கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 8,698 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

7. ஊர் திரும்புகிறான் | 8. வரவேற்பு

ஜக்குவுக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷனில் குதூகலமான வரவேற்புக் கிடைத்தது. அவன் ஒருவருக்கும் தெரியாமல் லயன் கரை வழியாக ஊருக்குள் இறங்கிப் போய்விடலாம் என்று எண்ணினான். ஆனால் ஸ்டேஷனில், “இதோ இருக்காண்டா ஜக்கு!” என்று ஒரு குரல் வீச்சென்று கேட்டது.

திரும்பிப் பார்த்தால், சீதாராமன் கையில் ஒரு சின்ன மாலை யுடன் வண்டிக்குள் ஏறி வந்துகொண்டிருந்தான்.

யாரோ பெரிய தலைவர் வந்திருக்கிறார் என்று நினைக்கும்படி தடபுடல் பட்டது ஸ்டேஷன்.

மாலை போட்டதும் கை தட்டல்; கோஷம்; காமிரா கிளிக்.

பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட தீரன் போலவும், போரை நடத்தி வென்ற மகா வீரன் போலவும், ஜக்கு வண்டிக் கதவருகில் நின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த எஞ்சின் டிரைவர் வேறே இறங்கி வந்து, “பலே ஜக்கு! நான் போயிட்டு வரட்டுமா? ஞாபகம் வச்சுக்கிறியா?” என்று கை குலுக்கிவிட்டுப் போனான்.

இதைப் பார்த்தவர்கள், ‘இந்தப் பையன் யாரோ, என்னவோ?’ என்று அசந்து போனார்கள்.

சுப்புணியும் மணியும் ஓடிவந்து ஜக்குவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “ஏதாவது இரண்டு வார்த்தை பேசேன்” என்றார்கள்.

ஜக்கு அந்தச் சமயத்தைக் கைவிடாமல், “நண்பர்களே! இதெல்லாம் என்ன? நான் உங்களைப்போல ஒருவன் தானே! பார்ப்பவர்களுக்கு நான் யாரோ வானத்திலிருந்து குதித்தவனோ என்று தோன்றும். எனக்கு என்னவோ வானத்திலிருந்து குதித் தவனாகத் தோன்றாவிட்டாலும் வானத்தில் போய்க் குதித்தவன் போல இருக்கிறது. உங்கள் திருப்தியைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் உங்கள் வரவேற்பை நான் சந்தோஷத் துடன் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றான்.

மறுபடியும் கை தட்டல். அவன் தன்னைக் குறைத்துக் கொண்டு பேசியது மிகவும் கம்பீரமாய் இருந்தது.

எல்லாரும் கைதட்டி முடிந்த பிறகு, கடைசியாக ஒரே கை தட்டல் மட்டும் தனியாகக் கேட்டது. எல்லாரும் பார்த்தார்கள். அம்புலு!

ஐச்கு கிடுகிடென்று கீழே இறங்கி வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “அடி அம் புலு, நீயும் வந்திருக்கிறாயா? உன்னை யார் வரச் சொன்னது?” என்றான்.

அம்புலு திரும்பினாள். அங்கே அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்த ஜக்குவின் அப்பா எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். ஜக்குவுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது. மாலையைக் கழற்றி அம்புலு விடம் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டான்.

அம்புலுவை அன்று சாயங்காலம் அவன் பார்க்கப் போன போது அவள் முகம் வாட்டமாய் இருந்தது. அவன் கொண்டு வந்த பொம்மையைக் கூட அவள் தொடவில்லை. ஜக்கு திடுக் கிட்டு, “ஏன் வாட்டமாய் இருக்கே?” என்று கேட்டான்.

“உன்னை ஒண்ணும் கேக்கலை போ அதுக்கு!” என்றாள் அம்புலு.

“நீ கேட்காவிட்டாலும் நானாகத்தான் கேட்கிறேன். சொல்லேன்” என்றான் ஜக்கு.

“நான் அப்படித்தான் இருப்பேன், உனக்கென்ன?” என்றாள் அம்புலு.

“அப்படி இருக்கக் கூடாது என்றால் கூடாது தான்.”

“ரொம்பத்தான், எப்பப் பார்த்தாலும் அதிகாரம் பண்றியோ? ‘உன்னை யார் வரச் சொன்னது’ன்னு கேட்டயே. உன்னைக் கேட்டுண்டுதான் வரணுமோ ஸ்டேஷனுக்கு?”

“ஓகோ, அதுதான் கோபமோ? நீயும் அதிகாரம் செய்யேன். உன்னை யார் வேண்டாம் என்றது?”

“பின்னே ‘அடி புடி’ என்கிறயே. அதுமட்டும்?”

“அதனால் என்ன தப்பு? நீ ‘அடா புடா’ என்று சொல்லேன். அவ்வளவுதானே!”

“சீச்சீ, நான் எதுக்காக அப்படிச் சொல்றதாம்?”

“பின்னே எதற்காக இப்படி உம்மணா மூஞ்சி மாதிரி ‘உம்’ என்று உட்கார்ந்திருக்கிறதாம்!”

அவன் ‘உம்’ என்று முகத்தை வைத்துக் காட்டியதும் அவள் சிரித்துவிட்டாள். “ஹார்பரிலே எடுத்த போட்டோவிலே கூட இப்படித்தான் இருக்கு உன் மூஞ்சி!” என்றாள், சிரிப்பை மறைக்க.

ஜக்கு உடனே, “ரொம்ப ஜோராய் இருந்தது போட்டோ என்று எனக்கு எழுதியிருந்தயே?” என்று கேட்டான்.

அதற்கு அம்புலு, “அப்படித்தான் எழுதுவேன் போ” என்று சிணுங்கிக்கொண்டே சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே ஓடினாள்.

ஒரு வாரம் சென்றது. பள்ளிக்கூட நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் ஜக்கு வெகு சுறுசுறுப்பாக இருந்தான். அதன் பலனாகச் சிறுவர் சங்கம் ஏற்பட்டு விட்டது.

கௌரவத் தலைவராக இருக்கும்படி அவன் ஹெட்மாஸ்டரைக் கேட்க நினைத்தான். அவரைப் பார்க்கப் போகவே எல்லாருக்கும் பயம். ஆனால் ஜக்கு தைரியமாகப் போனான்.

“நீதானேடா ஜக்கு என்கிறவன்?” என்றார் ஹெட் மாஸ்டர்.

“ஆமாம், ஸார்.”

“சென்னைக்குப் போய் ரொம்ப ரகளை யெல்லாம் செய்தாயாமே நீ?”

“அதெல்லாம் இல்லை. ஸார்.”

“பின்னே உன் போட்டோ பத்திரிகைகளில்கூட வந்ததே?”

“ஆமாம், ஸார்.”

“நம் ஊர்ப் பெயரைக் கெடுத்தாயா, பெயரைக் காப்பாற்றினாயா?”

“இல்லை, ஸார். ஆமாம், ஸார்.”

“எதற்காகவடா இந்தச் சிறுவர் சங்கம்?”

“அது வந்து ஸார் – உங்களுக்குத் தெரியாதா ஸார் சென்னையிலே இப்படிப்பட்ட சங்கங்கள் நிறைய இருக்கு, ஸார். குழந்தைகள் பத்திரிகை, புஸ்தகம் வாங்கிப் படிப்பது, ஒற்றுமையாய் இருப்பது, சேர்ந்து தேகப் பயிற்சி விளையாட்டுகள் விளையாடுவது, பையன்களுக்குள்ளே ஒரு ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட் ஏற்படச் செய்வது, அப்புறம் எக்ஸிபிஷன், நாடகம், மீட்டிங் எல்லாம் நடத்துவது, இதெல்லாந்தான் ஸார்.”

“பேஷ் பேஷ்! அதற்கு நான் எதற்கடா தலைவராய் இருப்பது? பள்ளிக்கூடத்திலேதான் என் தொந்தரவு என்றால் உங்கள் சங்கத்திலேயும் என் தொந்தரவு எதற்கடா?”

“நீங்க அப்படிச் சொல்லப்படாது, ஸார்”.

“பின்னே?”

“நீங்க தலைவர் என்றால்தான் ஸார், எங்களுடைய அப்பா, அம்மா எல்லாரும் நம்பிக்கைப்படுவார்கள்.”

“ஓகோ! அதற்கு என்னை உபயோகப் படுத்திக் கொள்ளப் பார்க்கிறாயா?”

“அது மட்டுமில்லே ஸார்! நீங்களும் எங்களை, ‘இப்படிச் செய்யுங்கடா, அப்படிச் செய்யுங்கடா’ என்றால் எங்களுக்கு எவ்வளவு நன்மையாய் இருக்கும்! அதுக்காகத்தான் ஸார்.”

“சபாஷ். உன் மனசைச் சோதனை பண்ணிப் பார்த்தேன். இவ்வளவு கெட்டிக்காரனாக இருக்கிறாயே நீ? பெரியவன் ஆனால் பெரிய லீடராகி விடுவாய் போலிருக்கிறதே! ஆமாம்; படிப்பில் எப்படி என்று உன் வகுப்பு வாத்தியாரைக் கேட்டுப் பார்க்கிறேன்.”

அவனுடைய நல்ல காலமாக அவன் வகுப்பு வாத்தியார் வராந்தாவில் நின்றுகொண்டிருந்தார்.

“ஏன் ஸார், இவன் உங்க ஸ்டூடண்ட் தானே?” என்று விசாரித்தார் ஹெட்மாஸ்டர்.

“ஆமாம், என்ன விஷயம்?”

“இவன் படிப்பில் எப்படி ஸார் இருக்கிறான்?”

“இவனா?” என்று கேட்டு விட்டு வகுப்பு வாத்தியார் ஆங்கிலத்தில், “பிரமாதமாய்ப் பேசுவான், இருப்பான். படிப் பிலும் கெட்டிக்காரன் தான்” என்றார்.

ஜக்கு பேசாமல் நின்றான்.

“அவர் என்ன சொல்றார், பார்த்தியா? பேச்சோடு சரி என்கிறாரே” என்றார் ஹெட்மாஸ்டர் சிரித்துக்கொண்டு.

ஜக்கு, “அவர் சொன்னது எனக்கும் புரிஞ்சுது ஸார்” என்றான் அடக்கமாக.

“சரி, அடேடே, அப்படியா? ஓடு, உன்னிஷ்டப்படியே போட்டுக்கொள்!” என்றார் ஹெட்மாஸ்டர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து.

வெளியிலே முடிவை எதிர்பார்த்து மற்றப் பையன்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஜக்கு வெற்றியுடன் திரும்பி வந்ததைக் கண்டு ஒருவன் அவனை அப்படியே அலாக்காகத் தூக்கினான். இன்னொருவன் கீழே பிடித்து இழுத்தான். மற்று வர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

ஜக்கு சங்கத்தின் காரியதரிசியாக ஆனான். பெரியவர்கள் கூட அவன் காரியதரிசியாவதை வரவேற்றார்கள்.

அந்த வருஷம் அவன் எக்ஸிபிஷனுக்கு ஏற்பாடு செய்தான் மின்சார ரெயில் என்ன, பேசும் கிளி என்ன, வயர்லெஸ் செட் என்ன- இப்படி எத்தனையோ மின்சார விந்தைகளும் வேடிககை அற்புதங்களும் விநோதச் சாமான்களும் நிறைந்திருந்தன எக்ஸி பிஷனில். “இதைப் போல வேறு எங்குமே பார்த்ததில்லை” என்று பெரியவாகள் கூட ஒரு முகமாக அவனைப் பாராட்டினார்கள்

“அடேய், இவ்வளவெல்லாம் செய்துவிட்டு அடுத்த வருஷம் இந்த ஊரை விட்டு மயிலாப்பூருக்குப் படிக்கப் போனாயோ, அப்புறம் தெரியும் சேதி?”

“என்ன செய்வீர்கள்?”

“நாங்களும் உன் கூட வந்து விடுவோம். அவ்வளவுதான்.”

எல்லோரும் சிரித்தார்கள்.

அம்புலுகூடச் சொன்னாள்: “என்னைவிட உனக்கு அந்த நந்து ரொம்ப உசத்தியாய்ப் போயிட்டானோ? எங்களையெல்லாம் விட்டுவிட்டு நீ அங்கே படிக்கிறதுக்காகப் போகவே கூடாது. ஆமாம்; சொல்லிப்புட்டேன்!”

“ஏது, த்தரவு ரொம்பக் கடுமையாக இருக்கிறதே!”

“அதுக்கு நான் என்ன பண்றது? உனக்கும் தெரிஞ்சால் நீயும் கடுமையாக உத்தரவு போடேன் எனக்கு!” என்றாள் அம்புலு.

“இரு இரு” என்று சிரித்துக்கொண்டே போனான் ஜக்கு.

அந்த வருஷம் அந்த ஊர்ச் சங்கத்தின் பெயரை அடிக்கடி நீங்கள் கூடப் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாமே!

-முற்றும்-

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *