கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 32,943 
 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. ஜூலியஸ் ஸீஸர் : ரோமின் ஒப்பற்ற வெற்றி வீரன், படைத்தலைவன் – பொது மக்கள் மனங்கவர்ந்த முடிசூடா மன்னன்-கிளர்ச்சிக்காரரால் கொலையுண்டவன் –ஸீஸர் ஆவி.
2. அந்தோணி : வீரன், ஆனால் இன்ப வாழ்வினன். கேளிக்கை விருப்பினன் nஸர் நண்பன் – நாத்திற மிக்க பேச்சாளி – கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.
3.காஸியஸ் : ஸீஸரைக் கொல்ல முயன்ற கிளர்ச்சிக்காரருள் முதல்வன் – அரசியல் சூழ்ச்சி அறிந்தவன்.
4. புரூட்டஸ் : ஸீஸர் நண்பன் – உயர் குடியாளன் – தன்னலமற்ற உயர் நெறியாளன் – காஸியஸின் தூண்டுதலால் கிளர்ச்சிக்காரர் தலைவனானவன் – அரசியல் சூழ்ச்சியறியாதவன்.
5. அக்டேவியஸ் ஸீஸர் : ஜூலியஸ் ஸீஸர் மகன் – சூழ்ச்சித். திறத்தால் அந்தோணியையும் பிறரையும் இயக்கிக் கிளர்ச்சிக்காரரை ஒடுக்கியவன்.
6. லெப்பிடஸ் : அந்தோணிக்கும் அக்டேவியஸுக்கும் துணை தந்து கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.

பிற கிளர்ச்சிக்காரர்
7. காஸ்கா.
8. ஸின்னா.
9. திரெபோனியஸ்.
10. மெதல்லஸ் ஸிம்பர்.
11. தெஸிமஸ் புரூட்டஸ்.
12. ஸிஸரோ – ரோம அரசியல் மன்றத்துப் பெருஞ் சொல்லாளர்.

பெண்டிர்
1. கல்பூர்ணியா : ஜூலியஸ் ஸீஸரின் மனைவி.
2. போர்ஷியா : புரூட்டளின் மனைவி; கதோ என்ற உரோம அறிஞரின் மகள்.

கதைச் சுருக்கம்

ரோமின் ஒப்பற்ற வெற்றிவீரனும் படைத்தலைவனுமான ஜுலியஸ் ஸீஸர் பொதுமக்கள் உள்ளங் கவர்ந்து முடிசூடா மன்னனாய் விளங்கினான். அவன் நண்பன் அந்தோணியோ நகர் விழாவின்போது மும்முறை முடியை அவனுக்குப் பொது மக்கள் சார்பாக அளிக்கவே, பெருமக்கள் பொறாமை கொண்டனர். அவனைக் கொலை செய்யச் சூழ்ச்சி செய்தனர்; அதில் தலைவன் காஸியஸ். நாட்டுப்பற்றும் விடுதலைப்பற்றும் மிக்க புரூட்டஸ் காஸியஸின் தூண்டுதலால் அதன் தலைமைப்பெயர் ஏற்றுக் காஸியஸின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையானான்.

நகர் விழாவின் போது ஆண்டியொருவன் ஸீஸரிடம் “உன் பெருமையெல்லாம் மார்ச் நடுநாள் என்னாகிறது பார் என்றான். மார்ச் நடுநாள் அரசியல் மன்றக் கூட்டம், கிளர்ச்சிக்காரர் அவனைக் கொல்லத் திட்டப்படுத்திய நாள் அது ஸீஸர் தன் மனைவி கல்பூர்ணியா, கனாவையும் பொருட்படுத்தாது சபையில் தன்னை எச்சரிக்கவந்த நண்பன் அர்த்தெமிதோரஸையும் புறக்கணித்துக் கொலையுண்டான். அதன்பின் ஸீஸர் பிணத்தின் முன்னிலையில் பேச அந்தோணியோ இணக்கங் கேட்டான். காஸியஸிற் கெதிராக அதற்குப் புரூட்டஸ் இடங்கொடுக்க, அந்தோணியோ நாத்திறத்தால் மக்களைக் கிளப்பிக் கிளர்ச்சிக் காரரை வெளியே துரத்தினான். இத்துன்பச் செய்தி கேட்டு புரூட்டஸ் மனைவி போர்ஷியா இறந்தாள்.

புரூட்டஸின் நேர்மையால் பணவருவாய் வகையில் அவ னுக்கும் புரூட்டஸயக்கும் பூசல் நிகழவும், அந்தோணியுடன் சேர்ந்து லெப்பிடஸ் என்பவனும் ஸீஸர்மகன் அக்டேவியஸ் ஸீஸரும் சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதனாலும், போர்ஷி யா பிரிந்த செய்தி கேட்டும், புரூட்டஸ் உயர்வைக் கண்டும் காஸியஸ் தன் வாழ்வை அவனிடமே ஒப்படைத்துப் பிலிப்பிப் போரில் மாண்டான். முன்னிரவில் ஸீஸர் ஆவி கண்டு முடி வறிந்த புரூட்டஸும் தன் வாளில் வீழ்ந்திறந்தான். அக்டேவி யஸ்கட அவன் உயர்வறிந்து பெருமைப்படுத்தினான்.

ஜூலியஸ் ஸீஸர்!

க. குடியரசும் முடியரசும்

ரோம் இத்தாலியின் தலைநகரமாகும். இத்தாலி பண்டைக்காலத்தில் ஒரு குடியரசு நாடாக இருந் தது. ஆனால் பெயரளவில் அதன் ஆட்சி பொது மக்கள் சார்பா யிருந்தபோதிலும், உண்மையில் பத்ரீசியர்.4 என்று வழங்கப்பட்ட பெருமக்களே அங்கே எல்லாவகையான உரிமைகளையும் கை யாண்டு வந்தனர். பொதுமக்கள் 5 வரவர விழிப் படைந்து தொகையிலும் ஆற்றலிலும் மிகுந்து வந்தபோதெல்லாம் பெருமக்கள் பொதுமக்கள் இவ் விருதிறத்தினரிடையே அடிக்கடி பூசலும் போட்டியும் நிகழ்ந்துவந்தன.

ரோம் நகர் நாளடைவில் இத்தாலியையும் அந் நாளைய நாகரிக உலகின் பெரும் பகுதியையும் வென்றடக்கி உலகப் பேரரசாக விளங்கிற்று. அப் பேரரசை நிலைநாட்ட உதவிய பெரிய வீரர்களுள் ஜூலியஸ் ஸீஸரே முதன்மையானவன். அவன் கல்லியா! பிரித்தானியா முதலிய பல நாடுகளை வென்றடக்கி அவற்றின் குறுநில மன்னர்களைச் சிறை பிடித்ததோடு அவர்களிடமிருந்து கணக்கற்ற பொருளைத் திறையாகவும் பெற்றான்.

அவன், தன் வெற்றிகளைப் பகட்டாகக் கொண் டாடியும், பொதுமக்களுக்கும் அவர்கள் தலை வர்களுக்கும் தான் திறையாகப் பெற்ற பொருளை வாரி இறைத்தும் அவர்கள் மனத்தைக் கவர்ந்தான். இவ்வகையில் அவனுக்கு உடனிருந்து வலக்கை என உதவியவன் மார்க்கஸ் அந்தோணி’ என் பவன். இவ்வந்தோணியும் நண்பர்கள் இன்னும் சிலரும் பொதுமக்களின் துணைகொண்டு ஸீஸரைப் பேரரசராக்கி முடிசூட்ட வேண்டுமென்ற முயற்சியில் முனைந்தனர்.

இங்ஙனம் பொதுமக்கள் துணை ஸீஸருக்கு மிகுந்து வரவர, அவன், பெருமக்கள் பால் அசட்டையாயிருக்கத் தொடங்கினான். முன் இருந்த தலைவர்களைப்போல் அவன் அவர்களுக்குத் தனி உயர்வும் தனி உரிமைகளும் கொடுப்பதில்லை. இதைக்கண்டு அப்பெருமக்களுட் பலர் அவனை வெறுத்தனர். சிலர் அவனுடைய வெற்றிகளையும் புகழையும் கண்டு அவன் மீது பொறாமை கொண்டனர். அத்தகைய பகைவருள் காஸியஸ் என்பவன் ஒருவன். அவன் மக்களின் நடையையும் உள்ளப் போக்கையும் அறிவதிலும் அவர்களை இயக்கி நடத்துவதிலும் அருந்திறனுடையவன். ஆகவே ஸீஸரை யார் யார் வெறுப்பவர்கள் என்று கண்டு, அவர்களை அவன் ஒரு கட்சியாகத் திரட்ட முயற்சி செய்துவந்தான். ஆண்டுதோறும் அந் நகரில் நிகழ்ந்து வந்த நகரக் கால்கோள்விழா இவ்வகையில் அவனுக்கு மிகவும் உதவியாயிருந்தது.

அவ்வாண்டு விழாவின்போது ஸீஸர் அந்தோணியுடன் கவலையற்று அவ்விழாக் கூட் டத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தான். அந் தோணி ஒருவனே அன்று அவனுடன் நெருங்கி உறவாட முடிந்தது. பிறரையெல்லாம் ‘காஸ்கா’ என்ற ஒருவன் அவர் பக்கம் வராதபடி அடித்துத் துரத்தினான். அதுகண்டு பலருக்கும் முகம் சிவந் ததைக் காஸியஸ் கவனித்தான்.

அவன் பார்வை சிறப்பாக மார்க்கஸ் புரூட்டஸ் என்பவன்மீதே சென்றது.

மார்க்கஸ் புரூட்டஸ் ரோமின் மிகப் பழைய பெருங்குடி ஒன்றைச் சேர்ந்தவன். ரோமில் முடியாட்சியை வீழ்த்திக் குடியாட்சியை நிறுவிய பெருந் தலைவனாகிய ஜூனியஸ் லூஸியஸ் புரூட்டஸின் வழி வந்தவன். ஸீஸரும் அவனும் தமக்குள் அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். அப்படியிருந்தும் ஸீஸருடைய அரசியலின் போக்கில் அவனுக்கு விருப்பமில்லை. எழுநூறாண்டுகளாக நிலை பெற்றிருந்த குடியாட்சியை அழித்து ஸீஸர் முடி யரசை நிறுவ முயல்வது அவனுக்குத் தாங்கமுடி யாத துயரைத் தந்தது. எனவே நட்பு ஒருபுறமும் கொள்கை ஒருபுறமுமாக அவன் மனத்தகத்தே போராடின.

விழா நாளன்று அவன் ஸீஸரது தற்பெருமை யையும், ஸீஸருடைய நண்பர்களது சிறுமையை யுங் கண்டு, தனது களங்கமற்ற முகத்தில் வெறுப் பும் ஏளனமுந் தோன்றப் புன்முறுவல் கொண்டு நின்றான்.

இதனைக் கூர்ந்து கண்டுகொண்ட காஸியஸ் அவன் பக்கம் வந்து நின்று பேச்சுக்கொடுத்து, ஸீஸரைப்பற்றியும், நகராட்சி முறையைப்பற்றி யும் அவன் கொண்டிருந்த கருத்துக்களை நயமாக உசாவி அறிந்துகொண்டான். அதன்பின் அவன், ‘என் அரிய நண்ப, நானும் அன்பர்கள் பலரும் இதுபற்றியே உன்னுடன் கலந்தாராயவேண்டுமென்று நெடுநாளாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ சாம்பவான்மாதிரி உன் உயர்வையோ, பிறர் உன்னைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணங்களையோ அறியமாட்டாதவனாய் இருக்கிறாய்! ரோம் நகர மக்கள் ஸீஸரின் கொடுங்கோன்மையைத் தாங்கமுடியாது வருந்துகிறார்கள். குடியாட்சிக்கொரு குலதெய்வமாகிய புரூட்டஸின் குடும்பத்திற் பிறந்த நீதான் இதில் அவர்களுக்கு வழிகாட்டியாய் நிற்கவேண்டு மென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,’ என்றான்.

புரூட்டஸ் : நான் எங்ஙனம் வழிகாட்டுவது? ஸீஸரோ என் அன்பார்ந்த நண்பனாவன். அவன் ஒப்பற்ற வீரமும் பெருந்தன்மையும் வாய்ந்தவன். ரோம் நகருக்கே–ஏன், உலகிற்கே பேரொளி போன்றவன். அப்பேரொளியே புகையடைந்து விட்டால் அதனை எதைக்கொண்டு விளக்குவது?

காஸியஸ் : என்ன புரூட்டஸ்! நீயே இப்படிக் கூறினால் பின் அறியாதவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? அவன் நண்பனானால் என்ன, வீரன் ஆனால் என்ன? அதற்காக நாம் நம் ஆண்மையையும் நாட்டின் நலனையும் அவனுக்குப் பலி கொடுக்கவேண்டுமா?

புரூட்டஸ் : உண்மை, நீ சொல்வது உண்மை. அவனிடம் நான் மிகுந்த பற்றுடையவனே யாயி னும் தாய்நாட்டினிடம் அதனினும் மிகுந்த பற் றுடையேன். அவனிடம் எவ்வளவு அன்புடையேனாயினும் அதற்காகத் தன் மதிப்பை விட்டுக் கொடுக்கமாட்டேன். ஆனால், இவ்வகையில் நாம் என்னதான் செய்யக்கூடும்?

காஸியஸ் விடை பகருமுன், விழாக் கூட்டத் தின் பக்கமிருந்து ‘கொல் கொலோ கொல்’ என்ற பேராரவாரம் கேட்டது. அதுகேட்டுப் புரூட்டஸ் ‘நான் கேள்விப்பட்டபடி ஸீஸருக்கு அவ் வந் தோணியின் முயற்சியால் முடி அளிக்கப்பட்ட தென்றே அஞ்சுகின்றேன்,’ என்றான்.

காஸியஸ் : இப்படி நாம் செயலற்று அஞ்சிக் கொண்டிருப்பதனாலேதான் ஸீஸர் நமது பொது வாழ்வை அவமதித்து மிதிக்கமுடிகிறது. அதனால் இன்று அவர் உலகளந்த பெருமாளாக மண்ணும் விண்ணும் தொட்டு நிற்கிறார். நாமும் அவர் காலடியில் நின்றுகொண்டு அவர் முழந்தாள்களை அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கிறோம். இது யார் குற்றம்? அவரவர் விதிக்கு அவரவர் மதிதான் காரணமேயன்றிப் பிறர் காரணமாவரோ? அவனும் நாமும் பிறந்தபோது ஒன்று போல் மனிதராகத்தானே பிறந்தோம்? பின் அவனை மனிதனாக நடக்கச் சொன்னவர்களும் இல்லை, நம்மைப் புழுக்களாய் அவன் காலடியிற் கிடந்து நெளியச் சொன்னவர்களும் இல்லை. இதோ பார்! நீதான் இருக்கிறாய்! நீ புரூட்டஸ், அவன் ஸீஸர்! புரூட்டஸுக்கும் ஸீஸருக்கும் என்ன வேற்றுமை? ஆனால் நீ புரூட்டஸாக நடந்து கொண்டால்தானே!

புரூட்டஸ் மனத்தில் இச்சொற்கள் பசுமரத் தில் கூரம்புகள் பாய்வதுபோற் பாய்ந்து பதிந்தன. அவன் ஒன்றிரண்டு வினாடிகள் செயலற்று நின்று, பின் ‘சரி காஸியஸ், நீ கூறியதை மறவேன். அதைக் குறித்து மீண்டும் கலந்து ஆராய்வோம். இதோ ஸீஸரும் அவர் கூட்டத்தாரும் வருகிறார்கள்,’ என்று கூறினான்.

உ.கிளர்ச்சித் திட்டம்

ஸீஸர் திரும்பி வந்தபோது காஸ்கா முன் போல் கூட்டத்தை அடித்துத் துரத்திக்கொண்டு முன்னால் வந்தான். ஸீஸர் அப்போது அந்தோணியின் தோள்கள்மேல்–ஓட்டப் பந்தயத்திற்கென ஆடையின்றி அரைக் கச்சையுடன் வரும் இளைஞனாகிய அந்தோணியின் தோள்கள்மேல் – கை போட்டுப் பேசிக்கொண்டே வந்தான்.

அச்சமயம் அவனது உடை பேரரசர்க்குரிய கருஞ்சிவப்பு உடை; அவன் கண்பார்வை உலகெலாம் தனதெனப் பார்க்கும் பார்வை.

அவன் வாழ்க்கையின் கோள் உச்ச நிலையை அடைந்த நேரம் அது. உலகத்தை ஆளும் ரோம் நகர் அவன் காலடியிற் கிடந்து அவன் ஆணைக்குக் காத்து நின்றது. அந்தோணி அவனுக்குப் பொது மக்கள் சார்பாக உலகின் மணிமுடியை அளித் தது சற்றுமுன் தான். அதனை அவன் மேற்போக் காக மறுத்தும் அது பேராரவாரத்தினிடையே மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அவனுக்கு அளிக்கப் பட்டது. அவன் இனி அதை அடைவது உறுதி. அடைவது என்று என்பது தெளிவாகவேண்டி யது ஒன்று தான் குறை. அதுவும் பெரும்பாலும் அவ் வாண்டின் மார்ச்சுத் திங்கள் நடுநாள் (மார்ச்சு ஐந்தாம் நாள்) கூடவிருக்கும் அரசியல் மன்றக் கூட்டத்தில் வைத்து நிறைவேறக்கூடுமென்று அவன் நண்பர்கள் கூறிக்கொண்டார்கள்.

ஆனால் ஊழின் போக்கை யாரே மதிப்பிட் டறியக்கூடும்? அவன் வாழ்க்கையின் வெள்ளி உச்ச நிலையை அடைந்த அதே நேரத்திலே தான் அதன் தூமகேதுவும் வானில் எழுந்தது என்னல் வேண்டும்!

பெருமக்களும் மன்னரும் அவனை அணுக அஞ்சிய அந்த நேரத்தில், ஆண்டி ஒருவன் எப்படியோ எல்லோரையுங் கடந்துவந்து அவன் முன் நின்றான். முதற்பெரும் பூதங்கள்கூடக் கேட்க அஞ்சிய அவனது பெயரை அவ்வாண்டி கூசாது உரக்கக் கூறுகிறான்! ‘ஸீஸர், ஏ ஜூலியஸ் ஸீஸர்!’ என்ன அடம்!!

அவன் உடல் ஒடுங்கியிருப்பினும் இருப் புலக்கைபோல் உறுதியுடையதாய் இருந்தது. அவன் உடுத்தியிருந்த உடை தாறுமாறாகக் கிழிந்த அழுக்குக் கந்தைகளேயாயினும் அவை காற்றி லசைந்து அவன் உரமிக்க உடலை வெளிப்படுத் தும்போது, அவை அவன் உடல் வலியை எடுத் துக்காட்டும் வீரக்கச்சையோ என்னும்படி விளங்கியிருந்தன்.

அவன் அச்சமற்றுத் துணிகரமான குரலில், ‘ஸீஸர், ஏ ஜூலியஸ், ஸீஸர்! உன் பெருமை யெல்லாம் மார்ச்சு நடுநாள் என்னாகிறது பார்! என்று அதட்டிக் கூறி மறைந்தான். அவன் போய்ச் சிறிதுநேரம்வரையில் ஒருவருக்கும் தன் உணர்வு வரவில்லை. ஸீஸரது பெருமிதமும் அவ னைச் சுற்றி வந்தவரது களிப்பும் மீளுதற்கின்றி மறைந்தோடின. அவர்க ளனைவரும் சூனியக்காரியின் பின் செல்லும் பேயுருக்கள்போல ஸீஸரைப் பின்பற்றிச் சென்றனர்.

ஸீஸருடன் வந்த அவன் மனைவி கல்பூர்ணி யாவோ ஓந்தியைக் கண்ட மயிலென நடுங்கிக் கண வன் தோள்களைப்பற்றி அதன்மேற் சாய்ந்தாள். அவளது இதயத் துடிப்பு அவன் தோள்களிலும் துடித்தது. அவனும் உள்ளூரச் சற்றே துணுக் குறினும், தன் மனைவிக்கும் பிறர்க்கும் ஊக்கமளிக் கும்வண்ணம் வலியப் புன்முறுவலை வருவித்துக் கொண்டு, ‘அவன் ஒரு பித்தன்போலும்! அவன் சொற்களை. ஒரு பொருட்டாக எண்ணுவார்களா,’ என்றான்.

Shakespeare6காஸியஸ் அக்கூட்டம் தன்னைக் கடந்து செல் அலும் அந்நேரத்திலேயே, அதனிடையே முன்னைய எழுச்சியின்றி ஒதுங்கி நடந்துவரும் காஸ்காவைத் தன்பக்கமாகச் சட்டையைப் பிடித்திழுத்து நிறுத்திக்கொண்டான். அவன் மூலமாகக் காஸியஸ் அன்று கூட்டத்தில் நடந்தவையனைத்தையும் அறிந்துகொண்டதன்றி, அவன் ஒரு நல்ல சமய சஞ்சீவி என்பதை உணர்ந்து அவனிடம் பக்குவமாகத் தன் எண்ணங்களைத் தெரிவித்துத் தனது கிளர்ச்சித் திட்டத்துக்கு அவனை உடந்தையாக்கிக் கொண்டான்.

விழாக் கழிந்த சில நாட்களுக்குள்ளாக அவ் விருவர் முயற்சியாலும் திரெபோனியஸ்’, தெஸிமஸ் புரூட்டஸ், ஸின்னு, மெதெல்லஸ் ஸிம்பர் முதலிய இளைஞர் பலர் அவர்களுடன் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் காஸியஸ் குறிப்பறிந்து துணிகரமாக எச் செயலையும் செய்ய இறங்குபவர்களே. ஆயினும் பொதுமக்கள் மதிப்பையும் அன்பையும் பெறும் வகையில் காஸியஸாயினும் சரி, அவனைச் சேர்ந்த வர்களாயினும் சரி, மிகவும் குறைபாடுடையவர்க ளாகவே யிருந்தனர். ஆகவே எப்பாடு பட்டாயி னும் புரூட்டஸின் தலைமைக்காக உழைக்கவேண்டு மென அனைவரும் முடிவு கட்டினர்.

ஆனால் தன்னலமும் வகுப்பு வேற்றுமை உணர்ச்சியும் அழுக்காறும் நிறைந்த அக்கிளர்ச்சிக்காரரது திட்டத்தில் ஒழுக்க நெறியாளனாகிய புரூட்டஸைச் சேர்ப்பது எப்படி? நாட்டுப்பற்று, விடுதலைப்பற்று ஆகிய இரு பேருணர்ச்சிகளின் உதவியாலேயே அவனை இயக்க முடியும் என்று அவர்கள் அறிந்துகொண்டனர். அதன்படியே அவர்கள் அவனது தலைமையை நாடிப் பொதுமக்கள் எழுதியதுபோல் பல கையெழுத்துக்களில் பல மொட்டைக் கடிதங்கள் வரைந்து அவன் வீட்டிலும் தோட்டத்திலும் அவன் நடமாடும் இடங்க ளிலுமாக அவன் கண்களில் படும் வண்ணம் போட்டுவைத்தனர். நேரிலும் அவர்கள் தொடர் பற்றவர்கள் போலத் தனித்தனி வந்து அவன் மனத்தைக் கரைத்தனர். இறுதியில் புரூட்டஸ். அவர்கள் கட்சிக்குத் தலைவனாக நின்றுழைக்க ஒப்புக்கொண்டான்.

அவர்களது முதல் நடைமுறைக் கூட்டம், புரூட்டஸின் வீட்டுக்குப் பின்புறமுள்ள தோட்டத் தில் இரவில் கடையாமத்தில் நடைபெற்றது. அச்சமயம் உலகியல் அறிவு நிரம்பப்பெற்ற காஸியஸ் தனது வெற்றிக்கான பல கோரிக்கைகள் கொண்டுவந்தான். அவற்றுள், கட்சித் திட்டப்படி நடப்பதாக ஆணையிடல், ஸீஸரோடு அவனது கட்சிக்கு ஆணிவேரான அந்தோணியையும் அகற்றவேண்டுவது, அன்றைய ரோம் உலகின் தனிப்பெருஞ் சொற்பொழிவாளரான ஸிஸரோ வையும் கிளர்ச்சிக்காரர் குழுவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய இவை தலைமையானவை.

உலகியல் அறிவைவிட நேர்மையையும் கலப் பற்ற தூய உண்மையையுமே உயர்வாக மதித்த புரூட்டஸ், அவற்றுள் ஒவ்வொரு கோரிக்கையையும் தக்க தன்றென மறுத்துவிட்டான். ஆணை யிடல் ரோமனது வாய்மொழியின் மதிப்பை அவமதிப்பதென்றும் அந்தோணி கேளிக்கைகளைமட் டுமே பெரிதாக நாடித்திரியும் பட்டுப்புழுவேயென்றும், ஸீஸருக்குக் கைக்கருவி அல்லது வாலே யாவான் என்றும் ஸீஸரோ வெறும் பகட்டுக்காரன் என்றும் அவன் கொண்டான். இம்மூன்று இடங்களிலும் காஸியஸின்பக்கமே முன்னறிவும் தொலை நோக்கமும் இருந்தன என்பதில் ஐயமில்லை. புரூட்டஸ் அரசியல்வாழ்வு சூழ்ச்சிவாழ்வு என்பதனை அறியாது, அதனிலும் ஒழுக்கமுறை மையே வெற்றிபெறும் என்று நம்பினான்.

ஈ.ஸீஸர் வீழ்ச்சி

கிளர்ச்சிக்காரரது திட்டம் எவ்வளவு மறை வாய் இருந்தபோதிலும், அதனால் ஏற்பட்ட பர பரப்பு அந் நகரெங்குந் தாக்கியது. எங்கும் மக்கள் மனத்திற் குழப்பமும் கலவரமும் நிறைந்திருந்தன. பலர் தாம் கொண்ட திகிலை உறுதிப்படுத்தும் தீக் குறிகளையும் தீக்கனாக்களையும் கண்டு மனம் பதைத் தனர். அன்று நகர மண்டபத்தின்மீது பட்டப் பகலில் ஆந்தைகூட வந்திருந்து கூவிற்றாம். இன்னோரிடத்தில் ஓர் அடிமையின் உடலைச் சுற்றி அவனையும் அறியாமல் தீ எரிந்ததாம். போதாக் குறைக்கு அன்றிரவு புயலும் மழையும் மின்னலும் இடியும் அதுவரை எவரும் கண்டுங் கேட்டும் அறி யாதவகையில் கலந்துகொண்டு கலங்காத நெஞ்சி னரையுங் கலங்கவைத்தன. அவற்றிடையே நாய் போன்றும் நரிபோன்றும் …கைகள் போன்றும் காளிகளும் கூளிகளும் குறளிகளும் மயிர்க்கூச் செறியும் வண்ணம் ஊளையிட்டுக் கத்தினவாம். அறிவிலும் ஆராய்ச்சியிலும் சிறந்த அறிஞர்கள் கூட இவற்றைப் பார்த்துவிட்டு, ‘இவை ஏதோ பெரிய உலக மாறுதல்களுக்கு அறிகுறியாகத் தான் இருக்கவேண்டும்,’ என்று கருதினார்கள்.

மிக நுண்ணிய இயக்கங்களும் கற்புடைய மாதரின் மனத்தில் அதிர்ச்சியை உண்டாக்கும் என்பர். அதன்படி புரூட்டஸின் மனைவியாகிய போர்ஷியாவும் ஸீஸரின் மனைவியாகிய கல்பூர்ணி யாவும் அன்றிரவு தீக் கனாக்களால் துயிலின்றி வருந்தினர். போர்ஷியா புரூட்டஸைப்போன்றே ஒப்பற்ற நாட்டுப் பணியாளராகிய ‘கதோ’வின் புதல்வியாவள். ஆகவே அவள் தான் பெண்ணாயி னும், வீரர் புதல்வி என்ற முறையிலும் வீரர் துணைவி என்ற முறையிலும் புரூட்டஸின் மனத்தை அரிக்கும் உண்மைகளை அறிந்து அவன் கவலைகளில் பங்குகொள்ள வேண்டுமென்று வாதாடினாள். புரூட்டஸ் அவளுக்கு இணங்கி, அன்று நிறைவேற்ற இருக்கும் தன் திட்டத்தை அவளுக்குக் கூறினான்.

ஆனால் கல்பூர்ணியாவுக்கு அதுபோலத் தன் கணவனைத் தன் மனப்படி திருப்ப முடியவில்லை. அவள் தன் கணவன் உருவத்தின் மீது பல ரோமப் பெருமக்கள் உடைவாளாற் குத்தி அவன் குருதி யிற் கைதோய்த்தனர் எனக் கனாக்கண்டு அலறி எழுந்து அரசியல் மன்றத்திற்குப் போகப் புறப் பட்டு நிற்கும் – அவனை அன்று எங்கும் வெளியே போகவேண்டாமென்று தடுத்தாள். விதி வழியே செல்லும் அவன் மனம், அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவளுக்கு அமைதி கொடுக்கும் வண்ணம், நகர்க் கோவிலுக்கு ஆடு ஒன்று பலியிட்டு நற்குறி யறிந்து வரும்படி ஓர் ஆளை அனுப்பினான். இதுவும் அவனுக்கு நற்குறி தரவில்லை. பலியிட்ட ஆட்டில் இதயம் காணப்படவில்லை என்று கூறப்பட்டது. தனது காரியத்திற்கேற்ப அவன் அதற்குப் பொருள் கொண்டு, ‘வானவர் இன்று நான் இதயமற்ற கோழையாய்விட்டேன் எனக் கேலி செய்கின்றனர்போலும்,’ என்றான்.

சற்றுநேரத்திற்குள் கிளர்ச்சிக்காரருள் ஒருவ னாகிய தெஸிமஸ் புரூட்டஸ் அங்கே வந்து, அவன் அன்று வெளியே போவதைக் கல்பூர்ணியா தடுப் பதையும் அவன் தயங்குவதையும் கண்டதே, அவன் மனம் சுறுக்கென்னும்படி, ‘பாராளும் ஸீஸர் ஒரு பாவை சொல்லுக்கிணங்கி அரசியல் மன்றத்தில் தன் கடனாற்ற மறுத்தால் உலகம் சிரிக்கும்,’ என்றான். அதுகேட்டு ஸீஸர் கல்பூர் ணியாபக்கம் பாராமலே அவள் பிடியை உதறிக் கொண்டு புறப்பட்டான்.

அன்று பின்னும் இரண்டு தடவை அவனது பழைய நல்வினை அவனுக்கு எச்சரிக்கையாக வந் தது. ஆனால் அவனது தீவினையே அதனினும் மேம்பட்டு நின்று அவனுக்குத் துணிவைத் தந்தது என்னல் வேண்டும். முதலாவது, வழியில், விழா வன்று வந்த ஆண்டி மீண்டும் வந்து நின்றான். nஸர் அவனைப் பார்த்து, ‘உன் நடுநாள் வந்து விட்டதே, உன் முன்னறிவு இப்போது என்னா வது?’ என்று கேட்டான். அவன் அமைதியுடன், “ஆம், நடுநாள் வந்துவிட்டது தான்,? ஆனால் அது போய்விடவில்லையே,’ என்றான்.

ஸீஸரின் நண்பர் அவனை. முடிமன்னராக்கக் குறித்து வைத்திருந்த கூட்டமே அவன். எதிரிக ளால் அவனைக் கொலை செய்து ரோமக் குடியரசைக் காக்கவுங் குறித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை எப்படியோ அறிந்தனன்’, ‘ஸீஸர்’. நண்பர்களுள் ஒருவனான அர்த்தெமிதோரஸ் என்ற வழக்கறிஞன். ஸீஸருக்கு அதைச் சொல்ல நேரமும் இடமும் வாய்க்காமல், இக்கூட்டத்திலேயே அவ னிடம் அதனைக் கடித வாயிலாகத் தெரிவித்து விட வேண்டுமென்று கருதிக்கொண்டு வந்திருந்தான்.

ஸீஸரை அண்டிக் குறையிரப்போர் ஒவ் வொருவராக வந்துகொண்டிருந்தனர். அவருள் கிளர்ச்சிக்காரருள் ஒருவனான மெதெல்லஸ் ஸிம்ப ரும் இருப்பதை அவன் கண்ணுற்றான். இவன் நாடுவிட்டுத் துரத்தப்பட்ட தன் உடன்பிறந்தானை மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டப்போனான். அப்படி வேண்டும் சமயத் தையே கிளர்ச்சிக்காரர் தம் கருத்தை நிறைவேற் றும் நேரமாக முன்னேற்பாடு செய்திருந்தது, அர்த்தெமிதோரஸுக்குத் தெரியும். ஆகவே, மெதெல்லஸ்ஸிம்பருக்கு முந்தவேண்டும் என்ற பர பரப்பில் அர்த்தெமிதோரஸ் முன் – ‘கூட்டியே nஸரை நோக்கி, ‘ ஆண்டகையீர், என் கடிதம் தம்மையே குறிப்பது ; மிகவும் விரைவில் அறிய வேண்டுவது; அதனை முந்திப் பெற்றருள்க, என்றான்.

Shakespeare7ஊழ்வினை முந்துறுத்து தலின் ஸீஸர் இதனை யும் தன் பெருந்தன்மையைக் காட்டுமிடமெனக் கருதி, ‘எம்மைக் குறிப்பதை யாம் இறுதியிற் பார்ப்போம்,’ என்று கூறி அவனைக் கடைசி யிற் போகும்படி கூறிவிட்டான். அவன் விதிக் கேற்ப அன்று அவனது நன்மதியே அவனுக்குத் தீமதியா யமைந்தது.

இதற்குள் அந்தோணி, ஸீஸருடைய இணை பிரியா நண்பனாதலால், திரெபோனியஸ் முன் கருத் துடனே அவனைத் தக்க சாக்குக் கூறி அவ்விடம் விட்டு அகற்றிக்கொண்டு போய்விட்டான்.

கிளர்ச்சிக்கார ரனைவரும் முன்னமே வந்து ஸீஸரைச் சுற்றி நாற்புறமும் கூடியிருந்தனர். இப்போது அவர்கள் ஸீஸரை வளைத்து மெல்ல மெல்ல நெருங்கினர்.

மெதெல்லஸ் ஸிம்பர் தன் குறையைக் கூறத் தொடங்கியதே அவன் வழக்கின்னதென அறிந்த ஸ்ஸர் அவனை நோக்கி, ‘வேண்டா, வேண்டா, நீ கேட்க வேண்டுவதில்லை. உன் வேண்டுகோள் செல்லாது,’ என்றான்.

‘கெஞ்சுதலாலும் பல்லிளித்தலாலும் ஸீஸர் போன்றவர்களை அசைத்துவிட முடியாது. பிற விண்மீன்கள் தன்னைச் சுற்றினும் தான் சுழலாது நிற்கும் வட (துருவ) மீனை ஒத்த உறுதி யுடைய வன் அவன்,’ என்ற இறுமாப்பு மொழிகள் ஸீஸர் நாவினின்று அப்போது எழுந்தன.

அவ்வேண்டுகோளுக்குத் தாமும் வந்து துணை தருபவர் போலக் காஸியஸம், புரூட்டஸம் சற்று நெருங்கி முன்வந்தனர். அப்போதும் எவ் வகை ஐயமும் இன்றி அவன் ‘புரூட்டஸ் கூட இச் சிறு செய்திக்குத் துணையா? ஆயினும் என்ன? நடுநெறி பிறழாத ஸீஸர் தீமையைச் செய்வது மில்லை ; செய்தபின், பின்வாங்குவதும் இல்லை. அவன் செய்தது செய்தது தான். ஆளுக்காக அது மாறுவதில்லை. உயர்குணமுடைய புரூட்டஸ் சொல்கூட அதன் முன் வந்து பயனற்றுப் போவதுபற்றி வருந்துகின்றேன்,’ என்றான்.

அதன்பின் ஸின்னாவும் தெஸிமஸ் புரூட்ட ஸும் வந்து பணிந்தனர். ஸீஸர் சற்றுப் பொறுமை யிழந்து சினங்கொண்ட பார்வை யுடன், ‘மேருவை அசைத்தாலும் ஸீஸரை அசைக்கமுடியாது; அப்பாற் செல்க. மார்க்கஸ் புரூட்டஸ் சொல்லுக்குக்கூட இங்கு விலையில்லை என்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?’ என்றான்.

இதுவே தக்க சமயம் எனக் கண்டு பின் நின்ற காஸ்கா ‘ஆயின் விலையுடையது இதுவே’ என்று கூறிக்கொண்டு, தன் உடைவாளால் அவன் முதுகிற் குத்தினான். அவனையே முதற் குறியாகக் கொண்டு காத்திருந்த கிளர்ச்சிக்காரர் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக் அவன்மீது பாய்ந்து குத்தினர்.

காஸ்கா குத்தினபோது ஸீஸர் திடுக்கிட்டுப் பின்னால் திரும்புமுன் மற்றக் குத்துக்கள் விழவே, அவன் உடல் பதைபதைத் தெழுந்தது.

ஆனால் அதற்குள் மார்க்கஸ் புரூட்டஸ் அமைதியுடன் அவன் முன் வந்து நின்று, உடை வாளை ஓங்கிக்கொண்டு, ‘ரோமின் பகைவன் வீழ்க ; விடுதலையின் பகைவன் வீழ்க,’ என்ற மொழிகளுடன் அவன் நெஞ்சில் குத்தினான்.

ஸீஸர் அவனைக் கண்டதுமே திகைத்து, ‘என்ன, நீ கூடவா, புரூட்டஸ்’ என்றான்.

அவன் நெஞ்சிற் குத்திய குத்தினால் அவன் இதயம் வெடித்துக் குருதி புரூட்டஸ் மீதே பீறிட் டுப் பாய்ந்தது. சில நொடிக்குள் அவன் கீழே சாய்ந்து உயிர் நீத்தான்.

ச.ஒட்டகத்துக்குக் கொடுத்த இடம்

இதுவரை கிளர்ச்சிக்காரர் திட்டத்திற்குக் கலப்பற்ற வெற்றியே கிடைத்துவந்தது. ஆனால் ஸீஸர் இறந்த பின்புதான், ரோம் நகரத்திற்கு அவனது ஆட்சிமுறை எவ்வளவு இன்றியமையா ஏற்புடையது என்பது விளங்கலாயிற்று. தமது திட்டம் நிறைவேறியதும் அவ்வரசியல் மன்றத் தார்க்குத் தன் கட்சியின் கொள்கைகளை விளக்கி அவர்கள் உதவியால் குடியரசை நடத்தவேண்டும் என்பது புரூட்டஸின் ஏற்பாடு. ஆனால் ஸீஸர் கொலையுண்டது கண்டு திடுக்கிட்ட அரசியல் மன்ற உறுப்பினர், அவனது குருதியில் தோய்ந்த உடைவாள்கள் பின்னுஞ் சுழல்வது கண்டு இன்னும் யார் யார் உயிர்க்கு இடையூறு வருமோ என்று அஞ்சி மூலைக்கொருவராக ஓடிவிட்டனர்.

அதுகண்டு புரூட்டஸ், தம் நண்பர்களை நகரெங்கும் அவ்வுடைவாள்களைச் சுழற்றிக்கொண்டு, ‘ஸீஸர் வீழ்க, கொடுங்கோலன் வீழ்க, வீழ்க, ரோம் வாழ்க!’ என்று கூவி மக்களை ஊக்கும்படி அனுப்பினான்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். ‘ரோம் வாழ்க; புரூட்டஸ் வாழ்க; விடுதலை வாழ்க!’ என்று அவர்கள் எங்கும் தொண்டை கிழியக் கூவிக் கொண்டு திரிந்தனர்.

ஆனால் நகரின் பரபரப்பு இதனால் இன்னும் மிகுந்ததே தவிர வேறன்று. உருவிய உடை வாள்களைக் கண்டஞ்சி ஓடி ஒளித்தபேர் பலர் கலவரத்தை மிகுதிப்படுத்தினர். முந்தின நாளே தீக் குறிகளைக் கண்டு அஞ்சிய நகரம், இன்று நிலை கொள்ளாது அல்லோலகல்லோலப்பட்டுக் குழப்ப முற்றது.

திரெபோனியஸுடன். வெளியே சென்றிருந்த மார்க்கஸ் அந்தோணி, நகரின் குழப்பத் தைக் கண்டு நடந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனே தன்னையுங் கட்டாயங் கொல்வர்; அதற்குள் தானே நகரைவிட்டு ஓடிவிடவேண்டும் என்று விரைந்தான்.

ஆனால் இம்முயற்சியிலீடுபட்டுத் தலைமை தாங்கி யிருப்பவன் புரூட்டஸ் என்பதைக் கேள்வி யுற்றதும், கணவன் இறந்தது கேட்டு உயிர் ‘துறக்க எண்ணிய கற்புடை மனைவி, அவள் கைக் குழவியைக் கண்டு எண்ணம் மாறுவது போல, ‘ஆ, அப்படியானால் இனிப் பழி வாங்கும் வாய்ப்பு உளது,’ என்று கருதித் தன் வீட்டுக்குச் சென்று ஒளிந்து கொண்டு, நம்பகமான ஒரு பணியாளின் வாயிலாக ‘ஸீஸர் கொலையுண்டதன் காரணம் அந்தோணிக்குத் தெரியும். நண்பன் என்ற முறையில் ஸீஸர் உடம்பை அடக்கஞ்செய்ய மட் டும் அவன் விரும்புகிறான். புரூட்டஸின் திருவுள மறியக் காத்திருக்கிறான்,’ என்று எழுதிய ஒரு கடிதத்தைப் புரூட்டஸுக்கு அனுப்பினான்.

காஸியஸ், புரூட்டஸினிடம் ‘அந்தோணி பசுப் போலிருந்து புலிபோற் பாயும் இயல்பினன். அவ னுக்கு இடந்தர வேண்டாம்,’ என்று வற்புறுத்தினான்: புரூட்டஸ், ‘காஸியஸ்! நீ, ஏன் இங்ஙனம் எதைக் கண்டாலும் அஞ்சுகிறாய். அவன் நம்மிடம் வேறெதுவுங் கேட்கவில்லையே! ஸீஸர் உடலை அடக்கம் செய்யத்தானே உரிமை கேட்கிறான். ஸீஸரது செத்த உடலுமா நமக்குப் பகை? என்று கூறிவிட்டு, ‘அந்தோணி உடலை அடக்கஞ் செய்யவரலாம்,’ என்று பணியாளனிடம் சொல்லியனுப்பினான்.

புரூட்டஸின் இணக்கத்தை அறிந்ததே, திகி லும் இருளுஞ் சூழ்ந்து வாடிய அந்தோணியின் முகம், கதிரவனைக் கண்ட தாமரை என அலர்ந்தது. அதுமுதல் அவன் உடலில் ஸீஸரின் உயிரே புகுந்த தென்னலாம்.

ஸீஸரின் பக்கத்தில் ஒரு விளையாட்டுக் கருவி போன்று ஓடியாடிய அவ்விளைஞன், அதுமுதல் மக்களுடைய மனத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டு அவர்களைத் தான் நினைத்தபடி ஆட்டும் மந்திரவாதியானான்.

அவன் வந்ததும் என்ன செய்வானோ என்ற கவலையுடன் அவனை எதிர்பார்த்து நின்றனர் கிளர்ச்சிக்காரர். ஆனால் அவன் அவர்களையோ புரூட்டஸையோ கூட எதிர்பார்த்ததாகக் காண வில்லை. தாயை இழந்த கன்றேபோல் அவன் நேராக ஸீஸர் உடல் கிடந்த இடஞ்சென்று அவ் வுடலை மூடிய திரையை நீக்கிவிட்டுக் கோவெனக் கதறி அழுதான். இங்ஙனங்கால் நாழிகை சென்ற பின் கண்களைத் துடைத்துக்கொண்டு சரே லென்று கிளர்ச்சிக்காரர் முன் வந்துநின்று, தனது மேலுடையை அகற்றி உட்சட்டையையும் திறந்து நெஞ்சைக் காட்டிக்கொண்டு, ‘ஐயன்மீர்! ஸீஸரின் குருதியால் உங்கள் உடைவாளின் விடாய் தீரவில்லையாயின், என் நெஞ்சையும் பிளந்து கொள்க. அவனிடம் நட்புக் கொண்ட பழி எனக்கும் உண்டு. அவனுடன் சாவதைவிட உயர்ந்த பேறு எனக்கு வேறில்லை’ என்றான்.

அவனுடைய கண்கள் அப்போது கலங்கிக் கொவ்வைப் பழங்கள் போற் சிவந்திருந்தன. அவன் உதடுகள் துடித்தன.

அவனது நடிப்பை மிகவும் வெறுத்த காஸியஸும் கிளர்ச்சிக்காரர் பிறருங்கூட அப்போது அவனிடம் கனிவு கொண்டனர். உண்மையும் அன்புமே உருவெடுத்து வந்த புரூட்டஸைப் பற் றியோ கேட்க வேண்டுவதில்லை. அவன் நீர் ததும்பிய கண்களுடன் ‘ என் அரிய உடன்பிறப்பாள, ஸீஸரை நேசிப்பது ஒரு பழியாயின், அதில் உன் னைப்போல் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்கள் ஸீஸரைப் பகைக்கவில்லை. அவன் ஆட்சி முறையையே பகைத்து அதனுடன் இரண்டற்று நின்ற அவனையும் கொல்ல நேர்ந்தது. உன்னிடம் எங்களுக்கு எவ்வகைப் பகையும் இல்லை,’ என்றான்.

காஸியஸ் இப்போது இடையில் வந்து, ‘அது மட்டுமன்று அந்தோணி; உனது நட்பையும் நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். நீ எங்களுடன் சேரின் உன் விருப்பங்களுக்கு முழு மதிப்புத் தருவோம் என்பதை நீ உறுதியாக நம்பலாம்’ என்றான். அந்தோணி காஸியஸ் பேச்சை முறித்து, ‘ஐய, ஸீஸரது அடிச்சுவட்டில் மிதித்து நிற்குந் தகுதியுடையவர் குழுவிற் சேரும் பெருமை எனக்கு. வேண்டாம். அவன் நண்பன், அவனுக்காக அழுகின்ற உரிமை கொண்ட நண்பன் என்பதே என் நிலை. ஆனால் நான் உங்களுக்கும் நண்பனே, என்று கூறி அவர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிக்கொண்டான்.

அந்தோணி பின்னும் ஸீஸர்பக்கம் சென்று உரக்க, ‘ஆ புல்வாய்களுக்கு இரையாகிய கலை யரசேபோல் விழுந்து கிடக்கும் என் தலைவனே! நீ கிடக்கும் நிலை காணப் பொறுக்க முடியவில் லையே? ஆ, நின் குருதியில் தோய்ந்து நின்னை வேட்டையாடிக் கொன்ற ‘மன்ன’ரிடையே நீ கிடக்குங் கிடை’ என்று கண்ணீர் வடித்தான்.

அந்தோணி தம்மை மறைமுகமாகக் குறை கூறுகின்றான் என்பதைக் கண்டு கொண்ட காஸி யஸ் அவனைத் தடுத்து, “நாங்கள் உனக்கு இடந் தருமுன் உன் நிலையை அறிய விரும்புகிறோம். நீ எங்களுடன் சேர்கிறாயா, அல்லது தனித்து நிற் கிறாயா?” என்று கேட்டான்.

அந்தோணி புரூட்டஸ்பக்கமாகப் பார்த்து, ”நண்பர் என்றுதான் உங்களை அண்டினேன். நண்பர் என்று தான் உங்களுடன் கைகுலுக்கி னேன். ஆனால் உங்களுடன் ஒருவனாக நான் இருப்பதெப்படி? ஸீஸரின் உடலை அடக்கஞ் செய்து என் நட்புக்கட னாற்றுவதைத் தவிர வேறெவ்வகையிலும், நான் உங்கள் வழிக்கு வாரேன்,” என்றான்.

வழக்கம்போலவே காஸியஸின் தடங்கலைப் பொருட்படுத்தாமல் புரூட்டஸ் அவனுக்கு அக்க டனாற்ற இணக்கந் தந்தான். அதன்பின் அந்தோணி, “உங்களைத் தாக்காமல் ஸீஸரை நண்பர் என்ற முறையில்மட்டும் புகழ்ந்து என் நட்பை நட்பின் கடனை-ஆற்றலாமன்றோ” என்று கேட்டான்.

புரூட்டஸ் அதற்கும் இணங்கி, ‘முதன் முதலில் என் கட்சியின் நிலையை நானே யாவரும் அறிய விளக்கிவிடுவேன்; அதன்பின் நீ பேசலாம்,’ என்று கூறினான்.

காஸியஸ், அப்போதே தன் திட்டம் உலைந்து விட்டதென முணவினான். ஆனால் புரூட்டஸை எதிர்ப்பது எப்படி ; அதுவும் அந்த நேரத்தில்!

ரு. சொல்லாண்மையா வில்லாண்மையா?

புரூட்டஸ் மேடையிற் சென்று, அங்குக் கூடி யிருந்த பொதுமக்கள் முன் நின்று பேசினான் :

‘பகுத்தறிவுடைய என் நாட்டு மக்களே, எங்கள் செய்கை உங்கள் அறிவுக்குச் சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாவிட்டால் நீங்கள் தருந் தண்டனையை ஏற்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்குப் பகை யாரும் இல்லை. ஜூலியஸ் ஸீஸரைப் பற்றியமட்டில், அவன் என் ஆருயிர் நண்பன். அவன் இறந்ததற்காகக் கண்ணீர் விடு பவருள் நானும் ஒருவன். அப்படியாயின் அவனை நான் ஏன் கொன்றேன் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாவது, அவனிடம் என் அன்பு குறைவுடையது என்பதனாலன்று, நாட்டினிடம் என் அன்பு மிகுதியானது என்பதனாலேயேயாம்.

நாட்டுக்குப் பகைவர் யாராவது உளரென்றால் அவர் மட்டுமே எங்களுக்குப் பகைவர் ! அப்பேர்ப் பட்டவர் யாராவது இருந்தால் கூறுக! உங்கள் விடைக்கு நான் காத்திருக்கிறேன்.’

கூட்டம் : யாரு மில்லை.

‘விடுதலை வேண்டா; அடிமை வேண்டும் என்று கூறுபவர் யாரேனும் இருந்தால் அவர்களுக்குமட்டுமே நாங்கள் பகைவர். அப்பேர்ப்பட்டவர் யாராவது இருந்தால் முன் வருக!’

கூட்டம் : யாரு மில்லை.

‘அப்படியாயின், எங்கள் செய்கை உங்கள் நண்பர் செய்கை. அதன் நன்மை தீமை உங்களுடையது. உங்கள் பேரால். உங்கள் விடுதலைக்குத் தடையாயிருந்த பெரியார் ஒருவரது உயிரை நாங்கள் அகற்றினோம். இனி நீங்களே ஆட்சி புரிக.

கூட்டம் : ஆம் ; ஆம்.

சிலர் : இனி நீரே தலைவர். நீரே ஸீஸர்.

இன்னும் சிலர் : உம்மையே இனி அரசராக முடி சூட்டுவோம்.

புரூட்டஸ் கூட்டத்தின் பொருந்தா உரைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்களை விட்டு அகன்றான்.

நூலறிவும் ஆராய்ச்சியும் நிரம்பி உலக அறிவுக்கிடமில்லாத அவன் மனத்தில் ரோமப் பொது மக்களின் அறியாமையோ பெருமக்களின் தன்னலமோ தென்படவில்லை. அவற்றை அறிந்து நடத்தும் ஆற்றல் வாய்ந்த காஸியஸுக்குத், தான் செய்யுந் தீங்கையும் அவன் உணரவில்லை.

புரூட்டஸ் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தோணி ஸீஸருடலின் பக்கம் சென்று அதனை வணங்கி, ‘எம் அரசே, உமது உடலின் நிலை கண்டும் உம்மைக் கொன்ற கொலைகாரப் பாதகர்கள் நின்ற நிலை கண்டும், சீற்றத்தை உள்ளடக்கி, அவர்களுடன் நகைத்துக் கைகுலுக்கும் எனது சிறுமையை மன்னித்தருள்க,’ என்று கூறிக் கொண்டே அவ்வுடம்பின் இறுதிப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான்.

Shakespeare8பின், சில பணியாள ருதவியுடன் அவ்வுடம் பைத்தானும் தாங்கி எடுத்துக்கொண்டு புரூட்டஸ் பேசிக்கொண்டிருந்த இடத்தினருகில் வைத்து விட்டு, மேடையினின்று இறங்கிவரும் புரூட்டஸை வணங்கித் தழுவிக்கொண்டு அந்தோணி மேடையேறினான்.

சிறந்த நாடகக்காரன்போலத், தன் நிலை, தன் மாற்றார் நிலை, தன் முன் நிற்கும் மக்கள் நிலை என்னும் மூன்றையும் நன்கறிந்து அவற்றிற்கேற்பப் பேசி. அவன் மக்கள் மனத்தைப் படிப்படியாகத் தன் பக்கம் திருப்பத் தொடங்கினான்.

முதலில் அவன் தான் புரூட்டஸின் நண்பன்; காஸியஸின் நண்பன்; அவர்கள் கூட்டத்தாரின் நண்பன் என்பதனை வற்புறுத்தி அவர்கள் உயர்வையும், ஸீஸர் இறுதிக் கடனை ஆற்றத் தனக்கு உரிமை கொடுத்த அவர்கள் பெருந்தன்மையினையும் புகழ்ந்து, அதன்பின் அவர்கள் இணக்கத்தால் தான் எடுத்துக்கொண்ட கடமை ஸீஸரைப் புகழ்வதன்று, ஸீஸரின் இறுதிக்கடனாற்றுவதே என்றும் முன்னுரையாகக் கூறிவிட்டு, நேரடியாக ஸீஸரைப்பற்றிப் பேசத் தொடங்கினான்.

‘ஒருவர் செய்த நன்மையை மறப்பது எளிது; அவர் செய்த தீமையை மறப்பது எளிதன்று.’

‘ஸீஸர் தான் செய்த தீமையினாலேயே இறந் திருக்கவேண்டும்.’

‘அவன் செய்த தீமை என்ன?’

‘புரூட்டஸ் கருத்துப்படி அவன் பேராவல் உடையவன் என்று சொல்லப்படுகிறது. (புரூட்டஸ் சொல்வது சரியே. அது தப்பாயிருக்கமுடியாது. புரூட்டஸ்போன்ற அறிவாளிகள், காஸியஸ், காஸ்காபோன்ற அறிவாளிகள் சொல்வது தப்பாயிருக்க முடியாது.)

ஸீஸர் என் நண்பன்; என்னிடம் மாறா உறுதி’ ‘யுடையவன்; ஆனாலும் அவன் பேராவலுடையான் என்பதில் ஐயமில்லை.’

‘அவன் பேராவல் கொண்டது எதில்?’

‘அவன் பெரிய போர்வீரன். அவன் வென்ற அரசர்கள் உங்கள் முன் ஊர்வலமாகச் சென்றதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவன் கொண்டுவந்த திறைகளால் உங்கள் கருவூலம் நிறைந்தது. உங் கள் கைகளும் நிறைந்துள்ளன. ஆயினும் அவன் பேராவலுடையவனே. இவ் வெற்றிகளால், இம் மன்னர் திறைகளால் அவன் மனம் நிறைவடைய வில்லையன்றோ?

‘அவன் பேராவல் இதனுடன் நின்றதா? நான் விழாவன்று அவனுக்கு மணிமுடியும், அர சிருக்கையும் வழங்கினேனே! அவன் அதனை ஏற்றானா? இல்லை. மும்முறை மறுத்தான் என்பதை நீங்களே அறிவீர்கள். ஏன்? அவனுக்கு அந்த மணிமுடியை நான் கொடுத்தது போதவில்லை. உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உங்கள் உள்ளமாகிய ஓர் அரசிருக்கையையும் உங்கள் ‘அன்பாகிய ஒரு மணிமுடியையும் பெற எண்ணினான். இது பேராவலன்றோ?

இங்ஙனம் ஸீஸரைப் பழிப்பதுபோல அவ னது பெருமையையே கூறிப் பின்னும், ஏழைக ளிடம் அவன் கொண்ட கருணையையும், பொது மக்கள் அவன் வெற்றிகள் அடைந்தபோதும் கொடைகள் அளித்தபோதும் அவனை ஆரவாரத் துடன் புகழ்ந்த புகழையும் எடுத்துக் காட்டினான்.

‘நீங்கள் அனைவரும் அவன் காலடிகளைக் கண் களில் ஒற்றிக்கொள்ளும் ஒருநாள் இருந்ததன்றோ?

‘அவன் மீது எறிந்த செண்டுகூட உங்கள் மீது முள்ளாகத்தைத்த காலம் ஒன் றிருந்ததன்றோ? அன்று அவன் மீது உங்களுக்கு அன்பு இருந்தது. இன்று அவன் இறந்தவுடன் உங்கள் அன்பு எங்கே போயிற்று? உங்கள் அன்பும் அவனுடன் போய்விடவா செய்தது? நம் நண்பர் இறந்தால், நம் வீட்டில் ஓர் அடிமை இறந்தால் – ஒரு மாடு இறந்தால் கூட நம் கண்ணில் நீர் வருகின்றதே; நம்மைப் போன்ற ஒரு மனிதன் – அதுவும் அரசனுக்கு ஒப்பானவன், ஒப்பற்ற வீரன், பெருந்தன்மையானவன், உங்களுக்காகவே வாழ்ந்தவன், உங்களையன்றித் தமக்கெனப் பொருள் தேடாதவன், அப்பேர்ப்பட்ட ஸீஸர் இறந்தபோது மட்டும் உங்கள் கண்ணில் நீர் வராததேன்?’

‘நீங்கள் அறிவற்றவர்களா? இல்லை; பின் ஏன் ஸீஸரின் பெருமையை எண்ணிப் பார்ப்பதில்லை?’

‘நீங்கள் அன்பற்றவர்களா? இல்லை; பின் ஏன் உங்கள் தாய் போன்ற, உங்கள் உயிர் போன்ற ஸீஸர் இறந்தபோது உங்கள் கண்கள் கனியவில்லை?’

‘உங்கள் கண்களை, உங்கள் உள்ளங்களை மறைப்பது எது? அட கடவுளே, நீ கொடுத்த அறிவை, நீ கொடுத்த அன்பை இந்த மக்கள் ஏன் பயன்படுத்தமாட்டேன் என்கிறார்கள்’ என்று கூறி மீண்டும் ஸீஸரின் உடலின் மீது விழுந்து அழுதான்.

‘ஏட்டுச் சுரைக்காய்போன்ற புரூட்டஸின் மொழிகள் எங்கே! பொறி புலன்கள் அத்தனையும் வசப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இம்மாயாவி எங்கே? புரூட்டஸின் சொற்கேட்டு நாவைப் பறிகொடுத்து நின்றவர்கூட இப்போது உள்ளத்தையும் உணர்வையும் பறிகொடுத்து உயிரையும் ஸீஸரின் புதிய புகழுடம்பிற்காகப் பறி கொடுக்க முன்வந்தனர்.’

இவ்வளவும் போதாதென்று அவன் இது வரையிற் காட்டாது வைத்திருந்த கடைசித் துருப்பு ஒன்றை கிளர்ச்சிக்காரர் கட்டிய இராவணக் கோட்டையை அழிக்கத்தகுந்த இறுதி ‘ இராமபாணத்தை’-எடுத்து வீசினான்.

‘இதுவரையிலும் நான் கூறியது கேட்டே நீங்கள் கண்கலங்குகிறீர்கள்; உங்களை அறியாமல உங்கள் கண்கள் அழுகின்றன; ஆனால் அவற்றின் காரணத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்?’

‘நீங்கள் அவனுக்காக இப்போதுகூடப் பதை பதைக்கிறீர்கள். அவனுக்கு நேர்ந்த தீங்குக்காக, அதற்கு விடை தருதற்காக உங்கள் உள்ளம் துடிக்கிறது. ஆனால் அவ்வளவு அன்பு உங்கள் உள்ளத்தில் எழுவானேன்?’

‘உண்மையில் உங்கள் அன்பு காரணமற்ற தன்று. அவன் உங்களுக்காகவே பொருள் தேடினான் என்பதை- சேய் நலனை நாடி உயிர் விடுந் தாய்போல் உயிர்விட்டான்’ என்பதை நான் உங்களுக்குக் காட்டமுடியும்.

‘ஆனால், ஏற்கெனவே நீங்கள் அழுகிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் அவனைக்கொன்ற கொலை ஞர்மீது, பகைவர்மீது சீற்றமடைந்திருக்கிறீர்கள். அவன் கடைசியாக உங்களுக்கும்-அவர்கள் பேச்சைக் கேட்டுக் கை கொட்டும் உங்களுக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும்- தன்னை வென்றவருடன் கைகுலுக்கும் எனக்கும் வைத்துவிட்டுப் போன உடைமையை நீங்கள் அறிந்துவிட்டால், தலைகால் தெரியாது சாடிவிடுவீர்கள்! பெரியோர்க ளான – எனக்குப் பேச இணக்கம் தந்தவர்களான – புரூட்டஸ் முதலியோர்களுக்கு நான் கொடுத்த உறுதியை நீங்கள் குலைத்துவிடுவீர்கள்,’ என்று துணிகரமாய்க் கூறினான்.

பொதுமக்கள் இது கேட்டு வியப்பும் எழுச்சி யுங்கொண்டு, ‘ அதைக் கூறுக, கூறுக’ என்று துடித்த உள்ளத்துடன் கூவிக் கேட்டனர். அந் தோணி வேண்டா வெறுப்பாகக் கூறுபவன் போல ஸீஸர் தான் இறந்தபின் குடிகள் தனது பொருட்குவை முற்றும் அடையவேண்டுமென்றும், தன் வீடு தோட்ட முதலியவற்றைப் பொது விடமாகக் கொள்ள வேண்டுமென்றும் எழுதியிருப்பதை அறிவித்ததோடு அவ்வப்போது ஸ்ஸரது உடலிற் பட்ட படுகாயங்களையும், அவன் கொலையுண்ட வகையையும், கொலை செய்தோரையும் உருக்கிவிட்ட இருப்புப் பிழம்பு போன்ற அனல் மொழிகளால் இயைபுபடுத்தி அவர்கள் மனக்கண் முன் உயிர் ஓவியமென ஸீஸர் கொலை யின் கொடுமையினை வரைந்து காட்டினான். இறுதியில் எல்லா நடிப்பையும் துறந்து, அவர்கள் கிளர்ச்சிக்காரருடைய வீடுகளை எரித்து அவர்களை யும் அவர்கள் நண்பர்களையும் உயிருடன் பொசுக்கி, ஸீஸர் கொலைக்குப் பழி வாங்குமாறு உறுதியாய்த் தூண்டினான்.

ச. மறைந்து நின்றழிக்கும் பழி

‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்றபடி அந் தோணியின் உட்கருத்தையும் ரோமின் பொது மக்கள் நிலையையும் அறிந்து, வரப்போகும் புயலை முன் கூட்டி உணர்ந்த காஸியஸ், புரூட்டஸை எதிர்பாராமலே அவனையுங்கூட அவன் விருப்பத் திற் கெதிராகச் சேர்த்துக்கொண்டு நகரைவிட்டு வெளியேற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தான். அதனால் அந்தோணியின் தலைமையிற் பொதுமக்கள் புயற்காற்றுட்பட்ட காட்டுத் தீயெனச் சீறிக்கொண்டும் தன்னகத் துள்ள எரிமலையின் எழுச்சியால் கொந்தளிக்குங் கடல்போலக் கொந்தளித்துக் கொண்டும் வருவதை அறிந்ததுமே, அவர்கள் ஓடி நெடுந் தொலைவு சென்று, ‘ஆந்தியம்’ என்னுமிடத்தில் தங்கித் தம்மைப் போருக்குச் சித்தமாக்கிக் கொண்டனர்.

அதுமுதல் ரோம் நகர் மீகாமன் இல்லா மரக் கலம்போல் ஒழுங்கான அரசியலின்றிக் குழப்பத்துள்ளும் உள்நாட்டுச் சண்டையுள்ளும் ஆழ்ந்தது. பொதுமக்கள் அனைவரும் அந்தோணி. பக்கமே நின்றனர். ஆயினும் பெருமக்களும் அவர்கள் கைப்பட்ட படையும் கிளர்ச்சிக்காரர் பக்கம் நின்று அவர்கள் கட்சியை வலுப்படுத்தினர். பொது மக்கள் ஆற்றலாற் கிளர்ச்சிக்காரர் நகரத்துட் புக முடிய வில்லையாயினும், படையில்லாமல் அந்தோணிக்குப் பேரரசைக் கைக்கொள்ளவும் முடியவில்லை .

இந்நிலையிற் கள்ளன் வீட்டிற் குள்ளன் புகுந் ததுபோல், அந்தோணிக்குப் போட்டியாக ஸீஸ ரின் மகனாகிய அக்டேவியஸ் என்னும் இளைஞன் தோன்றினான். இவன் ஸீஸரை ஒத்த வீரனல்ல வெனினும், ஒப்பற்ற சூழ்ச்சித் திறனும் அமைந்த தோற்றமும் உடையவன். அந்தோணியின் துணை யின்றிக் கிளர்ச்சிக்காரரை வெல்ல முடியாதாத லால் அவன் அந்தோணியினிடம் மிகுந்த பற்றுடையவன் போல நடித்து அவனை வசப்படுத்திக் கொண்டான். ஆனால் அந்தோணி, படையில்லாமற் பொதுமக்களையே நம்பியது சரியன்றெனக் கருதிக் கொஞ்சங் கொஞ்சமாக ஒரு சிறிய படையைத் திரட்டினான்.

மேலும் கிளர்ச்சிக்காரரிடமிருந்து பெருமக் கள் துணையைப் பிரிக்கவும் படைப் பயிற்சிக்கான பணம் பெறவும் அவன் இன்னொரு சூழ்ச்சியுஞ் செய்தான். கிளர்ச்சிக்காரருடன் சேராமல் நின்ற பெருமகனும், பெருஞ் செல்வனுமான லெப்பிதஸ் என்பவனை அந்தோணிக்குப் போட்டியாகக் கிளறிவிட்டு அவனிடமிருந்து பணமும், பெருமக் கள் துணையும் பெற்றதன்றி அவன் வாயிலாக அந்தோணியின் செல்வாக்கையும் மட்டுப்படுத்தி னான். மேலும் அவ் அக்டேவியஸ் நாளடைவில் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைக்கும்படி தூண்டி அவர்களை அழிக்கும் எண்ணமுடையவனாயினும், கிளர்ச்சிக்காரர் அழியும் வரை அவர்கள் துணையைப் பெற எண்ணி அவர்களுடன் பேரரசை ஆளும் உரிமையைப் பங்கு கொள்வதாகப் பேசி ‘மூவர் உடன்படிக்கை’ ஒன்றை ஏற்படுத்திக் கொண்டான்.

மூவர் படை ஒருபுறமும் கிளர்ச்சிக்காரர் படை ஒருபுறமுமாக இரண்டும் ஓயாத சண்டைகளில் ஈடுபட்டன. ஆனால் உண்மையில் மூவரிடையே ஒற்றுமையில்லை; அதுபோலவே கிளர்ச் சிக்காரரிடையிலும் ஒற்றுமையில்லை. காஸியஸின் சூழ்ச்சிகளும், வருவாய்க்காக ஏழைமக்களை அவன் கசக்குவதும் புரூட்டஸுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாகப் புரூட்டஸுக்குச் செலவு செய்யும் வழியன்றிப் பொருள் வருவாய்க்கான வழி தெரியாதாகையால் அவன் காஸியஸினிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தான். இப்படி ஒழுங்குமுறைகள் பேசித் தன் வருவாயை ஒரு பக்கம் கெடுப்பதன்றி அடிக்கடி செலவையும் உண்டு பண்ணும் புரூட்டஸின்மீது காஸியஸ் சீறி விழுந்தான். நாளடைவில் இருவரும் கீரியும் பாம்பும் போலாயினர்.

இவ்வொற்றுமைக் கேட்டால் அக்டேவியஸ் படிப்படியாகத் தன் கட்சியையும் தன்னையும் வலுப்படுத்துவது கண்டு, காஸியஸ் புரூட்டஸுடன் ஒத்துப்போக எண்ணி, அவனை நட்பு முறை யிற் காணவிரும்பினான். இருவரும் தம் படைகளுக்கு அமைதியாயிருக்க ஆணை கொடுத்துவிட்டுத் தம் படைவீட்டிற் கலந்து நட்பாடலாயினர். அப்போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுத் தம் குறைகளைக் கூறிக்கொண்டனர்.

காஸியஸின் இடர்களையும், அவனுக்குத் தான் அறியாது கொடுத்த துயரையும் எண்ணிப் புரூட் டஸ் வருந்தியதோடு தான் அவனுடன் பொறுமை யிழந்து சீறியதற்காக மன்னிப்புங் கேட்டுக் கொண்டான். மேலும், தான் பொறுமை யிழந்த தற்கு ஒரு காரணமும் உண்டெனக் கூறித், தன் -மனைவி போர்ஷியா தன் கட்சியின் தோல்வியையும் தன் துன்பங்களையும் கேட்டுத் தாங்கமுடியாது இறந்ததையும், அது முதல் தான் தோற்றத்தில் மனிதனாயிருந்தும் உண்மையிற் பேயாகவே நடந்து வருவதையுங் கூறினான்.

அது கேட்டுக் காஸியஸும் கண் கலங்கினான். புரூட்டஸ் தன்னை அறியாவிடினும் தான் புரூட்டஸையும் அவன் உயர்வையும் அறிந்திருந்தத னால் அவனிடம் நாம் பொறுமை காட்டினோ மில்லையே என்று எண்ணிக் காஸியஸ் மனமுருகினான்.

இப்போது காஸியஸ் மனத்தில் தன் கட்சி தோற்றதைப்பற்றிய எண்ணமே யில்லை. விரைவில் அவன் இறக்கப்போவதும் அவனுக்குத் தெரியும் : ஆயினும் அதைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை. புரூட்டஸின் உயர்வு ஒன்றே அவன் கண்முன் நின்றது. அவன் குற்றங்கள் மனிதன் குற்றம்-உலகையறியா மனிதன் குற்றம் ; அவன் பெருமையோ கடவுள் பெருமை கடவுள் தன்மை மிக்க பெருமை. அதனைக் கண் டறிந்தபின் தன் வாழ்வின் பயன் நிறைவேறிய தாகவே கஸிரயஸ் கருதினான். இனி அவன் இறக்க அஞ்சவில்லை. பழைய தன்னலத்தின் நிழல், அழுக்காற்றின் நிழல் இன்று பொசுக்கப் பட்டு விட்டது. அவனது உலகியல் அறிவோ புரூட்டஸின் புகழொளிக்கு நெய்யாகப் பயன்பட்டது.

மறுநாள், மூவருள் முதல்வனான- நாளடைவில் மற்ற இருவரையும் விழுங்கிப் பேரரசின் முழு முதல்வனாய் விளங்கிய – அக்டேவியஸ் ஸீஸரது படை ஒருபுறமும், காஸியஸ், புரூட்டஸ் என்னும் இருவர் படைகளும் மறுபுறமுமாகக் கைகலக்கும் நாள், காஸியஸ் அன்று அவன் படைவீட்டுக்குச் சென்றுவிட்டான்.

Shakespeare9புரூட்டஸுக்குக் கண்கள் ஒரு நொடிகூடத் துயிலில் நிலைக்கவில்லை. போர்ஷியாவின் எண் ணங்களைத் துரத்திக்கொண்டு அன்றிரவு ஸீஸர் நினைவும் – அவன் இறந்தபோது அவன் தோன் றிய தோற்றமும், அவன் கூறிய பொன் மொழிகளும் – ‘ புரூட்டஸ், நீயுமா’ என்ற வன்மொழியும்: அப்படியே அவனுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்வனவாகத் தோன்றின.

ஸீஸரின் உயர்வு அன்றுதான் அவனுக்கு நன்கு தென்பட்டது. அவன் குற்றம் உண்மை யில் அவன் குற்றமன்று ; பொதுமக்கள் குற்றம். தான் அவனைக் கொன்றது ஏன்? இப்போது விளங்குகின்றது. கிளர்ச்சிக்காரர் அவனைக் கொன்றது விடுதலை வேட்கைக்காக அன்று. காஸியஸ்கூட-ஆம். காஸியஸ்கூடத் தன்னலத்தைச் சாராதவன் அல்லன். ஆனால் புரூட்டஸ் மனத்தில், அவன்மேற் சீற்றமில்லை. அவன் சிறு பிழைக்கு அவன் தன் அறியாமையாற் பட்ட தீமை போதும் என்று எண்ணினான்.

ஆனால் மன்னிக்க முடியாத குற்றம் தன் னுடையதே. ரோமின் பேரொளியை-ஆம். தன் மொழிப்படியேகூட, உலகின் பேரொளியைத் தன் அறியாமையால் அழித்துத், தன்னையுங் கெடுத்துத், தன் மனைவியையுங் கொன்று, தன் நண்பர்களையும் தன் நாட்டு மக்களையுங் கெடுத்த பழி தன்னதே என்று அவன் கருதினான். அவன் மனம் கழிவிரக்கத்தாற் கலங்கிக் கண்ணீர் சிந்தியது.

அவன் அழுததால் துயின்றானோ, துயிலினால் அழுகை நின்றதோ கூறவியலாது. ஆனால் அவ் வரைத் துயிலில், காய்ந்தும் முற்றிலுங் காயாத அக் கண்ணீர் வழியாக ஸீஸரின் உருவம் அவன் முன் வந்து நின்றது. அவன் உடல் மயிர்க்கூச் செறிந்தது. அவன் கை கால்கள் நடுங்கின. ஆனால் அவன் உள்ளம் நடுங்கவில்லை. ‘எல்லாம் என் குற்றம், என் குற்றம், என்றான் அவன். ஸீஸர் உருவம். நாளை உனக்கும் உன் நண்பர்களுக்கும் இறுதிநாள். என் பழியை நீங்கள் அடைவீர்கள்,’ என்றறிவித்தது.

மறுதாள் பிலிப்பி என்ற இடத்தில் நடந்த போரிற் கிளர்ச்சிக்காரர் படை நிலைகுலைந் தழிந்தது. கிளர்ச்சிக்காரர் ஒவ்வொருவராக ஓடிவிட்டனர். காஸியஸ் இனித் தனக்கும் புரூட்டஸுக்கும் இவ்வுலகம் இல்லை எனக் கண்டு, தன் புரூட்டஸ் இறக்குமுன் – தன் புரூட்டஸ் தோல்வி என்ற சொல்லைக் கேட்குமுன்–தான் இறக்கவேண்டு மென நினைத்துப் பணியாள் பிடித்துக்கொண்ட வாள்மீது வீழ்ந்து இறந்தான்.

Shakespeare10அவ்வீரமுடிவைக்கேட்ட புரூட்டஸ் தனக் கும் முடிவு வந்ததை உணர்ந்தான். போரில் ஸீஸர் உருவமே எதிரியுடன் எதிரியாய் நின்று தன் கட்சியாரைக்கூடக் கொன்று வென்றதை அவன் கண்டான். இறுதியில் தன்னை நாடி அக் டேவியஸ் படைவீரர் வருவதையுங் கேள்வியுற்றான். ‘ஸீஸர்! உன் பழி தீர்க.’ என்று கூறி அவனும் தன் வாளை நட்டு அதன்மீது வீழ்ந்திறந்தான்.

ஸீஸரோடு ரோமின் அரசியற் பெருமை போயிற்றெனில், புரூட்டஸோடு அதன் அறிவியல் ஒழுக்க இயல் பெருமை போயிற்று என்னல் வேண்டும். அவன் வாழ்வையும் மாண்பையும் வாயாரப் போற்றாதார் இல்லை. உணர்ச்சி வசப் படும் இயல்பற்ற அக்டேவியஸ் ஸீஸர்கூட ‘ரோமின் பெருமையனைத்தும் திரண்டெழுந்த பெரியோய்! இழந்த ஸீஸரையும் மறந்து நின்னை இழந்த இழப்பே இழப்பாக நின்று எம் நாட்டுத் தாய்க்கு இனியார்தாம் ஆறுதல் அளிப்பர்! ஸீஸரும் நீயும் வாழ்ந்த நாட்டில் வாழும் தகுதியுடையவர் யாரே?’ எனக் கையறு நிலையெய்தி அவல முற்றனன்.

பெரியவரான ஸீளிரின் பழியே பெரியோராகிய புரூட்டஸையுங் கொண்டுபோக, ரோம் பேரரசு கணவனையும் அவன் தந்த தனி மகனையும் இழந்த இளந் தாயெனக் கைமை நோன்பு நோற்பாளாயினள்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஐந்தாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1940, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *