தந்தை செய்த தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,799 
 

ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் படிக்க விருப்பம் இல்லாமல், ஊர் சுற்றித் திரியலானார்கள்.

தன்னுடைய நிலத்தை உழுது பயிர் செய்தாலும், குத்தகைக்கு விடுவதற்குப் பதிலாக, லாபம் கூடுதலாகக் கிடைக்குமே என்று விவசாயி கவலைப்பட்டார். மேலும், அவர்கள் எப்படி வாழப் போகிறார்களோ என்று வருந்திக் கெண்டிருந்தார்.

ஒரு நாள், மூத்த மகனைக் கூப்பிட்டு, “உன் தாய் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாவற்றையும் ஒரு குடத்தில் வைத்து, ஊருக்கு வெளியே இருக்கும் நம்முடைய காலியான தோட்டத்தில் புதைத்து வைத்தேன். எனக்கு வயதாகி விட்டது, அதை எடுத்து இப்போது உங்களுக்குப் பங்கு பிரித்து தரலாம் என்று நினைக்கிறேன். ஆனால், எந்த இடத்தில் புதைத்து வைத்தேன் என்பது எனக்கு நினைவு இல்லை, கூலிக்கு ஆள் பிடித்து, மண்ணைத் தோண்டச் செய்து, அதை எடுப்போமானால், தகவல் தெரிந்து, அரசு அதிகாரிகள் வந்து பறிமுதல் செய்து கொண்டு போய் விடுவார்களே என்று பயமாக இருக்கிறது” என்றார்.

நகைகள் என்று சொன்னதும், அவனுக்கு ஆசை மேலிட்டது.

“அப்பா ! வேறு ஆள் வேண்டாம், நானே தோண்டுகிறேன்” என்று கூறி, உடனே மண்வெட்டி எடுத்துக் கொண்டு போய் மண்ணைத் தோண்டத் தொடங்கினான்.

மற்ற மூவரும், அவன் எதற்காகத் தோண்டுகிறான் ? வேலையே செய்யாதவன், இப்போது உழைப்பதற்கு என்ன காரணம்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.

அதை அறிந்த தந்தை, மூத்த மகனிடம் சென்ன தகவலை, மற்ற மூவரிடமும் கூறினார்.

அவர்களுக்கும் ஆவல் உண்டாயிற்று; ஆளுக்கு ஒரு மண்வெட்டி எடுத்துக் கொண்டு சென்று, தோண்டினார்கள்.

இரண்டு ஏக்கர் நிலத்தையும், இரண்டு மூன்று அடி ஆழத்துக்குத் தோண்டி விட்டார்கள். ஆனால், எதிர்பார்த்த குடமோ அகப்படவில்லை. கவலை உண்டாயிற்று.

“நம்முடைய சொத்து, நமக்குக் கிடைக்காமல் போகாது; இப்போது கிடைக்கா விட்டாலும், பிறகாவது கிடைக்கும். இரண்டு ஏக்கர் நிலத்தை தோண்டியதால் எவ்வித நடமும் இல்லை. அதற்குப் பதிலாக, இப்போது வேர்க்கடலை பயிரிட்டால் நல்ல பலன் உண்டு; அது ஒரு குறுவைப் பயிர்; அதைப் பயிரிட்டால், மூன்று மாதங்களில் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார் தந்தை .

அவர் சொன்னபடியே, வேர்க்கடலை பயிரிட்டு, நல்ல லாபம் கிடைத்தது. தங்கள் உழைப்பு வீணாகவில்லை, புதைத்து வைத்தது கிடைக்கவில்லை என்றாலும், பயிரில் அதற்கு இணையாகப் பலன் கிடைத்ததை நினைத்தார்கள்.

தந்தையின் தூண்டுதல் இல்லாமலேயே, அவர்கள் நால்வரும் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி, உழைத்து மகிழ்ந்தனர்.

மக்களை, விவசாயத்தில் எவ்வாறு அக்கறை கொள்ளச் செய்யலாம் என்று தான், செய்த தந்திரம், எளிதில் வெற்றி பெற்றதை நினைத்து, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

உழைத்து உண்பதில் காணும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி!

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *