கல்யாணம் சொர்க்கத்தில் மட்டுமல்ல.. காடுகளில் கூட நிச்சயக்கப்படுகிறது. நான் சொல்ல வந்தது யானையூர் காட்டப்பத்தி.. ஆமா.. யானைகள் மட்டுமே வாழற ஊருங்கறதால இதுக்கு யானையூருனு பேரு வந்துச்சு… அங்க தான் இப்ப சுப்பாண்டி யானைக்கும், செவ்வந்தி யானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்துகிட்டு இருக்கு.. வாங்க சத்தம் போடாம நாமும் கவனிப்போம்…
செவ்வந்தி குடும்பத்து யானைகளெல்லாம் சுப்பாண்டி குடும்ப யானைகள விழுந்து விழுந்து கவனிச்சாங்க… (நிஜமாவே விழுந்தாங்கன்னா நில அதிர்ச்சி ஏற்படும்.. சோ.. புரிஞ்சுக்கோங்க) முன்னமே பேச்சுவார்த்தை நடந்து, செவ்வந்தி வீட்டு யானைங்க உபயோகிக்கற முப்பது கரும்பு தோட்டங்கள.. இனி சுப்பாண்டி வீட்டு யானைங்க உபயோகிக்கலாம்னு பேசி முடிச்சிட்டாங்க..
பத்து கட்டு கரும்புகள மாத்திக்கிட்டு நிச்சயதார்த்தம் நடந்துக்கிட்டு இருக்கு.. பக்கத்துல எல்லாத்துக்கும் கமகமக்கும் மதிய உணவு தயாராகிக்கிட்டு இருந்துச்சு.. அங்கு இருந்தது பூராவும் பல தரப்பட்ட பழங்கள் உபயோகிச்சு செஞ்ச உணவு வகைகள் மட்டும் தான்..
மற்ற எல்லா விலங்களும் அங்கே அழைக்கப்பட்டிருந்ததால் அந்த யானையூரே இப்ப நிரம்பி வழிஞ்சுச்சு…(அதுக்காக நிரஞ்சா வேற கிளாஸ்க்கு மாத்துங்கனு சொல்லப்படாது) சுப்பாண்டி யானைக்கும், செவ்வந்தி யானைக்கும் வெட்கம் தாங்கல…
எல்லோரும் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க… அப்பப்பா.. கண்கொள்ளாக்காட்சி..
“பல நாட்களா மனுசங்க.. நம்ம காட்டுக்குள்ள விலங்குல அழிக்கவும் வரல… மரங்கள வெட்டவும் வரல.. கவனிச்சீங்களா?”, என்று சிங்க மகராஜா கேட்க..
“அதே.. நானும் ஒரே குழப்பத்துல இருக்கறேன்”, என வழிமொழிந்தார் புலித்தளபதி..
சிறுத்தை மந்திரி… சிரித்தபடியே பேசினார்…”ஏதோ சின்ன உயிரி ஒன்னு மனுசனுங்கள தாக்கிட்டு இருக்காம்.. நம்ம பாத்தெல்லாம் பயப்பட மாட்றானுங்க.. நம்மையே கூண்டுக்குள்ள போட்டர்றானுங்க… சர்க்கஸ்ல வச்சுக்கறானுங்க.. நம்ம பிடிச்சு போய்.. தனியா சரணாலயம்னு எதிலேயோ வச்சு…. காசு பாக்கறானுங்க.. ஆனா பாருங்க.. ஒரு சின்ன உயிரி வந்தோன.. இப்படி பயந்து போய் கெடக்கானுங்க..”
“உண்மை தான் மந்திரி.. என் இன்ஸ்டாவிலும், டுவிட்டரிலும் கூட நான் அதப்பத்தி போஸ்ட் பார்த்தேன்”, என பேச்சில் கலந்து கொண்டார் கரடியமைச்சர்..
குரங்காருக்கோ ஒன்றுமே புரியவில்லை.. “பேசறது பேசறீங்க.. கொஞ்சம் புரியும் படியா பேசுங்க”
அறிவாளி ஒட்டகம் முன்னே வந்தார்..
“ஆமா… நானும் கேள்விப்பட்டேன்.. அந்த உயிரி பேரு.. “கொரோனா”வாம்.. அது ஒரு சமூகப்பரவல் உயிரியாம்.. தொட்டால் பரவுமாம்.. அதுனால இப்ப மனுசங்க கடைப்பிடிக்கறது சமூகவிலகலாம்.. முன்னாடியே காமெடியன் மாதிரி எல்லார் மூஞ்சியும் இருக்கும்.. இப்ப ஏதோ மாஸ்க்காம்.. அதையும் ஒழுங்கா மாட்டாம.. செம காமெடியன்களா திரியிறானுங்க”, என்று சொல்லிவிட்டு கெக்க பிக்கவென சிரிக்க.. அந்த சிரிப்பில் எல்லா விலங்கு நண்பர்களும் கலந்து கொண்டனர்..
“நானும் சொல்றேன்.. நானும் சொல்றேன்…”, என முன்னே வந்தான் முயல் பையன்..
“அந்த கிரிமி மனுசனுங்க கிட்ட இருக்கற வரைக்கும்.. நல்லா பயந்து கெடப்பானுங்க.. அதுனால அதத் தொடர்ந்து அவங்க கிட்டவே இருக்க நாம ஏதாவது பண்ணினா நல்லது.. இதப்பத்தி என்ன சந்தேகம் கேட்டாலும் என்னால சொல்ல முடியுங்கற அளவுக்கு நான் படிச்சு படிச்சு.. என் அறிவ வளர்த்து வச்சிருக்கேன்..”
“வெரிகுட்றா சின்னபையா.. ஏதோ மொபைல் கேம் தான் உனக்கு தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.. ஆனா நீ உன்ன ஒலக அறிவுக்கு தயார் படுத்தி வச்சிருக்க.. நல்லா படி… நம்ம அரண்மனையிலேயே உனக்கு சூப்பர் வேலை போட்டுத்தரேன்..”, என்று முயல் பையனை வாழ்த்தினார் சிங்கராஜா..
“அப்ப.. ஒரு கோரிக்கை மகராஜா”, என்று வாய் திறந்த சுப்பாண்டி யானையை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.. ஏன்னா.. சுப்பாண்டி பேசி யாருமே பார்த்ததில்ல.. தான் உண்டு தன் வேலையுண்டுனு இருக்கற யானை..
“சொல்லு சுப்பாண்டி”
“அந்த புது உயிரி கொரோனாவ நாம எல்லாரும் சேர்ந்து கொண்டாடினா என்ன!”
“கொஞ்சம் ஏன்னு விளக்க முடியுமா?”
“இப்ப நாம எல்லாம் நிம்மதியா இருக்கோம்… பூமி சுத்தமா இருக்கு.. வானம் சுத்தமா இருக்கு.. தண்ணி இருக்கற நீர் நிலைகள் சுத்தமா இருக்கு..இந்த சுத்தம் தொடரனும்.. நாம ரத்தம் சிந்தாம இருக்கற இந்த நாட்கள் நமக்கான நாட்கள்.. நம்ம வரலாற்றுலேயும் இதப்பத்தி எழுதி வைக்கனும்.. இதற்கெல்லாம் காரணமான கொரோனாவா நாம கடவுளா ஆக்கினா கூட தவறில்ல..”
செவ்வந்தி யானை இப்போ பேச முன் வந்தது… “கடவுளா ஆக்கிக்கலாம்.. ஆனா சீக்கிரம் அது உலகத்த விட்டு போயித்தான் ஆகனும்.. அதுக்கு எல்லா முயற்சிகளும் மனுசங்க எடுத்துக்கிட்டு தான் இருக்காங்க… சீக்கிரமா கொரோனா.. லேட் கொரோனா ஆக பிரைக்ட்டான சான்ஸ் இருக்கு”
“ம்.. செவ்வந்தி.. நீ கூட நல்லாத்தான் பேசற..”, என செவ்வந்திக்கு வாழ்த்து கூறினார்.. புலித்தளபதி..
இதற்குள் யானையூர் காட்டைச்சுற்றி காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த மான் கூட்டத்தின் தலைவன்..அங்கு வந்து சேர்ந்தான் மூச்சு வாங்கியபடி…
“அ சே.. அ சே.. அ ர சே..”
“என்ன மான் வீரா.. என்ன சேதி சொல்ல இப்படி ஓடி வந்தீரோ!..”
“ம.. மா… நு.. நூ.. சா…”
“முதலில் நிறுத்தி நிதானமாக மூச்சை வாங்கிக் கொள்ளுங்கள்.. பிறகு சொல்ல வந்த செய்தியை எங்களுக்கு புரியும்படி சொல்லுங்கள்”
“அப்பா.. டியே….”, மீண்டும்… வார்த்தைகளை முடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்…
சிறிது நேரம் கழிந்தது..
“அரசே சொல்லவா…!”
“ம்.. சொல்லும்…”
“சில மனிதர்கள் கூட்டமாக நமது காட்டை நோக்கி வருவதைக் கண்டேன்… அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தன.. அதுதான் பதட்டம்.. அவசரம்… உளரல்”
“என்ன.. கொரோனா பயம் விட்டு காடு நோக்கி வர ஆரம்பித்து விட்டார்களா?”, சிறுத்தை மந்திரியின் கேள்விக்கு பதில் சொல்ல புத்திசாலி ஒட்டகம் முன்னே வந்தது.
“சில விஷயங்கள் நானும் கேள்விப்பட்டேன்.. நாட்டில் மாமிசங்கள் எல்லாம் விலை ஏறிவிட்டனவாம்.. அதனால் அதை உண்ணாமல் இருக்க முடியாத மனிதர்கள் தான் வேட்டைக்கு வந்திருக்க வேண்டும்”
“ஓ.. அப்படியா விஷயம்.. இதை எப்படி தடுப்பது?”
சுப்பாண்டி யானை முன் வந்தது.. “இதற்கு என்னால் ஒரு யோசனை கூற முடியும்.. என் நண்பர்களான கிளிகளை அழைக்க அனுமதி வேண்டும்”
“அப்படியே ஆகட்டும்”
விரைந்து செய்தி கிளிகளை அடைய, அவை தனது மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தன..
“ம்.. இப்போது சொல்லும் உமது யோசனையை… சுப்பாண்டி”
அப்போது சொன்ன சுப்பாண்டியின் யோசனைக்கு முழு காட்டு விலங்குகளுமே கைத்தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன.. செவ்வந்தி யானைக்கு கர்வம் தாங்கவில்லை…. தன் வருங்கால யானைப்புருஷர் எத்தனை பெரிய புத்திசாலி என்று தனக்குள்ளே பெருமையடித்துக்கொண்டாள்.
அடுத்த பத்தாவது நிமிஷம் காட்டை நோக்கி வந்த மனிதக்கூட்டம் ஓட்டம் பிடித்தது..
மதிய விருந்து யானையூரில் தடபுடலாக நடந்தேறியது.. கிளிக்கூட்டத்திற்கு மட்டுமல்ல.. மொத்த பறவைக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டது.
அப்போ சுப்பாண்டி யானை சொன்ன யோசனை என்னனு தானே கேக்கறீங்க?
அது இதுதான்..
கிளிகள் மனிதர்களிடம் தாழ்வாக பறந்து போய் ஒரு விஷயம் பேசிக் கொள்ள வேண்டும்.
“தெரியுமா சேதி.. இப்ப காட்டுக்குள்ளேயும் வந்திருச்சாம்..”
“என்னாது காத்தா..”
“காத்து கறுப்புக்கெல்லாம் இங்க யாரு பயப்படுவா… அதான் எதோ கொரோனாவாமுல்ல…”
“என்னது கொரோனாவா..”
“ஆமா.. நாலு மான்கள், பத்து முயல்கள், இருபத்தைந்து குரங்குகளுக்கு இது வரைக்கும் காட்டுல கொரோனா வந்திருக்குனு சொல்றாங்க”
“ஓ.. அப்படியா”
இதைக்கேட்டே மனிதக்கூட்டம் ஓடியது.. மகிழ்ச்சியில் திளைத்தது யானையூரில் விலங்குகள்..
கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பறோம் எல்லாரும் வந்திடுங்க…
– ஜூன் 2020 (இந்து தமிழ்த்திசையின் “மாயா பஜார்” இதழில்)