கிடைத்த சந்தர்ப்பம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,263 
 
 

“ஒரு குளத்தில் கொக்கு ஒன்று வசித்தது. அது அந்த குளத்திலுள்ள மீன்களை பிடித்து தின்று வாழ்ந்தது. அது ஒரே கொக்காக அங்கிருந்ததால் போட்டியாக வேறு எந்த கொக்கும் இல்லை. அதனால் அந்த ஒரு கொக்குக்கே நிறைய மீன்கள் கிடைத்தன. கொக்கும், போதும் போதும் என்னும் அளவுக்கு மீன்கள் சாப்பிட்டு பரம திருப்தியுடன் அங்கு வசித்தது. திடீரென்று ஒரு நாள் பல கொக்குகள் அக்குளத்துக்கு வந்து சேர்ந்தன. குளம் நிறைய மீன்கள் இருப்பதைக் கண்டன. அவ்வளவு மீன்களை ஒரே இடத்தில் பார்த்திராத அவைகள் இஷ்டம் போல மீன்களை பிடித்து சாப்பிட்டன. வயிற்றுக்கு உணவு தாராலாமாக கிடைக்கும் இடத்தை விட்டு, யாராவது செல்வார்களா? எல்லா கொக்குகளும் அங்கேயே தங்கி விட்டன.

வெகு நாட்களாக அக்குளத்திலிருந்த கொக்குக்கு மீன் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. கிடைக்கிற ஒன்றிரண்டு மீன்களும் அதன் பசியை போக்க போதவில்லை. இனி அக்குளத்தை நம்பிக் கொண்டு அங்கேயே இருந்தால், பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று அந்த கொக்குக்கு தெரிந்துவிட்டது. அதனால் அக்குளத்தை விட்டு வேறெங்காவது செல்வதென கொக்கு முடிவு செய்தது. ஏதாவது பெரிய மீனாக சாப்பிட்டால்தான், தன் கொடிய பசி அடங்கும் என்றெண்ணி வேறு நீர் நிலையை தேடி பறக்க ஆரம்பித்தது. அங்கும் வேறு கொக்குகள் வராதிருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டது. வெகு தூரம் காட்டில் பறந்து சென்ற கொக்கு ஒரு நீரோடையைக் கண்டது. அதன் மீன்கள் இருக்கின்றனவா என்று கூட கொக்கு பார்க்கவில்லை. வேறு கொக்குகள் தென்படுகின்றனவா என்று தான் பார்த்தது. நல்லவேளை ஒரு கொக்குக் கூட அங்கு தென்படவில்லை.

நீரோடை ஆழமில்லாமலிருந்தது. அதில் தெளிந்த நீர் பளிங்கு போல் ஓடிக் கொண்டிருந்தது. நீரினடியில் கூழாங்கற்கள் தெரிந்தன. உருண்டு உருண்டு தேய்ந்து தேய்ந்து அவைகள் வழுவழுப்பாகவும், பல நிறங்களுடையதாகவும் இருந்தன. அதன் மீது ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை நீர், சற்றுத் தொலைவிலுள்ள ஆற்றில் கலந்து கொண்டிருந்தது. ஓடும் நீரை எதிர்த்து நீச்சலடித்துச் செல்வதுதான் மீன்களின் இயல்பு. அந்த ஆற்றில் ஓடை நீர் விழுகிற இடத்தில் ஓடை நீரில் எதிரும் புதிருமாக ஓடிக் கொண்டிருந்தன சின்னச் சின்ன மீன்கள்.

தண்ணீர் அருகே வந்து பார்த்தது கொக்கு. நீரில் மீன்களே நிறைந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. எல்லாமே அழகழகான சின்னச் சின்ன மீன்கள். அவைகளை பார்த்ததும் கொக்குக்கு சந்தோஷம் உண்டாயிற்று. நிறைய மீன்கள் உள்ளன என்பதை விட, தனக்கு போட்டியாக வேறு ஒரு கொக்கும் அங்கில்லை என்பதே அதற்கு பெரிய சந்தோஷத்தை அளித்தது. ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை பிடித்து தின்ன எண்ணியது கொக்கு. உடனே அதற்கு முதலில் பெரிய கொழுத்த மீனாக சாப்பிட வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. பறந்து வந்து ஓடையில் நடுவே வந்து ஆடாமல், அசையாமல் ஒற்றைக் காலில் நின்றது கொக்கு. தலையை கீழே சாய்த்து புற்களைப் பார்த்தது.

திடீரென்று ஒரு கொக்கு வந்து நீரில் நிற்கவே, சின்ன மீன்களெல்லாம் அச்சம் கொண்டன. அது தங்களை பிடித்து தின்னவே வந்திருக்கிறது என்பது மீன்களுக்கு தெரிந்து விட்டது. இனி கொக்கின் பார்வையிலிருந்தால் ஆபத்துதான் என்றெண்ணி மூலை முடுக்கிளெல்லாம் சென்று ஒளிந்து கொண்டன. பெரிய மீன் வந்ததும் அதை ஒரே பிடியாக “லபக்’ செய்து விடலாம் என கொக்கு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றது. அது ஒரு பொம்மை நிற்பது போலிருந்தது. ஆனால், அதன் கண்கள் மட்டும் நீரில் பெரிய கொழுத்த மீன் வருகிறதா கண்காணிப்பதிலேயே இருந்தது. ஏதாவது என்று சின்ன மீன்கள் வந்தால் வந்து விட்டு போகட்டும் என்பது போலிருந்தது அது நின்றதைப் பார்த்தால்.

கொக்கு ஆடலாமல், அசையாமல் ஆணியடித்தது மாதிரி நிற்கவே சின்ன மீன்கள் பயம் விலகி தாங்கள் ஒளிந்திருந்த இடத்தை விட்டு வெளியில் வந்து அப்படியும், இப்படியும் நீந்தின. தன் லட்சியம் பெரிய கொழுத்த மீனை பிடித்து சாப்பிடுவதுதான் என்பது போல கொக்கு மவுனமாக ஆடாமல், அசையாமல் அப்படியே நின்றது. அதனால் பயம் தெளிந்து சின்ன மீன்கள் கொக்கின் காலடியிலேயே கூட்டம் கூட்டமாக சுற்றிச் சுற்றி வந்தன.

அவைகளை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த கொக்கு, “உங்களை ஆயிரம் மீன்கள் சாப்பிடுவதும் சரி. பெரிய மீனாக ஒன்று சாப்பிடுவது சரி. எனக்கு பெரிய மீன்தான் வேண்டும்!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. கூடவே சிறிய மீன்களை பிடிக்க ஆரம்பித்து விட்டால், பெரிய மீன்கள் வராது போய் விடுமோ என்கிற அச்சம் கொக்குக்கு உண்டாயிற்று. சிறியவைகளை பிடிப்பது, பெரிய மீன் பிடிக்க முடியாதபடி செய்து விடும். அதனால் சிறிய மீனை பிடிப்பது நமது லட்சியத்துக்கு சரியானதல்ல என்று தனக்குத்தானே பேசிக் கொண்டது கொக்கு.

உச்சிப் பொழுது கழிந்து மாலை நேரமும் வந்துவிட்டது. அப்போதும் கொக்கு பெரிய மீனை எதிர்பார்த்து ஓடையில் ஒற்றைக் காலில் வெகு நேரம் நின்று கொண்டிருந்தது. ஒரு பெரிய மீன் கூட வரவில்லை. மாலைப் பொழுது மயங்கி இருட்டத் தொடங்கிவிட்டது. கொக்கு அவ்வளவு நேரம் கால் கடுக்க நின்றதுதான் மிச்சம். ஒரு பெரிய மீனும் அதற்கு சாப்பிட கிடைக்கவில்லை. பசியால் அது சோர்ந்து களைத்துப் போயிற்று. பறக்க முடியாமல் பறந்து, மரத்துக்குச் சென்று படுத்துக் கொண்டது. இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருப்பதைவிட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே வெற்றியை தரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *