கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 3,000 
 
 

(2009 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாயவரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கினேன். ரெயில் கிளம்ப இன்னும் ஐந்தாறு நிமிஷங்கள்தாம் மிஞ்சியிருந்தன. ஸ்டேஷனுக்கு விரைந்தேன். கும்பகோணத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறிவிட்டேன். வண்டியும் மெல்ல நகர்ந்தது.

பூந்தோட்டத்திலிருந்து பஸ்ஸில் வந்த களைப்பு. உட்காரப் போனேன். ஒரே சிரிப்பு! நகைப்பு எழுந்த பக்கம் பார்வை பாய்ந்தது. பல கண்கள் ஒரே நேரத்தில் என்னை வெறித்து நோக்கின. ஆமாம், இரண்டு மூன்று சிறு பெண்கள் தான் சிரித்தார்கள். என்னைக் கண்டவுடன் ஏன் நகைக்க வேண்டும்?

சோர்ந்து போயிருந்த நான் பெஞ்சியில் சாய்ந்தேன். ஓய்வு ஒழிவின்றி உரக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் கொஞ்சமாவது பேச்சை நிறுத்த வேண்டுமே! உள்ளத்தில் ஒரே எரிச்சல்! தம் பேச்சு மற்றவர்களுக்குச் சங்கடமாக இருக்காதா என்றெல்லாம் ரெயில் பிரயாணிகள் பொருள் படுத்துவதே இல்லை! பஸ்ஸிலோ, புகைவண்டி யிலோ போகும்போது கற்பனையைத் தட்டி விடுவது என் பழக்கம். கதைக்கு ஏதேனும் ‘பிளாட்’ அகப்படாதா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு தொல்லையா ஏற்பட வேண்டும்? ஆத்திரம் பொங்கியது. ஆளுக்கு நாலு அரை கொடுத்து வேறுபெட்டிக்குப் பிடித்துத் தள்ளிவிடலாமா என்றுகூட நெஞ்சு நினைத்தது.

ஒத்த வயதுள்ள நான்கு சிறுவர்களோ அல்லது சின்னப் பெண்களோ ஒன்று சேர்ந்து விட்டால் பேச்சு உண்டாவதற்குக் கேட்கவா வேண்டும்? வீண் பேச்சை வளர்த்து வளர்த்துதான் பொன்னான காலத்தை நம்மவர் வீணாக்குகிறார்கள். அர்த்த மற்ற பேச்சு வார்த்தைகள் எதற்காகும்? அந்தப் பெட்டியில் ஏறினாலும் ஏறினேன்!. . . இத்தகைய அனுபவங்களை அறியத்தானோ என்னவோ! தலை வலித்தது! வெளிக் காட்சிகளைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பெண்களோடு கூட வந்திருந்த பாட்டி பகல் நேரத்திலும் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிய வண்ணமிருந்தாள்.

மல்லியத்தைத் தாண்டியது வண்டி. பேச்சு நிற்க வேண்டுமே! தேரழுந்தூர். . . சிரிப்புக் கொஞ்சங் கூடக் குறையவில்லை. குத்தாலமும் மறைந்தது. கும்மாளம் இன்னமும் மறையவில்லை. ஆடுதுறையும் கடந்தது வண்டி. அப்புறமாவது சற்று ஓய்வு வேண்டுமே! எப்படியோ எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டேன். பத்து ஆண் பிள்ளைகள் மத்தியில்கூட அமைதியாக உட்கார்ந்து எதையும் செய்து விடலாம். இருந்து இருந்து இந்தப் பெட்டியில்தானா நான் ஏறவேண்டும்? எப்படியாவது வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது எனக்கு.

திருவிடை மருதூரில் வண்டி நின்றது. பிளாட்பாரத்தை எட்டிப் பார்த்தேன். கூட்டம் அதிகமில்லை. அடுத்த பெட்டிக்குப் போய்விடலாம் என நினைத்தேன். சுவார சியமாக வம்பளந்து கொண்டிருந்த அவர்கள் என்னைப் பார்த்தார்களோ!

ஒரே நிமிஷந்தான்! யோசிக்காமல் கீழே குனிந்தேன். ‘லக்கேஜை’ எடுத்துக்கொண்டேன். கதவு திறந்தது. நாலைந்து பெட்டிகளுக்கப்பால் நடந்து போய் நிம்மதியாக ஏறிக்கொண்டேன்.

நெடிய பெருமூச்சு விட்ட வண்ணம் கும்பகோணம் ஸ்டேஷனில் புகைவண்டி நின்றது. எப்போதும் போலவே ஸ்டேஷனில் கலகலப்பும் பரபரப்பும் நிறைந்திருந்தன. மகிழ்ச்சி மேலிட வண்டியிலிருந்து இறங்கினேன். தோல் பையையும் மற்றச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன். அந்தப் பெண்களை நினைக்கக்கூட இல்லை. தாராசுரம் டவுன் பஸ் தயாராக நின்றது. பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகுதான் அமைதி பிறந்தது.

காந்தி நகர், கச்சேரி ரோடு அனைத்தையும் கடந்து கல்லூரிப் பாலத்தருகே பஸ் வந்து நின்றது. அன்னை காவிரி யின் அழகுக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தவாறு பஸ்ஸிலிருந்து இறங்கினேன். உள்ளம் முழுதும் உவகையால் நிறைந்தது. பாலத்தைக் கடந்து ஹாஸ்டலில் போய் நின்றேன். அறையைத் திறந்துவிட்டு நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டு நல்ல மூச்சு விட்டேன். ஊரிலிருந்து வந்து சேருவதற்குள் எத்தனை பாடுபட்டு விட்டேன். .. கோடை விடுமுறை அல்லவா? ஊர் போய்விட்டு வருவதற்குள் அறை வெறிச்சோடிப் போய் விட்டிருந்தது.

நாளைக்கு மறுநாள்தான் கல்லூரி. அதனால் ஹாஸ்டல் மாணவர்கள் எல்லோரும் வந்து சேரவில்லை. ஒருநாள் முன்னதாகவே வந்து விடுவது என் பழக்கம். சாப்பிடுவதற்கு ‘மெஸ்’ இருக்காதே என்பதைப் பற்றி யெல்லாம் எண்ணுவது கிடையாது. பொழுது போக வேண்டுமே! என்ன செய்யலாம் என்ற எண்ணம் எழுந்தது. சினிமாவுக்குப் போவதென்றால் அது சரியாக அமையாது. ஓடும் படங்கள் அத்தனையும் ‘ஒழிசல் நம்பர் ஒன்!’. நாகேசுவரர், கும்பேசுவரர், ராமசுவாமி, சாரங்கபாணி கோயில்களெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவை. ஊருக்குப் புதியவனாக இருந்தால் ஓடும் பொன்னியின் பூங்கரையில் உட்கார்ந்து உலகையே மறந்திருக்கலாம்! ஆனால் நான். . .? பொன்னிப் புனலிலே நீந்திக் குளிப்பவனல்லவா? நினைவு வந்தது…

அரண்மனைத் தோட்டத்தில் ‘எக்ஸிபிஷன்’ ஆரம்பித்து மூன்று நான்கு நாட்கள் ஆகியிருந்தன. ஐந்து மணியானதும் பொருள் காட்சி பார்க்கப் போகலாம். அதில் இரண்டு மணி நேரமாவது பொழுது போகும். விடிந்தால் ஹாஸ்டல் மாணவர்கள் ஊரிலிருந்து வந்துவிடுவார்கள்.

காவேரிப்புறக் காற்று கவலையைப் போக்கியது. களிப் பூட்டியது. அந்தச் சின்ன அறையில் உட்கார்ந்து என் னென்னவோ எண்ணமிட்டேன். தூரத்தே எழுந்த நாதசுர ஒலி காற்றிலே இழைந்து இன்ப மூட்டியது. கருப்பூர் பக்கத்திலே ஏதேனும் கல்யாணமாக இருக்கலாம். பூபாள ராகத்தில் வித்துவான் பின்னிவாங்கிக் கொண்டிருந்தான். விடுதியை யடுத்த மாமரக் கூட்டத்திலிருந்து பறவைகள் குரலெழுப்பிக் கொண்டிருந்தன.

அனைத்தும் இணைந்து அந்த மாலைப் பொழுது வனப்புள்ளதாகிவிட்டிருந்தது. நேரம் நெளிந்தது. நாற்காலி யிலிருந்து எழுந்தேன். பொருட்காட்சிக்குப் போக முயற்சி செய்தேன். பணம் தோல்பையில் இருந்தது. மற்றும் வேட்டியும் சட்டையுமாக ஐந்தாறு உருப்படிகள்தான் அதில் வைத்திருந்தேன். செவ்வக வடிவமான அந்தப் பையை மெதுவாகத் திறந்தேன்.

அடுத்த கணம், மின்சார அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டவன் போல் நிலைகுன்றிப் போனேன். பதற்றம் பரவியது! சற்றுமுன் நிலவிய மகிழ்ச்சி அரைநொடியில் எங்கேயோ ஒளிந்து கொண்டுவிட்டதேன்? என்னுடைய பொருள்கள் எங்கே? எப்படி இவை வந்திருக்க முடியும்? பாவாடை, சட்டை, வளையல்கள்… இவற்றை யார் எடுத்து வைத்தார்கள்? அனைத்தும் புதிராக இருந்தன! என் துணிகள் எங்கே மறைந்திருக்கும்? ரெயிலில் வரும்போது எவ்வளவோ நிதானமாக வந்தும் இப்படி ஒரு விபரீதம் நேர்ந்திருக்கிறது. அக்கம் பக்கம் திரும்புவதற்குள் யாரேனும் மாயம் செய்யலாம் என்றாலும் அதற்கும் நான் வந்த பெட்டியில் வழியில்லை. இதயம் நொந்தது.

திருவிடைமருதூரில்தான் ஏதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவசரப்பட்டுப் பெட்டியிலிருந்து இறங்கும் போது தவறு நேர்ந்திருக்கலாம். அந்தப் பெண்களும் நிறையப் பைகள் வைத்திருந்தார்கள். எல்லாம் அருகருகே இருந்ததால் மாறாட்டம் நேர்ந்திருக்கக் கூடாதா? அப்படி இருந்தாலும் இப்பொழுது செய்ய என்ன இருக்கிறது? அந்தப் பெண்களை எங்கே தேடுவது? எந்த ஊருக்குப் போனார்களோ? நூற்றைம்பது ரூபாய் பணம், துணிகள் எல்லாம் போகிற தென்றால் சும்மா இருக்க முடியுமா? கொளுத்தும் வெயிலில் ஊரிலிருந்து வந்ததற்குக் கை மேல் பலன் கிடைத்துவிட்டது.

நாளை மறுநாள் ‘ஹாஸ்டல் பீஸ்’ கட்டியாக வேண்டுமே! அப்புறம் சம்பளப் பணம் செலுத்த வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது? எங்கே போவது?

வேதனையில் மாட்டிக் கொண்டுவிட்டேன். ஊருக்குப் பணம் கேட்டு எழுதினால் என்ன நடக்கும்? அழாத குறையாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தேன். சூழ்நிலை, சுற்றுப்புறம் ஒன்றும் விளங்கவில்லை. கையில் காசில்லாமல் எப்படிப் பொழுதைக் கழிப்பது? மகத்தான இந்தச் சங்கடத்தில் சிக்கிக் கொள்ள என்ன தீவினை செய்தேனோ!

நெஞ்சில் திடுமென ஒரு நினைவு வந்தது. என் நண்பன் நாகராஜனைப் போய்க் கேட்டால் ஏதாவது வழி சொல்வான். வேறு வழியும் இல்லை. இந்தப் பாழாய்ப்போன கும்ப கோணத்தில், எத்தனை காலம் இருந்து பழகினாலும் துன்பம் நேர்ந்தால் யாரும் துணிந்து உதவ முன் வர மாட்டார்களே!

கதவை இழுத்துப் பூட்டினேன். காவேரியைக் கடந்தேன். பாணா துறையில் நாகராஜன் வீடு இருந்தது. மணி ஐந்துக்கு மேலாகி விட்டிருந்தது.

ஜன்னல் வழியே என்னைப் பார்த்தான் நாகராஜன். அடுத்த நிமிஷம் ஆவலோடு அருகே வந்தான் அன்புத் தோழன்.

“அதற்குள் எப்படிடா வந்தாய்? நாளைக்குத்தான் காலேஜ் கிடையாதே!” என்று வியப்போடு வினவினான்.

எப்போதும் மணிக்கணக்காக நாங்கள் பேசித் தீர்ப்போம். ஆனாலும் என்னால் இப்போது பேச முடிய வில்லை. மனம்தான் வெந்து கொண்டிருக்கிறதே!

“முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே! என்ன விஷயம்?” என்றவாறு என்னை அறைப்புறம் அழைத்துச் சென்றான்.

நடந்ததைச் சொன்னால் நகைப்பானே என்ற வெட்கம் ஏற்பட்டது. என்றாலும் இந்த மாதிரியான இக்கட்டான நேரங்களில் வெட்கத்தைப் பார்த்தால் முடியுமா? எல்லா வற்றையும் சொல்லித் தீர்த்தேன். என் கலக்கத்தை அவனால் கண்டு கொள்ள முடிந்தது.

அமைதியாக இருந்தான். மெதுவாகச் சிரித்தான். ஆத்திரப்பட்டேன். ‘கவலையோடு இருக்கிறானே, ஏதாவது வழி சொல்லலாம்’ என்ற எண்ணம் நாகராஜனுக்கு ஏற்படவேயில்லையா?

“நீ அதிர்ஷ்டக்காரனடா! என்னவோ பிழைத்துக் கொண்டாய்…” என்று சொல்லிக் கொண்டே முதுகில் தட்டினான். உரக்கச் சிரித்தான். ஒன்றும் புரியவில்லை. அசட்டுக் களை முகத்தில் வழிந்தது.

“என் பையையே எடுத்துக் கொண்டு ஓடி விட்டாயல்லவா?”

“என்ன பேசுகிறாய், நாகராஜன்?” -பரபரப்போடு கேட்டேன்.

“போன வருஷம் எக்ஸிபிஷன்லே இரண்டு பேரும் ‘ஹாண்ட் பாக்’ வாங்கினோமே நினைவு இருக்கிறதா? என்னுடையதைக்கூட என் தங்கையிடம் கொடுத்து விட்டதாகச் சொன்னேனே, ஞாபகமிருக்கிறதா?’

உணர்வு பெற்றேன்.

“அப்படியானால் நான் வந்த பெட்டியில் உன் தங்கையும் வந்திருக்க வேண்டும்! என் பை கிடைத்து விட்டதா, நாகராஜன்?”

ஆவலோடு கேட்டேன். மீண்டும் அவன் முகத்தில் குறுநகை.

“ஆமாண்டா, நீ அவள் பையைக் கிளப்பிக் கொண்டு போக, எல்லோரும் சேர்ந்து என் தங்கையைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதோடு நீ மாத்திரம் பிழைத்தாயா? ‘எவனோ ஒரு தடியன்… ‘உம்’ மென்று உட்கார்ந்திருந்தான். கும்பகோணம் வருவதற்குள் இடையில் எங்கேயோ நழுவி விட்டான்’ என்றெல்லாம் வசைபுராணம் பாடித் தீர்த்தாகி விட்டது!” நாகராஜன் பேசி முடித்தான்.

அதற்குள், “அண்ணா!” என்று கூவிய வண்ணம் அங்கே வந்தாள் ஒரு பெண்.

பார்த்தேன். ரெயிலில் பார்த்த அதே பெண்தான். அந்தப் பெண் திகைத்தாள். நாகராஜன் நகைத்தான்.

“நளினி, இந்த ஆளை நன்றாய்ப் பார். எங்கேயாவது கண்ட நினைவு இருக்கிறதா?” என்றான் கேலியாக.

“ஆமாம். அண்ணா! ரெயிலில். .. என் பை. . .!” நளினி நீட்டினாள்.

“இவன் என் ‘கிளாஸ்மேட்!’ கதை கிதை எழுதுவா னென்று சொல்லுவேனல்லவா? இந்த அசடுதான்! ரெயிலில் பிரமாதமான வேலை செய்திருக்கிறான் அல்லவா?” எப்பொழுதும் நாகராஜன் கேலியாகத்தான் பேசுவான்.

சிரித்துக் கொண்டே ஓடினாள் நளினி. நாகராஜனுக்கு அவள் தங்கை. சிற்றப்பா மகளோ, பெரியப்பா மகளோ, எனக்குச் சரியாகத் தெரியாது. எக்ஸிபிஷன் பார்க்க ஊரிலிருந்து வருவாள் என்று முன்னமேயே எனக்கு நாகராஜன் சொல்லியிருக்கிறான். குறும்புப் பெண்ணாக இருப்பாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? வண்டியில் எவ்வளவு களேபரம்!

அடுத்த நிமிஷம் என் அருமைப் ‘பை’ வந்தது. நளினி வந்தாள். நாகராஜனின் அன்னை வந்தாள். முகம் மலர்ந்தது. விஷயம் எல்லோருக்கும் தெளிவாக விளங்கியது. அனைவரின் சிரிப்பும் அங்கே எதிரொலித்தது. கவனக் குறைவு எவ்வளவு குழப்பத்தைத் தந்து விட்டது!

“எக்ஸிபிஷனுக்குப் போகலாமா?” என்றான் நாகராஜன்.

“ஆமாம், அவசியம் போக வேணும்!” என்றேன். காபியைச் சூடாக ஊற்றிக் கொண்டோம்.

“நாங்களும் வருகிறோம், அண்ணா!” என்றாள் நளினி தன் சகாவோடு.

“கிளம்புங்கள்!” என்றான் நாகராஜன்.

நடந்த கதையை நினைக்க நினைக்கச் சிரிப்புத்தான் வந்தது. பை கிடைத்துவிட்டது. பணமும் கிடைத்தது. அவை மட்டுமா? கூடவே ஒரு கதையுமல்லவா கிடைத்து விட்டது!

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *