காக்கும் தெய்வமே கொன்றால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2024
பார்வையிட்டோர்: 310 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமர் வனவாசம் செய்து கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் இராமர் தன்னந் தனி யாகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். மிக அலைந்ததனால் தண்ணீர்தவித்தது. குடிப் பதற்குத் தண்ணீர் எங்குக் கிடைக்கும் என்று நீர் நிலைகளைத் தேடி வேறு அலைந்தார். கடைசியில் பம்பாசரஸ் என்ற ஒரு குளத்தைக் கண்டார். 

குளத்தைக் கண்டதும் மிக அவசரமாக நடந்து சென்றார். குளத்தின் கரையில் தம் அம்பையும் வில்லையும் தரையில் ஊன்றி நிறுத்திவிட்டுக் குளத்தில் இறங்கினார். தவிப்பு அடங்கும் வரையில் குளிர்ந்த நீரை இருகை யாலும் அள்ளியள்ளிப் பருகினார். பிறகு கரைக்கு ஏறி வந்தார். 

தாம் தரையில் ஊன்றிய வில்லையும் அம்பையும் எடுத்தார். அம்பின்நுனியில் பச்சை இரத்தம் செந்நிறமாகப் படிந்திருந்தது. இராமர் அன்று வேட்டையே ஆடவில்லை. அப்படி யிருக்க அம்பில் எப்படி இரத்தம் வந்தது. அவருக்கு வியப்பாய் இருந்தது. 

குனிந்து பார்த்தார். காரணம் தெரிந்தது. வேகமாகக் குளத்தில் இறங்க விரும்பிய இராமர் தரையைப் பார்க்காமலே தம் அம்பை ஊன்றியிருக்கிறார். ஊன்றிய இடத்தில் ஒரு தவளை உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் பாய்ந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு தரையில் சொருகியிருக்கிறது அம்பு. இரத்த வெள்ளத்தில் மிதந்த தவளைக் கண்டபோது இராமருக்கு இதயம் துடித்தது. தான் அறியா மல் செய்த பிழைக்குப் பதைத்து. வருந்திய இராமர் அந்தத் தவளையை நோக்கினார். 

“ஏ தவளையே, நான்தான் பார்க்காமல் அம்பை ஊன்றி விட்டேன். நீயாவது கத்தி யிருக்கக் கூடாதா? நீ கத்தியிருந்தால் நான் கவனித்திருப்பேனே!” என்று கேட்டார். 

“இராமா, எனக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் காலத்தில், “இராமா என்னைக் காப்பாற்று!” என்று நான் சொல்வது வழக்கம். ஆனால், காப்பாற்றுங் கடவுளாகிய நீயே என்னைக் கொல்லும் போது நான் யாரைக் கூப்பிட்டு என்ன சொல்வேன்?” என்று கேட்டது. சிறிது நேரத்தில் அது மூச்சிழந்து விட்டது. 

இறந்து விட்ட அந்தத் தவளையைத் துயரத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராமர் பெருமூச்சு ஒன்று விட்டார். பிறகு, அழுத்துந் துயரம் மிகுந்த நெஞ்சோடு அங்கிருந்து புறப் பட்டார். 

அறியாமல் செய்யும் பிழையும் தீய பயனையே கொடுக்கும். ஆகையால் எந்தச் செயலிலும் அவசரம் கூடாது. எதையும் கவனத்தோடு செய்ய வேண்டும். 

– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *