மடிப்பு – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 7,049 
 

தீபாவளி சீசன்..கடை கட்டவே நடு நிசி ஆகிவிட்டது வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது மணி 1.00. சோர்வு போக குளித்து பின் படுக்கையில் சாய்ந்தபோது மணி 2.00.

எட்டு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி,டிபன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாராய் வந்தான் பூர்விகாவின் கணவன் பார்த்திபன்.

மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை மூட்டையாகச் சுருட்டி ஹால் நாற்காலியில் போட்டுவிட்டு “அப்பாடா…” என்ற உரத்த முணுமுணுப்புடன் தரையில் உட்கார்ந்திருந்தாள் பூர்விகா.

“என்னங்க..?”

“ம்…”

“ரொம்ப சோர்வா இருக்குங்க ; நின்ன வாக்குல இதுல இருக்கற நாலஞ்சி சேலைகளை மடிச்சிட்டுப் போங்களேன். ப்ளீஸ்… மத்த துணியெல்லாம் நான் உட்கார்ந்தபடியே மடிச்சிடறேன்…”அவள் குரலில் இயலாமை தெரிந்தது.

“எதிர்ல ஆளைக் கண்டுட்டா வேலை விடறியே…? ச்சை… முடியலடா சாமி…!” என்று முனகிக்கொண்டே “ நான் அர்ஜெண்ட்டா கிளம்பறேன்…” என்று சொல்லி விட்டு வாசலுக்கு விரைந்தான் பார்த்திபன்.

கைப்பேசி சிணுங்கியது. ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்…?” யோசித்தபடியே ஆன் செய்தான்.

“பார்த்திபன், நம் வடக்குத் தெரு புடவை பிராஞ்சில் தீபாவளிக் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்னைக்கு நீங்க அங்க டூட்டி பாருங்க!”

கடை முதலாளியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ; புடவைப் பிரிவில் ‘சேல்ஸ் கர்ள்ஸ்’ பிரித்துப் பிரித்துப் போடுற நூற்றுக்கணக்கான புடவைகளை நின்ற வாக்கில் மடித்து மடித்து அடுக்கப் போவதை.’ எண்ணிய பார்த்திபன், வீட்டுக்குள் சென்றான்.

துணிக்குவியலுக்கு அருகிலேயே சோர்ந்து படுத்து கண் அயர்ந்து விட்ட மனைவியைப் பார்த்தான். அனைத்துத் துணிகளையும் மடித்து வைத்துவிட்டு, வாசல் கதவை ஓசையில்லாமல் சாத்திவிட்டு டூட்டிக்குக் கிளம்பினான்.

– கதிர்ஸ் நவம்பர் -1 – 15 – 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *