கபிலர், செல்வங் கடுங்கோ வாழியாதனைப் பார்க்கச் சென்றார். “கையைக் காட்டு” என்றார் புலவர். புலவர் கை ரேகை பார்க்கப் போகிறாரோ என்று கையைக் காட்டி நின்றான். கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே,
“கொலையானைகளை இழுத்துப் பிடிக்கிறது உன் கை. குதிரைகளை அடக்குகிறது உன் கை. வில்லை வளைக்கிறது உன் கை. வந்தவர்க்குப் பரிசுகளை வாரி வாரி வழங்குகிறது உன் கை. இதனால் உன் கை உரம் பெற்றிருக்கிறது. இது உலக இயல்புதான்”
மன்னன் கையை விடுத்தார். தன் கையைக் காட்டினார். “என் கையைப் பார். ஊனும் கறியும் சோறும் துவையலும் எடுத்து உண்பதைத் தவிர வேறு இல்லை. இதனால் தான் என்னைப் போன்றவர் கைகள் மென்மையாய் இருக்கின்றன. இதுவும் உலகத்து இயல்புதானே” என்றார்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்