கல்விக்கு மரியாதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 14,821 
 
 

வீரக்குமராபுரியை வீரக்குமரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் வீரவள்ளி. வீரக்குமாரபுரி அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற அழகிய திருநாடு. அங்கு இயற்கை வளங்களுக்குப் பஞ்சமேயில்லை. மாதம் மும்மாரி பொழிந்து பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

அவனது ஆட்சியில் அந்நாட்டு மக்கள் பசி,பஞ்சம் என்பதை அறியாமலேயே இருந்தனர். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பெயர் வீரவேந்தன். இளையவன் பெயர் வீரசேனன்.

கல்விக்கு மரியாதைஇளையவன் வீரசேனன் அரசியாருக்கு செல்லப்பிள்ளையாக விளங்கினான். இருவருக்கும் உரிய பருவம் வந்தவுடன் குருகுலவாசம் அனுப்பினான் மன்னன். குருகுலவாசத்தின் தலைமைக்குரு வீரரிஷியிடம், “”குருவே, என் மகன்கள் இருவரும் வளர்ந்து வரும் செடி போன்றவர்கள். அவர்களுக்குத் தாங்கள்தான் கல்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சி பண்பட்ட மனிதர்களாக ஆக்கிட வேண்டும்” என்று தலைவணங்கி கைகூப்பிக் கேட்டுக் கொண்டான்.

தலைமைக் குரு மன்னனின் பிள்ளைகள் இருவருக்கும் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுக் கொடுத்தார். மதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரிடம் எவ்வாறு பணிவாக இருக்க வேண்டும் என்பதையும், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றையும், வீர விளையாட்டுகள் அனைத்தையும் போதித்தார். கல்வியறிவு உடையவர்களுக்கு அது சக்தி, எதிரிகளுக்கு அது கேடயம், கற்றவர்களுக்கு அது குரு போன்றது என்பதையும் அவர் போதித்தார்.
தலைமை குரு கற்றுத் தந்த அனைத்துக் கலைகளையும் வழுவறக் கற்றுத் தேர்ந்து, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான் மூத்தவன் வீரவேந்தன். குருகுலத்திலேயே முதல் மாணவனாக விளங்கினான்.
ஆனால், இளையவன் வீரசேனனோ தான் மன்னரின் மகன் என்பதால் தலைமை குரு கற்றுத் தரும் கல்வியும், கலைகளும், வீரவிளையாட்டுகளும் தன் எதிர்கால வாழ்வுப் பயிர் செழிப்பாக இருக்க இடப்படும் உரம் போன்றது என்பதை உணரவேயில்லை.
அவன் குருகுலவாசத்தின் போது குருவின் போதனையை மதிப்பதேயில்லை. குருகுலத்தில் அண்டை நாட்டு இளவரசர்களிடம் வீணே பேசிக் கொண்டும், கேளிக்கைகளில் ஈடுபட்டும் பொழுதைக் கழித்தான்.

அவனது போக்கைக் கண்டு தலைமை குரு மிகவும் வருந்தினார்.
“”இளவலே, தாங்கள் கல்வியை கற்காவிடில். முடியாளும் அரசராக முடியாது, குடிகளும் உங்களை மதிக்கமாட்டார்கள். தங்கள் அண்ணன் அனைத்தையும் கற்று சிறந்து விளங்குகையில் தாங்கள் இவ்வாறு இருந்தால், மன்னாதி மன்னர் எங்களைப் பழிப்பார், தங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதுதான் உண்மையான வீரம்” என்று போதித்தார்.
அதற்கு வீரசேனன், ”குருவே, தாங்கள் தங்களுக்கு இட்ட பணியை மட்டும் செய்யுங்கள், போதனை ஏதும் வேண்டாம், நான் மன்னனின் மகன்… நாளை நானே இந்நாட்டு மன்னன் என்பதைத் தாங்கள் மறந்து விட்டீர்கள். நான் கற்றதனாலாய பயன் என் கொல்” என தலைமை குருவையே வினவினான் வீரசேனன்.

அதைக் கேட்ட தலைமை குரு வெலவெலத்துப் போனார். அனைத்துப் பயிற்சிகளும் முடிந்த பிறகு இருவரையும் குருகுலவாசத்திலிருந்து தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றான் மன்னன் வீரக்குமாரன்.
அப்போது, இளையவனின் கல்லாமை நிலையைக் கண்டு கண் கலங்கி பிரியா விடை தந்தார் தலைமை குரு.

நாட்டிற்குச் சென்றதும் அவர்களது தாய், ராணி வீரவள்ளி, “”மன்னா, நம் மகன்கள் இருவரும் குருகுலவாசத்தை முடித்து விட்டார்கள். அவர்களுக்குத் தாங்கள் ஆட்சி செய்யும் இரண்டு சிறிய நாடுகளைப் பரிசளித்து ஆட்சி செய்யச் சொல்லுங்கள். அவர்களில் யார் தகுதியானவராக இருக்கிறாரோ அவரே தங்களுக்குப் பிறகு இந்நாட்டை ஆளட்டும். ஐந்தாண்டுகளுக்குப் பிறகே நம் மகன்கள் நம்மை வந்து சந்திக்க வேண்டும்” என்றார்.

பின்னர் ரகசியமாக வறட்சியான நாட்டை மூத்தமகன் வீரவேந்தனுக்கும், வளம் மிகுந்த நாட்டை இளையவன் வீரசேனனுக்கும் வழங்குமாறு கூறினார்.
ராணி கூறியபடி இருவருக்கும் இரு நாடுளைப் பரிசளித்து, நாட்டு மக்களை எவ்விதக் குறையுமின்றி காக்குமாறு இரு மகன்களுக்கும் உத்தரவிட்டார் மன்னர்.

வளம் மிகுந்த நாடு எது, வறட்சியான நாடு எது என்று இருவருக்குமே தெரியாது.

வறட்சி மிகுந்த நாட்டை ஆண்ட மூத்த மகன் வீரவேந்தன், தனது அறிவுத்திறத்தால் அந்நாட்டைப் பச்சைப்பசேல் வயல்வெளிகளாகவும், தோப்பு வனங்களாகவும், காடு, கரைகளாகவும் மாற்றினான். ஆங்காங்கு ஏரி, குளங்களை வெட்டி நீராதாரங்களைப் பெருக்கி பயிர் விளைச்சலை அமோகமாக்கினான்.

தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கலைகள் பலவற்றைக் கற்றுத் தந்து, தொழிலிலும் மேன்மையுறச் செய்தான். அன்ன சத்திரங்கள் ஆயிரம் கட்டி அங்கு ஏழைகளுக்கு எழுத்தறிவித்தான். அவன் நாட்டில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியது.
தனது வீரத்தால் பல மன்னர்களைத் தோற்கடித்து, தன் நாட்டை விரிவுபடுத்தினான்.

வறட்சியாக இருந்த அவனது நாடு வளமான நாடாகியது.
ஆனால், வளமான நாட்டை ஆண்ட வீரசேனனின் நிலைமையோ இதற்கு நேர் எதிர். அவன் தன் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காகப் பல இலவசங்களை அறிவித்தான். எங்கும் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது.

அதனால், அவன் நாட்டிலிருந்த உழைப்பாளிகள், கற்றவர்கள் அனைவரும் சோம்பேறிகளாயினர். வயல்வெளிகள் களர்நிலங்களாக மாறின. பல மூலிகைகளைக் கொண்ட மலைத் தொடர்கள் மணல் குவியல்கள் நிறைந்த பாலைவனங்களாயின. வளமான நாடு, வறட்சி நாடானது.

இதுதான் சமயம் என்று கருதிய அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து வந்து அந்நாட்டைக் கைப்பற்றி வீரசேனனைத் துரத்தியடித்தான்.

நாட்டையும் பொருளையும் இழந்த வீரசேனனை அவனது மனைலியும், மகனும் வெறுத்தனர். சம்பாத்தியமும், உழைப்பும் இல்லாதவனின் மனைவியும், மகனும் அவனிடம் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள் என்று அப்போது தலைமை குரு கூறியது அவனது நினைவுக்கு வந்தது.
பின்னர், தன்னுடன் குருகுலத்தில் படித்த தன்னுடைய நண்பனான அண்டை நாட்டு அரசனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று பக்கத்து நாட்டுக்குச் சென்றான்.

அம்மன்னனோ, இவனை ஏறெடுத்தும் பார்க்காமல், “”உன்னை யார் என்றே எனக்குத் தெரியவில்லை, போ, போ” என்று விரட்டினான்.
தன்னிடம் பொருள் கேட்பானோ என்று நண்பனும் பேசமாட்டான் என்று குரு ஒரு நாள் ஆசிரமத்தில் சொன்னது அப்போது, அவனது நினைவுக்கு வந்தது.

இதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்து விட்டன.

ஒரு நாள் வீரசேனனும், வீரவேந்தனும் ஒருசேரத் தங்கள் பெற்றோரைக் காணச் சென்றனர். முடி இழந்த வீரசேனனைக் கண்ட தாய் வீரவள்ளி, அவனை நிந்தித்தார்.

“”இளவலே, உனது தந்தை உனக்கு வளமான நாட்டைப் பரிசளித்தார், நீயோ வறண்ட பாலைவனமாக்கி விட்டாய். உன் அண்ணனோ வறட்சியான நாட்டை வளமாக்கி விட்டான். இனி நீ என் கண் முன் நிற்காதே” என்று அர்ச்சித்தார்.

அப்போது, “”பொருள் இல்லாதவனை தாயேயானாலும் நிந்திப்பார்” என்று தலைமைக் குரு கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தது.
அவனது தந்தையோ அவனைக் கண்டுகொள்ளாமல், மூத்த மகனுடன் அளவளாவி, அவனுடைய வீரபராக்கிரமத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

அப்போது, “”கல்லாத மகனிடத்தில் தகப்பன் சந்தோஷமாக இருக்க மாட்டார்” என்று குரு கூறியது வீரசேனனின் மனக்கண் முன் தோன்றியது.

அவனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.

அவன் பழைய தொனியில் அங்கிருந்த அரண்மனை வேலைக்காரனிடம், “”ஏய், எனக்கு உணவு கொண்டு வா” என்று அதட்டலாகக் கூறினான்.

வேலைக்காரனோ அவன் கூறியதைக் கேட்காமல் கோபமாக அவனை முறைத்தான்…

அப்போது, “”சம்பாத்தியமும், உழைப்பும் இல்லாதவன் எஜமானின் மகனேயானாலும் அவனிடத்தில் வேலைக்காரர்களும் கோபமாக இருப்பார்கள்” என்று குரு அடித்துக் கூறியது நினைவுக்கு வந்தது.
பின்னர், தன் அண்ணன் வீரவேந்தனிடம் சென்று பேசலாம் என்று அவன் அருகே சென்றான்.

அவனோ இவன் நிழலும் தன் மீது படக்கூடாது என்று தன்னை வரவேற்க வந்த மற்ற மன்னர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, “”சம்பாத்தியமும், உழைப்பும் இல்லாதவனிடம் கூடப்பிறந்தவனும் பேசமாட்டான்” என்று தனது குரு கூறியது நினைவுக்கு வந்து அவனை வாட்டியது. அப்போதுதான் அவனுக்கு ஞானம் பிறந்தது. கல்வி கற்றதால் கிடைக்கும் மரியாதையும், புத்திசாலித்தனத்துடன் உழைத்து, சம்பாதிப்பதால் கிடைத்த பொருளும், பணமும் இருந்தால்தான் எல்லோரும் மதிப்பார்கள் என்பதை வீரசேனன் உணர்ந்தான்.

கல்விக்குத்தான் எப்போதும் மரியாதை என்பதை உணர்ந்து தெளிந்தான்.
பின்னர், அவன் தனது தலைமை குருவை நேரில் சந்தித்து மன்னிப்பு வேண்டினான். தலைமை குரு அவனுக்காக மன்னனிடத்தில் பரிந்து பேசி, நாட்டை ஆள இன்னொரு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டினார்.
அனுபவரீதியாக அனைத்தையும் உணர்ந்த வீரசேனன் தலைமைக்குருவிடம் மீண்டும் பணிந்து கல்வி கற்று, அறவழியில் நாட்டை ஆண்டு, பார் போற்றும் மன்னனாக உயர்ந்தான்.
அதன்பிறகு, அவன் தன் மனைவி மக்களுடனும், தாய், தந்தை, சகோதரனுடனும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தான்.

– பா.இராதாகிருஷ்ணன் (டிசம்பர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *