ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் தமது அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டார். தமது ஜாதகக் குறிப்பை அவரிடம் கொடுத்தார்.
“”இதைப் பாருங்கள், என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லுங்கள்?” என்றார்.
சோதிடர் அதை வாங்கிப் பார்த்தார். கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தார்.
அப்புறம் சொன்னார், “”அரசே, உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் உனக்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள். நீ உனது கைகளாலேயே அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டிவரும்!” என்றார்.
இதைக் கேட்டதும் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் உறவினர்கள் மீது அவருக்கு அளவுகடந்த பாசம் இருந்தது.
உடனே, சேவகர்களை அழைத்து, “”இந்த சோதிடருக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன். உடனே சிறையில் அடையுங்கள்!” என்று உத்தரவு போட்டார்.
பிறகு, இன்னொரு சோதிடரை அழைத்து வரச் செய்தார். அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்து, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கச் சொன்னார்.
அவர் சொன்னார், “”அரசே! உங்களுடைய ஜாதகம் மிகவும் நல்ல ஜாதகம். உங்களுடைய உறவினர்கள் எல்லோரையும்விட நீங்கள் அதிக காலத்துக்கு வாழ்வீர்கள்” என்றார்.
இதைக் கேட்டதும் ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி! அந்த சோதிடருக்கு நிறைய வெகுமதிகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… இரண்டு சோதிடர்களும் சொன்ன செய்தி ஒன்றுதான்! ஆனால் ஒருவருக்குக் கிடைத்தது ஆயுள் தண்டனை. இன்னொருவருக்கு வெகுமதி கிடைத்தது.
என்ன காரணம்? இரண்டாவது சோதிடர் சரியான
உத்தியைக் கையாண்டார். அவ்வளவுதான்!
– கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.(ஆகஸ்ட் 2012)