கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 16,589 
 
 

ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர் என்று யாரும் கிடையாது. அவளிடம் இருந்த அந்தக் கோழி ஒன்றுதான் அவளின் சொத்து. தினமும் அது போடும் முட்டையை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

தங்க முட்டை

அவளது குடிசைக்கு அருகில் பணக்காரப் பெண் ஒருத்தி தனியாக வசித்து வந்தாள். அவளுக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. அவளிடம் நிறையப் பொன் பொருள்கள் இருந்தன. என்றாலும், அவள் யாருக்கும் எந்தவொரு பொருளையும் கடுகளவுகூடத் தரமாட்டாள். அவளிடம் அளவிட முடியாதபடி சொத்துகள் இருந்தும், பிறரைப் பார்த்து பொறாமைப்படுவாள். பிறர் மகிழ்ச்சியாக இருப்பது அவளுக்குப் பிடிக்காது. உடனே அவர்களுக்கு ஏதாவது கெடுதல் செய்துவிடுவாள்.

கோழியுடன் அந்தக் கிழவியைப் பார்த்த நாளிலிருந்து அந்தப் பணக்காரப் பெண்ணின் மகிழ்ச்சி பறிபோய்விட்டது. “அந்தக் கோழி தினமும் போடும் முட்டையை விற்றுத்தான் அந்தக் கிழவி இப்படி சந்தோஷமாக வாழ்கிறாளா?’ என்று நினைத்துப் பொறாமை கொண்டாள்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அந்தக் கோழியைப் பிடித்துவந்து, சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். காணாமல் போன தன் கோழியைத் தேடி அலைந்த அந்தக் கிழவி. “ஓ… கடவுளே!… என்னுடைய கோழி என் குடிசையில் இல்லையே. அதை நான் எங்கே போய் தேடுவேன்? ஒருவேளை அந்தப் பணக்கார வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குப் போயிருக்குமோ? அங்கே சென்று பார்ப்போம்’ என்று நினைத்துப் புலம்பியவள், பணக்காரப் பெண்ணின் வீட்டுக்கே சென்றுவிட்டாள்.

அந்தக் கிழவி திடீரென தன் வீட்டுக்கு வருவாள் என்று அந்தப் பணக்காரப் பெண் நினைத்துப் பார்க்கவில்லை. அப்போது அந்தப் பெண், சமைக்கப்பட்ட கோழியை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அந்தக் கிழவி, ஓ…வென அழத் தொடங்கிவிட்டாள்.

“”ஏன் அழுகிறாய்? உன்னுடைய கோழியை நான் பிடித்துக் கொண்டு வரவில்லையே. ஏதோ ஒரு நாய் எடுத்துவந்து என்னுடைய வீட்டு வாசலில் போட்டது. அந்தக் கோழி இறந்திருந்ததைப் பார்த்தேன். அதனால்தான் அதை எடுத்து சமைத்தேன்” என்று பணக்காரப் பெண் கூறினாள்.

ஆனால், அந்த ஏழைக்கிழவி அதை ஒப்புக்கொள்ளவில்லை. “”என்னுடைய கோழி என் குடிசைக்குள்தான் இருந்தது. குடிசையின் கதவும் சாத்தப்பட்டிருந்தது. அப்படி இருக்கும்போது எப்படி நாய் உள்ளுக்குள் நுழைய முடியும்? அந்தக் கோழி ஒன்றுதான் என் மூலதனம். அதை வைத்துதான் நான் பிழைப்பு நடத்துகிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதை மன்னரிடம் சொல்லி எனக்கு நியாயம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட பணக்காரப் பெண் பயந்துபோய், “”நீ நல்ல பெண்மணி அல்லவா? இந்தச் சின்ன கோழிக்குப் போய் ஏன் அங்கெல்லாம் போகிறாய்? அது அந்த நாய் செய்த குற்றம். அதற்காக என்னை எதற்கு தண்டிக்கப் பார்க்கிறாய்? அதற்குப் பதிலாக நான் உனக்கு ஒரு சிறிய கோழியைத் தருகிறேன். அதை எடுத்துக்கொண்டு போ. அது வளர்ந்ததும் முட்டைகள் போடும். அதை வைத்துப் பிழைத்துகொள்” என்று அந்தக் கிழவிக்கு சில ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னாள். சொன்னது போலவே, ஒரு சிறிய கோழியை அந்தக் கிழவியிடம் கொடுத்தனுப்பினாள்.

சில நாள்களுக்குப் பிறகு கோழி நன்கு வளர்ந்து முட்டையிடத் துவங்கியது. முன்பு போலவே அந்த முட்டைகளை விற்று, கிழவி நிம்மதியாக வாழ்ந்து வந்தாள்.

குளிர்காலத்தில் ஒரு நாள் பிச்சைக்காரன் போல் இருந்த ஒருவன் கிழவியின் வீட்டுக்கு வெளியே நின்று தங்குவதற்கு இடம் கேட்டான். இங்கு வருவதற்கு முன்பாகவே அந்தப் பணக்கார வீட்டுப் பெண்ணிடம் இடம் கேட்டதற்கு அவள் மறுத்துவிட்டாள்.

கிழவி, அந்தப் பிச்சைக்காரனுக்குத் தன் குடிசையின் முன் பகுதியில் தங்க அனுமதித்தாள். மேலும் அவனுக்கு சில மரக்கட்டைகளைப் போட்டு நெருப்பு வளர்த்து, குளிர்காய்வதற்கு ஏற்பாடு செய்துகொடுத்து, முட்டையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்தாள். அந்தப் பிச்சைக்காரன் சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலை வரை அங்கு தங்கியிருந்தான்.

விடிந்ததும் அந்தப் பிச்சைக்காரன் அந்தக் கிழவியைப் பார்த்து, “”தாயே! நீங்கள் சமைத்துக் கொடுத்த முட்டை உணவு மிகவும் சுவையாக இருந்தது. நான் திருப்தியாக சாப்பிட்டேன். நன்றி!” என்று கூறி, அந்தக் கோழியைத் தன் கையால் தொட்டுவிட்டு அவள் குடிசையை விட்டுப் போய்விட்டான்.

வழக்கம் போல அன்றும் அந்தக் கோழி முட்டை போட்டது. ஆனால், வழக்கமாக போடும் முட்டையாக அது இல்லாமல் தங்க முட்டையாக இருந்தது. தொடர்ந்து அந்தக் கோழி தினமும் தங்க முட்டைகளாகப் போட்டது. கிழவி தங்க முட்டைகளை விற்று, சில நாள்களிலேயே மிகப்பெரிய பணக்காரி ஆகிவிட்டாள். புதிதாக வீடுகட்டி அதில் வசிக்கவும் செய்தாள்.

பணக்காரப் பெண், “ஏழைக் கிழவிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அவள் இவ்வளவு பெரிய வீடுகட்டியது எப்படி?’ என்பது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, “தான் கொடுத்த அந்தச் சின்னக் கோழியால்தான்’ என்று கேள்விப்பட்டு மிகுந்த பொறாமை கொண்டாள். உடனே அவள், அந்நாட்டு மன்னரிடம் சென்று தன்னுடைய கோழியை அந்தக் கிழவி திருடிச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினாள்.

மன்னர் அந்தக் கிழவியை வரவழைத்து விசாரித்தார். அவள் மனக்கலக்கத்துடன்

“”மன்னா! நான் இதுபோன்ற முட்டாள்தனமான செயலை என்றைக்குமே செய்யமாட்டேன். இதற்கு முன் அந்தப் பணக்காரப் பெண்தான் என் கோழியைப் பிடித்துச்சென்று சமைத்துத் சாப்பிட்டாள். ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு, என்னைச் சமாதானப்படுத்தி எனக்கு அவளிடம் இருந்த இந்தக் கோழியைத் தந்தாள். மன்னா! நான் குற்றவாளி அல்ல; ஒன்றும் அறியாதவள்” என்று பதில் கூறினாள்.

ஆனால், பணக்காரப் பெண் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஏழைக்கிழவி தன்னிடம் இருந்த கோழியை எடுத்துச் சென்றதாகவே மன்னரிடம் தர்க்கம் செய்தாள்.

மன்னர் இருவரையும் பார்த்து, “”சரி, இப்போது அந்தக் கோழி என்னிடம் இருக்கட்டும். நாளை இருவரும் என்னிடம் வாருங்கள். நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன்” என்றார். அந்தக் கிழவி மன்னரிடம் தந்துவிட்டுச் சென்ற கோழி அன்றைக்கு ஒரு தங்க முட்டை போட்டது.

அடுத்த நாள் இருவரும் மன்னரிடம் வந்தார்கள். “”இருவரும் கவனமாகக் கேளுங்கள். தினமும் அந்தக் கோழி போடும் முட்டையின் அளவு எவ்வளவு என்று கூறுங்கள்?” என்றார் மன்னர்.

“”மன்னா! தேங்காய் அளவு” அவசரமாகப் பதில் கூறினாள் அந்தப் பணக்காரப் பெண்.

ஆனால், ஏழைக் கிழவி, அந்தக் கோழி தினமும் ஒரு சிறிய தங்க முட்டை போடுவதை மன்னனிடம் பணிவுடன் ஒப்புக்கொண்டாள். மன்னர் அந்தக் கோழியை ஏழைக் கிழவியிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப் பணக்காரப் பெண்ணுக்குத் தண்டனை வழங்கினார்.

– ஆங்கிலத்தில்: பி.ஜி. ரமேஷ்
தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா (ஏப்ரல் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *