவடிகள் ஒருபுறம்; இலக்கியச் சுவடிகள் ஒரு புறம்; அறிவியற்கலைகளை அறிவிக்கும் சுவடிகள் ஒருபுறம்; இவ்வாறு இன்னும் பல வகையாகவும் அறிவைப் பெருக்கும் நூல்கள் மிகுந்து விளங்கும். புலவர், பல சுவடிகளிலிருந்து பல கருத்துக்களைக் கூறுவார். அரசன் கேட்டு அறிந்து கொள்வான். அறியுந் தோறும், ‘இவற்றை முன் தெரிந்துகொள்ளா திருந்தேனே’ என எண்ணுவான். இப்போது இப்புலவரால் அறிந்துகொள்ள நேர்ந்தது ஒரு பெரும் பேறு என்று கருதி மகிழ்வான். கேட்டவற்றைப் பலகாலும் நினைப்பான். தோன்றும் ஐயங்களைப் புலவர்பால் கூறுவான். ஏழைகள் செல்வர்களிடம் ஏங்கி நிற்பது போலக், கருத்துக்களை எதிர்பார்த்து நிற்பான். அவர் அன்போடு அவன் ஐயங்களைப் போக்குவார். இங்ஙனம் பல நாட்கள் கழியும். மன்னனுக்கும் அறிவு பெருகியது.

பொழுதுபோக்குக்காக ஓரொரு நாளில் அரசனும் புலவரும் வட்டாடுதல் வழக்கம். வட்டு என்பது சொக்கட்டான் போல்வதோர் ஆட்டம். கவறாடல் பல துன்பங்களைத் தருமன்றோ! ஒருநாள் இருவரும் தமிழ்ச்சொல்லாடி மகிழ்ந்த பின்னர் வட்டாட விரும்பினர். வேலைக்காரர்கள் அறை கீறப்பட்ட பொற் பலகையையும், நன்மணிகள் இழைக்கப்பெற்ற காய்களையும் கொண்டுவந்து வைத்தனர். இருவரும் எதிர் எதிர் இருந்து ஆடினர்.

வெற்றியும் தோல்வியும் ஒருவருக்கே எப்போதும் இருக்கமாட்டா. ஒருகால் வெல்வோர் மற்றொருகால் தோல்வியும் அடைவர். சூதாட்டத்தின் இயல்பு இது. சில நாழிகைவரையில் இருவரும் சமமாக ஆடினர். போகப்போக வெற்றி மன்னனுடைய தாயது; தோல்வி புலவருடையது எனத் துணிந்து கூறும் நிலைமை உண்டாயிற்று. ஆதலின், புலவர் விளையாட்டாக ஒரு சூழ்ச்சி செய்தார். ஆடுதற்கென அமைந்த கவறு (காய்) ஒன்றினை மறைத்தார். கண்ணையும் கருத்தையும் ஆட்டத்திலேயே செலுத்தியிருந்த மன்னன் அதனைக் காணாதிருப்பானோ? சினம் எழுந்தது; தன் பொறுமைக்குணத்தை அறவே மறந்தான். சிறிதும் எண்ணிப்பாராது, வட்டினை எடுத்துச் சட்டெனப் புலவர் மேல் எறிந்தான்.

SangaNool1கவறு புலவரை வன்மையாகத் தாக்கியது. “சோழமன்னனே! மாவளத்தானே! நின்குலப்பெருமையை மறந்தனையே! வலிய பருந்துக்கு அஞ்சி, முன் ‘அரசே! தஞ்சம்’, என்று அடைந்தது ஒரு புறா. அதற்காகத் தன் இன்னுயிரையும் ஈயத் துணிந்து துலைபுக்கனன் சிபி எனும் பெரியோன். அவன் வழி வந்த ஆண்டகையே! பகைவரை அழித்த வீரம் செறிந்த நலங்கிள்ளிக்குப் பின்னவனே! வில்வீரர்க்குத் தலைவனே! இரப்போர்க்கு ஈயும் வள்ளலே! நினக்குச் சினமாகாது. நின்பால் சினத்தை யான் காண்கின்றேன். ஆதலால், நின் பிறப்பில் எனக்கு ஐயம் உண்டாகின்றது,” எனப் புலவர் உடனே இடித்துக்கூறினார்.

மாணவர்களே! புலவர் உள்ளத்தின் வன்மையைப் பாருங்கள்! மண்ணாளும் மன்னன் மாவளத்தான்! ஆயினும், மன்னனுக்கு அஞ்சுகின்றாரா? இல்லையே! ‘நின் பிறப்பில் எனக்கு ஐயம் உண்டாகின்றது!’ என, எவ்வளவு வன்மையான சொல்லைக் கூறுகின்றார். அரசனுக்கு உண்மை அறிவு வரச் செய்வதையே தம் கடமையாகப் புலவர் கருதுகின்றார். தவறு செய்யின், யாவராயினும் அவரைக் கண்டித்து உறுதியுரைகளைக் கூறுவோரே பெரியோர். அவர், தம் உயிர்க்குக் கேடுவரினும் அஞ்சாது நன்மையையும் நலத்தையும் தரும் சொற்களையே சொல்லுவார்கள்.

மன்னன் உள்ளத்தைக் கவர்ந்தோங்கிய சினம் உடனே ஆறியது. அரசன் அறிவு விளக்கம் பெற்றான். நடந்தவற்றை எண்ணினான். “ஐயோ! என்ன செயல் செய்தேன்! சினம் என்னை விழுங்கிவிட்டதே! என்னையே இழந்துவிட்டேனே! என்னே என் இழிவு! கடவுளரும் அஞ்சும் தமிழ் நாவலரின் பெருமையை எண்ணாது வட்டுக்கொண்டு எறிந்தேனே!” எனப் பலவாறாக எண்ணி மனம் வருந்தினான். புலவரை நோக்கவும் அஞ்சினான். தலை சாய்த்து, நாணி வாய்மூடி இருந்தான்.

மன்னவன் மனம் பட்ட பாட்டினைப் புலவரும் அறிந்தார். அவர் மனம் இளகிற்று. ஆதலால், அரசனை நோக்கி, “அருமை அரசே! முதலில் விளையாட்டாகக் கவறு மறைத்தவன் யானே. அதனை ‘விளையாட்டு’ எனக் கருதாது, தவறிழைத்தேன் எனத் தவறாக எண்ணி வட்டினை என்மேல் வீசினை. பின் யான் இடித்துக் கூறிய சுடு சொற்களுக்காக மிக்க துன்பத்தை அடைகின்றன. நா நீட்டிப் பேசிய என் சொற்களுக் கடங்கிப் பெருந்தன்மை நிறைந்து விளங்குகின்றனை. சோழ குலத்திற்கே, தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் குணச் சிறப்புண்டு. நின் பெருமை சிறக்க! நின் வாழ் நாள் காவிரி ஆற்று மணலினும் பலவாகி இனிது வாழ்வாயாக,” என்று கூறி வாழ்த்தினார்.

நீர் கிழிய எய்த வடுப்போலச் சான்றோர் இருவர் கலக்கமும் மாறி மறைந்தது. இருவரும் மீண்டும் தமிழ்ச்சுவையை இடைவிடாது நுகர்ந்து மகிழ்வாராயினர்.

மாணவர்களே! சூதாட்டத்தினும் கொடியதொன்றில்லை. இதனை ஆடுவோர் யாவராயினும் அவர் தம் பெருமையை இழப்பர் என்பது உறுதி. சூதாடியதனால், முடிவேந்தனும் தவறினான்; புலவரும் தம் உயர் நிலைமையை இழந்து முதலில் அவன் சினத்துக்கு இரையாக நேர்ந்தது. இருவருக்கும் மனக்கலக்கம் உண்டாயிற்று. ஆதலால், இக்கொடிய ஆட்டம் அனைவராலும் கடியத்தக்கதாகும்.

“சூது விரும்பேல்” – ஔவை

– சங்கநூற் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *