(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக் காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கி னார். அதனால் அவரை ஒரு சிற்றரசராக எண்ணாமல் முடியுடை மன்னராகவே எண்ணி அவரைப் பாராட்டினார்கள் மக்கள். அவரை மருது பாண்டியர் என்றே அழைத்தார்கள். வேறு சிலரும் மருது என்ற பெயருடன் அந்தக் சம்ஸ்தானத்தை ஆண்டதுண்டு. அவர்களுக்குள் வேற்றுமை தெரிவிப்பதற்காகக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே அடையாளச் சொல் கூட்டிக் குறிப்பிட்டு வந்தார்கள். பெரிய மருது, சின்ன மருது, வெள்ளை மருது என்று வேறுபாடு தோன்றும்படி பேச்சு வழக்கில் பேசி வந்தார்கள்.
இந்த மருது பாண்டியர்களில் ஒருவராகிய வெள்ளை மருது, புலவர்களிடத்தில் அன்பு பூண்டு என்றும் குன்றாத புகழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.
ஒரு சமயம் அவருடைய கணக்குப் பிள்ளை வரிகளைச் சற்றுக் கடுமையாகத் தண்டி வந்தான். பணம் தேவையாக இருந்ததால் வெள்ளை மருது அவன் அவ்வாறு செய்வதைத் தடுக்காமல் இருந்தார்.
கொடுக்கக் கூடியவர்கள் , சண்டித்தனம் செய்கிறவர்கள், நல்லவர். பொல்லாதவர் என்று பாராமல் எல்லோரையும் ஒரு கிட்டிக்குள் அகப்படுத்துவதுபோல், அந்தக் கணக்குப் பிள்ளை செய்து வந்தான். இதனால் சில பெரிய மனிதர் களுடைய உள்ளங்களில் வெறுப்பு உண்டா யிற்று. ஆனால், நாட்டுத் தலைவருடைய ஆணைக்கு மாறு சொல்லலாமா? வெள்ளை மருது சொல்லித்தான் கணக்குப் பிள்ளை அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறான் என்று எல்லோரும் எண்ணினார்கள்.
‘காலம் நன்றாக இருந்தால், மழை சரியாகப் பெய்து விளைச்சலும் உள்ளபடி விளைந்தால், நாங்களே வரியைக் கட்டி விட மாட்டோமா? பஞ்ச காலம் ஆகையால் கையில் பணம் சேர வில்லை இந்தக் காலத்தில் இப்படிக் கெடுபிடி பண்ணுவதனால் லாபம் ஒன்றும் இல்லை” என்று அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள்,
வரி வசூலாகி வருகிறதைக் கண்டு வெள்ளை மருதுக்கு ஆனந்தம் உண்டாயிற்று. எப்படி வசூலாகிறது என்பதை அவன் விசாரிக்கவில்லை. கணக்குப் பிள்ளை செய்யும் கொடுமைகள் அவன் காதில் எட்டவில்லை.
புலவர் பரம்பரையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி இருந்தாள். அவளும் சம்ஸ்தானத்துக்கு வரி செலுத்த வேண்டிய பாக்கி இருந்தது. கணக்குப் பிள்ளை அவளிடமும் இரண்டு, மூன்று தடவைகள் வந்து கேட்டான்; பயமுறுத்தினான். அப்பால் ஒரு நாள் வந்து, இன்று வரி தராவிட்டால் உன் வீட்டுப் பண்டங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன்” என்றான்.
கிழவிக்குக் கோபம் வந்து விட்டது.
“கொடுக்க முடிந்தால் இந்த வரியை முன்பே கொடுத்திருக்க மாட்டேனா? நீர் இப்படியெல்லாம் வந்து மிரட்டுகிறீரே! நானும் இவ்வளவு கால மாகப் பார்த்திருக்கிறேன். இப்படிக் கிட்டி கட்டி வரி தண்டுவதைக் கண்டதே இல்லை” என்றாள்.
“உன்னுடைய ஒப்பாரியை எல்லாம் இப்போது விவரிக்க வேண்டாம். பணம் கொடுக்கிறாயா இல்லையா?” என்றான் கணக்குப் பிள்ளை.
பணம் இருந்தால் தானே கொடுக்க? இவ்வளவு அதிகாரத்தை உனக்குக் கொடுத்தவர் யார்?” என்று கிழவி கேட்டாள்.
ஏன்? நம்முடைய வெள்ளை மருது துரையே என்னிடம் வரி வாங்கச் சொன்னார்” என்றான் கணக்குப் பிள்ளை .
கிழவிக்குக் கோபம் கனலாக மூண்டது. ‘ஓகோ! வெள்ளை மருதுக்கு மிஞ்சிப்போச்சோ?’ என்று கேட்டாள்.
‘கிழவியா இப்படிப் பேசுகிறாள்’ என்று கணக்குப் பிள்ளைக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. சம்ஸ்தானாதிபதியாக உள்ள வீரரை அவ்வளவு அலட்சியமாகப் பேசும் தைரியம் வேறு யாருக்கும் இல்லை. அப்படிப் பேசி அந்தச் சம்ஸ்தானத்தில் வாழ முடியுமா?
கணக்குப் பிள்ளைக்கு இந்தக் கிழவியை அடக்க நம்முடைய துரை அவர்களை அழைத்து வர வேண்டும் என்று தோன்றி விட்டது. கோபத் தால் உடம்பு பதற ஓடினான். வெள்ளை மருது துரைக்கு முன்னால் போய், கிழவி கூறியதைப் படபடப்புடன் கூறினான்.
வெள்ளை மருது செய்தியை விசாரித்து அறிந்தார். அந்தப் புலவர் வீட்டுக் கிழனையா? அப்படிச் சொல்ல மாட்டாளே! நீ என்ன சொன்னாயோ?’ என்றார்.
கணக்குப் பிள்ளை கிழவியைப் பற்றியே குறை கூறினான். வெள்ளை மருது அவனுடைய தொந்தரவு பொறுக்காமல் கிழவியின் வீட்டுக்குப் புறப்பட்டார் .
கிழவியின் வீட்டிற்கு ஆளுடன் யாவரும் சென்றார்கள். அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது கிழவி தன் பேரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். அவள் ஆத்திரத்தில் பேசி விட்டாலும் அப்பால், ஏன் இவ்வாறு பேசினோம்?’ என்ற எண்ணம் உண்டா யிற்று. உள்ளுக்குள் அச்சமும் ஏற்பட்டது. அதற்கு என்ன தண்டனை கிடைத்தாலும் உட்பட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ஆனாலும் அவள் உள்ளம், ஏதாவது தந்திரம் செய்து தப்ப வழி உண்டா ?” என்று யோசித்தது. குழந்தையைத் தாலாட்டியபடியே இந்தச் சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஒரு தந்திரம் தோன்றி விட்டது போலும் ! சிந்தனை தேங்கிய அவள் முகத்தில் ஒளி லேசாகப்படர்ந்தது அதே சமயத்தில் வெள்ளை மருது இடைவழியில் வந்து கொண்டிருந்தார். கிழவிக்கு யாரோ வருகிறார் என்று தெரிந்து விட்டது. உடனே குரல் எடுத்துத் தாலாட்டுப் பாட ஆரம்பித்தாள்.
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆர்இராரோ கட்டிக் கரும்பே என் கண்மணியே கண்வளராய் குன்றுமே கம்கிளம்பி குன்றாற்றி லேவிழுந்து வெள்ளம் வருது என்ற தல்லால் வெள்ளை மருது என்றேனோ கொஞ்சி விளையாடும் குழந்தைகள் காலிலிட்ட மிஞ்சி போச் சென்ற தல்லால் மிஞ்சிப்போச் சென்றேனோ? அவள் செய்த தந்திரம் அது. தான் கூறிய வார்த் தைகளின் தொனியையும் பொருளையும் மாற்றி விட்டாள், வெள்ளை மருது என்பதை வெள்ளம் வருது என்று மாற்றி, மிஞ்சிப் போச்சோ என்பதை மிஞ்சி போச்சு என்று மாற்றிக் காட்டினாள். வேகமாகப் பேசுகையில் இரண்டு வகைத் தொடர் களுக்கும் தொனியில் வித்தியாசம் தெரியாது.
“நான் என்ன செய்வேன்? வெள்ளம் வந்ததை யும், தண்ணீரில் அளைந்த குழந்தையின் மிஞ்சி காணாமற்போனதையும் சேர்த்துச் சொல்லப்போக இப்படி விபரீதமாக விளைந்ததே” என்று அந்தக் கிழவி விளக்கி யிருந்தாலும் கூட, அது வெள்ளை மருதுக்குச் சமாதானமாகத் தோன்றுயிருக்காது ஆனால் கிழவி பாடிய தாலாட்டுப் பாட்டு அத்தனை வார்த்தைகளையும் சொல்லாமற் சொல்லியது. இதைக் கேட்டு எல்லோரும் திகைத்து விட்டனர்.
வெள்ளை மருது வீட்டிற்குள் நுழையவில்லை. இடைவழியிலேயே தம் பரிவாரத்துடன் திரும்பிச் சென்று விட்டார். அரண்மனைக்குப் போனபிறகும் கூட அவர் காதில் அந்தக் கிழவி பாடிய தாலாட்டுப் பாட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.