சோதிடனைக் கொன்ற கதை

1
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 56,191 
 

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் “அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்.” என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்”அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?” என்று தைரியம் சொன்னான்.

ராயரும் அதை ஆமோதித்தார்.”ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்” என்றும் ஆணையிட்டார்.

தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.

“அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் ” என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.

மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், “சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?” என்றான் மெதுவாக.

“அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்.”

தன் கரங்களைக் குவித்தபடியே “நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றான் ராமன் பணிவாக.

சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.

“அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?”

“ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்.” சோதிடன் பெருமையுடன் கூறினான்.

“உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! ” என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.

அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.

Print Friendly, PDF & Email

1 thought on “சோதிடனைக் கொன்ற கதை

  1. திஸ் இச் நிசே சுட்கேமென்ட் ரமா….இ லைக் இட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *