பண்டையத் தமிழகம்.
எருதுகள் பூட்டப் பெற்ற வண்டிகளிலே உமணர் உப்பு ஏற்றிச் செல்கின்றனர்.
உப்புப் பொதிகள் மிகவும் பாரம் உடையவை. சக்கரங்கள் கிறீச்சிடுகின்றன.
மேடுகளில் ஏறும் சக்கரங்கள் பள்ளத்தை நோக்கி உருள்கின்றன. நறுக்குப் பள்ளங்களில் வீழ்ந்து உப்புப் பொதிகளைக் குலுக்கின்றன. இளைய எருதுகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
இளமை வீறு – பாரத்தை, வண்டியை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. முரட்டுத் தனமாய் இழுக்கின்றன! அச்சு நெளிந்து கொடுக்கிறது. ஆபத்து. அது ஒவ்வொரு கணமும் உடைந்துவிடும் போல் தோன்றுகிறது.
ஒவ்வொரு நாளும் எங்கே அச்சுமுறியுமோ, வண்டி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சந்தான் உமணர்களுக்கு. அவர்கள் அனைவரும் கூடி ஒரு ஏற்பாடு செய்தனர். அதன்படி எல்லா வண்டிகட்கும் சேம அச்சு பூட்டுவதென்று ஏற்பாடாயிற்று. அதன்படி சேம் அச்சு பூட்டப்பெற்றது. வண்டியின் அச்சு முறிவதாயிருந்தால் சேம் அச்சு பயன்படும்.
உமணர்கட்குக் கவலை ஒழிந்தது. வாணிபம் தொடர்ந்தது.
நெடுமான் அஞ்சி என்ற மன்னன் ஆட்சி புரிகிறான். அவனுக்குத் துணையாக, அவன் மகன் பொகுட்டெழினி உதவுகிறான்.
குடிகளுக்குக் கவலை யொழிந்தது. பார வண்டிக்கு வில் போன்று பரந்த நட்பிற்கு பொகுட் செழினி துணை கிடைத்தது. அப்புறம் என்ன? அச்சம் பறந்தது. ஐயம் ஒழிந்தது!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்