கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 20,628 
 
 

அடர்ந்த காட்டில் உள்ள புல்வெளியில், தனக்கு சொந்தமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். பன்றிகள் எல்லாம் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி மேய்ந்து கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் அந்தக் காட்டுப் பக்கம் எப்பிராயீம் என்ற சிறுவன் வந்தான். அங்கே ஆனந்த் நிற்பதைக் கூட கவனிக்காத அந்த சிறுவன், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளின் மீது தன் பார்வையை செலுத்தினான். தனக்குத் தேவைப்படுகிற மூலிகைச் செடிகளைப் பறிக்கத் தொடங்கினான்.

ChinnaPayan

அப்போது அவன் பின்னால் நின்று நன்றாக சிரிக்கத் தொடங்கினான் ஆனந்த். சிரிப்பு சத்தம் கேட்டு திடுக்கிட்ட எப்பிராயீம் திரும்பிப் பார்த்தான். அங்கே ஆனந்த் நிற்பதைக் கண்டு அவனை பார்த்து லேசாக சிரித்தான்.

“”சிறுவனே! நீ தினமும் இங்கு வந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறாய்! இவற்றையெல்லாம் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று தான் தெரியவில்லை.” என்று ஆவலோடு கேட்டான்.

“”ஐயா! இவற்றையெல்லாம் நான் மருந்து செய்யக் கொண்டு போகிறேன். இந்தக் காட்டில் உள்ள மூலிகைகளை எல்லாம் பறித்து விதவிதமான மருந்துகளைத் தயார் செய்து வருகிறேன். மேலும், பல அற்புதமான மருந்துகளை எல்லாம் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்!” என்றான்.

“”ஹா… ஹா… ஹா…” என்று காடே அதிரும்படியாக சிரிக்கத் தொடங்கினான் ஆனந்த்.

“”சிறுவனே! உன்னை நினைக்கிறபோது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது.

“”நீ தினமும் காட்டிற்கு வந்து ஏதோ பெரிய மனிதர் போன்று பச்சிலைகளைப் பறித்து செல்கிறாய்! உன்னை நீயே பெரிய வைத்தியன் என்று எண்ணி, உன் மனதுக்குள் நீயே உன்னைப் பெருமையாக நினைக்கிறாய். இவைகள் எல்லாம் உன்னிடம் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது,” என்று கூறினான்.

“”ஐயா! சிறியவர்கள், பெரியவர்களின் செயலை செய்யக்கூடாது என்று யாராவது சட்டம் போட்டிருக்கின்றனரா? அப்படி எதுவும் இல்லையே… நான் எனது கடும் முயற்சியால் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் அரிய முயற்சியை செய்து வருகிறேன். அதைக் கண்டு முடிந்தால் என்னைப் பாராட்டுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்!” என்று கூறினான்.

“”சிறுவனே! நீ படுசுட்டியாகவே பேசுகிறாய்! நீ எப்படித்தான் மருந்தைக் கண்டுபிடிக்கிறாய் என்று நானும் தான் பார்க்கிறேன். எத்தனையோ வைத்தியர்கள், வயதான பின்னும் கூட வைத்தியத்தில் தேர்ச்சி பெறாமல் ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நீ என்ன அப்படி அற்புதமான மருந்தைக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்று பார்க்கிறேன்!” என்று ஆணவத்தோடு கூறினான்.

அதைக் கேட்டுக் கோபப்படவோ, ஆத்திரப்படவோ செய்யாமல் எதையும் நாம் செயல் மூலமே காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு அமைதியுடன் அங்கிருந்து சென்றான் எப்பிராயீம்.

அதன்பின் மீண்டும் தன் பன்றிகளை புல்வெளியில் மேய்க்கச் சென்றான் ஆனந்த். அன்றும் அவன் கண்கள் சிறுவனைத் தேடின.

வெகுநேரமாக எப்பிராயீமை தேடியும் அவன் அங்கு வராதது ஆனந்த்க்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நாட்கள் கடந்து வாரங்கள் கடந்து சில மாதங்களும் கடந்தன. எப்பிராயீம் அதன்பின் ஆனந்த் கண்களுக்குத் தென்படவேயில்லை.
ஒருநாள் தன் பன்றிகளை எல்லாம் காட்டின் மேடான பகுதிக்கு ஓட்டிச் சென்றான் ஆனந்த். அங்கு அவன் சற்று மேடான பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அது மழைக்காலமானதால், மழை நீர் எல்லா இடங்களிலும் வடிந்து சேறாகக் காணப்பட்டது.

அதை கவனிக்காமல் பன்றிகளை விரட்டியபடி வேகமாக ஓடினான். அப்போது அவன் கால் சேற்றில் பட்டு புரண்டுவிட்டது. அடுத்த நிமிடம் , சரிவான மேட்டுப் பகுதியில் இருந்து வேகமாகப் புரண்டபடி பள்ளத்தில் பொத்தென்று விழுந்தான் ஆனந்த்.

அவன் தலையில் பலமான அடிபட்டு ரத்தம் கசிந்தது. கை, கால்கள் எல்லாம் உராய்ந்து ரத்தம் வழிந்தது. கண்கள் இருட்ட உடல் சோர்வடைய அப்படியே தரையில் படுத்தபடி மயக்க நிலையை அடைந்தான்.

சிறிது நேரத்தில் தன் மீது மென்மையான காற்று படுவதை உணர்ந்தான். மெல்லத் தன் கண்களைத் திறந்து பார்த்ததும், தான் ஒரு குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன் தலையில் மருந்து வைத்துக் கட்டப்பட்டிருப்பதையும் உணர்ந்தான்.

அவனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை. காட்டில் மேடான இடத்திலிருந்து கால் இடறி பள்ளத்தில் விழுந்ததும் அப்படியே தன் உயிர் பிரிந்துவிடும் என்று நினைத்தவனுக்கு, இப்போது தான் உயிரோடு காப்பாற்றப்பட்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறபோது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

தன்னைக் காப்பாற்றியவர் யாரென்று காணும் ஆவலில் தன் பார்வையை சற்றுத் திருப்பினான். அங்கே சிறுவன் எப்பிராயீம் நின்று கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

“”ஐயா! என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் கண்டு பிடித்த மருந்தை வைத்துதான் உங்கள் தலையில் ஏற்பட்ட காயத்தின் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தினேன். நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டுத்தான் உங்களுக்குப் புதிய உற்சாகம் பிறந்து மயக்கம் எல்லாம் தெளிந்துவிட்டது,” என்றான்.

அதைக் கேட்டு வியப்புற்றான் ஆனந்த். “”தம்பி! உன்னை நான் சாதாரணமாக நினைத்தேன். நீயோ மிகச் சிறந்த அறிவாளியாக இருக்கிறாய்! நீ கண்டுபிடித்த மருந்து தான் இன்று என் உயிரையே காப்பாற்றி இருக்கிறது. உனது திறமையை இன்று நான் நன்றாகவே புரிந்து கொண்டேன். நான் உன்னை எவ்வளவோ ஏளனம் செய்தும் கூட நீ அதைப் பொருட்படுத்தாது என் உயிரையே காப்பாற்றிவிட்டாய். அதோடு நீ கண்டுபிடித்த மருந்துகளுக்கும் உயிர் இருக்கிறது,” என்று கூறினான்.
“”ஐயா! செயற்கரிய செயலைச் செய்து சாதனை படைக்க முயற்சித்தால், கேலியும், ஏளனமும், வசை சொற்களும் போட்டி போட்டுக்கொண்டு தேடி வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் முறியடித்து வாழ்க்கையில வெற்றி பெற்றால் தான் சாதனையாளராகத் திகழ முடியும். அதனால் உங்கள் வசைச் சொற்கள் என்னை ஒன்றும் பாதித்துவிடவில்லை. இனி நான் கண்டுபிடித்த இந்த மருந்துகளை உலகத்தில் உள்ள ஏழை மக்கள் எல்லாம் பயன்படுத்தும்படியாக செய்யப் பாடுபடுவேன்,” என்று கூறினான்.

அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான் ஆனந்த்.

“”தம்பி! உன் செயலை நான் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நீ சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், உன்னுடைய லட்சியங்கள் எல்லாம் உயர்ந்த லட்சியங்களாக இருக்கின்றன. நிச்சயமாக வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய். நீ சிறுவயதிலேயே செயற்கரிய செயலை செய்துவிட்டாய். உன் செயலில் நீ வெற்றி பெற உன்னை வாழ்த்துகிறேன்!” என்று கூறினான்.

அந்த வாழ்த்தை புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டான் எப்பிராயீம்.

– டிசம்பர் 03,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *