கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 32,010 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக் கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

I

விளையாட்டு வினையாதல்

அன்று ஏதோ ஒரு சிறப்பு நாள். காமுவும் இலட்சுமியும் அழகான பட்டுப்பாவாடை யும் சட்டையும் அணிந்திருந்தார்கள். அவர்கள் தலை, வாரிப் பின்னப்பட்டிருந்தது. காமுவுக்கு ஏழு வயதிருக்கும். இலட்சுமிக்கு எட்டு வயதிருக்கும். அவ்விருவரும் இணை பிரியாத தோழியர். இருவரும் கைகளைக் கோத்துக் கொண்டு தெருவைக் கடந்து அப்பால் சென்றனர். முந்தின நாள் இரவில் அதிக மழை பெய்திருந்ததால், தெருப்பக்கத்தில் உள்ள பள்ளங்களில் நீர் நிரம்பியிருந்தது. குழந்தைகளுக்கு நீரில் இறங்கி விளை யாடுவது மிகுந்த மகிழ்ச்சியல்லவா? அவர்கள் பாவாடைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி நடந்தார்கள். அப்பொழுது காமு ஒரு கையால் நீரை வாரி வாரி இறைத்து விளையாடினாள். அந்த நீர் இலட்சுமியின் உடைகளில் பட, அவை நனைந்துவிட்டன. நீர் சேறாயிருந்ததால், இலட்சுமியின் உடைகள் அழுக்காகிவிட்டன. காமு வேண்டுமென்று இவ்வாறு செய்யவில்லை. தன் ஆடைகள் பாழாகிவிட்டதைக் கண்ட இலட்சுமி, தன் தாய் மிகவும் கோபிப் பாளென்று அஞ்சினாள். அவள் மனம் மிக்க கலக்கமடைந்தது. இலட்சுமி, “நீ ஏன் இவ்வாறு செய்தாய்? என் அம்மாள் என்னை அடிப்பாளே!” என்று காமுவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். இதைக் கண்ட காமு, தனக்கு இதனால் தீங்கு நேரிடுமென்று அஞ்சி ஓட ஆரம்பித்தாள்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்ட இலட் சுமியின் தாய் நாராயணி அம்மாள் அங்கு ஓடி வந்து, குழந்தையின் நிலையைக் கண் டாள். “இலட்சுமி, புதுப் பாவாடையை ஏன் சேற்று நீரில் நனைத்தாய்? மேலெல்லாம் நீராயிருக்கிறதே? குட்டையில் விழுந்துவிட்டாயா?” என்று நாராயணி இலட்சுமியைக் கண்டித்தாள். “இல்லை அம்மா, காமுதான் என் மேல் நீரை வாரி இறைத்து இவ்வாறு செய்தாள்!” என்று சொல்லிக்கொண்டே இலட்சுமி ஓயாமல் அழுதாள். இதைக் கேட்டதும் நாராயணி அம்மாளுக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அவள் உடனே தெருவுக்குப் போனாள்; அங்கு நின்றுகொண்டிருந்த காமுவைத் திட்டி அவள் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்து, “இலட்சுமியின் பாவாடையையும் சட்டையையும் ஏன் இவ்வாறு அழுக்காக்கினாய்?” என்று சொல்லி அவள் தாடையில் பளீரென்று அறைந்தாள். காமு பெருங்குரலில் அழுதுகொண்டே தன் தாய் அலர்மேலிடம் சென்றாள். அலர்மேல் அம்மாள் மிகுந்த பரபரப்புடன் நாராயணியிடம் வந்து, “என் குழந்தையை ஏன் நீ இவ்வாறு அடிக்க வேண்டும்? குழந்தை தெருவில் போட்டுக் கிடக்கிறதா? உன் பணக் கொழுப்பா உன்னை இவ்வாறு செய்யச் சொல்கிறது? குழந்தையை அடித்த கையைத் தறிக்க வேண்டாவா!” என்று சொல்லி அவளைத் தாறுமாறாகத் திட்டினாள்.

“உன் குழந்தைக்குப் பரிந்து பேச வந்து விட்டாயே! என் குழந்தையைக் குட்டையில் தள்ளி அவள் புத்தம்புதுப் பாவாடையையும் சட்டையையும் நாசமாக்கிவிட்டதே! அதை அடித்ததா தவறு! பேசாதே!” என்று நாராயணி எதிர்த்தாள்.

“அடி பாவி! குழந்தையை இப்படியா அடிப்பது! தாடை வீங்கியிருக்கிறதே! உன் பணக்கொழுப்பினாலா இப்படி அடாத செயல் செய்கிறாய்? நீ நாசமாய்ப் போக! உனக்குத் தெய்வம் கூலிகொடுக்கும்!” என்று அலர்மேல் சொல்ல, இருவருக்கும் வார்த்தை மிஞ்சிவிட்டது. பின்பு அவர்கள் தங்கள் கணவர்களை ஏவிவிட, அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பலவாறு இழிவாகப் பேசத் தொடங்கினார்கள். இதற்குள் ஊரார்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள். அவர்களுட்சிலர் என்ன சமாதானம் சொல்லியும் இவர்கள் கேட்பதாய் இல்லை தாங்கள் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இழிவான வார்த்தைகளை வாரி விட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு குழந்தைகளின் விளையாட்டுச் சண்டை வலுத்துப் பெரியவர்களின் சண்டையாய்விட்டது.

II

பாட்டி வருகை

நாராயணியின் மாமி பார்வதி அம்மாள் இக்குரலைக் கேட்டு அங்கு வந்தாள். பார்வதி அம்மாளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆயினும், அவள் இயற்கை அறிவுடையவள். கல்வியால் ஏற்பட வேண்டிய எல்லாக் குணங்களும் அவளிடம் இருந்தன. ஆழ்ந்த தெய்வ பத்தி, யாரிடத்தும் பகையின்மை, பொறுமை ஆகிய நற்குணங்கள் அவளிடம் இயற்கையிலே குடிகொண்டிருந்தன. படிப்பதற்குத் தெரியாத போதிலும் கேள்வி மூலமாகவே இராமாயண, பாரத, பாகவதக் கதைகளை அவள் அறிந்திருந்தாள்; ஆதலால், புராண இதிகாசங்களிலிருந்து சிறு நீதிக் கதைகளைக் குழந்தைகளுக்கு மிக அழகாகவும், அவர்கள் கேட்டு மகிழும் விதமாகவும், மனத்திற் பதியும்படியாகவும் கூறுவாள்; எப்பொருள்களிலும் இறைவனைக் கண்டு களிப்பாள்.

அவள் மருமகள் சிறிது வாய்த்துடுக்கு உள்ளவள். பார்வதி தன்னுடைய பொறுமை யாலும் நற்குணத்தாலும் அவளைச் சீர்படுத்தி விட்டாள். ஆயினும், சிற்சில நேரங்களில் மருமகளின் இயற்கைக் குணம் தலை காட்ட ஆரம்பித்துவிடும். அதனாலேதான் இச்சண்டை நேரிட்டது.

காமுவின் தந்தையும் இலட்சுமியின் தந் தையும் ஒருவரோடொருவர் தாறுமாறாக வார்த்தையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட கிழவி பார்வதி அம்மாள், அவர்களைச் சமா தானப்படுத்த எவ்வளவோ முயன்றாள். அவள் அவர்களுக்கு எவ்வளவோ புத்திமதி கூறியும் அவர்கள் கேட்பதாயில்லை. அவளுடைய நல்ல வார்த்தைகள் செவிடன் காதில் சங்கூதினது போல ஆய்விட்டன.

“உன் பணத்திமிர் அல்லவா உன்னை இப் பொழுது இப்படிப் பேசச் சொல்கிறது? உன் செல்வம் சில நாட்களில் எப்படிப் போகப் போகிறது பார்!” என்று காமுவின் தந்தை சொல்லிக்கொண்டே இலட்சுமியின் தந்தை யைத் தள்ளுவதற்கு வந்தான்; தள்ளியும் இருப்பான்; வாய்ச் சண்டை முற்றிக் கைச்சண்டை ஆரம்பமாயிருக்கும். அதற்குள் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது.

III

குழந்தைகள் கூடல்

சண்டை செய்த சிறிது நேரத்திற்குள் இலட்சுமியும் காமுவும் கூடிவிட்டனர். இருவரும் நேராகக் குட்டைக்குச் சென்றனர். ஒரு கொட்டாங்கச்சியால் தரையைத் தோண்டிக் கொண்டே குட்டையிலிருந்து நீரைத் தெரு வுக்கு ஒரு சிறு கால்வாய் மூலமாக இறைத்துக் கொண்டிருந்தார்கள். காமு அந்த ஓடையில் காகிதத்தால் செய்த ஓடத்தை மிதக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இவ்வாறு இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடியும் பாடியும் தெருவில் தோண்டிய வாய்க்கா லில் நீரைப் பாய்ச்சிக்கொண்டு தம் பெற்றோர் சண்டை செய்து கொண்டிருந்த இடத்திற்கே வந்துவிட்டனர்.

ஆ! குழந்தைகளின் மகிழ்ச்சியே மகிழ்ச்சி! அவர்கள் சிரிப்பில் ஓர் இன்பம் தோன்றுகிறது! அவர்கள் விளையாட்டில் ஒரு தெய்விகம் விளங்குகிறது!

ஏதோ வேறு ஒருவரும் செய்ய முடியாத செயலைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாக இச்சிறு குழந்தைகள் மிகுந்த பெருமை கொண்டார்கள். பெற்றோர்களுக்குள் நடந்த சண்டையின் இடையில் இக்குழந்தைகளின் களியாட்டத்தின் சந்தடி, மிக இனிமையாய் இருந்தது. பெற்றோர்களுக்குப் புத்தி புகட்ட இதுவே சமயமென்று பார்வதி அம்மாள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “இந்தக் குழந்தைகளைப் பாருங்கள்! உங்களைக்காட்டிலும் இவர்களே அறிவு உடையவர்கள். இவர்களிடமிருந்து நீங்கள் ஒரு படிப்பினையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் தாங்கள் சண்டை செய்ததையும் மறந்துவிட்டு, யாதொரு மாறுபாடும் இல்லாமல், ஒருவரோ டொருவர் எவ்வளவு அன்புடனும் மகிழ் வுடனும் விளையாடுகிறார்கள்! உங்களுக்கு வெட்கம் இல்லையா!” என்றாள்.

தங்கள் குழந்தைகள் பகைக் குணமில்லாமல் கள்ளங்கபடற்ற மனத்துடன் விளையாடுவதைக் கண்டு, அவர்களுக்கிருக்கும் மனநிலையும் பொறுமையும் தங்களுக்கு இல்லையே என்று காமுவின் தந்தையும் இலட்சுமியின் தந்தையும் வெட்கங்கொண்டு, ‘வீண் சண்டையை விலை கொடுத்து வாங்கினோமே!’ என்று மனம் வருந்தித் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

குழந்தைகள் கள்ளங்கபடு அற்றவர்கள். அவர்கள் மனம் மிகவும் தூய்மையானது. ஆண்டவன் அருளைப் பெற அவர்கள் உள்ளத்தைப் போன்று அனைவர் மனமும் தூய்மையடைய வேண்டும்.

“சேய்போல் இருப்பர் கண்டீர்,
உண்மை ஞானம் தெளிந்தவரே”

என்றார் ஒரு பெரியார்.

“குழந்தைகளைப் போல மாசற்ற மனத்தைப் பெறாதவர்கள்
மோட்ச உலகத்தை அடைய முடியாது.”

என்ற கிறிஸ்து நாதரின் பொன் போன்ற மொழியையும் சிந்தியுங்கள்.

குழந்தைகள் ஒருவரோடொருவர்சண்டையிட்டுக்கொள்வதும், பின்பு கூடிக்கொள்வதும் இயல்பே. அவர்கள் களங்கமற்ற மனத்துடன் இருப்பதே இதற்குக் காரணம். பெற்றோர்கள் குழந்தைகளின் தன்மையை அறியாமல் அவர்களுடைய அற்பச் சண்டைகளில் தலையிட்டு, துரும்பைத் தூணாக்குவது போலப் பெரிய சண்டையை வளர்த்து நெடுநாள் பகை கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுவது இன்றியமையாதது.

– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *