ஓர் ஊரில் ஓர் அறிவாளித் தாத்தா இருந்தார். இவர் தனது புத்திக் கூர்மையால் மிகவும் சிக்கலான பிரச்னைகளையும் நொடியில் தீர்த்து விடுவதில் வல்லவர். அதனால் அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் எப்போதும் இருக்கும். சாப்பிட்டாரா? ஓய்வு எடுப்பாரே… என்றெல்லாம் பார்க்காமல் மக்கள் சூழ்ந்து கொண்டே இருக்க, அவருக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. பின்னே வராதா? அவரும் மனிதர்தானே? ஆனால் மக்கள் அழைத்தால் “இல்லை’ என்று என்றுமே சொல்லமாட்டார். இவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, சொல்லாமல் கொள்ளாமல் இரவோடிரவாக இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அறிவாளித் தாத்தா அன்றிரவே அதைச் செயல்படுத்தியும்விட்டார். உச்சிப் பகல் வேளையில் அவரின் பயணப் பாதையில் குறுக்கிட்டது ஒரு நீண்ட பாலைவனம். அந்தப் பாலைவனப் பாதையில் ஒருகூட்டம் எங்கோ செல்வதற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. அறிவாளித் தாத்தாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். பாலைவனப் பயணத்தில் அந்நாட்டு மக்கள், தண்ணீர் எடுத்துச் செல்ல பயன்படுத்துவது தோலினால் ஆன ஒரு பையாகும்.
இக்கூட்டத்தில் கஞ்சன் ஒருவனும் பயணம் செய்தான். பலமணிநேரம் நடந்த பின், அக்கூட்டத்தாரிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அக்கஞ்சனிடம் மட்டும் ஒரு தோல் பை நிறைய தண்ணீர் இருந்தது. தாகத்தால் தவித்த மக்கள் அம்மனிதனிடம் தண்ணீர் கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்.
“”100 ரூபாய் கொடுத்தால் இத்தண்ணீர் முழுவதும் உங்களுடையதே…”
“100 ரூபாயா?’ என்று திகைத்த மக்களைப் பார்த்து அறிவாளித் தாத்தா சொன்னார், “”தண்ணீர் குறைவான விலையில் கிடைக்குது… இலவசமாக கிடைக்குது வாங்கிக் கொள்ளுங்கள்…”
மக்கள் அவரையே பார்த்தனர். அவன் 100 ரூபாய்ன்னு சொல்றான். இவர் என்னன்னா தண்ணீர் இலவசம்னு சொல்றாரே. அவர் மீண்டும் மீண்டும் சொல்லவே, மக்கள் 100 ரூபாய் தந்து தண்ணீரை வாங்கிக் கொண்டனர். எல்லோரது தாகமும் தணிந்தது. பயணமும் தொடர்ந்தது.
சில மணிநேரப் பயணத்திற்குப் பின், அந்தக் கஞ்சனுக்கு தாகமெடுத்தது. அவன் மக்களிடம் தண்ணீர் கேட்டான். மக்கள் அறிவாளித் தாத்தாவைத் திரும்பிப் பார்த்தனர்.
அவர் “ஒரு டம்ளர் தண்ணீர் 10 ரூபாய்’ என்றார்.
“என்னது 10 ரூபாயா?’ என்ற கஞ்சன் அமைதியாக நடக்கலானான். சிறிது தூரம்தான் நடந்திருப்பான்.. தாகத்தால் நா வறண்டது. சரி என்ன செய்ய 10 ரூபாய் எடுத்து அறிவாளித் தாத்தாவிடம் நீட்டிய கஞ்சன், “சரி, ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்க…’ என்றான்.
இப்போது அறிவாளித் தாத்தா சொன்னார். “ஒரு டம்ளர் 50 ரூபாய்’ இதைக் கேட்டதும் கஞ்சன் வாயைப் பிளந்தவனாய், “என்னது.. ஒரு டம்ளர் தண்ணி 50 ரூபாயா?’ என்று கேட்டுவிட்டு, 10 ரூபாயை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.
கடும் வெயில். பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல், பயணப்படுவது எளிதானதன்று. நா வறண்டு, இனி ஓர் அடியும் எடுத்துவைக்கமுடியாத நிலை கஞ்சனுக்கு ஏற்பட்டது. ஆபத்துக்குப் பாவமில்லை என 50 ரூபாயை எடுத்து அறிவாளித் தாத்தாவிடம் நீட்டியபடி, தண்ணீர் கேட்டான் கஞ்சன்.
“இப்போ தண்ணீர் 100 ரூபாய் ஒரு டம்ளர்..’ என்ற பதிலைக் கேட்டவன், அழாத குறையாக 100 ரூபாய் தந்து ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கிக் குடித்தான்.
அறிவாளித் தாத்தா சொன்னார். நான் உங்களிடம் முன்பே சொல்லவில்லையா? தண்ணீர் இலவசமா கிடைக்குதுன்னு… உங்க காசு திரும்பக் கிடைச்சிட்டது பாருங்க…’ என்றவர்,
கஞ்சனிடம் திரும்பி, “”உனக்கு தொல்லை கொடுக்கணும் என்பதோ துன்புறுத்த வேண்டும் என்பதோ எங்க எண்ணம் இல்லை. கடவுள் எல்லோருக்கும் இலவசமா தர்ற தண்ணியை பலமடங்கு விலை சொல்லி கொடுத்தியே…. அது ரொம்ப தப்பு. எல்லோரும் சேர்ந்து இருக்கற இடத்துல பொருளைப் பகிர்ந்து உண்ண வேண்டும். மற்றவங்க இயலாமையைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பது மிகவும் அயோக்கியமான செயல். இதை விட்டுவிடு. இனிமே தண்ணீர் வேணும்னா இலவசமாவே வாங்கிக் குடிச்சிக்கோ…” என்றார்.
அறிவாளித் தாத்தாவின் முதிர்ச்சியான பேச்சைக் கேட்ட மக்கள் மகிழ்ந்ததோடு அவருக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்தனர்.
உருது மூலம் : மாயில் கைராபாதி
தமிழில்: உம்மு மைமூனா
ஜூலை 2012