கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,551 
 
 

கம்சபுரம் என்ற ஊரில் சகுனிராசன் என்ற ஒருவன் இருந்தான். படு புத்திசாலியான அவன் அந்நாட்டு அரசனின் ஆலோசகராக இருந்தான். அரசனுக்கு எப்பேர்பட்ட பிரச்னை ஏற்பட்டாலும் சகுனிராசன் அதை எளிதில் தீர்த்து வைப்பான். அதனால் அவனுக்கு கர்வம் அதிகமாக இருந்தது. சகுனிராசனுக்கு மனைவியும் ஒரு மகனும் இருந்தான். மனைவிக்கு பிறந்த ஆறு குழந்தைகள் இறந்துவிட்டனர். ஏழாவதாக பிறந்த மகன்தான் வீரராசா.

வீரராசாவை உயிருக்கு உயிராக நேசித்தான் சகுனிராசன். அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான். மகன் வளர்ந்து இளைஞன் ஆகிவிட்டான். ஆனால், தந்தையின் புத்திசாலித்தனம் அவனுக்கு இல்லை. அதைக் கண்டு சகுனிராசன் கவலை அடைந்தான். சகுனிராசன் தன் மகனையும் புத்திசாலி ஆக்குவதற்காக கடும் முயற்சி செய்து பார்த்தான். ஆனால், மகனது மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. வீரராசாவுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஞானமணி, புத்திசாலியாக இருந்தான். தன் மகனை விட நண்பன் புத்திசாலியாக இருப்பது சகுனிராசனுக்கு பிடிக்கவில்லை.

வீரராசா கொஞ்ச நேரம் கூட ஞானமணியை பிரிந்து இருக்கமாட்டான். ஞானமணியின் தந்தை ஒரு விவசாயி. வயலில் கடுமையாக உழைப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. ஒரு நாள் மகனை அருகில் அழைத்து, “”அடே ஞானமணி நீ வளர்ந்துவிட்டாய். எனவே, என்னுடன் வந்து வயலில் வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டான். அதைக் கேட்ட ஞானமணி, “”அப்பா, நான் வயலுக்கு வந்து வேலை செய்ய விரும்பவில்லை. வீரராசாவின் தந்தையைப் போல் அரண்மனையில் வேலை செய்ய விரும்புகிறேன்,” என்றான்.

ஞானமணியை முறைத்துப் பார்த்தான் தந்தை. “”அடே அதுக்கெல்லாம் புத்தி வேண்டாமா? நல்ல கல்வி அறிவு வேண்டாமா? என்றான் தந்தை. “”நான் அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன்,” என்றான் ஞானமணி. “”அடே அந்த சகுனிராசன் ஒரு மாதிரியான மனுசன். யாருக்கும் எதையும் கற்றுக் கொடுக்கமாட்டான். அது மட்டுமா கர்வம் பிடிச்சு திரிகிறான்,” என்றான். “”அப்பா நீங்கள் அவரை சந்தித்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும்,” என்றான் ஞானமணி. “”சரி உன் விருப்பத்தை கெடுப்பானேன்,” என்று கூறிவிட்டு வெளியே கிளம்பினான் தந்தை. வீட்டு வாசலில் போட்டு இருந்த சாய்வு நாற்காலியில் கம்பீரமாக படுத்து இருந்தான் சகுனிராசன். ஞான மணியின் தந்தை பணிவுடன் வணக்கம் சொன்னான். சகுனிராசன் பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. “”உம்… என்ன வேணும்?” என்று கேட்டான்.

“”அய்யா என் மகன் ஞானமணி உங்களிடத்தில் கல்வி கற்க விரும்புகிறான். நீங்க மனசுவச்சா அவன் உங்களைப் போல் புத்திசாலி ஆயிடுவான்,” என்று கூறி, தலையை சொறிந்தான். நகைச்சுவையை கேட்டது போல் சிரித்தான் சகுனிராசன். “”அடே… நீ ஒரு விவசாயி. படிப்பறிவு கிடையாது. உன் பையனுக்கு மட்டும் எப்படிடா புத்தி வரும்? எப்படிடா கல்வி அறிவு வரும்?” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான் சகுனிராசன். “”அய்யா, அப்படி சொல்லாதீங்க. அவன் என்னைப் போல் அல்ல. புத்திசாலிப் பையனாக இருக்கிறான். நீங்க மனசு வச்சு ஏதாச்சும் சொல்லிக் கொடுத்தா அவன் கட்டாயமா முன்னுக்கு வந்துடுவான்,” என்றான் ஞானமணியின் தந்தை.

“”சரி சரி எனக்கு வேறு வேலை இருக்கிறது. நீ வேலையை பார்த்து போயிட்டு வா,” என்றான் சகுனிராசன். இனி வாதாடி பலனில்லை என்று உணர்ந்த ஞானமணியின் தந்தை தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினான். சோகமாக வீடு திரும்பிய தந்தையைக் கண்டு திடுக்கிட்டான் ஞானமணி. “”மகனே, அந்த மனுசன் உனக்கு படிப்பும் அறிவும் வராதுன்னு சொல்லிட்டான். அப்பவே நான் சொன்னேன். ஆனா, நீ கேட்க மாட்டியே,” என்றான் தந்தை. அதைக் கேட்ட ஞானமணிக்கு வருத்தம் ஏற்பட்டது. அவன் கண்கலங்கியபடி வீட்டை விட்டு வெளியேறினான். சற்று தூரம் சென்ற போது, “”அடே ஞானமணி, ஏண்டா துக்கமா இருக்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். அங்கே வீரராசா நின்று கொண்டிருந்தான்.

“”என்ன ஆச்சு? ஏனிப்படி உம்முன்னு இருக்கே?” என்று மீண்டும் கேட்டான் வீரராசா.

“”எனக்கு கல்வி கற்றுத் தரும்படி உன் தந்தையிடம் கேட்டார் எங்கப்பா. ஆனால், அவர் மறுத்து விட்டார். அது தான் வருத்தமா இருக்கிறேன்,” என்றான் ஞானமணி.

“”இதுக்கு பேய் வருத்தப்படுறியே… நான் எங்கப்பாவிடம் சொல்லி உனக்கு பாடம் சொல்லித் தர வைக்கிறேன்,” என்றான். வீரராசா. அதைக் கேட்ட ஞானமணிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. வீடு திரும்பிய வீரராசா தந்தையிடம் சென்றான். “”அப்பா, ஞானமணிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கமாட்டேன்னு சொன்னியா?” என்றான். “”ஆமாம் அதுக்கென்ன?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் சகுனிராசன். “”அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலேன்னா நான் எங்காவது போயிடுவேன்,” என்றான் மகன். மகனை உயிருக்குயிராக நேசிக்கும் சகுனிராஜன் அதைக் கேட்டதும் திடுக்கிட்டு போனான்.

“”மகனே, அப்படி ஒன்றும் செய்திடாதே. நான் அவனுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுக்கிறேன்,” என்றான் சகுனிராசன். அதைக் கேட்ட வீரராசா மகிழ்ச்சியுடன் நண்பனை காண ஓடினான். “இரு இரு உனக்கு வித்தையா கற்க வேண்டும் உன்னை என்ன செய்கிறேன் பார். என் மகனுக்கு புத்தியில்லை. உனக்கு புத்தி இருக்கிறது. உனக்கு பாடம் கற்றுத் தந்தால் நீ பெரிய ஆள் ஆயிடுவே. அதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்,” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் கர்வம் பிடித்த சகுனிராசன்.

அடுத்த நாள் சகுனிராசன் வீட்டுக்கு பாடம் கற்க வந்தான் ஞானமணி. அதைக் கண்டு ஆத்திரமடைந்தான் சகுனிராசன். ஆனால் ஆத்திரத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தான். குருவை வணங்கினான் ஞானமணி, “”உனக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறேன். இந்த கோணியும் கயிறும் எடுத்துக் கொண்டு என்னுடன் வா,” என்றான் சகுனிராசன். அவன் கோணிப் பை மற்றும் நீளமான கயிறுடன் சகுனிராசனை பின் தொடர்ந்தான். இருவரும் காட்டுக்குள் வெகுநேரம் சென்றனர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் தெரியாமல் வீரராசாவும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான். உயரமான மரத்தடியில் சகுனிராசன் நின்றான். அவன் மரத்தின் உச்சியை நோட்டமிட்டான்.

பிறகு ஞானமணியை பார்த்து, “”நீ இந்த கோணிப் பைக்குள் ஏறிக் கொள். உன்னை கயிற்றால் கட்டி இழுத்து மரத்தின் உச்சி கிளையில் தொங்க விடுகிறேன். ஏழு நாட்கள் இதே நிலையில் இருந்தால் உனக்கு அறிவு வந்துவிடும். பிறகு புத்திசாலித்தனத்தில் உன்னை யாராலும் வெல்ல முடியாது,” என்றான்.

“”சரி அப்படியே ஆகட்டும்,” என்றான் ஞானமணி.

ஞானமணி கோணிப் பைக்குள் புகுந்தான். சகுனிராசன் கயிற்றால் கோணிப் பையை கட்டி மரக்கிளையில் மாட்டி இழுத்தான். சற்று நேரத்தில் ஞானமணி கோணிப் பையுடன் மரத்தின் உச்சிக்கு சென்றான். கயிற்றை இழுத்து மரத்தில் கட்டிவிட்டு, “”உனக்கு அறிவா வேண்டும் இங்கேயே பட்டினி கிடந்து செத்து போ,” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் சகுனிராசன். தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து திடுக்கிட்டான் ஞானமணி. அவன் தேம்பி தேம்பி அழுதான். சற்று தொலைவில் புதருக்குள் மறைந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த வீரராசாவுக்கு தன் தந்தையின் சூழ்ச்சி புரிந்துவிட்டது. அவன் புதருக்குள் இருந்து வெளியேறினான்.

மரத்தடிக்கு சென்று “”அடே ஞானமணி,” என்று குரல் கொடுத்தான். நண்பனின் குரல் கேட்ட ஞானமணி மகிழ்ச்சி அடைந்தான். “”அடே என்னை காப்பாத்துடா கட்டை அவிழ்த்து என்னை கீழே இறக்குடா,” என்று கத்தினான். வீரராசா கட்டை அவிழ்த்து ஞானமணியை கீழே இறக்கினான். “”உங்கப்பா என்னை கொன்று விட நினைத்தார். எனவே, நாம் இருவரும் சேர்ந்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்,” என்றான் ஞானமணி. வீரராசாவை கோணிப் பையில் கட்டி மரத்தின் உச்சிக்கு இழுத்து கட்டிப் போட்டு விட்டு வீடு திரும்பினான் அவன்.

இரவு வந்தது. வீரராசா வீடு திரும்பவில்லை. தந்தை சகுனிராசன் அமைதியிழந்து காணப்பட்டான். இரவு வெகுநேரம் ஆகியும் மகன் வீடு திரும்பவில்லை. அந்த ஊர் முழுவதும் தேடி அலைந்தான் தந்தை. கம்சபுரம் பிரதேசம் முழுவதும் தேடியும் மகன் அகப்படவில்லை. மகனை உயிருக்கு உயிராக நேசித்து வந்த சகுனிராசன் கதறி அழுதான். ஞானமணிக்கு செய்த கொடுமைதான் தன் மகனை தன்னிடமிருந்து பறித்தது என்ற குற்ற உணர்வு அவனை மேலும் அழச் செய்தது. அடுத்த நாள் காலை சகுனிராசன் காட்டிற்கு ஓடினான். அவன் மரத்தடியில் நின்று மர உச்சியைப் பார்த்தான். அங்கே கோணிப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் கயிற்றை அவிழ்த்து கோணிப் பையை கீழே இறக்கி கட்டு அவிழ்த்து போது அதிர்ச்சி அடைந்தான். ஞானமணிக்கு பதிலாக தன் மகன் வீரராசா எப்படி கோணிப் பைக்குள் அகப்பட்டான்? தந்தையின் சந்தேகத்தை போக்கினான் மகன். “”அப்பா, நீங்க செய்த சதி என்னையே மாட்ட வைத்தது பார்த்தீர்களா?” என்றான் வீரராசன்.

என்ன நடந்தது என்று விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் சகுனிராசன் அப்போது. அங்கே வந்த ஞானமணி, “”அய்யா, நீங்க என்னை கொல்ல நினைத்தீர்களா? பொறாமை உங்கள் கண்களை மறைத்தது. உங்கள் மகன் இல்லை என்றால் நான் பட்டினி கிடந்து செத்திருப்பேன்,” என்றான். தன் செயலால் தன் செல்ல மகனே பாதிக்கப்பட்டதை கண்டு வெட்கத்தால் தலைகுனிந்தான் சகுனிராசன். “”நீங்கள் என் கர்வத்தை அழித்து விட்டீர்கள். இனிமேல் நான் ஆணவம் பிடித்தவனாக இருக்கமாட்டேன்,” என்று கூறி அழுதான் சகுனிராசன். அதைக் கண்டு நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குட்டீஸ்… பிறர் நம்மை விட புத்திசாலியாக இருப்பதை கண்டு பொறாமைப் படக் கூடாது. ஒருபோதும் பொறாமையால் எதையும் பெற முடியாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *