கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,487 
 

முன்னொரு காலத்தில் லியாங்மே என்ற ஒரு சீன வியாபாரி இருந்தான். அவன் பலப்பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு விதமான வியாபாரங்களையும் செய்து வந்தான். ஒரு தடவை அவன் எதிர்பாராத விதமாக முற்றிலும் புத்தம் புதிய பகுதியைச் சென்று அடைந்தான். அவன் சென்றடைந்த பகுதியும் சீனப் பகுதிதான். என்றாலும் அது குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆகவே, அவன் வழியில் வந்த ஒருவனிடம் அந்தப் பகுதியைப் பற்றி விசாரித்தான்.

“”ஐயா, அங்கே தெரிகிறது பாருங்கள்… ஓர் உயர்ந்த மேடு! அந்த மேட்டைத் தாண்டிச் சென்றால், ஒரு ஊரைப் பார்க்கலாம். அந்த ஊரானது கழுதை வியாபாரத்துக்குப் புகழ் பெற்றது!”

Kaluthai

“”அப்படியா!” என்று கேட்டுவிட்டு அந்த ஊருக்குச் சென்றான். “”இங்கே கழுதை வியாபாரம் செய்பவர் யார்?” என்று அந்த ஊரில் சில பேர்களிடம் அவன் விசாரித்தான். அவர்கள் ஒரு வீட்டை அடையாளம் காட்டினர்.

அங்கு சென்றான் லியாங்மே. அந்த வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்குள் ஐந்தாறு பேர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் அப்போது மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

அவர்களை நன்றாக உபசரித்துக் கொண்டு இருந்தாள் ஓர் அழகி. அவளுக்கு வயது 20 இருக்கும். அவள் லியாங்மேவைப் பார்த்தவுடன் எழுந்து வந்து தடபுடலாக உபசரித்தாள். பின்னர் அவனுடைய கழுதையைப் பார்த்தவுடன், “”வீட்டின் பின்பக்கமாகக் கட்டிவிட்டு வந்து விடுங்கள். இங்கே நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன். ஒரு வேலைக்காரன் கூட இல்லை. எனவே தயவு செய்து நீங்களே உள்ளே கழுதையைக் கொண்டு கட்டி விடுங்கள்!” என்று தேன் ஒழுகக் கூறினாள். லியாங்மே அவ்வாறே செய்தான். எல்லாரையும் அவள் உபசரித்தது போலவே அவனையும் உபசரித்தாள். அவன் யார், எங்கிருந்து வருகிறான், அவன் எதற்காக வந்திருக்கிறான் என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது முதலில் சாப்பாடு, பிறகு ஓய்வு, அதன் பின் மீதியைப் பேசலாம் என்று கூறினாள்.

எனவே அவன் மற்றவர்களுடன் சேர்ந்து உணவைச் சுவைத்துச் சாப்பிட்டான். அது அற்புதச் சுவையுடன் இருந்தது. அங்கிருந்தோர் அனைவரும் வேடிக்கையாகப் பேசினர். மதுவை அருந்தினர். லியாங்மேக்கு குடிப்பழக்கம் இல்லை என்பதால் அவன் மது அருந்தவில்லை. அன்றிரவு சாப்பாடு முடிந்தவுடன் எல்லாரும் தூங்கிப் போனார்கள். லியாங்மே படுத்துக் கொண்டான். அவர்கள் குடி மயக்கத்தில் நன்றாக உறங்கியதால் பயங்கரமாகக் குறட்டை விட்டனர். ஆனால், லியாங்மே குடிக்காததாலும், மற்றவர்களின் குறட்டை ஒலி தொந்தரவைத் தந்ததாலும், அதிகமாகச் சாப்பிட்டிருந்ததாலும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

அவன் ஓர் ஓரமாகப் படுத்திருந்தான். குளிருக்குக் கதகதப்பாக அந்த இடம் இருந்தது. அவன் படுத்திருந்த இடம் கனமான ஒரு படுதாவால் திரையிடப்பட்டிருந்தது.

அந்தத் திரையின் மறுபுறத்தில் யாரோ ஒரு கனமான பெட்டியைத் தரதரவென்று இழுப்பது போல சப்தம் ஏற்பட்டது. படுதாவின் ஓரமாக இருளில் இருந்த ஒரு சந்து இடுக்கில் முகம் பதித்து அது என்ன சப்தம் என்று பார்த்தான். இதுவரை தன்னையும், மற்றவர்களையும் உபசரித்து வந்த அந்தப் பெண்ணைத்தான் அங்கே பார்த்தான். அந்தப் பெண்தான் அவ்வாறு தரதரவென்று பெட்டியை இழுத்தவள். அவள் என்ன தான் செய்கிறாள் என்று இடுக்கு வழியாக ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அந்தப் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்து அரை அடி அளவுள்ள மனிதப் பொம்மை ஒன்றை எடுத்தாள். அதைத் தரையில் வைத்தாள். பின் இரண்டு காளை மாடுகளின் பொம்மையையும் ஒரு சிறு ஏரையும் எடுத்து வைத்தாள். ஏரில் காளை பொம்மைகளைப் பூட்டி அதன் பின்னால் மனிதப் பொம்மையை வைத்தாள். அவ்வாறு செய்தவுடன் அந்த மனிதப் பொம்மை அந்தச் சின்ன ஏரினால் அந்த காளைப் பொம்மைகளை விரட்டி அந்த இடம் முழுவதும் உழுது விட்டது. அதன் பிறகு அந்தப் பெண் பெட்டியிலிருந்து ஒரு மண் கூடையை எடுத்து அந்தப் பொம்மையின் கையில் தந்தாள். அதற்குள் மண் விதைகள் இருந்தன. அது அந்த மண் விதைகளைத் தான் உழுத நிலத்தில் விதைத்தது.

விதைத்த உடனே அதிலிருந்து முளை முளைத்து பயிர் எழுந்தது. எல்லாம் நிஜப் பயிர். உடனே அந்தப் பொம்மையிடம் ஒரு சின்ன அரிவாளைக் கொடுத்துவிட்டு ஏரையும், காளைகளையும் எடுத்துப் பெட்டியில் வைத்து விட்டாள் அவள். கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பொம்மை அந்தப் பயிரை அறுவடை செய்து தள்ளி விட்டது. அவள் அதன் பின் அந்தப் பொம்மையை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். அந்தத் தானியங்களை எடுத்துப் புடைத்து, அரைத்து, மாவாக்கி மணக்க மணக்க ரொட்டிகளைச் சுட்டாள். அந்த ரொட்டிகளை எடுத்து ஒரு கோப்பையில் அடுக்கி வைத்து விட்டுப் படுத்துத் தூங்கினாள்.எல்லாவற்றையும் லியாங்மே பார்த்து விட்டான். மறுநாள் விடிந்ததும் விருந்தாளிகள் எழுந்தனர். அவர்கள் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவுடன் முந்தைய நாள் தயாரித்த அந்த ரொட்டிகளை எல்லாம் எடுத்து வந்து அவர்களுக்குப் பரிமாறினாள். எல்லாரும் சாப்பிடத் தயாராயினர். லியாங்மே மட்டும் அவள் பார்க்காத போது சட்டென ரொட்டிகளை எடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து சந்தடி இல்லாமல் வெளியேறினான். தன் கழுதையை ஓசைப்படாமல் அவிழ்த்துக் கொண்டு சென்று சிறிது தூரத்திலிருந்த ஒரு மரத்தடியில் கட்டி வைத்துவிட்டு அவள் வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்திருந்து வீட்டிற்க்குள் எட்டிப் பார்த்தான். ரொட்டியைச் சாப்பிட்டவர்கள் எல்லாரும் கழுதைகளாக மாறிக் கத்தத் துவங்கினர். அந்தக் கழுதைகளை எல்லாம் அவள் வீட்டின் பின்புறம் கொண்டு சென்று கட்டினாள்.

இதை எல்லாம் கண்ட லியாங்மே திடுக்கிட்டான். அங்கிருந்து அவள் பார்க்கும் முன்பே கிளம்பிச் சென்றான். வேறு நகரத்துக்குச் சென்று அங்கு தன் வியாபாரத்தில் ஈடுபட்டான். அங்கும் அவனுக்குத் தான் கண்ட காட்சிகள் மறக்க முடியாத திகிலைத் தந்து கொண்டிருந்தன. இதைப் பற்றி அவன் யாரிடமும் மூச்சு கூட விடவில்லை. தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வந்தபோது மீண்டும் அந்தக் கழுதை வியாபாரப் பெண் வீட்டுக்கு வந்தான். இம்முறை வரும் போது அந்தப் பெண் தயாரித்த ரொட்டிகளைப் போலவே, வேறு ரொட்டிகளை அவன் தயாரித்துக் கொண்டு வந்திருந்தான். அவளது வீட்டில் அவள் தயாரித்த ரொட்டிகளையும் கூடவே எடுத்துக் கொண்டான். இரண்டையும் கலந்து வைத்துக் கொண்டான். மனதுக்குள் அடையாளமும் வைத்துக் கொண்டான். இந்த முறை அவள் வீட்டுக்குள் செல்லும் போது அங்கு வேறு யாரும் இல்லை. அவள் மட்டுமே இருந்தாள். அவள் அவனை வரவேற்றாள். அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அன்று மாலை நல்ல உணவு உண்டபின் திருப்தியாகத் தூங்கினான் லியாங்மே. மறுநாள் அவன் காலைக் கடன்களை முடித்தவுடன் அவள் தயாராக இருந்த ரொட்டிகளை அவனுக்குத் தந்தாள். உடனே லியாங்மே சொன்னான்…

“”அம்மணீ, இத்தகைய உபசரிப்பை நான் என் வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. எங்கள் பகுதியிலேயே நாங்கள்தான் மிகவும் ருசிகரமான ரொட்டிகளைத் தயாரிப்பதில் வல்லவர்கள். பயணத்துக்கு வரும் போது அதைப் பத்திரப்படுத்திச் சாப்பிடுவோம். மூன்று மாதமானாலும் அது கெடாது; சுவை குன்றாது. அவற்றில் இரண்டைத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்!” என்று கூறியவனாக அவளிடம் தந்தான். அவள் அவன் மேல் சந்தேகப்படவில்லை. அவள் முன்னர் அவனுக்குத் தந்த ரொட்டிகளை எடுத்துத் தான் அப்படிக் கொடுத்தான். அவள் அதைத் திருப்தியாகச் சாப்பிட்டு, “ஆஹா என்ன ருசி?’ என்று பாராட்டினாள்.
அவ்வளவுதான்! அவள் கழுதையாக மாறி விட்டாள். உடனே அந்தக் கழுதையைப் பிடித்து வீட்டுக்குள்ளே கட்டினான். அவள் வீட்டை ஆராய்ந்தான். அங்கிருந்த பொம்மைகளை எடுத்தான். அதை ஒரு சுத்தியலால் தூள் தூளாக்கினான். அந்தத் தூளைக் கணப்பு அடுப்பிற்குள் தூவினான். அது காகிதப் பொடி போல குப்பென்று பற்றி எரிந்தது. அதன்பின் அவன் அந்த மந்திரக் கழுதையைப் பிடித்து அதில் ஏறி அமர்ந்தான். கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள் வரை அந்தக் கழுதைக்குச் சொல்ல முடியாத அளவு வேலைகளைத் தந்தான். ஒரு சமயம் அவன் அந்தக் கழுதை மேல் ஏறி ஒரு நகரத்தை அடைந்தபோது ஒரு கிழவன் அந்தக் கழுதையை உற்றுப் பார்த்தான். பின் அவன் கழுதையிடம் சொன்னான். “”அடி சூனியக்காரியே! கடைசியாக நீயே கழுதையாகி விட்டாயா?”

இதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தான் லியாங்மே. கிழவன் சொன்னான்… “”இவள் பண்ணிய பாவத்துக்கு இத்தனை ஆண்டு நரக வாழ்க்கை அனுபவித்து விட்டாள். இவளை இனி விட்டு விடு! வாழ்நாள் முழுவதும் சுதந்திரக் கழுதையாகவாவது சுற்றட்டும்!” என்றான். கிழவனின் பேச்சுக்கு மதிப்பளித்து அதை விட்டு விட்டான். கழுதை திடுதிடுவென்று ஓடி மறைந்தது. நீதி: நாம் எந்த தீமை செய்கிறோமோ அதே தீமை நமக்கு திரும்ப வரும்.

– ஜூலை 23,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *