சுப்பனின் சுழற்பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 12,308 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Ambulimama_Tamil_1996_04_0009-picசுப்பன் என்பவன் மணலூருக்கு வந்து தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று அவ்வூர் கிராம அதிகாரியிடம் கேட்டான். அவரும் “நீ தனியாள். காலியாக உள்ள காளி யண்ணனின் வீட்டில் இருந்து கொண்டு இவ்வூரில் நாலு வீடுகளில் வேலை செய்து பிழைத்துக் கொள்” என்றார். சுப்பனும் காளியண்ணன் வீட்டிற்குப் போய் “ஐயா! கிராம அதிகாரி உங்கள் வீட்டில் இருந்து கொண்டு இவ்வூரில் வேலை தேடிக் கொள்ளச் சொன்னார். எனக்குப்பணம்கிடைத்ததும் வீட்டு வாடகையும் கொடுத்து விடுகிறேன். உங்கள் வீட்டில் ஏதாவது வேலை இருந்தாலும் சொல்லுங்கள். செய்கிறேன்” என்றான்.

காளியண்ணனும் “காலியாக உள்ள வீட்டை ஒழுங்காக வைத்துக் கொண்டு தினமும் நீ விளக்கேற்றிக் கொண்டிருந்தால் அதுவே போதும். என் வீட்டில் வேலைக்குப் பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்” என்றான். எனவே சுப்பனும் “நானும் வேலை செய்து சம்பாதித்து நான் இருப்பதற்காக வாடகையையும் எப்படியாவது என்றாவது கொடுத்து விடுவேன்” எனக் கூறி அந்த வீட்டில் இருந்து கொண்டு வேலை தேடலானான்.

முதலில் அவன் குயிலன் என்ற கவிஞரின் வீட்டிற்குப் போய் வேலை கேட்டான். அவரோ “என் வீட்டில் வேலை எதுவும் இல்லை. என் மனை விக்கு உதவ ஒரு சிறுமி இருக்கிறாள். நானோ கவிஞன். என் கவிதைக் கேட்டுப் பிறர் அளிக்கும் சன்மானத்தைக் கொண்டு சுகமாக இருக்கிறேன். என் வேலைகளை நானே செய்து கொள்வதுதான் என் பழக்கம். அதனால் இங்கே வேலையாள் வேண்டியதில்லை. எனவே நீ வேறு யாரிடமாவது கேட்டுப்பார்” என்று கூறினார்.

சுப்பனோ “உங்கள் வீடு பெரிது. வீட்டின் பின்புறம் பெரிய கொல்லைப் புறம் இருக்கிறது. அதில் நான் தோட்ட வேலை செய்கிறேன். உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சினான்.

Ambulimama_Tamil_1996_04_0010-picகவிஞர் ஆச்சரியத்தோடு அவனைப்பார்த்தார். அவனைப்பார்த்தால் புத்திசாலியாகவும் உழைப்பாளியாகவும் தெரிந்தது. ஆனாலும் அவர் “என் தோட்ட வேலையை நானே செய்து கொண்டு வருகிறேன். அதுதான் எனக்கு தேகப்பயிற்சி. இந்த வயதில் அந்த தேகப்பயிற்சி கூட இல்லா விட்டால் என் உடல் நலம் கெட்டு விடும். நீ உன் சாப்பாட்டைப் பற்றி கவலைப்படாதே. வேலை கிடைக்கும் வரை தினமும் என் வீட்டிலேயே சாப்பிடு. பகவான் எனக்கு நிறையக் கொடுக்கிறார். அதனால் உனக்கு சாப்பாடு போடுவதால் எனக்கு எவ்வித நஷ்டமும் இல்லை” என்றார்.

சுப்பனும் அவரை வணங்கி “நீங்கள் இவ்வாறு கூறியதற்கு மிக்க நன்றி. ஆனால் ஒருவர் வீட்டில் சும்மா சாப்பிடுவது எனக்குச் சற்றும் பிடிக்காது. எனக்குத் தேவைப்பட்டால் சிறு தொகையைக் கடனாகக் கேட்பேன். அதைக் கொடுத்து உதவினால் என்னிடம் நிறையப் பணம் சேர்ந்ததும் அக்கடனைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறி வணங்கி விட்டு வேறொரு வீட்டிற்குச் சென்றான்.

அது ஒரு வியாபாரியினுடையது. அந்த வீட்டிலும் அவன் செய்ய எந்த வேலையும் இருக்கவில்லை. அந்த வியாபாரியும் “என் வீட்டில் வேலை செய்யப்பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அதனால் உன்னை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால் தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போ” என்று கவிஞர் கூறியது போலச் சொல்லவே சுப்பனும் கவிஞரிடம் கூறியது போலவே அந்த வியாபாரியிடமும் கூறிவிட்டுச் சென்றான். அவன் அந்த ஊரில் பல வீடுகளுக்குப் போய் வேலை கேட்டுப்பார்த்தும் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. அவனும் களைத்துப் போய் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தான். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த கிராம அதிகாரி அவனைப் பார்த்து “என்னப்பா! ஏதாவது வேலை கிடைத்ததா?” என்று கேட்டார்.

அதற்கு சுப்பனும் “இந்த ஊர் மிகவும் முன்னேற்றம் அடைந்தது. இங்குள்ளவர்கள் அவரவர்களது வேலைகளை அவர்களே செய்து கொள்கிறார்கள். அதனால் எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. எல்லோரும் தம் வீட்டிற்கு தினமும் வந்து சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்கிறார்கள். என்ன செய்வேன்?” என்றான். கிராம அதிகாரியும் சிரித்தவாறே “தினமும் ஒரு வீட்டில் சாப்பிடு. பிரச்னை தீர்ந்து விடும்” என்றார்.

Ambulimama_Tamil_1996_04_0011-picசுப்பனும் “வேலை செய்யாமல் தண்டச் சோறு சாப்பிட எனக்கு இஷ்டம் இல்லை. பல நாட்கள் பட்டினி யாவது கிடப்பேனேயொழிய தண்டச் சோறு சாப்பிடமாட்டேன்” என்று உறுதிபடக் கூறினான். அது கேட்டு வியப்படைந்த கிராம அதிகாரி அவன் சாதாரணப்பட்டவனல்ல என்று எண்ணி அவனை அந்த ஊரார் எங்கும் போகவிடக் கூடாது எனவும் நினைத்தார்.

அவர் உடனேயே ஊர்ப் பிரமுகர் களை எல்லாம் கூட்டி, சுப்பனைப் பற்றிக்கூறி ‘இவன் தன்மானம் உள்ளவன். எதையும் இனாமாக ஏற்கக்கூடியவனல்ல. எனவே இவனுக்கு நாமெல்லோரும் ஒருநாள் வேலையை ஒரு வீட்டில் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வூருக்கு வந்த இவன் பட்டினி கிடக்கக் கூடாது. வேலை செய்யும் வீட்டில் இவனுக்குச் சாப்பாடு கிடைத்தால் அதை இவன் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான்” என்றார்.

அப்பிரமுகர்களும் அதற்குச் சம்மதிக்கவே சுப்பனுக்கு வேலை கிடைத்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் வேலை செய்து சாப்பிட்டு வரலானான். சாப்பாட்டு பிரச்னை தீர்ந்தாலும் அவன் பலரிடம் சிறு தொகைகளைக் கடன் வாங்கலானான்.

அவற்றை விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அவர்களுக்கு அவன் வாக்களித்து வந்தான். ஆனால் அவ்வூரார் யாருமே அவனிடம் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்கவே இல்லை!

இப்படியாக ஒரு வருடம் கழிந்தது. ஒருநாள்சுப்பன் கிராம அதிகாரியிடம் “நான் என் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன். இவ்வூராருக்கு என்னென்ன வேண்டுமென்று தெரிவித்தால் அவற்றைக் கொண்டு வந்து தருகிறேன்” என்றான். கிராம அதிகாரியும் “அப்படி நீ என்ன கொண்டு வந்து கொடுப்பாய்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அவனும் “நான் போகும் ஊரில் பைரவி அம்மன் இருக்கிறாள். அந்த அம்மனிடம் நான் போய் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவாள்” என்றான். அப்போது கிராம அதிகாரி “அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். எனக்கு இதுவரை குழந்தையே பிறக்கவில்லை. அதனால் அந்த அம்மனிடம் எனக்கு வேண்டிய அந்த வரத்தைக் கேட்கிறேன்” என்றார்.

Ambulimama_Tamil_1996_04_0012-picசுப்பனோ “அதுதான் முடியாது. நான் மட்டும் தனியே போய் வேண்டினால்தான் அம்மன் அதைக் கொடுப்பாள். உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள். அதை அம்மனிடம் கூறி நிறைவேறச் செய்கிறேன்” என்றான். கிராம அதிகாரியும் “எனக்குத் திருமணமாகிப் பத்து வருடங்களாகின்றன. ஆனால் இதுவரை குழந்தையே பிறக்கவில்லை. இதற்கு வரம் அம்மனிடம் கேட்க முடிவுமா?” என்று கேட்டார். சுப்பனும் “கண்டிப்பாக கேட்டு வரம் வாங்கி வருகிறேன்” என்றான்.

சுப்பன் ஊருக்குப்போவது அவ்வூர் முழுவதும் பரவவே எல்லோரும் அவனைக் காண ஒன்று கூடினார்கள். சுப்பனும் “அம்மன் நல்லவர்களான உங்களுக்கு நன்மையே புரிவாள். உங்கள் விருப்பத்தை என்னிடம் கூறினால் நான் அம்மனிடம் அவற்றைக் கூறி நிறைவேறும்படிச் செய்கிறேன்” என்றான். அவர்களும் ஒவ்வொருவராகத் தாம் விரும்புவதைக் கூறினார்கள். சிலர் தமக்கு வேண்டியதையும் கூறினார்கள். சிலர் பாதை செப்பனிடப் படவேண்டும் என்றார்கள். சிலர் ஊர்க் கோயிலின் மதிலைக் கட்டி கும்பாபி ஷேகம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள்.

இப்படி எல்லோரும் கூறிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த ஒருவன் சுப்பனைப்பார்த்து “ஓகோ! நீ இங்கே தான் இருக்கிறாயா?” என்று கூறினான். கிராம அதிகாரியும் கடா மீசையும் முரடன் போலத் தோற்றமளித்த அவனைப் பார்த்து “யாரப்பா நீ?” என்று கேட்டார். அவனும் “என் பெயர் கட்டைய்யன். என் ஊர் காட்டூர். இவன் ஒரு வருடத்திற்கு முன் எங்கள் ஊரில் இருந்தவன். எல்லோரிடமும் கடன் வாங்கி விட்டு அவ்வூரை விட்டுக் கிளம்பு முன் பைரவி அம்மனிடம் ஊராருக்கு வேண்டியதை கேட்டு வாங்கித் தருவதாக இது போல அங்கும் கூறினான். ஆனால் ஊரார் நம்பாமல் தங்கள் கடன் பாக்கியை வைத்துவிட்டு போகும்படிக் கூறினார்கள். இவனோ இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் எங்கள் ஊரிலிருந்து வெளியேறி விட்டான். இவனைத் தேடிக்கண்டுபிடித்து இழுத்து வரும்படி என் ஊரார் என்னை அனுப்பினார்கள்” என்றான்.

Ambulimama_Tamil_1996_04_0013-picகிராம அதிகாரியும் சுப்பனிடம் “இவன் சொல்வது உண்மையா?” என்று கேட்கவே சுப்பனும் “உண்மை தான்” என்றான். அவர் “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்கவே அவனும் “நான் பைரவி பக்தன். மக்கள் குறைகளைப் போக்க எண்ணி முதலில் வாழையூர் என்ற ஊருக்குப் போய் அங்கு ஒரு வருட காலம் இருந்தேன். அவ்வூராரிடம் மூவாயிரம் வராகன்கள் கடன் வாங்கினேன். அவர்கள் விருப்பங்களைக் கேட்டபோது அவர்கள் முதலில் தம் கடனைத் தீர்த்து விட்டு ஊரைவிட்டுப் போகும்படிக்கூறினார்கள். நான் அவ்வூரில் சம்பாதித்த பணத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தேன். அதை யாரோ திருடி எடுத்துக் கொண்டு விட்டான். அதை அவ்வூராரிடம் கூறியபோது யாரும் நம்பவில்லை. அதனால் அங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் காட்டூரை அடைந்து ஒரு வருடம் இருந்து ஆறாயிரம் வராகன்கள் சேர்த்தேன். அவ்வூராரும் வாழையூர்க்காரர்களைப் போல என்னை ஊரைவிட்டு போக அனுமதிக்கவில்லை. எனவே அவர்களுக்குத் தெரியாமல் இரவில் கிளம்பி வாழையூர் போய் என் கடனை ஒன்றுக்கு இருமடங்காகக் கொடுத்து, தீர்த்தேன். அதன்பிறகு இங்கு வந்து ஓராண்டில் பனிரெண்டாயிரம் வராகன்கள் சேர்த்தேன். இதைக் கொண்டு காட்டூரில் நான் வாங்கிய கடன் தொகைக்கு இருமடங்காகக் கொடுத்து கடனைத் தீர்த்து விட்டு என் ஊருக்குப் போய் பைரவி அம்மனிடம் உங்கள் விருப்பங்களைக் கூறி நிறைவேற்ற வேண்டப் போகிறேன்” என்றான்.

கட்டைய்யனோ “இதெல்லாம் பொய்” என்றான். அதற்கு சுப்பன் “இல்லை கட்டைய்யா! இப்போது ஊருக்கு வந்து எல்லாக் கடனையும் தீர்க்கிறேன்” என்றான். “அப்படியானால் இந்த ஊராரின் கடனைத் தீர்க்க எங்கே போவாய்?” என்று கேலியாக அவன் கேட்டான். அப்போது கிராம அதிகாரி “கட்டைய்யா! எங்கள் ஊர்வளமானது. நாங்கள் நல்லவர்களை நம்புகிறவர்கள். இவன் இவ்வூரில் வாங்கிய கடன் தொகை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இவன் தான் எங்கள் கடனைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டிருந்தான். எனவே இவன் உங்கள் ஊருக்குப் போய் தான் பட்ட கடனை எல்லாம் தீர்த்த பிறகு விட்டு விடு. இவன் தன் ஊருக்குப் போய் பைரவி அம்மனிடம் இந்த ஊராரின் கோரிக்கைகளைக்கூறி நிறைவேற்றும்படி சொல்வான். எங் ளுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Ambulimama_Tamil_1996_04_0014-picகட்டைய்யனும் “எங்கள் ஊர்க் கடனைத் தீர்த்த பின் இன்னொரு ஊருக்குப் போய் அங்கு கடன் வாங்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?” என்று கேட்டான். கிராம அதிகாரியும் பலமாகச் சிரித்து “உன் ஊராரைப் போலவும் வாழையூராரைப் போலவும் அவநம்பிக்கை கொண்டு நாங்கள் எங்கள் கடன் பாக்கியைத் தீர்த்து விட்டு போகச் சொல்லவில்லை. எனவே இவன் வேறு ஊருக்குப்போக மாட்டான். பைரவி அம்மனிடம் போய் எங்களுக்காக வேண்டுவான். எங்கள் வீடுகளில் தன்னாலான வரை வஞ்சகமில்லாமல் உழைத்தான். தன் சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்ய அவன் அம்மனை வேண்டுகிறான். எங்களுக்கு இவனிடம் முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் இவனைக் கொஞ்சமும் துன்புறுத்த மாட்டோம்” என்றார்.

கட்டைய்யன் அதுகேட்டு ஆச்சரியப்பட்டான். அந்த ஊரார் அவன் எதிர்பார்த்தது போல சுப்பனிடம் கடன் பாக்கியைத் தீர்த்துவிட்டுப் போகச் சொல்லவில்லை. எதுவும் கேளாமல் அவனைக் காட்டூருக்கு அனுப்பச் சம்மதித்தது அவனுக்கு வியப்பையே அளித்தது.

சுப்பன் கிராம அதிகாரிக்கும் ஊராருக்கும் நன்றி செலுத்தி விட்டுக் கட்டைய்யனுடன் காட்டூருக்குச் சென்றான். அங்குதான் வாங்கிய கடனுக்கு இருமடங்காகக் கொடுத்து கடனை எல்லாம் தீர்த்தான். அதன்பிறகு அவன் தன் ஊருக்குச் சென்றான்.

Ambulimama_Tamil_1996_04_0015-picகொஞ்ச காலத்திற்குப் பின் மணலூர் கிராம அதிகாரியின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவ்வூரில் தீராத வியாதியால் அவஸ்தைப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். ஊர்க் கிணறுகளின் நீர் உப்பு போய் குடிநீராகியது. பொதுப் பணிகளுக்கான பணமும் தாராளமாகக் கிடைத்தது. அதைக் கொண்டு பாதையைச் செப்பனிட்டார்கள். கோவில் கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தினார்கள். இதெல்லாம் சுப்பனால்தான் என்று எண்ணி மணலூர் வாசிகள் சுப்பனைக் கொண்டாடி அவன் புகழை எங்கும் பரப்பினார்கள். ஆனால் அவர்கள் அவனைத் தேடிக் கண்டுபிடித்துத்தம் ஊரிலேயே வைத்துக்கொள்ள நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் அவன் அகப்படவே இல்லை. மணலூர் வாசிகள் அடைந்த நன்மைகளைக் கண்டு காட்டூர்காரர்களும் வாழையூர்காரர்களும் தம் செய்கைகளுக்கு வெட்கப்பட்டனர்.

– ஏப்ரல் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *